மோதல் தீர்வுக் கற்கைகள்: ஒர் அறிமுகம் - 5.0 out of 5 based on 1 vote
1 1 1 1 1 1 1 1 1 1 Rating 5.00 (1 Vote)
மோதல் தீர்வுக் கற்கைகள்: ஒர் அறிமுகம்

மோதல் தீர்வுக் கற்கை நெறி தொடர்பான ஆய்வுகள் மனித மோதலின் தன்மை மற்றும் இயக்கவியல் ஆகியவற்றைப் புரிந்துகொள்ளுதல், ஆரோக்கியமான உறவுகளை வளர்த்தல், வன்முறையைத் தடுக்கும் வழிகளிகள் மற்றும் மோதலைக் கையாள்வதற்குப் பொருத்தமான மாற்று வழிகளைத் தேடுதல் என்பவைகளில் கவனம் செலுத்துகின்றது. மோதல், தகராறு, வன்முறை, யுத்தம் அதிகாரம், கலாசாரம். நீதி, சமாதானம், தகவல் தொடர்பு, முகாமைத்துவம், மோதலைத் தீர்த்தல், மோதல் நிலைமாற்றம் போன்ற தலைப்புகளுடன் தொடர்புபடும் வகையில் மோதல் தீர்வுக் கற்கை நெறி பகுப்பாய்வு செய்யப்படுகின்றது. தனிப்பட்ட, தேசிய, சர்வதேசிய மோதல் சூழ்நிலைகளுக்குப் பதிலளிக்கும் வகையிலும், மோதலை ஆக்கபூர்வமாகப் புரிந்துகொள்ளவும், தொடர்பு கொள்ளவும் மோதல் தீர்வுக் கற்கை நெறி மாணவர்களைத் தயார்படுத்துகிறது. இவ்வகையில் தமிழ்மொழி மூலமான பல்கலைக்கழக மாணவர்களுக்கும், அரசறிவியலை உயர்தரத்தில் கற்கும் மாணவர்களுக்கும், பொதுவான விடயங்களைத் தேடி வாசிக்கும் வாசகர்களுக்கும் பயன்தரும் வகையில் மோதல் தீர்வுக் கற்கைகள்: ஒர் அறிமுகம் என்னும் தலைப்பில் எழுதப்பட்டுள்ள இந்நூல் வெளிவருகின்றது.

அணிந்துரை

மோதல் தீர்வுக் கற்கைகள்: ஒர் அறிமுகம் என்னும் இந்நூல் மாணவர்களுக்கு தேவையான கோட்பாடுகளையும் அது தொடர்பான கண்ணோட்டத்தையும் வழங்குகிறது. மேலும் சர்வதேச மோதலின் சிக்கலான நிகழ்வுகளுக்குப் பதிலளிக்க மாணர்வர்களைத் தயார்ப்படுத்தவும் செய்கிறது. இது அரசுகளுக்கிடையிலான மற்றும் குழுக்களுக்கிடையிலான மோதல்களில் இருந்து உருவாகும் பல்வேறு வகையான அழிவுகளை எவ்வாறு தடுப்பது, அல்லது மோதலை எவ்வாறு நிர்வகிப்பது மற்றும் மோதலை எவ்வாறு தீர்ப்பது என்பது தொடர்பாக ஆராய்கிறது.

பல்சமூக அமைப்புகள் மற்றும் வன்முறை போராட்டங்கள் தொடர்பான பயனுள்ள பதிலளிப்பு உத்திகள் தொடர்பான நமது புரிதல் மேம்படுத்தப்பட வேண்டும். இவற்றில் நாம் ஆழமான அக்கறையும், பயிற்சியும் பெறவேண்டும். இவ்வகையில் மோதல் தீர்வு, மோதல் முகாமைத்துவம், மத்தியஸ்தம், சமாதானம், மற்றும் மோதல் ஆய்வுகள் தொடர்பாக மாணவர்களுக்கு அவசியமான அறிவினை வாசிப்பினூடாக வழங்க வேண்டும். இது துறைசார் புலமையாளர்களினது கடமையும், பொறுப்புமாகும்.

இவ்வகையில் இந்நூலை தனது பல வருட அயராத உழைப்பினாலும், தேடலாலும் எழுதிய பேராசிரியர் தனபாலசிங்கம் கிரு~;ணமோகன், கிழக்குப் பல்கலைக்கழக சமூக விஞ்ஞானங்கள் துறையின் அரசறிவியல் கல்விப் புலத்தில் மூன்று தசாப்பதங்களாக “கல்விப்பணி அறப்பணி” என்பதற்கமைய சிறந்த கற்றல், கற்பித்தல் மற்றும் ஆராட்சிச் செயற்பாடுகளை அர்ப்பணிப்புடன் செய்து கொண்டிருக்கின்றார். பாடசாலை மாணவர்கள், பல்கலைக்கழக மாணவர்கள் மற்றும் சமூக அரசியல் ஆர்வலர்களுக்குத் தேவையான பல அரசியல் விஞ்ஞான நூல்களையும் ஆக்கங்களையும் தனது ஆராய்ச்சியின் மூலமாக எழுதியவர். இவருடைய எழுத்துக்கள் பல்வேறு தளங்களிலும் ஆர்வமாக வாசிக்கப்படுவதும், பேசப்படுவதும் வெளிப்படையாக நான் அறிந்தவைகளாகும்.

எனது பல்கலைக்கழக மாணவப்பருவ வாழ்க்கையிலிருந்து பல்கலைக்கழகத்தில் இணைந்து ஒரு ஆசிரியனாக அவருடன் பணியாற்றி வரும் இன்றைய காலம் வரை அவருடைய அரசறிவியல் சார் புலமைத்துவத்தை நன்கறிந்தவன். அத்துடன் தமிழ்மொழி மூலமான அரசறிவியல் புலத்தில் இவர் காத்திரமானதொரு அறிவு வளம் என்பதில் யாருக்கும் சந்தேகம் ஏற்பட்டதில்லை. இவ்வகையில் இவரின் கற்பித்தல் மற்றும் ஆராட்சிப் பணி தொடரவும் சிறக்கவும் வேண்டும். இது போன்ற பல நூல்களையும், ஆக்கங்களையும் அவர் இன்னும் எழுதவும், வெளியிடவும் வேண்டும். இதற்கு இறையாசியும், அருளும் அவருக்கு நிலைத்திருக்க வேண்டும் என உளமார வாழ்த்துவதில் பெருமகிழ்வடைகின்றேன்.

- கந்தசாமி சத்தியசேகர், துறைத்தலைவர், சமூகவிஞ்ஞானங்கள் துறை, கிழக்குப்பல்கலைக்கழகம், இலங்கை செங்கலடி