1 1 1 1 1 1 1 1 1 1 Rating 0.00 (0 Votes)

(தினக்குரல், புதிய பண்பாடு இதழில் 2012.11.24 , 2012.11.25 ஆகிய திகதிகளில் பிரசுரிக்கப்பட்டது)

clip_image002

ஐக்கியநாடுகள் நிபுணர்கள் குழு 2011 ஆம் ஆண்டு சித்திரை மாதம் 12ஆம் திகதி ஐக்கிய நாடுகள் ஸ்தாபனச் செயலாளரிடம் நியூயோர்க்கில் வைத்துக் கையளித்த அறிக்கை யுத்தகாலத்தில் ஐக்கிய நாடுகள் ஸ்தாபனத்தின் செயற்பாடுகள் தொடர்பாகத் தனியானதொரு விசாரணை நடாத்தப்பட வேண்டும் எனவும் சிபார்சு செய்திருந்தது. இதற்கிணங்க சார்ள்ஸ் பெட்றி (Chaelrs Petrie) தலைமையில் மேலும் மூன்று பேர் கொண்ட புதியதோர் நிபுணர்கள் குழுவினை பான் கீ மூன் (Ban Ki Moon) நியமனம் செய்திருந்தார். இரண்டாவது நிபுணர்குழு 2012ஆம் ஆண்டு சித்திரை மாதம் தமது பணியைத் தொடங்கி 2012ஆம் ஆண்டு கார்த்திகை மாதம் தமது அறிக்கையினை பொதுச் செயலாளரிடம் கையளித்திருந்தது. இக்குழுவின் நோக்கம் மோதல் நிகழ்ந்த காலத்தில் ஐக்கிய நாடுகள் ஸ்தாபனத்தின் வகிபங்கு தொடர்பாக ஆராய்வதாக இருந்ததுடன் எதிர்காலத்தில் ஐக்கிய நாடுகள் ஸ்தாபனம் எவ்வாறு செயற்பட வேண்டும் என்பது தொடர்பாக ஆலோசனை கூறுவதுமாகும். இவ் அறிக்கை ஐக்கிய நாடுகள் ஸ்தாபனத்தின் செயற்பாடுகள் தொடர்பான உள்ளக அறிக்கை என அழைக்கப்படுகிறது.

நிபுணர்குழு அறிக்கை

ஐக்கியநாடுகள் நிபுணர்கள் குழு 2011ஆம் ஆண்டு சித்திரை மாதம் 12ஆம் திகதி ஐக்கிய நாடுகள் ஸ்தாபனச் செயலாளரிடம் நியூயோர்க்கில் வைத்துக் கையளித்த அதேதினம் இதன் பிரதியொன்று இலங்கை அரசாங்கத்திடம் கையளிக்கப்பட்டது. ஆனால் இலங்கை அரசாங்கம் இவ் அறிக்கையில் தெரிவிக்கப்பட்டிருக்கும் விடயங்களுக்குப் பொறுப்பேற்க மறுத்துவிட்டது. இவ்வறிக்கை தொடர்பாக ஐக்கியநாடுகள் சபையின் பொதுச் செயலாளர் கருத்துத் தெரிவிக்கும் போது “வெளிப்படைத்தன்மை, பொறுப்பு என்பவற்றின் அடிப்படையில் இவ் அறிக்கை வெளியிடப்பட்டுள்ளது. ஐக்கிய நாடுகள் ஸ்தாபனத்தின் அங்கத்துவ நாடுகள் இதனை மிகவும் அவதானமாக வாசிக்க வேண்டும்” எனக் கேட்டிருந்தார். இவரின் இக்கருத்து ஐக்கிய நாடுகள் ஸ்தாபனத்திற்கு இவ்விடயம் தொடர்பாக மேலும் எதனையும் செய்ய முடியாது என்பதை மறைமுகமாகக் கூறுவதாகவுள்ளது.

மனிதவுரிமைகள் விழிப்பு (Human Rights Watch) பான் கீ மூனின் இக்கருத்தினை எதிர்த்தது. தருஸ்மன் குழுவினால் முன்வைக்கப்பட்ட சிபார்சுகளை அடிப்படையாகக் கொண்டு இலங்கையின் யுத்தக் குற்றங்களைச் சர்வதேசப் பிரச்சினையாக்குவதற்குரிய அதிகாரம் குறைந்தவராகப் பொதுச் செயலாளர் இருக்கின்றார் என்ற கருத்தினை மனிதவுரிமைகள் விழிப்பு கொண்டிருந்தது.

ஐக்கியநாடுகள் சபையினால் வெளியிடப்பட்ட தகவல்களின் படி 10,000 வரையிலான பொதுமக்கள் கொல்லப்பட்டிக்கலாம் எனவும், பின்னர் வெளிவந்த ஐக்கியநாடுகள் சபை நிபுணர்கள் குழு வெளியிட்ட தகவல்களின் படி 40,000 வரையிலான பொதுமக்கள் கொல்லப்பட்டிருக்கலாம் எனவும் கூறப்படுகின்றது. சிலர் இவ் எண்ணிக்கை இதனையும்விட அதிகமானது எனக் கூறுகின்றார்கள். ஆயினும் 40,000 வரையிலான பொது மக்கள் கொல்லப்பட்டிருக்கலாம் என்பதை நிராகரிக்க முடியாது என பலர் வாதிடுகின்றனர்.

யுத்தம் முடிவடைந்து மூன்று வருடங்கள் பூர்த்தியாகியுள்ள நிலையிலும் பொதுமக்கள் மரணம் தொடர்பான ஏற்றுக் கொள்ளப்படக்கூடிய புள்ளிவிபரங்கள் திரட்டப்படவில்லை என்பது துரதிஸ்டவசமானது. இதன் உண்மைத் தன்மையினைக் கண்டறிவதற்குச் சுதந்திரமான புலனாய்வு உடனடியாக மேற்கொள்ளப்படுதல் வேண்டும். மேலும் ஏறக்குறைய 300,000 மக்கள் உணவு, வைத்திய வசதி போன்றவைகளின்றி அவஸ்த்தைப்பட்டதாகவும் கூறப்படுகின்றது.

சர்வதேச மனித உரிமைகள் குழு மற்றும் மக்களுடன் இணைந்து தருஸ்மன் அறிக்கை தொடர்பாக மேலும் விசாரணைகள் மேற்கொள்ளப்படல் வேண்டும் என மனிதவுரிமைகள் விழிப்பு கோரியது. உண்மைகள் எதுவாக இருப்பினும் லிபியாவிற்குள் நேட்டோ படைகள் நுழைந்ததைப் பாதுகாப்புச் சபை உறுதிப்படுத்த இணங்கியது போல் இலங்கையின் உள்விவகாரத்திற்குள் பான் கீ மூன் நுழைவதைப் பாதுகாப்பு சபையிலுள்ள சீனாவும், ரஸ்சியாவும் மிகவும் வெளிப்படையாக எதிர்த்தன.

யுத்தம் யாருக்கு எதிராக இருப்பினும் யுத்தவிதிகள், பொதுமக்களின் பெறுமதிமிக்க உயிர்கள் பாதுகாக்கப் படல் வேண்டும். இவைகளை மீறுபவர்கள் மீது குறைந்தபட்சம் மனிதஉரிமைகள் சபையாவது விசாரணை செய்யவேண்டும். இதனால் தருஸ்மன் அறிக்கை தொடர்பாக ஐக்கிய நாடுகள் சபையின் பொதுச் செயலாளர் அதிக கவனம் எடுத்திருந்ததுடன் இவ் அறிக்கை தொடர்பாக “இலங்கை அரசாங்கம் நேர்மையான விசாரணை மூலம் தனக்கிருக்கக்கூடிய பொறுப்பினை வெளிப்படுத்த வேண்டும். வன்முறை தொடர்பான குற்றச் சாட்டுகளுக்குப் பதில் கூறும் பொறுப்பினை இலங்கை உறுதிப்படுத்த வேண்டும். எல்லா அங்கத்துவ நாடுகளுக்கும் இவ் அறிக்கையினைப் பெறுவதற்கு உரிமையுள்ளது. எல்லா அங்கத்துவ நாடுகளும் இவ் அறிக்கை தொடர்பாகப் பொருத்தமான தீர்மானங்களை வரைவதற்கும், அதன்படி செயற்படுவதற்கும் உரிமையுள்ளனவாகும்” எனக் குறிப்பிட்டிருந்தார்.

நிபுணர்குழுவின் அறிக்கையினை மிகவும் கவனத்துடன் மீளாய்வு செய்த பின்னர், “இறுதி யுத்த காலத்தில் நிகழ்ந்த குற்றங்கள் தொடர்பான முடிவுகள், சிபார்சுகளையும், குறிப்பாக இரு தரப்பினரதும் சர்வதேச மனிதாபிமானச் சட்டங்கள், மனிதஉரிமை மீறல்கள் தொடர்பாக நடவடிக்கை எடுக்கப்படுதல் வேண்டும்” என்பதையும் பொதுச் செயலாளர் ஏற்றுக் கொண்டிருந்தார்.

உள்ளக அறிக்கை 2012

2008ஆம் ஆண்டு புரட்டாதி மாதம் யுத்தப் பிரதேசத்திலிருந்து ஐக்கிய நாடுகள் சபைப் பிரதிநிதிகளை வெளியேற்றுவது என பான் கீ மூன் எடுத்த தீர்மானத்தினை உள்ளக அறிக்கை கேள்விக்குள்ளாக்கியுள்ளதுடன், ஐக்கிய நாடுகள் சபைப் பிரதிநிதிகள் யுத்தப் பிரதேசத்திலிருந்து வெளியேறிய பின்னரே பொதுமக்களுடைய பாதுகாப்பினை உத்தரவாதப்படுத்த முடியாது போனது எனக் கூறுகின்றது.

சார்ள்ஸ் பெட்றி கையளித்துள்ள உள்ளக அறிக்கை “கடும் வெறுப்புடன் மனிதப் பேரழிவு வன்னியில் நிகழ்ந்து கொண்டிருக்கும் போது கொழும்பிலிருந்த ஐக்கிய நாடுகள் ஸ்தாபன ஊழியர்கள் பொதுமக்கள் கொல்லப்படுவதைத் தடுப்பதில் எவ்வித கவனமும் எடுக்காது பொறுப்பற்றிருந்தனர். ஐக்கிய நாடுகள் ஸ்தாபன தலைமைச் செயலகமும் இவர்களுக்கு எவ்வித அறிவுறுத்தல்களையும் வழங்காதிருந்தது. இங்கு மக்களைப்பாதுகாத்து இவர்களுக்குத் தேவையான உதவிகளைச் செய்திருக்க வேண்டிய ஸ்தாபனம் மனத்தயக்கத்துடன் அதில் விருப்பமின்றி இருந்துள்ளது” எனச் சாடியுள்ளது. மனிதாபிமானத்துடனும், பொறுப்புணர்வுடனும் மிகவும் உயர்நிலையில் பொதுமக்களைப் பாதுகாத்திருக்க வேண்டிய ஸ்தாபனம் இதிலிருந்து தவறியமை மூலம் முழு அமைப்பையும் பலவீனப்படுத்தித் தோற்கடித்துள்ளது.

யுத்தப் பிரதேசத்தில் ஐக்கிய நாடுகள் சபைப் பிரதிநிதிகளில் ஒருவராக இருந்த பென்ஜமின் டிக்ஸ் (Benjamin Dix) யுத்தப் பிரதேசத்திலிருந்து வெளியேறுவதை தான் விரும்பியிருக்கவில்லை எனக் கூறியுள்ளார். இது தொடர்பாக இவர் பிரித்தானிய ஒலிபரப்புக் கூட்டுத்தாபனத்திற்கு வழங்கிய செவ்வியில் பின்வருமாறு விபரிக்கின்றார் “நான் நம்புகின்றேன் வடக்கு நோக்கியே மேலும் நாம் நகர்ந்திருக்க வேண்டும். தெற்கு நோக்கி நகர்ந்திருக்க கூடாது. அடிப்படையில் எவ்வித பாதுகாப்போ அல்லது சாட்சியோ இல்லாமல் மக்களை நாம் கைவிட்டு விட்டோம். இலட்சக்கணக்கான தமிழ் பொதுமக்கள் யுத்தப் பிரதேசத்தில் இருந்தனர். இவர்களை இருதரப்பினரும் தமது சுயநலத்திற்காகப் பயன்படுத்திக் கொண்டனர். தமிழீழ விடுதலைப் புலிகள் இம்மக்களை பலாத்காரமாக தமது படையணியில் சேர்த்தனர் அல்லது மனிதக் கேடயங்களாகப் பயன்படுத்தினர் அல்லது அரசாங்கப் படைகளின் கண்மூடித்தனமான துப்பாக்கிப் பிரயோகத்திற்குள்ளாகி இவர்கள் இறந்து போயினர்”.

ஐக்கியநாடுகள் ஸ்தாபன உத்தயோகத்தர்கள் யுத்தப் பிரதேசத்திலிருந்து வெளியேறியமை தொடர்பாக தனது பெயரைக் கூறிப்பிட விரும்பாத பிரித்தானியாவில் தற்போது அகதி அந்தஸ்த்துக் கோரி வசித்து வரும் தமிழ் ஆசிரியர் ஒருவர் பின்வருமாறு கூறியிருந்தார். “யுத்தப் பிரதேசத்தினை விட்டு வெளியேற வேண்டாம் என நாங்கள் அவர்களை கேஞ்சினோம், மன்றாடினோம். அவர்கள் நாங்கள் சொல்வதைக் கேட்கவேயில்லை. நாங்கள் சொல்வதைக் கேட்டு அவர்கள் அங்கு தங்கியிருந்தால் அனேகமான மக்கள் இன்று உயிருடன் வாழ்ந்து கொண்டிருப்பார்கள்”.

யுத்த காலப்பகுதியில் ஐக்கிய நாடுகள் ஸ்தாபனத்தின் மனிதாபிமானப் பணிகளுக்கு பொறுப்பாகவிருந்த ஜோன் ஹோல்ம்ஸ் ஐக்கிய நாடுகள் ஸ்தாபனத்தின் இயலாமை தொடர்பாக பின்வருமாறு கேள்வியெழுப்புகின்றார். “யுத்தத்தின் போது ஏற்பட்ட உண்மையான இழப்புக்களை வெளியிட்டிருந்தால் கூட யுத்தத்தினை நிறுத்தியிருக்க முடியாது. பொதுமக்களைப் பாதுகாப்பதை விட புலிகளை அழிப்பதற்கே அரசாங்கம் முன்னுரிமை வழங்கியது. இந்நிலையில் யுத்தத்தினை நிறுத்துவது சாத்தியமாக இருக்கவில்லை. சிறிய நாடு ஒன்றின் உள்நாட்டு யுத்தத்தினை நிறுத்துவதற்குக் கூட பலமற்றிருக்கும் நிறுவனமாகவுள்ள ஐக்கிய நாடுகள் ஸ்தாபனத்தினால் எவ்வாறு உலக அமைதியை ஏற்படுத்த முடியும்”.

இந்தியராகிய விஜய் நம்பியார்

இலங்கையின் நீண்ட உள்நாட்டு யுத்தத்தினை முடிவுக்கு கொண்டவருவதற்கு ஐக்கிய நாடுகள் ஸ்தாபனத்தின் சார்பில் பான் கீ மூனிற்கு ஆலோசனை வழங்குவதற்காக இந்தியராகிய விஜய் நம்பியார் நியமிக்கப்பட்டிருந்தார். 2009ஆம் ஆண்டு வைகாசி மாதம் விஜய் நம்பியார் வெள்ளைக் கொடியுடன் தமிழீழ விடுதலைப் புலிகளை இலங்கை இராணுவத்திடம் சரணடையுமாறும், இவர்களுக்கான பாதுகாப்பு இலங்கை இராணுவத்தினால் வழங்கப்படும் என்ற உத்தரவாதத்தினை வழங்கியிருந்தார். தமிழீழ விடுதலைப் புலிகள் இலங்கை இராணுவத்திடம் சரணடைவதை நேரில் பார்வையிடுவதற்காக ஐக்கிய நாடுகள் ஸ்தாபனப் பொதுச் செயலாளரின் பிரதிநிதியாகவும் விஜய் நம்பியார் கொழும்பு வந்திருந்தார். கொழும்பிலிருந்த விஜய் நம்பியாரின் வார்த்தைகளை நம்பி வெள்ளைக் கொடியுடன் சரணடைந்தவர்கள் அவ்விடத்தில் வைத்தே படுகொலை செய்யப்பட்டிருந்தனர். ஆனால் இது தொடர்பாக விஜய் நம்பியார் இன்றுவரை எக்கருத்தினையும் தெரிவிக்கவில்லை. இக்காலப்பகுதியில் விஜய் நம்பியாரின் சகோதரர் சரிஸ் நம்பியார் இலங்கை இராணுவத்தின் ஆலோசகராக கடமையாற்றி வந்துள்ளார். இது இப்படுகொலைகளுடன் விஜய் நம்பியார் தொடர்புபட்டிருந்தார் என்ற சந்தேகத்தினை மேலும் வலுப்படுத்தியிருந்தது.

இதற்கு எதிராகச் சர்வதேச குற்றவியல் நீதி மன்றத்தில் அமெரிக்காவினைத் தளமாகக் கொண்டு இயங்கும் தமிழர்களின் இனப்படுகொலைக்கு எதிரான அமைப்பும், ஈழத் தமிழர்களின் சுவிஸ் பேரவையும் வழக்குத் தாக்கல் செய்திருந்தன. இதில் விஜய் நம்பியார் இது தொடர்பில் விசாரிக்கப்பட வேண்டும் எனக் கேட்கப்பட்டிருந்தது. ஆனால் இந்தியராகிய நம்பியார் மீதான விசாரணைக்கான அழைப்பினை பான் கீ மூன் நிராகரித்திருந்தார் என்பதுடன் அவரைப் பாதுகாத்தும் இருந்தார்.

விஜய் நம்பியார் தொடர்பான விடயங்களை பான் கீ மூன் ஏன் மறைத்தார்? அதன் உள்நோக்கம் என்ன? எனப் பல கேள்விகள் எழுவதற்கு பான் கீ மூன் சந்தர்ப்பம் வழங்கியுள்ளார். தமிழீழ விடுதலைப் புலிகளை பூரணமாக அழித்து யுத்ததினை முடிவிற்கு கொண்டுவர விரும்பிய இந்தியா தலைமையிலான சர்வதேச நாடுகளின் நெருக்கடிக்கு ஐக்கிய நாடுகள் ஸ்தாபனம் உள்ளாக்கப்பட்டு அதன் செயற்பாடுகள் இடைநிறுத்தப்பட்டுள்ளன என்று ஊகிக்க வேண்டியுள்ளது. இலங்கையில் சர்வதேச மனிதாபிமானச்சட்டம் முறையாக மீறப்படுவதை ஐக்கிய நாடுகள் ஸ்தாபனத்தின் பிரதிநிதியாக இருந்த இந்தியராகிய நம்பியார் நேரடியாகவே பார்வையிட்டிருந்தார். இதன் மூலம் சர்வதேச நாடுகளும் இவருக்கூடாகப் பார்வையிட்டுள்ளன என்பது நிரூபணமாகியுள்ளது.

இதனை முன்னைநாள் ஐக்கிய நாடுகள் சபைப் பேச்சாளராகக் கடமையாற்றிய கோர்டன் வைஸ் (Gordon Weiss) பிரித்தானிய ஒலிபரப்புக் கூட்டுத்தாபன சிங்கள சேவையாகிய சந்தேசியாவுக்கு (Sandeshaya) வழங்கிய செவ்வியொன்றில் கோடிட்டுக்காட்டுவதை அவதானிக்க முடிகின்றது. இச்செவ்வியல் இவர் “பிரித்தானியா, ஐக்கிய அமெரிக்கா சீனா, இந்தியா,பாக்கிஸ்தான், இஸ்ரவேல் போன்ற சில நாடுகள் இலங்கைக்கு இராணுவ உதவியை வழங்கியுள்ளன. 2009ஆம் ஆண்டு வைகாசி மாதம் தமிழ் புலிகளைத் தோற்கடிப்பதற்காக அரசாங்கம் மேற்கொண்ட இராணுவ நடவடிக்கையின் பொழுது 40,000 பொதுமக்கள் கொல்லப்பட்டனர். இது அனேக நாடுகளுக்கு நன்கு தெரியும். தொடர்ச்சியாக வழங்கப்படும் ஆயுத விநியோகத்தினால் இறுதி யுத்தம் எங்கு போய் முடியும் என சர்வதேச நாடுகளுக்குத் தெரியுமாக இருந்தால், நான் எண்ணுகின்றேன் இறுதிக்கட்ட யுத்த காலத்தில் இலங்கை இராணுவத்திற்கு ஆயுத உதவி வழங்கிய சகல அரசாங்கங்களையும் விசாரணைக்குட்படுத்துவது பயன்மிக்கதாக இருக்கும்” எனக் கூறியுள்ளார்.

யார் குற்றவாளிகள்

மொத்ததில் இந்தியா தலைமையில் சர்வதேச நாடுகள் ஒன்றிணைந்து ஐக்கிய நாடுகள் ஸ்தாபனத்தினை செயற்பாடற்றதாக்கி பாரிய மனிதப் படுகொலைகளை வன்னி மண்ணில் நிகழ்த்தியுள்ளன. தவறுகளுக்கு உடந்தையாக இருந்து விட்டு பான் கீ மூன் “தவறுகளை ஏற்றுக் கொள்வதாகவும் தவறுகளிலிருந்து பாடம் கற்று எதிர்காலத்திற்கு தம்மால் வழிகாட்டமுடியும்” எனக் கூறியுள்ளார். அவ்வாறாயின் பான் கீ மூன் பாடம் கற்பதற்காகவா 40,000 தமிழ் பொது மக்கள் படுகொலை செய்யப்பட்டனர்? ஏகாதிபத்தியம் தனது ஆதிக்கக் கால்களை அகலாமாகவும், ஆழமாகவும் பதித்ததில் 40,000 தமிழ் பொதுமக்கள் நசியுண்டு மரணித்து விட்டார்கள். இனி யாரிடமும் இவர்கள் நீதி கேட்க முடியாது. ஏனெனில் நீதி வழங்கும் என எதிர்பார்த்த ஐக்கிய நாடுகள் ஸ்தாபனம் இப்படுகொலைகள் நிகழத் துணை நின்றுள்ளது என்பது மரணித்துப் போன மக்களுக்கு இனித் தெரியப் போவதில்லை. இப்போதுள்ள கேள்வி யார் குற்றவாளிக் கூண்டில் நிற்பது? அவர்களை யார் விசாரிப்பது? என்பது மட்டுமேயாகும்.