பொது நிர்வாகமும் தனியார் நிர்வாகமும் - 3.6 out of 5 based on 5 votes
1 1 1 1 1 1 1 1 1 1 Rating 3.70 (5 Votes)

பொதுநிர்வாகத்தினைப் பற்றிப் பேசும் போது, பொதுநிர்வாகத்தில் இருந்து வேறுபட்ட தனியார் நிர்வாகம் பற்றிய சர்ச்சையும் எழுகின்றது. தனியார் நிர்வாகத்திற்கும், பொது நிர்வாகத்திற்கும் இடையிலான உறவு பற்றிய சர்ச்சை வேவ் வேறுபட்ட முனையிலிருந்து எழுகின்றது. உர்விக், மேரி பார்க்கர், பொலட், ஹென்றி பயோல் போன்றவர்கள் 'பொது ஒழுங்கமைப்பில் அல்லது தனியார் துறையில் காணப்படுகின்ற எல்லா நிர்வாகங்களும் ஒன்றே' என்ற கருத்தை ஆதரி;கின்றார்கள். ஹென்றி பயோல் என்பவர் 'அனேக நிர்வாக விஞ்ஞானங்களால் நாம் குழப்பப்பட்டாலும், சிறிது காலத்திற்குப் பொது விவகாரத்திற்கும், தனியார் விவகாரத்திற்கும் ஒருமித்த ஆழமான தன்மைகளை பிரயோகிக்க முடிந்தது' என்கின்றார்.

இவற்றினை அடிப்படையாகக் கொண்டு தனியார் நிர்வாகம், பொது நிர்வாகம் இரண்டிற்கும் இடையிலான ஒற்றுமை நாளாந்தம் அவதானிக்கப்பட்டது. பொதுநிர்வாகத்தின் அனேக செயற்பாடுகள் தனியார்துறை இயல்புகளிலானவையாகவே காணப்படுகின்றன. தனியார் நிர்வாகத்திற்கும், பொதுநிர்வாகத்திற்கும் இடையில் பொதுவான அனேக செயற்பாடுகள், நுட்பங்கள், திறமை காணப்படுகின்றன. பொருளாதார நடத்தைகளில் அரசு நுழைந்த காலத்திலிருந்தே தனியார்துறையினுடைய அனுபவத்திற்கும், அறிவிற்கும் மேலாக பொதுநிர்வாகம் பாரியளவிலான அனுபவத்தினையும், அறிவினையும் பெற்றுக் கொண்டது. சில நாடுகளில் நிர்வாகப் பயிலுனர்கள் தனியார் துறையிலிருந்தும் சேர்த்துக் கொள்ளப்படுகின்றார்கள்.

பொது நிர்வாகத்திற்கும், தனியார் நிர்வாகத்திற்கும் இடையில் சில ஒற்றுமைகள் காணப்படினும் பல வேறுபாடுகளும் காணப்படுகின்றன. இவ்வகையில் தனியார் நிர்வாகத்தினையும், பொது நிர்வாகத்தினையும் வேறுபடுத்தும் அம்சங்களைப் பின்வருமாறு வகைப்படுத்தலாம்.

1. அரசியல் நெறியாள்கை :-

அவசரகால நேரங்களுடனான அரசியல் நெறியாள்கையினை கொண்ட பொது நிர்வாகத்தினைப் போன்றதல்ல தனியார் நிர்வாகம். இரண்டிற்கும் இடையே இடைவெளி காணப்படுகின்றது. அரசியல் தீர்மானங்களைப் போல, தனியார்துறையின் இலக்குகள் தங்கு நிலையில் இருப்பதில்லை. பொது நிர்வாகத்தின் கீழ் பணி புரியும் நிர்வாகி அரசியல் நிர்வாகத்துறையின் கட்டளைகளை ஏற்று அதற்கேற்ப பணி புரிகின்றார். அவர் தன்னுடைய சொந்த விருப்பத்தின் பேரில் எதனையும் செய்வதி;ல்லை.

2. இலாப நோக்கு :-

பொது நிர்வாகம் சேவை நோக்கத்துடன் தொழிற்பட தனியார் நிர்வாகம் இலாப நோக்கத்துடன் தொழிற்படுகின்றது. உதாரணமாக சீனித் தொழிற்சாலையினை விட புடவைத் தொழிற்சாலைக்குச் செய்யப்படுகின்ற முதலீடு அதிக இலாபத்தினை கொடுக்குமானால் ஒருவர் புடவைத் தொழிற்சாலையினை உருவாக்கவே திட்டமிடுவார். ஆனால் பொது நிர்வாகத்தின் செயற்பாட்டிற்குப் பெருமளவில் பணம் செலவழிக்கப்பட்டாலும் அது இலாப நோக்கத்தை கொண்டு செயற்படுவதில்லை. மேலும், இலவச மருத்துவ வசதி, கல்வி வசதி போன்ற சமூகநலன்புரித்தேவைகளுக்காகவும் அதிகளவில் பணம் செலவிடப்படுகின்றது.

3. சேவையும், செலவும் :-

சேவையும் , செலவும் என்ற விடயத்தில் பொது நிர்வாகம் வரி மூலம் மக்களிடம் இருந்து பணத்தினை அறவிடுகின்றது. இவ்வரி மக்களுக்கு அரசு செய்யும் சேவைக்கு அவசியமாக இருக்கின்றது. இதனால் வருமானத்தினை விட மித மிஞ்சிய செலவீனம் காணப்படும். ஆனால்; தனியார் துறையில் வருமானம் அடிக்கடி அதிகரித்துச் செல்லும் போக்கினை காணமுடியும். இங்கு இலாபம் இல்லாமல் இருப்பதில்லை.

4. செயற்பாட்டு இயல்பு :-

பொது நிர்வாகம் அனேகமாக விசாலமான தன்மை கொண்டதும், மக்களுடன் தொடர்புடைய வேறுபட்ட தேவைகள், வகைப்பாடுகளுடன் தொடர்புபட்டதாகும். அத்துடன் மக்களுடைய ஜீவாதார வாழ்விற்கான செயற்பாடுகளை வெளிக்கொணருகின்றது. தனியார் நிர்வாகம் மனிதன் உயிர்வாழ்வதற்கு தேவைப்படும் செயற்பாடுகளில் மிகவும் குறைந்தளவினையே கருத்திலெடுக்கின்றது. மறுபுறத்தில் பொது நிர்வாகம் சில சேவைகளைப் பொறுத்து தனியுடமையானதாகவும் செயற்படுகின்றது. சில சந்தர்ப்பங்களில் தனியார் நிர்வாகம் குறிப்பிட்ட உற்பத்தியில் தனியுரிமை வகிப்பதுண்டு. ஆனால் இவ்வாறான நிகழ்வு நடப்பது மிகவும் அரிதாகும்.

5 பொதுப் பொறுப்புணர்வு :-

பொது மக்களுக்கு பொது நிர்வாகம் பொறுப்பாக இருக்கின்றது. தங்கள் பிரதிநிதிகளுடாக மக்கள் வெளியிடுகின்ற விருப்பங்களுக்கு இணங்க அலுவலர்கள் செயற்படுகின்றார்கள். இவர்கள் ஏனைய திணைக்களங்களுடனும், ஏனைய அலுவலர்களுடனும் ஒத்துழைக்கின்றார்கள். இதுவே பொறுப்புணர்விற்கான தத்துவமாகும். ஆனால் தனியார் நிர்வாகம் மக்களை நோக்கிய இவ்வாறான எந்த விடயங்களுக்கும் பொறுப்பானவையல்ல. பொது நிர்வாகம் பாரியளவில் நேரடியாக மக்களுக்கு பொறுப்பானவையாக இருக்க தனியார் நிர்வாகம் மறைமுகமாக மக்களுக்கு பொறுப்பானவையாகும்.

6. பொது உறவு :-

பொது நிர்வாகமும் தனியார் நிர்வாகமும் பொது உறவுக் கொள்கையிலும் வேறுபட்டுள்ளன. பொது உறவு என்பது தனியார் நிர்வாகத்தினை விட பொது நிர்வாகத்தில் மிகவும் சுருங்கியதொன்றாகவே காணப்படுகின்றது. தனியார் நிர்வாகத்தினை விட பொது நிர்வாகத்தில் அழுத்தங்கள் அதிகமாக உள்ளன. மேலும், அடிப்படை சேவைகளின் யதார்த்த மையமாக இது உள்ளது. தீயில் இருந்து பாதுகாப்பு, பொது சேவைகள், கல்வி, சுகாதாரம், சமூகப் பாதுகாப்பு, தேசிய பாதுகாப்பு போன்ற ஏனைய விடயங்கள் பொது மக்களுக்காக நிறைவேற்றப்படுகின்றது.

முடிவாகக் கூறின் பொது நிர்வாகமும், தனியார் நிர்வாகமும், வேறுபட்ட சூழலில் தமக்குரிய இடத்தினை பெற்றுக் கொண்டன. ஆனால் இந்த வேறுபாடுகள் தெளிவானவை என்பதை விட யதார்த்தமானவை எனலாம்.