( தினக்குரல் , புதிய பண்பாடு இதழில் 2013.06.22, 2013.06.23 ஆகிய திகதிகளில் பிரசுரிக்கப்பட்டது )
                                
                                    
                                        
                                             2013 ஆம் ஆண்டு ஆடி மாதம் 29 ஆம் திகதியுடன் இலங்கை - இந்திய ஒப்பந்தம் கைச்சாத்திடப்பட்டு இருபத்தாறு வருடங்கள் பூர்த்தியாகின்றன. முடிவடைந்த இருபத்தாறு வருடகாலத்தில் இலங்கை - இந்திய ஒப்பந்தத்தால் அடையப்பட்ட நன்மைகள் எவை? இதுவரை இலங்கை - இந்திய ஒப்பந்தத்தால் நிறைவேற்றப்படாமல் விடப்பட்ட விடயங்கள் எவை? இலங்கை - இந்திய ஒப்பந்தத்திலும், பதின்மூன்றாவது அரசியலமைப்பு திருத்தத்திலும்; இலங்கை தொடர்ந்து நம்பிக்கை கொண்டுள்ளதா? இலங்கையின் ஆட்சிமுறைமையைத் தீர்மானிக்கும் கொள்கை வகுப்பாளர்கள் இலங்கையின் எதிர்காலம் தொடர்பாக எவ்வாறு சிந்திக்கின்றார்கள்? போன்ற விடயங்கள் சமகால சிந்தனைக்கும்,விவாதத்திற்கும் உரிய கருப்பொருளாகியுள்ளன. இலங்கை-இந்திய ஒப்பந்தத்தினதும், பதின்மூன்றாவது அரசியலமைப்பு திருத்தத்தினதும் பிரதான சிற்பிகளாகிய முன்னைநாள் இந்தியப் பிரதமமந்திரி ராஜிவ் காந்தியும், முன்னைநாள் ஜனாதிபதி ஜே.ஆர் ஜெயவர்த்தனாவும் இறந்துவிட்டார்கள். தமிழீழ விடுதலைப்புலிகளும் அழிந்து விட்டனர். இலங்கை-இந்திய ஓப்பந்தம் கைச்சாத்திடப்பட்டபோது இருந்த அரசியல் காட்சிநிலைகளும் தற்போது மாறிவிட்டன. இன்று இலங்கை இந்திய-ஒப்பந்தம் தொடர்பாகவும், இலங்கையின் அரசியல் யாப்பிற்குச் செய்யப்பட்ட பதின்மூன்றாவது அரசியலமைப்பு திருத்தம் தொடர்பாகவும் இலங்கையின் ஆட்சியாளர்கள் பல்வேறு குழப்பத்திற்குள் உள்ளாகியுள்ளதுடன், மக்களையும் குழப்புகின்றனர். இது நல்லாட்சியை எதிர்பார்த்திருக்கும் மக்களுக்கும், அரசாங்கத்திற்கும் இடையில் நீண்ட இடைவெளியை ஏற்படுத்தலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.
                                        
                                    
                                
                                2013 ஆம் ஆண்டு ஆடி மாதம் 29 ஆம் திகதியுடன் இலங்கை - இந்திய ஒப்பந்தம் கைச்சாத்திடப்பட்டு இருபத்தாறு வருடங்கள் பூர்த்தியாகின்றன. முடிவடைந்த இருபத்தாறு வருடகாலத்தில் இலங்கை - இந்திய ஒப்பந்தத்தால் அடையப்பட்ட நன்மைகள் எவை? இதுவரை இலங்கை - இந்திய ஒப்பந்தத்தால் நிறைவேற்றப்படாமல் விடப்பட்ட விடயங்கள் எவை? இலங்கை - இந்திய ஒப்பந்தத்திலும், பதின்மூன்றாவது அரசியலமைப்பு திருத்தத்திலும்; இலங்கை தொடர்ந்து நம்பிக்கை கொண்டுள்ளதா? இலங்கையின் ஆட்சிமுறைமையைத் தீர்மானிக்கும் கொள்கை வகுப்பாளர்கள் இலங்கையின் எதிர்காலம் தொடர்பாக எவ்வாறு சிந்திக்கின்றார்கள்? போன்ற விடயங்கள் சமகால சிந்தனைக்கும்,விவாதத்திற்கும் உரிய கருப்பொருளாகியுள்ளன. இலங்கை-இந்திய ஒப்பந்தத்தினதும், பதின்மூன்றாவது அரசியலமைப்பு திருத்தத்தினதும் பிரதான சிற்பிகளாகிய முன்னைநாள் இந்தியப் பிரதமமந்திரி ராஜிவ் காந்தியும், முன்னைநாள் ஜனாதிபதி ஜே.ஆர் ஜெயவர்த்தனாவும் இறந்துவிட்டார்கள். தமிழீழ விடுதலைப்புலிகளும் அழிந்து விட்டனர். இலங்கை-இந்திய ஓப்பந்தம் கைச்சாத்திடப்பட்டபோது இருந்த அரசியல் காட்சிநிலைகளும் தற்போது மாறிவிட்டன. இன்று இலங்கை இந்திய-ஒப்பந்தம் தொடர்பாகவும், இலங்கையின் அரசியல் யாப்பிற்குச் செய்யப்பட்ட பதின்மூன்றாவது அரசியலமைப்பு திருத்தம் தொடர்பாகவும் இலங்கையின் ஆட்சியாளர்கள் பல்வேறு குழப்பத்திற்குள் உள்ளாகியுள்ளதுடன், மக்களையும் குழப்புகின்றனர். இது நல்லாட்சியை எதிர்பார்த்திருக்கும் மக்களுக்கும், அரசாங்கத்திற்கும் இடையில் நீண்ட இடைவெளியை ஏற்படுத்தலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.
                            
பிறப்பு
இலங்கை இந்திய ஒப்பந்தம் காலம் சென்ற தலைவர்களாகிய ராஜிவ் காந்தியினாலும், ஜெயவர்த்தனாவினாலும் வரையப்பட்டதாக கூறப்பட்டாலும், பதின்மூன்றாவது அரசியலமைப்புத் திருத்தத்திற்கான நகல் இந்தியாவின் வெளிவிவகார அமைச்சின் தென்பகுதிக்குப் பொறுப்பானவர்களால் வரையப்பட்டிருந்தது.
இலங்கை யதார்த்தமான, நடைமுறைசாத்தியமான வெளியுறவுக் கொள்கையினையும், செயற்பாட்டினையும் கொண்டிருக்கவில்லை என்பதே இந்திய வெளியுறவுக் கொள்கை வகுப்பாளர்களின் நிலைப்பாடாக இருந்தது. யாழ்ப்பாண மக்களுக்கு வான் வழியூடாக இந்தியா உணவு விநியோகித்த பின்னர் இந்தியாவுடன் மிகவும் நெருக்கமான வெளியுறவுக் கொள்கையினை இலங்கை கடைப்பிடிக்க ஆரம்பித்தது. இக் கொள்கை மாற்றத்;தினையேஇலங்கையிடமிருந்து இந்தியா எதிர்பார்த்தது.
அதேநேரம் தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்கம் மீது இந்திய அரசாங்கம் கொடுத்த உயர் அழுத்தங்களின் விளைவாக இந்திய அரசாங்கத்தின் உத்தரவாதம் உள்ள உடன்பாடு ஒன்றிற்கு வருவதற்கு சம்மதம் தெரிவித்தது. இச்சூழ்நிலை இலங்கை, இந்திய ஒப்பந்தம் கைச்சாத்திடப்படுவதற்கான அடித்தளத்தினை ஏற்படுத்திக் கொடுத்தது. இப்பின்னணியில் 1987ஆம் ஆண்டு ஆடி மாதம் 29ஆம் திகதி இலங்கை, இந்திய ஒப்பந்தம் கைச்சாத்திடப்பட்டது.
கடந்த முப்பது வருடங்களாக தெற்காசிப் பிராந்தியத்தில் தமிழீழ விடுதலைப் புலிகளாலும், இலங்கையினாலும்; தனக்கு ஏற்பட்டிருந்த பாதுகாப்பு அச்சுறுத்தல்களிலிருந்து மீளும் நோக்கில் இலங்கை மீதும்,தமிழீழ விடுதலைப்புலிகள் மீதும் அழுத்தத்தினைப் பிரயோகித்து இலங்கையுடன் இந்திய ஒப்பந்தத்தில் கைச்சாத்திட்டுக் கொண்டது. உண்மையில்; ஒப்பந்தத்தின் பிரதான நோக்கம் இந்தியாவின் பாதுகாப்பினை உறுதிப்படுத்துவதாகவே இருந்தது.இதனை ஒப்பந்தத்தின் இரண்டாம் மற்றும் மூன்றாம் பகுதிகள் தெளிவாக நிரூபித்திருந்தன.
இலங்கை, இந்திய ஒப்பந்தத்தின் இரண்டாம் பகுதி பின்னிணைப்பு என அழைக்கப்படுகிறது. இப்பின்னிணைப்பு இலங்கை ஜனாதிபதியின் அழைப்பின் பெயரில் இலங்கைவரும் இந்திய அமைதிகாக்கும் படையின் வகிபாகம் தொடர்பாகவும், ஒழுங்குமுறை தொடர்பாகவும் எடுத்துக் கூறுகின்றது.
இலங்கை, இந்திய ஒப்பந்தத்தின் மூன்றாம் பகுதி கடிதப் பரிமாற்றத்தினை (Exchange of Letters) உள்ளடக்கியுள்ளது. இக்கடிதங்கள் இந்தியாவின் பிரதம மந்திரிக்கும் இலங்கை ஜனாதிபதிக்கும் இடையில் பரிமாறப்பட்ட கடிதங்களை உள்ளடக்கியிருந்தன. இக்கடிதங்கள் பின்வரும் விடயங்கள் தொடர்பாக இந்தியப் பிரதம மந்திரியாலும், இலங்கை ஜனாதிபதியாலும் எழுதப்பட்டிருந்தன.
- 
                                                                இந்தியாவின் பாதுகாப்பு - இலங்கையில் வெளிநாட்டு இராணுவங்களின் செயற்பாட்டினால் இந்தியாவின் பாதுகாப்பிற்கு ஏற்படும் பாதிப்பு.
- 
                                                                திருகோணமலை துறைமுகமும், ஏனைய துறைமுகங்களின் பயன்பாடு
- 
                                                                இலங்கையில் செயற்படும் வெளிநாட்டு ஒலிபரப்பு சேவையில் இராணுவ புலனாய்வு விடயங்களிற்கு இடமளிக்கக் கூடாது.
- 
                                                                திருகோணமலையில் அமைந்துள்ள எண்ணெய் சுத்திகரிப்பு நிலையத்தினை இந்தியாவும், இலங்கையும் கூட்டாகச் செயற்படுத்துவது.
இலங்கை, இந்திய ஒப்பந்த விதிகளுக்கு ஏற்ப, இந்திய அமைதிகாக்கும் படை இலங்கை வந்திருந்தது. தெற்காசியப் பிராந்தியத்தின் தென்பகுதியில் வல்லரசுகளின் செல்வாக்கு அதிகரிப்பதனால் ஏற்படக்கூடிய அபாயத்தினைத் தடுப்பதற்கு இந்தியா 1987ஆம் ஆண்டு இலங்கை இந்திய ஒப்பந்தத்தினூடாகப் புதிய வியூகத்தினை வகுத்துக் கொண்டது. இன்னோர்வகையில் கூறின் இந்து சமுத்திரப் பிராந்தியத்தில் அமைதி,உறுதிப்பாடு என்பவற்றைப் பேணுவதற்காகக் கூட்டுப்பாதுகாப்பினை ஏற்படுத்துவதற்குச் செய்து கொள்ளப்பட்ட ஒப்பத்தமாகும்.
இந்தியா தனது தேசிய நலனுக்காக இலங்கை இந்திய ஒப்பந்தத்தினையும், பதின்மூன்றாவது யாப்புத் திருத்தத்தையும் ஏற்படுத்தியது என்பதை இந்திய அமைதிகாக்கும் படையின்; தளபதியாகக் கடமையாற்றிய முன்னைநாள் இராணுவத்தளபதி ஜெனரல் ஏ.எஸ் கல்கட் வெளியிட்ட கருத்து நிருபித்துள்ளது. 'நாங்கள் பதின்மூன்றாவது அரசியல் யாப்பு திருத்தத்திற்கான நகலை வரைந்த போது சில தமிழ் இராணுவக் குழுக்களும்,சில மிதவாத தமிழ் அரசியல் தலைவர்களும் யாழ்ப்பாணம் வடகிழக்கு மாகாணத்தின் தலைநகராக வேண்டும் என விரும்பியிருந்தனர். ஆனால் நாங்கள் இந்தியாவிற்கு தந்திரோபாய முக்கியத்துவம் வாய்ந்த இயற்கைத் துறைமுகம் அமைந்துள்ள திருகோணமலையே வடக்கிழக்கு மாகாண சபையின் தலைநகராக வேண்டும் என விரும்பியிருந்தோம்.' எனத் தெரிவித்திருந்தார். இவருடைய கருத்து இலங்கை இந்திய ஒப்பந்தமும், பதின்மூன்றாவது யாப்புத் திருத்தமும், அதன்மூலம் உருவாக்கப்பட்ட மாகாணசபைகளும் இந்தியாவினால்,இந்தியாவின் நலன்களுக்காக உருவாக்கப்பட்டது என்பதை நிரூபிக்கப் போதுமானதாகும்.
பொறுப்பின்மை
இந்தியாவினால் பயிற்சி , ஆயுதம், நிதி போன்றன வழங்கப்பட்டு வளர்க்கப்பட்ட தமிழீழ விடுதலைப்புலிகள் இலங்கை-இந்திய ஒப்பந்தத்தினையும், பதின்மூன்றாவது அரசியலமைப்புத் திருத்தத்தினையும் எதிர்த்தனர். இதற்கு எதிராக இந்திய இராணுவத்துடன் யுத்தத்திலும் ஈடுபட்டனர். தமிழீழ விடுதலைப்புலிகள் அழியும்வரை மாகாணசபைகள் முறைமைக்கு எதிராகவே இருந்தனர். அதேநேரம் மிதவாத தமிழ் அரசியல் கட்சிகள் இது தொடர்பாக உறுதியானதொரு கருத்தினையும், செயற்பாட்டினையும் விடுதலைப்புலிகள் அழியும்வரை வெளியிட்டிருக்கவில்லை.இந்தியாவிற்கு தமது வரைபுகள் அனைத்தையும் ஏற்றக்கொள்ளக் கூடிய மாற்று தமிழ் அரசியல் சக்தியாக ஈழமக்கள் புரட்சிகர விடுதலை முன்னணியை (EPRLF) உருவாக்குவதைத் தவிர வேறு வழியிருக்கவில்லை. ஆனால் அந்த மாற்று அரசியல் சக்தியைக் கூட தொடர்ந்து காப்பாற்றக்கூடிய வல்லமை இந்தியாவிற்கு இருக்கவில்லை.
1988 ஆம் ஆண்டு புரட்டாதி மாதம் வடக்கு கிழக்கு மாகாணங்கள் இணைக்கப்பட்டு மார்கழி மாதம் வடக்கு கிழக்கு மாகாண சபைக்கான தேர்தல் நடைபெற்றது. தேர்தல் நடைபெற்ற இரண்டு வருடத்தில் மாகாணசபையின் முதலமைச்சராகத் தெரிவு செய்யப்பட்ட ஈழமக்கள் புரட்சிகர விடுதலை முன்னணியைச் சேர்ந்த வரதராஜப்பெருமாள் வடக்கு கிழக்கு மாகாணசபையினை ஒருதலைப்பட்சமாகத் தனியரசாகப் பிரகடனப்படுத்தினார். இதனால் அதிர்ச்சியடைந்த இலங்கை ஜனாதிபதி ரணசிங்க பிரேமதாசா அரசியல்யாப்பு தனக்கு வழங்கிய அதிகாரத்தினைப் பயன்படுத்தி வடக்கு கிழக்கு மாகாணசபையினைக் கலைத்திருந்தார்.
பதின்மூன்று - A
2009 ஆம் ஆண்டு வைகாசி மாதம் முப்பது வருடகால உள்நாட்டு யுத்தம் முடிடைந்த பின்னர் 2013 ஆம் ஆண்டு புரட்டாதி மாதம் முதல் தடவையாக வடமாகாண சபைக்கான தேர்தலை நடாத்த அரசாங்கம் திட்டமிட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.வடமாகாணசபைத் தேர்தலை நடாத்துவதற்கு அரசாங்கம் விருப்பம் தெரிவித்த காலத்திலிருந்து இலங்கையின் அரசியல் யாப்பிற்குச் செய்யப்பட்ட பதின்மூன்றாவது திருத்தத்தினை மீண்டும் திருத்துவதற்கான முயற்சியில் அரசாங்கம் ஈடுபட்டுள்ளது. இதன்மூலம் பதின்மூன்றாவது யாப்பு திருத்தம் மாகாண சபைகளுக்கு வழங்கிய அதிகாரங்களின் செறிவினைநீக்க (Dilute) அரசாங்கம் முயற்சிக்கின்றது.
பதின்மூன்றாவது யாப்பு திருத்தம் கொண்டுவரப்பட்ட காலத்திலிருந்து பிரதான விவாதத்திற்குரிய பொருளாக பின்வரும் மூன்று விடயங்கள் மீண்டும் மீண்டும் மேலெழுந்தன. அவைகளாவன மாகாணசபைகளுக்கான
- 
                                                                                                காவல் துறைக்கான அதிகாரங்கள்
- 
                                                                                                காணிஅதிகாரங்கள்
- 
                                                                                                இரண்டு அல்லது இரண்டிற்கு மேற்பட்ட மாகாண சபைகள் தாம் விரும்பினால் ஒன்றாக இணைந்து ஒருஆளுனர் மற்றும் ஒரு முதலமைச்சரின் கீழ் செயற்படும் அதிகாரங்கள் என்பவைகளாகும்.
இலங்கை அரசாங்கம் பதின்மூன்றாவது யாப்பு திருத்தத்தினை மீண்டும் திருத்தி யாப்பினை பத்தொன்பதாவது தடவை திருத்த முயற்சிக்கின்றது. இதன்படி மாகாணசபைகளைத் தாபித்த பதின்மூன்றாவது யாப்புத்திருத்தத்திற்கு இரண்டு திருத்தங்களை கொண்டு வர அமைச்சரவை அண்மையில் அங்கீகாரம் வழங்கியுள்ளது.
- 
                                                                                                    அரசியல் யாப்பின் சரத்து 154(A)(3) இரண்டு அல்லது இரண்டிற்கு மேற்பட்ட மாகாணசபைகள் தாம் விரும்பினால் ஒன்றாக இணைந்து ஒருஆளுனர் மற்றும் ஒரு முதலமைச்சரின் கீழ் செயற்படும் அதிகாரங்கள் தொடர்பாகக் கூறுகின்றது. இவ்வதிகாரத்தினை யாப்பிலிருந்து நீக்குவதற்கு அண்மையில் அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.
- 
                                                                                                    அரசியல் யாப்பின் சரத்து 154(G)(3) மாகாணசபைகளுக்கு ஒதுக்கப்பட்ட அதிகாரங்கள் மீது பாராளுமன்றம் சட்டம் இயற்றுவதற்குப் பின்பற்ற வேண்டிய நடைமுறைகள் தொடர்பாகக் கூறுகின்றது. மாகாணசபைகளின் எளிய பெரும்பான்மையின் அனுமதியுடன் மாகாணசபைகளுக்கு ஒதுக்கப்பட்ட அதிகாரங்கள் மீது பாராளுமன்றம் சட்டம் இயற்றும் வகையில் புதிய திருத்தம் கொண்டுவர அமைச்சரவை அனுமதி வழங்கியுள்ளது.
அமைச்சரவை அண்மையில் அங்கீகாரம் வழங்கிய பிரேரணைகளில் முதலாவது பிரேரணை மாகாணசபைகள் ஒன்றுடன் ஒன்று இணைவதுடன் தொடர்புடையதாகும்.இது வடக்கு மற்றும் கிழக்கு மாகாணசபைகளை இலக்கு வைத்து கொண்டுவரப்பட்ட பிரேரணையாகும். எதிர்காலத்தில் இரண்டு மாகாணசபைகளும் இணைவதற்கான சந்தர்ப்பத்தினை சட்டரீதியாக இல்லாமல் செய்வதே இதன்நோக்கமாகும். இரண்டாவது பிரேரணை மாகாண சபைகளுக்கு வழங்கப்பட்ட அதிகாரப்பட்டியலுடன் தொடர்புடையதாகும். இது மாகாணசபைகளுக்கு வழங்கப்பட்ட அதிகாரங்களை சிறிது சிறிதாக பறித்து பாராளுமன்றத்திடம் குவிக்கும் நோக்கம் கொண்டதாகும். இதன்மூலம் மாகாணசபைகள் அதிகாரங்களற்ற அங்கத்தவர்களின் கூடாரமாக எதிர்காலத்தில் மாற்றமடையப் போகின்றது.
அமைச்சரவை அனுமதியளித்த விடயங்கள் தொடர்பாக ஆராய்ந்து பரிந்துரை செய்வதற்குப் பாராளுமன்றத் தெரிவுக் குழுவினை சபாநாயகர் உருவாக்கவுள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளன.தெரிவுக்குழுவின் பரிந்துரை அரசாங்கத்தின் விருப்பத்தினை நிறைவு செய்யுமாயின் பாராளுமன்றத்தில் பதின்மூன்றாவது யாப்பு மீண்டும் திருத்தப்படும். இத்திருத்தம் பதின்மூன்றாவது யாப்புத் திருத்தம் (13 A) என அழைக்கப்படும் எனக் கூறப்படுகிறது.
அரசாங்கம் இதனுடன் திருப்திப்படும் என யாரும் எதிர்பார்க்க முடியாது. மாகாணசபைகளுக்கு வழங்கப்பட்டுள்ள காவல்துறை மற்றும் காணி ஆகிய இரண்டு அதிகாரங்கள் இன்னமும் நடைமுறைப்படுத்தப்படவில்லை. இவ் அதிகாரங்களை நடைமுறைப்படுத்துவது தொடர்பாக அரசாங்கத்திடம் அச்ச உணர்வு காணப்படுகிறது. இவ் அச்சம் வடக்கு மாகாணசபைக்கான தேர்தலை நடாத்துவது என அரசாங்கம் தீர்மானித்த காலத்திலிருந்து மிகவும் அதிகமாகியிருந்ததை அவதானிக்க முடிகிறது.இலங்கையின் பாதுகாப்பு செயலாளர் கோட்டாபேய ராஜபக்ஸா ' மாகாணசபைகளுக்கு காவல் துறை அதிகாரங்கள் வழங்குவதை ஒருபோதும் ஏற்றுக்கொள்ளமுடியாது.இது தேசியபாதுகாப்பிற்கு மிகவும் ஆபத்தானதும் சவால்மிக்கதுமாகும்.மாகாணசபைகளுக்கு காவல்துறை அதிகாரங்கள் வழங்கப்பட்டிருந்தால், நாட்டில் சட்டத்தினையும் ஒழுங்கினையும் பேணுவதில் மிகவும் சிக்கலான நிலை தோன்றி பாதுகாப்பு முறை செயலிழந்து போயிருக்கும்.' எனக் கூறியுள்ள கருத்து இதனை நன்கு தெளிவுபடுத்துகின்றது. ஆகவே எதிர்காலத்தில் பதின்மூன்றாவது யாப்புத் திருத்தமும் , அது உருவாக்கிய மாகாணசபைகளும் மேலும் பல சவால்களை எதிர்கொள்ளவுள்ளது என்பதையும், 13 A யுடன் மாத்திரமன்றி எதிர்காலத்தில் B,C,D என இது நீண்டு செல்ல வாய்ப்புள்ளது என்பதையும் கோடிட்டுக்காட்ட முடியும்.
யதார்த்தம்
1988 ஆம் ஆண்டு தொடக்கம் இணைக்கப்பட்டு ஆனால் செயலிழந்து காணப்பட்ட வடக்கு கிழக்கு இணைந்த மாகாண சபை சட்ட பூர்வமற்றது என மக்கள் விடுதலை முன்னணி (JVP) 2006 ஆம் ஆண்டு உயர்நீதிமன்றத்தில் வழக்குத் தாக்கல் செய்தது. இவ் வழக்கினை விசாரணை செய்த உயர்நீதிமன்றம் வடக்கு கிழக்கு இணைந்த மாகாணசபையானது சட்டரீதியற்றது எனத் தீர்ப்பு வழங்கியது. இத்தீர்ப்பிற்கிணங்க 2007 ஆம் ஆண்டு தை மாதம் தொடக்கம் வடக்கு மாகாணசபை தனியாகவும் கிழக்கு மாகாணசபை தனியாகவும் உத்தியோக பூர்வமாகப் பிரிக்கப்பட்டது.
மாகாணசபைகளுக்கு வழங்கப்பட்டுள்ள அதிகாரங்களுள் சில விடயங்கள் மாத்திரமே தமக்குப் பயனுடைய அதிகாரங்களாக உள்ளன என தமிழ்மக்கள் கருதுகின்றனர்.தமிழ்தேசியக் கூட்டமைப்பு பதின்மூன்றாவது யாப்புத் திருத்தம் முழுமையாக நிறைவேற்றப்பட்டால் அதனை ஏற்றுக்கொள்ள வேண்டிய நிர்பந்தத்திற்குள் தள்ளப்பட்டுள்ளது.காவல்துறை அதிகாரங்கள், காணி அதிகாரங்கள் என்பன மாகாணசபைகளுக்கு வழங்கப்பட்டால் அதன்மூலம் தமிழீழம் உருவாகிவிடும் எனக்கருதும் மனநிலை ஆட்சியாளர்களிடம் இருக்கின்றது.
இந்நிலையில் 1987 ஆம் ஆண்டு ஆடி மாதம் 29 ஆம் திகதி இந்தியா அரசியல் ரீதியாக வழங்கிய இலங்கை-இந்திய ஒப்பந்தமும், அதனைத் தொடர்ந்து உருவாக்கப்பட்ட பதின்மூன்றாவது யாப்புத் திருத்தமும், 1987 ஆம் ஆண்டு 42 ஆம் இலக்க சட்டமூலத்தினால் உருவாக்கப்பட்ட மாகாணசபைகள் என்ற புதிய நிர்வாக முறைமையும் படிப்படியாக வலுவிழந்து மக்களுக்குப் பயனற்றதொன்றாக மாறிவருகின்றது. இவைகள் யாவும் இலங்கை அரசியல் வரலாற்றில் நிகழ்ந்த துரதிஸ்டவசமானதொரு சம்பவமாக இலங்கை ஆட்சியாளர்கள் கருதுகின்றார்கள்.
உள்நாட்டு யுத்தம் முடிவடைந்தவுடன் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஸ பதின்மூன்றாவது யாப்புத் திருத்தத்தினை முழுமையாக நடைமுறைப்படுத்துவது மாத்திரமன்றி அதற்கு மேலாகவும் (13+) மாகாணசபைகளுக்கு அதிகாரங்கள் வழங்கத் தான் தயாராகவுள்ளதாக இந்தியாவிற்கு உத்தரவாதம் வழங்கியிருந்தார். இப்போது ஆட்சியில் பங்கெடுத்துள்ள இனவாதக் கட்சிகளின் செல்வாக்கிற்குட்பட்டு அவரே பதின்மூன்றாவது யாப்புத் திருத்தத்தினை எதிர்க்கின்ற காட்சிநிலை தோன்றியுள்ளது.
இலங்கை தரப்பில் இந்தியாவின் தேசிய நலனுக்காக இலங்கையின் இறைமையினை இந்தியா மீறிச் செயற்பட்டதொரு சர்வதேச நிகழ்வாகவே இலங்கை-இந்திய ஒப்பந்தம் நோக்கப்படுகிறது. இலங்கையின் இனமோதல் ஒர் உள்நாட்டு பிரச்சினை என்பதால் இதில் சர்வதேச நாடுகள்; தலையிடுவதை இலங்கை எப்போதும் எதிர்த்து வந்தது.இதனால் இந்தியாவினால் வரையப்பட்;ட பதின்மூன்றாவது யாப்புத் திருத்தத்தினை இலங்கையின் இனமோதலுக்கான தீர்வாகக் கருதாமல் அதனை இலங்கையின் இறைமையினை இந்தியா மீறியதற்கான சட்பூர்வமானதொரு ஆவணமாகவே இலங்கை கருதுகின்றது. ஆகவே இவ் அவமரியாதையினை இலங்கையினால் தொடர்ந்து சகித்தக்கொள்ள முடியாதுள்ளது. எனவே 2009 ஆம் ஆண்டு தமிழீழவிடுதலைப் புலிகள் தோற்கடிக்கப்பட்டு உள்நாட்டு பாதுகாப்பு அச்சுறுத்தல் நீங்கிய நிலையில் புதியதொரு அரசியல் காட்சிநிலை இலங்கையில் தோன்றியுள்ளது. இந்நிலையில் உள்நாட்டு பிரச்சினைகளை யாருடைய தலையீடும் இல்லாமல் இலங்கை ஆட்சியாளர்கள் கையாள விரும்புகின்றார்கள்.
சீனாவுடன் அதிகளவில் உறவினைப் பேணிவரும் இலங்கையினை தம்வசப்படுத்த புதிய தந்திரோபாயங்களை இந்தியா வகுத்து வருகின்றது. இந்நிலையில் இலங்கையின் வெறுப்புக்குள்ளாகாமல் இலங்கையின் உள்விவகாரத்தைக் கையாளவே இந்தியா விரும்பும். இந்தியா தனது அயல்நாடுகளை மிகவும் மகிழ்ச்சியாக வைத்திருக்க வேண்டிய அரசியல் காட்சிநிலை உருவாகியுள்ளது. அதாவது அயல்நாடுகள் ஏனைய நாடுகளுடன் பாதுகாப்பு மற்றும் அரசியல் கூட்டுக்களை உருவாக்காமல் பாதுகாக்க வேண்டிய தேவை இந்தியாவிற்கு ஏற்பட்டுள்ளது. குறிப்பாக பூகோள கடல் போக்குவரத்தில் தந்திரோபாயமிக்க இடத்தில் அமைந்துள்ள இலங்கையுடன் இந்தியா மிகவும் ஆழமான நட்பினைப் பேணுவதுடன், தனது பிராந்தியத்தில் தனக்குள்ள நீண்ட கால நலனைக் கருத்தில் கொண்டு அயல்நாடுகளுடன் தகராற்றில் ஈடுபடுவதையும் தவிர்க்க வேண்டிய அரசியல்காட்சி நிலை தோன்றியுள்ளது.
எனவே இலங்கையின் வெளியுறவுக் கொள்கையினைக் கட்டுப்படுத்த இலங்கையின் உள்நாட்டு அரசியல் விடயங்களை பயன்படுத்த இந்தியா தற்போது முயற்சிக்கமாட்டாது. இந்தியா தனது தேசிய நலனுக்காக இலங்கை விவகாரம் தொடர்பாக தமிழ்நாட்டு அரசியல்வாதிகளின் அரசியல் செயற்பாடுகளைக் கட்டுப்படுத்தவே முயற்சிக்கும். இதன்மூலம் உள்நாட்டு அரசியல் அழுத்தத்திற்கு வளைந்து கொடுப்பதிலிருந்து இந்தியா விடுபட்டு, நீண்டகாலத்தில் இந்து சமுத்திரப் பிராந்தியத்தில் தனக்கு இருக்கக் கூடிய நலன்களை மதிப்பீடு செய்தே செயற்படும் என்ற சர்வதேச அரசியல் யதார்த்தத்தை எல்லோரும் புரிந்துகொள்ளவேண்டும். ஏனெனில் புதிய சர்வதேசக் காட்சிநிலையில் இந்தியாவின் தேசிய நலனுக்குத் தேவை இலங்கையேயன்றி இலங்கைத்தமிழ் மக்களல்ல.