1 1 1 1 1 1 1 1 1 1 Rating 0.00 (0 Votes)

(தினக்குரல், புதிய பண்பாடு இதழில் 2012.11.17 , 2012.11.18 ஆகிய திகதிகளில் பிரசுரிக்கப்பட்டது)

clip_image002 ஐக்கிய அமெரிக்கா தனது நலன்களுக்கான மையப் பிரதேசமாக ஆசியாவினை இலக்கு வைத்துள்ளது. இதனால் சமகால சர்வதேச முறைமையில் ஆதிக்கம் செலுத்தும் ஐக்கிய அமெரிக்காவினது பூகோள பாதுகாப்பு நிகழ்ச்சித் திட்டத்திற்குள் ஆசியா பிரதான வகிபாகத்தினை வகிக்கப்போகின்றது. அதேநேரம் பலமுனை அரசியல், பொருளாதாரப் பூகோளமயமாக்கம், சமூக வலைப்பின்னல் தகவல் தொடர்பாடல் போன்றவை உலகநாடுகளை ஒருவர் மீது ஒருவர் தங்கிவாழ வைத்துள்ளதுடன், ஒருவரின் நலன்களுடன் மற்றவர்களின் நலன்களும் தொடர்புபடுகின்ற நிலையினைத் தோற்றிவித்து சமாதானம், அபிவிருத்தி, கூட்டுறவு என்பவற்றினால் உலகநாடுகள் ஒன்றாகக் கட்டுண்டு கிடக்கின்றன. இந்நிலையில்பூகோள அதிகாரத்தினையும், செல்வாக்கினையும் தேடுகின்ற புதியதொரு நாடாக சீனா வளர்ந்து வருகின்றது. இதனால் எதிர்காலச் சர்வதேச முறைமையில் ஆசிய நாடாகிய சீனா வகிக்கப் போகும் வகிபங்கு தொடர்பாக ஆழமான விவாதம் புலமையாளர்கள் மத்தியில் தோன்றி நீடித்து வருகின்றது. இவ் விவாதத்திற்குள் காணப்படும் பிரதான விடயம் பொருளாதார, இராணுவ பலம் இல்லாமல் சீனாவினால் பூகோள வல்லரசு என்ற நிலையினை அடையமுடியுமா? என்பதேயாகும்.

வெள்ளையறிக்கை

வரலாற்றினூடாக சீன மக்கள் ஆக்கிரமிப்பு யுத்தத்தினால் ஏற்பட்ட அழிவுகளையும், சமாதானத்தினால் கிடைத்த நன்மைகளையும், அபிவிருத்தியின் முக்கியத்துவத்தினையும் நன்கு அறிந்து வைத்துள்ளார்கள். எனவே உலக சமாதான அபிவிருத்தியுடன் இணைந்து சீனா தனது சமாதான அபிவிருத்தியை உறுதிப்படுத்த விரும்புகின்றது என சீன ஆட்சியாளர்கள் கூறுகின்றார்கள்.

இச்சந்தர்ப்பத்தில் சமாதான சகவாழ்வுடனான அபிவிருத்தி என்ற பெயரில் வெள்ளையறிக்கையொன்றை 2011ஆம் ஆண்டு புரட்டாதி மாதம் சீனா அரசாங்கம் வெளியிட்டுள்ளது. இவ்வறிக்கையில் “சந்தேகத்திற்கிடமின்றி சமாதான அபிவிருத்திப் பாதையினை சீனா பின்பற்றுகின்றது என்பதை விசுவாசத்துடன் உலகிற்கு அறிவிக்கின்றது” எனக் குறிப்பிட்டிருந்தது. சீனா தனது நாட்டினை அபிவிருத்தி செய்வதனூடாக உலக சமாதானத்திற்குப் பங்களிப்புச் செய்து அதனூடாகத் தன்னை மேலும் வளர்த்துக் கொள்ளும் என்பதே இதன் மையக் கருத்தாகும்.

சீனா ஏனைய நாடுகளுடன் சமாதானத்தினைப் பேணவதனூடாக வசதியானதும், பலமானதுமான நாடாக வளர விரும்புகின்றது. வல்லரசுகள் ஏனைய நாடுகளை மேலாதிக்கம் செய்து இழைத்த தவறினை சீனா செய்யமாட்டாது என வெள்ளையறிக்கை கூறுகின்றது. சீனாவின் சமாதான சகவாழ்வு அபிவிருத்தி என்பதே இவ் நீண்ட அறிக்கையின் மையப் பொருளாகும். சீன ஆட்சியாளர்கள் இருபத்தோராம் நூற்றாண்டின் மையப்பகுதியில் மக்கள் குடியரசின் நூற்றாண்டு விழா கொண்டாடப்படுகின்ற போது சீனாவினை செல்வந்த, பலமான, ஜனநாயக, நாகரீகமுள்ள, ஒத்திசைவான நவீன சோசலிச நாடாக்குவதை இலக்காகக் கொண்டு செயற்படுகின்றனர்.

சமாதானத்திற்கான அபிவிருத்தி

சமாதான சகவாழ்வுடனான அபிவிருத்தி என்ற பாரிய தந்திரோபாயத்தினை ஐம்பது வருடகாலத்திற்குள் மூன்றுகட்டங்களாக வகுத்து நிறைவேற்ற சீனா திட்டமிட்டுள்ளது. இவ் அபிவிருத்தியானது பொருளாதார மற்றும் இராணுவ விடயங்களை உள்ளடக்கியதாகும்.

முதற்கட்ட அபிவிருத்தியானது 2000ஆம் ஆண்டிலிருந்து 2010ஆம் ஆண்டிற்குள் பூர்த்தி செய்யத் திட்டமிடப்பட்டது. இக்காலத்தில் சீனா தனது மொத்த தேசிய உற்பத்தியினை இருமடங்காக அதிகரிக்கத் திட்டமிட்டிருந்தது. அத்துடன் கரையோரக் கடற்படையை (Green Water to Blue Water) ஆழ்கடல் கடற்படையாகத் தரமுயர்த்துவதும் சீPனாவின் நோக்கமாக இருந்தது.

இரண்டாம் கட்ட அபிவிருத்தியினை 2010ஆம் ஆண்டிலிருந்து 2020ஆம் ஆண்டிற்குள் பூர்த்தி செய்ய சீனா திட்டமிட்டுள்ளது. இக்காலப்பகுதியில் சீனா தனது மொத்தத் தேசிய உற்பத்தியினை இருமடங்காக அதிகரிக்கவும் கடற்படையில் விமானம்தாங்கிக் கப்பல்களை இணைத்துக் கொள்ளவும் திட்டமிட்டுள்ளது.

மூன்றாம் கட்ட அபிவிருத்தியினை 2020ஆம் ஆண்டிலிருந்து 2050ஆம் ஆண்டிற்குள் பூர்த்தி செய்யச் சீனா திட்டமிட்டுள்ளது. இக்காலத்தில் விமானம்தாங்கிக் கப்பல்களில் விமானங்களை இணைத்து இராணுவ ரீதியில் வளர்ச்சியடைந்த நாடுகளின் பட்டியலுக்குள் தன்னையும் இணைத்துக் கொள்வது சீனாவின் இலக்காகும். இதன்மூலம் சீனாவின் கடற்படையினை உலகின் முதல்தர ஆழ்கடல் கடற்படையாக மாற்றி உலகிலுள்ள எல்லா சமுத்திரங்களிலும் அதிகாரம் செலுத்துவது சீனாவின் கொள்கையாகும். இதற்கேற்ற வகையில் பூகோள செல்வாக்கினையடைதல் என்ற இலக்கு நோக்கியதாக சீனாவின் வெளியுறவுக் கொள்கையானது மாற்றியமைக்கப்பட்டுள்ளது.

தலாவீத வருமான அதிகரிப்பு

1990ஆம் ஆண்டு சீனாவின் தலாவீத வருமானம் ஏறக்குறைய 300 அமெரிக்க டொலர்களாக இருந்தது. இது அடுத்து வந்த பத்து ஆண்டு காலத்தில் 1000 அமெரிக்க டொலர்களாக அதிகரித்தது. 2008ஆம் ஆண்டின் இறுதியில் இது 3000 அமெரிக்க டொலர்களாக அதிகரித்தது. 2020ஆம் ஆண்டுகளில் 8500 அமெரிக்க டொலர்களையும், 2030ஆம் ஆண்டுகளில் 20,000 அமெரிக்க டொலர்களாகவும் சீனாவின் தலாவீத வருமானம் அதிகரிக்கும் என எதிர்வு கூறப்படுகின்றது. உலக நாடுகள் திகைப்படையும் வகையில் சீனாவின் தலா வருமானம் வளர்ச்சியடைந்து வருகின்றன. உலகப் பொருளாதாரத்துடன் சீனா இணைதல் என்பது கடல்வழித் தொடர்பாலில் பெரும் செல்வாக்கினைப் பெறுவதற்கு வாய்ப்பாகவுள்ளது. சீன மக்களினது பொருளாதார வாழ்க்கைக்கான எல்லைக் கோடாக சமுத்திரங்கள் மாறுவதால், பாரிய முதலீடுகளைச் செய்து வரும் சீனாவிற்கு இந்து சமுத்திரப் பிராந்தியத்தில் சிறப்பான இராணுவ, தந்திரோபாய முகாமைத்துவத்தினைச் செய்வதன் மூலமே தனது முதலீடுகளைப் பாதுகாக்க முடியும். கடந்த காலங்களைப் போலல்லாமல் தனது பொருளாதார தன்னிறைவினை சீனா முதன்மைப்படுத்துகின்றது. ஏனைய உலக நாடுகளுடன் சீனா பரஸ்பரம் தமது பொருளாதார வளர்ச்சிக்காக தங்கியுள்ளது.

பாதுகாப்பு

தனது தேசிய நலன்களுக்காக நெகிழ்வுடையதும் பலமுடைதுமான இராணுவத் தந்திரோபாயங்களை உருவாக்குவதற்கான தேவையினை சீனா உணர்ந்துள்ளது. சீனா பல்திறன் கொண்ட இராணுவ உபகரணங்கள், கடற்படையின் வலிமை என்பவற்றைத் தந்திரோபாய ரீதியில் உயர்த்த வேண்டும் என கணிப்பிட்டுள்ளது. இதற்காக சீனா கடற்படையினை வலுப்படுத்தத் தமது வளப்பங்கீட்டு வீதத்தினை அதிகரித்துள்ளது.

சீனாவின் பாதுகாப்புச் செலவீனம் 2012ஆம் ஆண்டு உத்தியோகபூர்வத் தகவல்களின் படி 106 பில்லியன் அமெரிக்க டொலரை அடைந்துள்ளது. இது 11.2 சதவீத அதிகரிப்பாகும். வைகாசி மாதம் பென்ரகன் வெளியிட்ட அறிக்கையில் சீனா வான்பாதுகாப்பு, நீர்மூழ்கிக்கப்பல்கள், செய்மதி எதிர்ப்பு ஆயுதங்கள், கப்பல் எதிர்ப்பு ஆயுதங்கள் போன்றவற்றில் பலமடைவதற்கு அதிகளவு பணத்தினைக் குவிக்கின்றது. சீனாவின் உண்மையான பாதுகாப்புச் செலவினம் 120 பில்லியன் அமெரிக்க டொலருக்கும் 180 பில்லியன் அமெரிக்க டொலருக்கும் இடையிலானதாகும்.

சீனா ஆழ்கடல் கடற்படையினைக் (Blue Water Navies) கட்டமைப்பதில் முன்னேறி வருகின்றது. இதற்காக சீனா தெற்காசிய நாடுகளில் பிரதானமாக பாக்கிஸ்தான், வங்காளதேசம், இலங்கை, மாலைதீவு, ஆப்கானிஸ்தான் ஆகிய ஐந்து நாட்களுடன் நட்புறவினைப் பேணி வருகின்றது. சீனா இராணுவம் நட்புறவுரீதியான பரிமாற்றங்கள், கூட்டுறவு என்பவைகளைத் தெற்காசிய நாடுகளுடன் பேணிவருவதுடன்,பிராந்தியப் பாதுகாப்பு, உறுதித்தன்மை என்பவைகளைப் பேணவும் விரும்புகின்றது. இலங்கை, வங்காளதேசம், பாக்கிஸ்தான், பர்மா ஆகியநாடுகளில் சீனாவிற்கு சொந்தமான கடற்படைத்தளங்கள் இல்லாவிட்டாலும் சீனா இந் நாடுகளில் உருவாக்கியுள்ள துறைமுகங்களை ஆழ்கடல் கடற்படையினைக் கட்டமைப்பதற்குப் பயன்படுத்துகின்றது. இத்துறைமுகங்களுக்கு சீனாவின் கடற்படைக் கப்பல்கள் வருகை தருவதுடன் மத்தியகிழக்கில் இருந்து சீனாவிற்கு ஏற்றுமதி இறக்குமதிகளைச் செய்வதற்கான பண்டகசாலைகளாகவும் இத்துறைமுகங்கள் பயன்படுத்தப்படுகின்றன.

எனவே பூகோள பொருளாதாரத்துடன் தவிர்க்க முடியாதபடி இணைக்கப்பட்டு பலமடையும் சீனா ஆழ்கடல் கடற்படையின் உதவியுடன் தனது உள்ளூர், பிராந்திய எல்லை கடந்து தனது பொருளாதார நலன்களுக்காக இராணுவ வல்லாதிக்கத்தினை விஸ்தரிக்கக்கூடும் என அச்சம் தெரிவிக்கப்படுகின்றது.

சீனாவின் கடற்படையில் விமானம் தாங்கிக் கப்பல் படைப்பிரிவினை உருவாக்காமல் இல்லாமல் சீனாவினால் வல்லரசாக வளர முடியாது. வடக்குச் சீனாவின் இருந்து தெற்கு சீனா வரையில் சீனாவின் கப்பல் தரிக்கும் துறைமுகங்கள் வட்டவடிவில் அமைக்கப்பட்டுள்ளது. சீனா இரண்டு விமானந்தாங்கிக் கப்பல்களை சங்காயிலுள்ள (Shanghai) கப்பல்கட்டும் துறைமுகத்தில் கட்டிவருகின்றது. 2010ஆம் ஆண்டு சீனாவின் நீர்மூழ்கிக்கப்பல்களின் பலம் ஐக்கிய அமெரிக்காவின் பலத்தினை விட இருமடங்காகிவிடலாம் என எதிர்பார்க்கப்பட்டது. 2015ஆம் ஆண்டு சீனாவின் மொத்த கடல்படை வலிமை ஐக்கிய அமெரிக்காவினை விட விஞ்சிவிடும் என எதிர்பார்க்கப்படுகிறது.

சீனா தனது முதலாவது விமானம் தாங்கிக் கப்பலை வெற்றிகரமாகத் தயாரித்து 2012ஆம் ஆண்டு ஆனி மாதம் எட்டுத் தடவை ஒத்திகை பார்க்கப்பட்ட பின்னர் மக்கள் விடுதலை இராணுவத்திடம் கையளித்துள்ளது. ரஸ்சியாவிற்குச் சொந்தமான வர்யாக் எனப் பெயரிடப்பட்ட (Varyag) இக்கப்பல் உக்ரேயினால் கொள்வனவு செய்யப்பட்டு 2002ஆம் ஆண்டு சீனாவிற்கு விற்கப்பட்டது. இக்கப்பலுக்கு சீனா லைஓனிங் (Liaoning) எனப் பெயரிட்டுள்ளது. இதன் நீளம் 300 மீற்றராகும் (990 அடி). உலங்கு வானூர்தி உட்பட ஐம்பது யுத்தவிமானங்களைக் காவிச் செல்லக்கூடியதாகும்.

கிழக்கு, தெற்குச் சீனக் கடலில் உள்ள தீவுகளை உரிமையாக்கும் முயற்சியிலீடுபட்டிருக்கும் யப்பான், வியட்னாம், பிலிப்பைன்ஸ் போன்ற நாடுகள் நாடாத்தும் போட்டியினால் நிலவும் பதட்டத்தினைக் குறைப்பதற்கும், ஆராட்சி மற்றும் பயிற்சிகளுக்கு இக்கப்பல் உதவும். ஆனால் அயல்நாடுகளை அச்சுறுத்தும் நோக்கம் எதுவும் சீனாவிற்கு கிடையாது என சீனஅரச ஊடகம் தகவல் வெளியிட்டுள்ளது. ஆனால் பிராந்தியத்திய மற்றும் பூகோள அதிகாரத்திற்காக சீனா நடாத்தும் போராட்டம் ஏன் சீனாவிற்கு விமானம் தாங்கிக் கப்பல் தேவை என்பதை உணர்ந்து கொள்ளப் போதுமானதாகும்.

பாதுகாப்பிற்காக சீனா செய்யும் முதலீடானது பயனடையதா? என்ற கேள்வி புலமையாளர்கள் மத்தியில் எழுந்துள்ளது. இதற்கான பதில் சீனா இதன்மூலம் எதனைச் சாதிக்கப் போகின்றது என்பதிலேயே தங்கியுள்ளது. சீனா எதிர்காலத்தில் தற்பாதுகாப்பு நிலையினை எடுக்கப் போகின்றதா? அல்லது தாக்குதல் நிலைக்குச் செல்லப் போகின்றதா? என்பதைப்பொறுத்தே தீர்மானிக்கப்பட முடியும். பொருளாதார வல்லரசாகவுள்ள யப்பான் தற்காப்பிற்கான இராணுவ பலத்தனை மட்டுமே கொண்டுள்ளது. ஆனால் சர்வதேச நாடுகள் மத்தியில் சிறந்த செயற்பாட்டாளராகவும், சர்வதேச அரசியலை மதிக்கின்றதொரு நாடாகவும் உள்ளது. யப்பானின் அனுபவத்தினை கருத்தில் கொள்ளாது சீனா பிராந்திய, பூகோள வல்லரசாகி ஜக்கிய அமெரிக்காவினைச் சர்வதேச அரசியல் முறைமையிலிருந்து ஓரங்கட்டத் தனது பொருளாதார பலத்தை பயன்படுத்த முற்படுமானால், சில சமயம் மறைந்த சோவியத் ஒன்றியத்தினை இராணுவ ரீதியில் களைக்கும் வரை ஓடவிட்டு அதன்மூலம் பொருளாதார ரீதியல் ஜக்கிய அமெரிக்கா தோற்கடித்தது போல் சீனாவின் பொருளாதாரத்தையும் இராணுவத்திற்காக செலவு செய்ய வைத்து சீனப் பொருளாதாரம் அழிந்து விடக் கூடிய ஆபத்து அதிகம் உள்ளது.