1 1 1 1 1 1 1 1 1 1 Rating 0.00 (0 Votes)

(தினக்குரல், புதிய பண்பாடு இதழில் 2013.03.09 , 2013.03.10 ஆகிய திகதிகளில் பிரசுரிக்கப்பட்டது)

clip_image002

2012ஆம் ஆண்டு பங்குனிமாதம் 22ஆம் திகதி ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையின் பத்தொன்பதாவது கூட்டத்தொடரில் இலங்கையின் யுத்தப் பிரதேசத்தில் நிகழ்ந்த மனித உரிமைமீறல்கள் தொடர்பான விடயங்களை விவாதிப்பதற்கான பொறிமுறையினை ஐக்கிய அமெரிக்கா உருவாக்கியது. அதாவது கற்றுக்கொண்ட பாடங்கள் மற்றும் நல்லிணக்க ஆணைக்குழுவின் அறிக்கை, ஐக்கியநாடுகள் சபை நிபுணர்குழுவின் அறிக்கை ஆகிய இரண்டையும் பயன்படுத்தி ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையின் வழமையான நிகழ்ச்சி நிரலுக்குள் இவ்விடயத்தினைக் கொண்டுவருவதற்கும், கலந்துரையாடுவதற்குமான சந்தர்ப்பத்தினை ஐக்கிய அமெரிக்கா உருவாக்கியது.இதன்வழி இலங்கையின் நல்லிணக்கத்தினை முன்னேற்றுவதும் பொறுப்புக்கூறுதலும் (Promoting Reconciliation and Accountability in Sri Lanka) தொடர்பான தீர்மானம் ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையில் நிறைவேற்றப்பட்டது.

இதன்படி கற்றுக்கொண்ட பாடங்கள் மற்றும் நல்லிணக்க ஆணைக்குழுவின் பயனுடைய சிபார்சுகளை நடைமுறைப்படுத்துமாறும், பொருத்தமான சட்டக் கட்டமைப்புகளை நிறைவேற்றுவதற்குத் தேவையான மேலதிக நடவடிக்கைகளை எடுக்குமாறும், எல்லா இலங்கையர்களுக்குமான நல்லிணக்கம், பொறுப்புக்கூறுதல், சமத்துவம், நீதி போன்றவற்றை உறுதிப்படுத்தக்கூடிய அர்பணிப்புள்ள, நம்பகத்தன்மைவாய்ந்த சுதந்திரமான செயற்பாடுகளை ஆரம்பிக்குமாறும் இலங்கை அரசாங்கம் கேட்டுக்கொள்ளப்பட்டது.

இவைகளுக்காக இலங்கை அரசாங்கத்தின் அனுமதியுடன் ஐக்கியநாடுகள் சபையின் மனிதஉரிமைகள் பேரவை ஆணையாளர் அலுவலகம் இலங்கை அரசாங்கத்திற்கு ஆலோசனைகளையும், தொழில்நுட்ப உதவிகளையும் வழங்குவது ஊக்குவிக்கப்படுவதுடன், இருபத்திரெண்டாவது கூட்டத்தொடரின்போது வழங்கப்பட்ட ஆலோசனைகள், உதவிகள் தொடர்பான அறிக்கையினை ஆணையாளர் சமர்பிக்க வேண்டும் எனவும் கூறப்பட்டது.

இருபத்திரெண்டாவது கூட்டத் தொடர்

இறுதி யுத்தத்தின் போது நடைபெற்ற யுத்தக் குற்றங்கள் தொடர்பாக சுதந்திரமான சர்வதேச தரத்திலான விசாரணை மேற்கொள்ளபட வேண்டும் என ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையின் இருபத்திரெண்டாவது கூட்டத் தொடரில் அதிகார பூர்வமாக இலங்கை கேட்டுக் கொள்ளப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.

2012ஆம் ஆண்டு பங்குனி மாதம் ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையின் பத்தொன்பதாவது கூட்டத் தொடரின் போது இலங்கையின் இறுதி யுத்தத்தின் போது நிகழ்ந்த யுத்தக் குற்றங்களுக்காக இலங்கைக்கு எதிராக தீர்மானம் நிறைவேற்யப்பட்ட காலத்திலிருந்து இன்று வரை இலங்கை அரசாங்கம் தனது பொறுப்பினை நிறைவேற்றுவதற்காகவும், பாதிக்கப்பட்ட மக்களுக்கு நீதி வழங்குவதற்காகவும் எவ்வித செயற்திட்டங்களையும் உருவாக்கவில்லை என்றதொரு குற்றச்சாட்டிற்குள்ளாகியுள்ளது.

2013ஆம் ஆண்டு மாசி மாதம் 11ஆம் திகதி மனித உரிமைகள் பேரவையின் ஆணையாளர் பொறுப்புக் கூறல் மற்றும் நீதி வழங்காமை ஆகியவற்றில் இலங்கை தோல்வியடைந்துள்ளதால், சர்வதேச மனித உரிமை மற்றும் மனிதாபிமான சட்டங்கள் மீறப்பட்டமை தொடர்பில் சுதந்திரமானதும், நம்பிக்கையானதுமான சர்வதேச தரத்திலான விசாரணை மேற்கொள்ளப்பட வேண்டும் என கூறியுள்ளார். அதாவது ”மீள்குடியேற்றம், நல்லிணக்கம், அபிவிருத்தி ஆகியவற்றிற்கு அரசாங்கம் முதலீடு செய்துள்ளது. ஆயினும் பொறுப்புக் கூறுதல், நல்லிணக்கத்திற்கான அர்த்தமுள்ள நடவடிக்கைகளை மேலும் அரசாங்கம் துரிதப்படுத்த வேண்டும். கற்றுக் கொண்ட பாடங்கள் மற்றும் நல்லிணக்க ஆணைக்குழுவின் பரிந்துரைகளில் சிலவற்றையே இலங்கை நடைமுறைப்படுத்துகிறது. எனவே உள்ளக செயல்முறை தொடர்பாக குறிப்பாக பொறுப்புக் கூறல் தொடர்பாக மனித உரிமைகள் பேரவை கண்காணிக்க வேண்டியுள்ளதால், மனித உரிமைகள் பேரவையில் இவ்விடயம் தொடர்பாக விவாதிக்க வேண்டும்” என மனித உரிமைகள் பேரவையின் ஆணையாளர் இருபத்திரெண்டாவது கூட்டத் தொடரின் போது தெரிவித்துள்ளார்.

இந்நிலையில் மனித உரிமைகள் பேரவையில் நிகழவுள்ள விவாதத்திற்கு மனித உரிமைகள் பேரவையில் அங்கத்துவம் பெறும் அங்கத்துவ நாடுகள் முழுமையாக ஆதரவு வழங்க வேண்டும் என மனித உரிமைகள் காப்பகம் வேண்டுகோள் விடுத்துள்ளமை கருத்தில் கொள்ளப்பட வேண்டியதாகும்.

இலங்கையின் செயற்திட்டம்

சர்வதேச Crisis Group, மனித உரிமைகள் காப்பகம் மற்றும் 2011ஆம் ஆண்டு சித்திரை மாதம் சமர்ப்பிக்கப்பட்ட நிபுணர் குழு அறிக்கை உட்பட பல்வேறு சுதந்திரமான நிறுவனங்கள் 2009ஆம் ஆண்டு இறுதி யுத்தத்தின் போது தமிழீழ விடுதலைப்புலிகள் மற்றும் அரசாங்கப் படைகள் ஆகிய இருதரப்பினராலும் மிகவும் மோசமான மனித உரிமைகள் மீறல்கள், யுத்தக் குற்றங்கள் நடைபெற்றுள்ளதாகக் கூறுகின்றன.

அதேநேரம் யுத்தக் குற்றச்சாட்டுகள் தொடர்பாக நம்பகமான விசாரணைகள் மேற்கொள்ளுவதற்கு இலங்கை அரசாங்கம் எவ்விதமான நடவடிக்கைகளையும் இதுவரை எடுக்கவில்லை என சர்வதேச நாடுகள் கருதுகின்றன. இறுதி யுத்தத்தின் போது நடைபெற்ற மனித உரிமைகள் மீறல்களுககான விசாரணைகளை ஆரம்பித்துள்ளதாக மனித உரிமைகள் பேரவையில் இது வரை இலங்கை அறிவிக்கவும் இல்லை.

பதிலாக யுத்தக் குற்றங்கள் முழுவதிலுமிருந்து இலங்கை இராணுவத்தினை விலக்கிக் கொள்ளும் வகையில் இலங்கை அரசாங்கம் சில நடவடிக்கைகளை மேற்கொண்டிருந்தது. முக்கியமாக இராணுவ நீதிமன்றம் ஒன்றை நிறுவி இராணுவ வீரர்கள் மீது சுமத்தப்பட்ட யுத்தக் குற்றச்சாட்டுகளை விசாரணை செய்ததுடன் அதன் அறிக்கையினை 2013ஆம் ஆண்டு மாசி மாதம் 15ஆம் திகதி அரசாங்கத்திடம் வழங்கியது. இவ் அறிக்கை இறுதி யுத்தத்தின் போது பொதுமக்கள் படுகொலை செய்யப்பட்டமை தொடர்பான குற்றச் சாட்டுகள் அனைத்திலும் இருந்து இலங்கை இராணுவத்தினை விடுவித்திருந்தது.

எனவே 2012ஆம் ஆண்டு பங்குனி மாதம் தொடக்கம் மனித உரிமைகள் பேரவையில் இலங்கையின் மனித உரிமைகள் தொடர்பான விடயங்கள் தொடர்ந்து விவாதிக்கப்பட்டு வந்தாலும் இலங்கை ஆட்சியாளர்கள் இதற்கு பொறுப்புக் கூறுவதிலும், நீதி வழங்குவதிலும் தோல்வியடைந்தேயுள்ளனர்.

நீதியைக் கோரும் மக்களுக்கும், சர்வதேச சமுதாயத்தின் உதவியைக் கோரும் மக்களுக்கும் இலங்கை அரசாங்கம் அச்சுறுத்தலைக் கொடுத்து வருகின்றது. இது இலங்கை அரசாங்கம் தற்பாதுகாப்பிற்காக மேற்கொள்ளும் தந்திரமாகும். மக்களைப் பாதிக்கும் இவ்வாறான தந்திரங்களை இலங்கை அரசாங்கத்தின் மனதிலிருப்பதை அகற்ற மனித உரிமைகள் பேரவை நடவடிக்கை எடுக்க வேண்டும்.

இறுதி யுத்தத்தின் போது படுகொலை செய்யப்பட்ட 40,000 பொதுமக்கள் தொடர்பான சுதந்திரமான சர்வதேச தரத்திலான விசாரணையினை இலங்கை அரசாங்கம் செய்யத் தவறுமாயின் இதனைத் தாமதமின்றி மேற்கொள்வதற்கான அதிகாரத்தினைக் மனித உரிமைகள் பேரவை கொண்டுள்ளது என்பதை இலங்கை ஆட்சியாளர்கள் மனதில் கொள்ள வேண்டும்.

அமெரிக்காவின் முன்மொழிவில் (2013) உள்ள பிரதான விடயங்கள்

பொறுப்புக் கூறுதல், நல்லிணக்கம் என்பவற்றை இலங்கையில் நடைமுறைப்படுத்தக் கோறி தற்போது நடைபெற்றுக் கொண்டிருக்கும் இருபத்திரெண்டாவது மனித உரிமைகள் பேரவையில் ஐக்கிய அமெரிக்கா இலங்கைக்கு எதிராக புதியதொரு பிரேரணையை சமர்ப்பிக்க உள்ளதாக அறிவித்துள்ளது.

இலங்கை அரசாங்கத்தினால் நிறுவப்பட்ட கற்றுக் கொண்ட பாடங்கள் மற்றும் நல்லிணக்க ஆணைக்குழுவின் சிபார்சுகளை நடைமுறைப்படுத்தும் படியும் தனது சொந்த நாட்டு மக்களுக்கு பொறுப்புக் கூறுவதனூடாக இதனை நிறைவேற்றும் படியும் ஐக்கிய அமெரிக்கா தனது பிரேரனையில் கேட்கவுள்ளதாக கூறப்படுகின்றது. இவ்வகையில் இப்பிரேரணையில் பின்வரும் விடயங்கள் முதன்மைப்படுத்தப்படலாம் என எதிர்பார்க்கப்படுகின்றது.

  1. இலங்கையில் நல்லிணக்கம், பொறுப்புக் கூறுதல் என்பவற்றை பேணுவதற்காக சமர்ப்பிக்கப்பட்ட 19/2 மனித உரிமைப் பேரவை தீர்மானத்தினை மீண்டும் வலியுறுத்தல்
  2. நாட்டு மக்கள் அனைவருக்கும் அடிப்படை உரிமைகளையும், மனித உரிமைகளையும் அனுபவிப்பதற்கான உத்தரவாதத்தினை வழங்க வேண்டியது இலங்கை அரசாங்கத்தின் பொறுப்பாகும் என்பதை மீள வலியுறுத்துதல்
  3. கற்றுக் கொண்ட பாடங்கள் மற்றும் நல்லிணக்க ஆணைக்குழுவின் சிபார்சுகளையும், முடிவுகளையும் நிறைவேற்றக் கூடிய செயற்பாட்டுத் திட்டம் ஒன்றை இலங்கை அரசாங்கம் உருவாக்கத் தூண்டுதல்.
  4. கருத்து வெளியிடும் சுதந்திரத்தினை பாதுகாத்தலும், உயர்த்துதலும், மாகாணங்களுக்கு அதிகாரப் பகிர்வினை வழங்கி அரசியல் தீர்வினை அடைதல், சிவில் நிறுவனங்களின் சுதந்திரத்தினைப் பலப்படுத்துதல், காணித்தகறாறுகளைத் தீர்க்ககூடிய பொறிமுறைகளை அமுல்;படுத்துதல், வடமாகாணத்திலிருந்து இராணுவத்தினை அகற்றுதல், ஆட்கள் காணாமல் போதல், நீதிக்குப் புறம்பான படுகொலைகள் போன்ற பரந்து விரிந்த குற்றச் சாட்டுகள் தொடர்பாக நம்பகத்தன்மை வாய்ந்த விசாரணை தேவை என கற்றுக் கொண்ட பாடங்கள் மற்றும் நல்லிணக்க ஆணைக்குழு தெரிவிக்கின்றது. இதனை நடைமுறைப்படுத்துமாறு மீள வலியுறுத்துதல்.

தற்போது சமர்ப்பிக்கப்படவுள்ள இப்புதிய பிரேரனை ஏற்கனவே ஐக்கிய அமெரிக்காவினால் சமர்ப்பிக்கப்பட்ட பிரேரணைக்கு புதிய உந்து சக்தியை வழங்குவதாக இருக்குமென எதிர்பார்க்கப்படுகிறது.இதற்காக பான-கீ-மூன் “தேசிய நல்லிணக்கத்தினை ஏற்படுத்துவதற்கான பரந்த தேசிய பொறிமுறை ஒன்றை நேர்மையாக உருவாக்குவதனூடாக இலங்கையில் பொறுப்புக் கூறுதலை அடைய முடியும். இவ்விலக்கினை அடைவதற்காக சர்வதேச சமுதாயத்துடன் இணைந்து இலங்கை அரசாங்கம் செயற்திறனுடன் பணியாற்ற வேண்டும்” என தாம் எதிர்பார்ப்பதாகத் தெரிவித்துள்ளார்.

இறைமைக்கு ஏற்படக் கூடிய சவால்

சர்வதேச நாடுகளுடன் இலங்கை பேணுகின்ற இறுக்கமான கொள்கை படிப்படியாக குறைவடைகின்ற போது இலங்கையின் இறைமைக்கு சர்வதேச நாடுகள் வழங்கும் மதிப்பும், தரமும் அதிகரிக்கும். அரசியல் நிறுவனங்களின் வெளிப்படைத்தன்மை, சுதந்திரம் என்பவற்றை இலங்கை கட்டுப்படுத்துமாயின் இலங்கையின் சர்வதேச தரநிர்ணயம் குறைவடையலாம்.

எனவே சர்வதேச நியமங்களுக்கு ஏற்ப இலங்கை தனது தரநிர்ணயத்தினைப் பேணிப் பாதுகாக்க வேண்டுமாயின் சர்வதேச நாடுகளுடன் இறுக்கமான கொள்கைகளை பின்பற்றாது நெகிழ்வுத் தன்மையுடன் செயற்படுவதுடன், அரசியல் நிறுவனங்களின் சுதந்திரம் குறிப்பாக நீதிதுறையின் சுதந்திரம், வெளிப்படைத்தன்மை, பொறுப்புக் கூறுதல், மனித உரிமைகளைப் பாதுகாத்தல் என்பவற்றை சர்வதேச தரத்தில் பேணுதல் வேண்டும்.

இதன் மூலமே இலங்கை தனது உள் மற்றும் வெளி இறமையினை உயர் நிலையில் பேண முடியும். இறைமையினை உயர் நிலையில் பேணுவதன் மூலம் சர்வதேச தரநிர்ணயத்தினைப் பெற்றுக் கொள்ள முடியும். எனவே இலங்கையின் மனித உரிமைகள் தொடர்பான நிலமைகளை அடிப்படையாகக் கொண்டு இறைமை தொடர்பான அதன் தரம் சர்வதேச மட்டத்தில் நிர்ணயிக்கப்படக் கூடிய வாய்ப்புள்ளது. எனவே நீண்டகால மற்றும் குறுங்காலத்தில் மனித உரிமைகளை இலங்கை எவ்வாறு பேணுகின்றது என்பதைப் பொறுத்து இறைமையின் தரம் நிர்ணயிக்கப்படலாம்.