தனிமனித உரிமைகளையும் மரபுகளையும் அழிக்க முற்பட்ட திருச்சபையின் ஆதிக்கத்திற்கு எதிராகவும் அதன் பின்னர் தோன்றிய அரசியல் ஏதேச்சதிகாரத்திற்கு எதிராகவும் எழுச்சியடைந்த ஒரு தத்துவமே தாரண்மைவாதமாகும்.. மறுமலர்ச்சிக் காலத்தில் மறுமலர்ச்சி இயக்கங்களும் சீர்திருத்த இயக்கங்களும் தோற்றம் பெற்று திருச்சபையின் ஆதிக்கத்திலிருந்து மனிதனை விடுவித்துக் கொண்டது. திருச்சபையின் ஆதிக்கத்திலிருந்து மனிதனை விடுவிக்க தாராண்மை சிந்தனையே பயன்படுத்தப்பட்டது. திருச்சபை காலத்தின் பின்னர் தோற்றம் பெறுகின்ற புதிய தேசிய அரசுகள் முடியாட்சிக்குட்பட்டு ஏதேச்சதிகார ஆட்சிக்குட்பட்டன. இந்நிலையில் ஏதேச்சதிகார ஆட்சி முறையிலிருந்து மனிதனை விடுவிக்க தாராண்மை வாதம் முற்பட்டது. இதன் முதல் முயற்சியாக பிரித்தானிய அரசியல் திட்ட வரலாற்றில் ஏதேச்சதிகார ஸ்ருவேர்ட் மன்னர்களுக்கு எதிராக மக்கள் போராட்டங்களை நடாத்தினார்கள். பிரித்தானிய எதேச்சதிகாரத்திற்கு எதிராக மக்கள் பெற்றுக் கொண்ட வெற்றி தாராண்;மைவாதத்திற்கு கிடைத்த வெற்றியாகும்.
கைத்தொழில் புரட்சியின் விளைவாக பலம் வாய்ந்த ஒரு வர்த்தக வகுப்பு தோற்றம் பெற்றது. இவ்வர்க்கத்திற்கு தமது முதலீடுகளை பாதுகாக்கவும் வர்த்தகத்தை வளர்க்கவும் சமூக அந்தஸ்தினை பேணுவதற்கும் அரசியல் உரிமை அவசியமாகியது. எனவே இவ்வர்க்கம் மன்னனின் ஏகபோக அதிகாரத்திற்கு எதிராக எதிர்ப்புத் தெரிவித்தது. மன்னனின் கட்டுப்பாட்டிலிருந்து விடுபட்டு தமது அரசியல் சமூக பொருளாதார நலன்களினை வளர்க்க வர்த்தக வகுப்பு முயற்சித்தது. இதனால் தாராண்மை வாதத்தினை மத்திய வர்க்க தத்துவம் (Middle class Philosophy) எனவும் அழைக்கிறார்கள். ஆகவே தாராண்மை வாதத்தினை தனிமனித சுதந்திரங்களை விரும்புகின்ற, தலையிடல் கொள்கையினை ஆதரிக்கின்ற, தனிமனிதனின் ஆற்றல்களில் நம்பிக்கையுள்ள, அரசியல் திட்ட ஜனநாயகத்தினை வரவேற்கின்ற ஒரு தத்துவம் என விளங்கிக் கொள்ளலாம். தாராண்மை வாதத்தின் வளர்ச்சிக்கு 17ஆம் 18ஆம் நூற்றாண்டில் வாழ்ந்த லொக், ரூசோ, வோல்ரயர், பேர்க், மொண்டஸ்கியூ போன்றோர்களும் 19ஆம் நூற்றாண்டில் வாழ்ந்த பென்தம், மில், கிறீன் போன்றோர்களும், 20ஆம் நூற்றாண்டில் வாழ்ந்த வொலாஸ், லஸ்கி, கோல் ரஸல், மக்ஜவர், கெய்ன்ஸ் லஸ்வெல் போன்றோர்களும் பங்களிப்பு செய்துள்ளார்கள்.
பங்களிப்புக்கள்
17ஆம் நூற்றாண்டில் இங்கிலாந்தில் வாழ்ந்த லொக் தனியாள் வாதம் (Individualism) இயற்கை உரிமைகள் (Natural Rights)என்பவற்றினூடாக தாராண்மை வாதத்தை விளக்குகிறார். தனிமனித சுதந்திரத்தை பாதுகாக்க வேண்டுமாயின் மன்னனுடைய கட்டுகடங்காத அதிகாரத்தை மட்டுப்படுத்த வேண்டும். அரசு என்பது ஒரு ஒப்பந்தத்தின் மூலம் தோற்றம் பெற்றது. மக்கள் தமது நலன் பேணும் நோக்கில் தாமாக முன்வந்து சில அதிகாரங்களை ஆட்சியாளர்களுக்கு வழங்கினர். ஒப்பந்த நியதிகளை மன்னன் மீறும் போது மன்னனை நீக்கி விட மக்களுக்கு உரிமை உண்டு. இது அரசியல் திட்ட முடியாட்சியிலேயே சாத்தியமாகும். அரசு என்பது மக்களின் சம்மதத்திலும் நம்பிக்கையிலுமே நிலை பெற முடியும் என லொக் வாதிடுகிறார். லொக்கின் தாராண்மைவாதக் கருத்துக்கள் 17ஆம் நூற்றாண்டில் பிரித்தானியாவிலும் 18ஆம் நூற்றாண்டில் பிரான்ஸ், ஐக்கிய அமெரிக்கா ஆகிய நாடுகளிலும் பெரும் மாற்றத்தினை ஏற்படுத்தியது.
18ஆம் நூற்றாண்டில் பிரான்சில் வாழ்ந்த ரூசோ மக்கள் ஆட்சியை முன் வைக்கிறார். நவீன ஜனநாயகத்தின் முன்னோடியாகிய ரூசோ ஜனநாயகத்தின் முக்கிய இயல்புகளாகிய பொது விருப்பு, இறைமை, நேரடி ஜனநாயகம் என்பவற்றை வலியுறுத்துகின்றார். ரூசோவின் கருத்துக்கள் பிரான்சில் புரட்சி ஏற்படுவதற்கு காரணமாகியதுடன் சுதந்திரம் சமத்துவம் போன்ற ஜனநாயக கருத்துக்கள் உருவாகவும் காரணமாகியது. உண்மையில் தாராண்மைவாதத்தில் ஜனநாயகக் கருத்துக்களை முதன்மைப்படுத்தியவர் ரூசோவேயாவார்.
ரூசோவிற்குப் பின்னர் 19ஆம் நூற்றாண்டில் வாழ்ந்த பயனுடைமைவாதியான (Utilitarian)பென்தம் என்பவர் தாராண்மைவாதம் தொடர்பாக புதிய அணுகுமுறையினை முன்வைக்கிறார். தனியாள் வாதம், இயற்கை உரிமைகள் ஒப்பந்த அடிப்படையிலான அரசு போன்ற ஆரம்பகால தாராண்மைவாதக் கருத்துக்களை நிராகரித்து பயனுடைமை வாதத்தின் அடிப்படையில் புதிய தாராண்மைவாதக் கோட்பாட்டை முன்வைத்தார். ஒரு செயலின் பயன்பாடான மகிழ்ச்சி அல்லது துன்பம் என்பதுதான் மனித நடத்தையை தீர்மானிக்கின்றது.அரசு வேறுபாடு கடந்து பெரும்பான்மை மக்களுக்கு மகிழ்ச்சியை ஏற்படுத்துவதை நோக்கமாகக் கொண்டு செயற்பட வேண்டும். இதனை இயற்கைச் சட்டங்களுடாக நிறைவேற்ற முடியாது. பாராளுமன்ற சட்டங்கள் மூலமே நிறைவேற்ற முடியும். சமுதாயத்தின் நல்வாழ்வு திறமை வாய்ந்த சட்டவாதியின் கையிலேயே தங்கியுள்ளது என வாதிடுகிறார்.
19ஆம் நூற்றாண்டின் மத்திய பகுதியில் வாழ்ந்த ஜே.எஸ்.மில் (J.S.Mill)இன் கருத்துக்கள் பென்தம் இன் கருத்துக்களுக்கு மேலதிக விளக்கமாக அமைந்தது. சந்தர்ப்பங்களையும் தேவைகளையும் சமுதாயத்திலுள்ள மக்களுக்கு சமமாகப் பகிர வேண்டுமானால் அரசு தீவிரமான சட்டங்களை நிறைவேற்ற வேண்டும். இச்சட்டங்களில் மக்களுடைய அபிப்பிராயங்களையும் பங்குபற்றுதலையும் ஏற்படுத்துவதற்காக வாக்குரிமை பாராளுமன்றப் பிரதிநிதித்துவம் போன்ற ஜனநாயக பண்புகளை பென்தம் முதன்மைப்படுத்துகிறார்.
ரி.எச்.கிறீன் (T.H.Green)இன் கருத்துக்கள் தாராண்மை வாதத்தின் வளர்ச்சியில் புரட்சிகரமான மாற்றத்தை ஏற்படுத்தியது. இவருடைய காலத்தில் சோசலிசக் கருத்துக்கள் வளர்ந்து வந்தன. இதற்கு ஈடுகொடுத்து நிலைத்து நிற்க வேண்டுமாயின் தாராண்மை வாதம் பாரிய மாற்றங்களை உள்வாங்க வேண்டியிருந்தது. தாராண்மைவாதிகள் ஆரம்பம் முதல் தனி மனிதர்களின் நலன்கள் பேணப்படும் போதே சமுதாய நலன்கள் பேணப்பட முடியும் என்ற கருத்தைக் கொண்டிருந்தார்கள். இக்கருத்தை கிறீன் மாற்றியமைத்தார். சமுதாய நலன்கள் பேணப்படும் போதுதான் தனிமனித நலன்கள் பேணப்பட முடியும். சமுதாய நலன்கள் பேணப்பட வேண்டுமானால் கல்வி, சுகாதாரம், வாழ்க்கைத் தரத்தைப் பேணுதல் போன்ற அத்தியாவசிய சேவைகளை அரசு பொறுப்பேற்றுக் கொள்ள வேண்டும். சிறப்பான சட்டங்களை பாராளுமன்றம் நிறைவேற்றுவதன் மூலம் சமுதாய நலனும் தனிமனித நலனும் பேணப்பட முடியும். கிறீன் முன்வைக்கும் இக்கருத்துக்கள் தாராண்மை வாதத்தினை தாராண்மை சோசலிசமாக மாற்றியது எனக் கூறப்படுகிறது.
கேயின்ஸ் என்ற அறிஞர் இருபதாம் நூற்றாண்டில் வளர்ச்சியடைந்த நவீன வர்த்தக உலகிற்கு ஏற்றதாக தாராண்மை வாதத்தினை மாற்றியமைத்தார். ஆரம்பகால தாராண்மைவாத அறிஞர்களில் ஒருவரான அடம்ஸ்மித் 'நாடுகளின் செல்வம்' என்ற நூலில் கூறுகின்ற தனியுரிமைப் பொருளாதாரம் தற்காலத்திற்கு பொருத்தமற்றது. அதே சமயம் அரசியல் மத்திய திட்டமிடலைக் கொண்ட சோசலிசப் பொருளாதாரமும் ஏற்றுக் கொள்ளக் கூடியதல்ல. இவையிரண்டிற்கும் இடையிலான நிலையினை உருவாக்க கெயின்ஸ் முற்பட்டார். ஏற்கனவே தனிமனிதர்கள் தமது ஆற்றலினால் செய்து வருகின்ற எல்லாவிடயத்திலும் அரசு தலையிடக் கூடாது. ஆனால் தனிமனிதனின் ஆற்றலுக்கு அப்பாற்பட்ட பல விடயங்களில் சமுதாய நலன்கருதி அரசு தலையிட வேண்டும். அரசின் தலையீடு பின்வரும் மூன்று வழிகளில் அமையலாம். அவைகளாவன நிதி தொடர்பான விடயங்கள், பொதுக் கொள்கை உருவாக்கம் தொடர்பான விடயங்கள், பாதுகாப்புத் தொடர்பான விடயங்கள் என்பவைகளாகும். கெயின்ஸின் கருத்துக்கள் இரண்டாம் உலக யுத்தத்திற்கு முன்பும் பின்பும் அமெரிக்கா பிரித்தானியா ஆகிய நாடுகளில் ஆட்சியாளர்களால் வரவேற்கப்பட்டு நடைமுறைப்படுத்தப்பட்டது.
பிரதான இயல்புகள்
தாராண்மை வாதம் சமயச் சார்பற்ற தன்மைகளை வலியுறுத்துகின்றது. சமய நம்பிக்கைகளில் இறுக்கமாக பிணைக்கப்பட்டுள்ள மனிதனை அதிலிருந்து விடுவிக்க வேண்டும். மனிதன் அறிவுபூர்வமாக சிந்திக்கவும் விமர்சன நோக்கில் அணுகவும் அனுமதிக்கப்படல் வேண்டும். மனிதன் தனது பழக்க வழக்கங்கள் மரபுகள் முலம் நிறுவனங்களை மாற்றிக் கொள்ள உரிமையுடையவன். மனிதனது உண்மையான சுதந்திரத்திற்கு இவைகள் விலங்குகளாக உள்ளன. தனிமனித சுதந்திரமே சமுதாய விடுதலையைத்தரக் கூடியது. தாராண்மைவாத சிந்தனையாளராகிய ஹோப் ஹவுஸ் (Hobe House)என்பவர் “தாராண்மைவாதம் என்பது சிவில் தனிமனித பொருளாதார சமூக, அரசியல், சட்ட, தேசிய சர்வ தேசிய சுதந்திரங்களை உள்ளடக்கிய தத்துவமாகும்” எனக் கூறுகிறார்.
தாராண்மைவாதம் தலையிடாக் கொள்கையினை வலியுறுத்துகிறது. தலையிடாமை இருக்கும் போது தான் உண்மையான சுதந்திரம் இருக்க முடியும். பொருட்களை உற்பத்தி செய்ய விநியோகம் செய்ய, பரிமாற்றம் செய்ய, விரும்பிய தொழிலை அல்லது வர்த்தகத்தினை செய்ய தனது சொத்துக்களை வைத்திருக்க அல்லது அழித்துவிட மனிதன் அனுமதிக்கப்படல் வேண்டும். இவற்றின் மீது அரசின் தலையிடாமை இருக்க வேண்டும். இதனால் தாராண்மைவாதிகள் அரசனுடைய சர்வாதிகாரத்திற்கு எதிராக ஆரம்ப காலத்திலிருந்து போராடினார்கள்.
தாராண்மைவாதம் தீவிர சீர்திருத்தங்களினாலோ, தலையீடுகளாலோ, புரட்சிகளாலோ, போராட்டங்களாலோ சமுதாய மாற்றத்தினை ஏற்படுத்த விரும்புவதில்லை. சமூக மாற்றம் இயற்கை விதிகளின்படி தன்னிச்சையாக அமைதியான முறையில் படிப்படியாக ஏற்படுவதாகும். இயற்கை விதிகளுக்கு மனிதன் கட்டுப்பட வேண்டுமேயொழிய செயற்கையான புற விதிகளுக்கு மனிதன் கட்டுப்படக் கூடாது. நிர்ப்பந்தம் என்பது தலையீட்டினையே ஏற்படுத்தும். தனிமனித ஆற்றலிலுள்ள அபார நம்பிக்கையே தனிமனித சுதந்திரங்களையும் தலையிடாக் கொள்கையினையும் தாராண்மைவாதம் வலியுறுத்தக் காரணமாகும். தலையிடாமையும் சுதந்திரமும் இருக்கும் போதே தனிமனிதன் தனது பங்களிப்பை சமுதாயத்திற்கு வழங்க முடியும். தாராண்மைவாதம் மனிதனை உயர்ந்தவனாகவும் அறிவாளியாகவும் நோக்குகிறது. மனிதனது உரிமைகள் அந்தஸ்துக்கள் நலன்கள் போன்றவற்றிற்கு உத்தரவாதமளிக்கப்படும் போது அவன் தனது கடமையினை அபிவிருத்தி செய்ய முடியும். இதன் மூலமே சமுதாயத்திற்கு அவனது சேவையை பெற்றுக் கொள்ள முடியும் என தாராண்மைவாதம் நம்புகிறது.
தலையீடாக் கொள்கையினையும் சுதந்திரங்களையும் ஏற்படுத்துவதற்கு அரசியல் திட்ட ஜனநாயகத்தினை தராண்மைவாதிகள் முதன்மைப்படுத்துகிறார்கள். இதன் மூலம் ஜனநாயக முறையிலுள்ள வலுவேறாக்கம், சமனிலைத் தலையீடு, சுதந்திரமானதும் நீதியானதுமான தேர்தல் மக்களுக்கு ஆட்சியாளர்கள் பொறுப்புக் கூறுகின்ற பண்பு, சர்வஜன வாக்குரிமை, பத்திரிகைச் சுதந்திரம், நீதித்துறைச் சுதந்திரம், சிறுபான்மையினத்தவர்களின் உரிமைகளைப் பாதுகாத்தல், சிந்திக்கும் சிந்தனையினை வெளிப்படுத்தும் சுதந்திரம் போன்ற சுதந்திரங்களை முதன்மைப்படுத்த முடியும். இவ் அரசியல் திட்ட ஜனநாயகத்தினை உருவாக்க இங்கிலாந்தில் தாராண்மைவாதிகள் மன்னனுக்கு எதிராக போராட்டங்களை நடாத்தினார்கள். அரசியல் திட்ட ஜனநாயகமே தாராண்மைவாதிகளின் குறிக்கோளாக இருந்தது.
தூய்மையானதும் தனித்துவமானதுமான தாராண்மைவாதம் மறைந்து விட்டது. தாராண்மை வாதக் கருத்துக்கள் பல புதிய வடிவங்களில் நவீன முதலாளித்துவ கோட்பாடுகளுள் ஊடுருவியுள்ளன. தாராண்மை வாத அரசுகள் இந்நூற்றாண்டில் நலன் பேண் அரசுகளாக மாறியுள்ளன. அதாவது அரசு சமுதாயத்தின் பொதுநலனை மையமாக கொண்டு இயங்குவதாகும். ஆரம்பகாலத்தில் தாராண்மைவாதிகள் அரசின் தலையீட்டை கண்டித்தனர். ஆயினும் பென்தம், மில், கிறீன், கெயின்ஸ் போன்றவர்கள் அவசியமான துறைகளில் அரசின் தலையீட்டை வரவேற்றனர். பொதுநல அரசு என்பது அரசின் தலையீடு அற்ற ஆரம்பகால தாராண்மைவாத அரசிற்கும் அரசின் தலையீடுகள் மிகுந்த சோசலிச அரசிற்கும் இடைப்பட்ட ஒரு அரசாகும். தாராண்மைவாத அரசுகள் பொதுநல அரசுகளாக மாறியதன் மூலம் சோசலிசத்தின் சவால்களை ஓரளவிற்கு எதிர்த்து நிற்க முடிந்தது. அதே வேளை சோசலிசக் கருத்துக்களின் தாக்கமே தாராண்மைவாத அரசுகளை நாளடைவில் பொதுநல அரசுகளாக மாற்றியது.