மாக்கியவல்லியின் இளவரசன் திறனாய்வு by Thanabalasingham Krishnamohan
Civil Society by Thanabalasingham Krishnamohan
இருபத்தியோராம் நூற்றாண்டில் எழுச்சியடையும் சீனாவின் கடல் வலிமை by Thanabalasingham Krishnamohan
தேர்தலும் பிரதிநிதித்துவ முறைமையும் – கோட்பாடு நோக்கு by Thanabalasingham Krishnamohan
Who is this International Community: Interest and Stratergy by Thanabalasingham...
அரிஸ்ரோட்டிலின் கருத்துப்படி மனிதன் ஒரு சமூக விலங்காகும். மனிதனுடைய சமூக இயல்புகளில் நிர்ப்பந்தம், இன்றியமையாமை ஆகிய இரண்டு பிரதான விடயங்கள் உள்ளன. இவ் இரண்டு இயல்புகளும் ஒவ்வொரு மனிதர்களிடமும் காணப்படுகின்றது. சமூக அங்கத்தவர்களுடன் வாழ்வதற்கு இவ் இயல்புகள் தேவையாகவுள்ளது.
மனிதன் சமூகமாக வாழ வேண்டுமானால் வரையறுக்கப்பட்ட பிரதேசத்தினை வாழ்விடமாகக் கொண்டிருக்க வேண்டும். நிலையில்லாததும். நாடோடியானதுமான வாழ்க்கையினை மனிதன் விரும்புவதில்லை. சக மனிதர்களுடன் நெருக்கமான உறவினை ஏற்படுத்தி வாழ்வதற்கு மனிதனின் வாழ்விடம் பொதுவான பிரதேசமாக இருப்பது அவசியமாகும்.
எல்லா மக்களும் சமுதாயமாகி, பரஸ்பரம் நன்மை, தீமைகளை பகிர்ந்து கொள்கின்றார்கள். மனிதன் ஒன்றாகச் சேர்ந்து வாழும் போது பரஸ்பரம் தகராறுகள் ஏற்படுகின்றன. இது மனித இயல்பாகவும் உள்ளது. சமுதாயத்தின் ஏனைய அங்கத்தவர்களின் நலன்களுடன் முரண்படாத வகையில் தனது நலன்களை அனுபவிக்கக் கூடிய ஆத்ம ஞானம் (Spirit) தேவையாகவுள்ளது.
சமுதாய வாழ்க்கையில் ஒற்றுமை அவசியமானதாகும். இதற்காக மனிதன் பொதுவிதிகளுக்கும் பரஸ்பரம் சக மனிதர்களுடன் தொடர்பு கொள்வதற்கும் தானாகவே கட்டுப்படப் பழகவேண்டும். பொது விதிகளை மீறுவது, சமூக ஒழுங்குகளைக் குழப்புவதாக அமைவதுடன், இதன் பலனாக சமுதாயத்திற்கு எதிரான சிந்தனைகளும் தோன்றி விடுகின்றன. இந்நிலையில் சமூகத்தினை நெறிப்படுத்தவும், விதிகளை உருவாக்கவும் விதிகளை மீறுபவர்களைத் தண்டிக்கவும் சில முகவர்கள் தேவைப்பட்டார்கள். அரசியல் ரீதியாக ஒழுங்கமைக்கப்பட்ட சமுதாயம் உருவாக்கப்படுவதற்கு இது காரணமாகியதுடன் அரசியல் விஞ்ஞானப் பாடப்பரப்பாகவும் இது ஏற்றுக்கொள்ளப்பட்டது.
ஒழுங்கமைக்கப்பட்ட அரசியல் சமுதாயம் கலைச் சொல்லாகிய அரசு (State) என்ற பதத்தினால் அழைக்கப்பட்டது. அரசின் சார்பில் செயற்படுவதும் நிர்வாகத்தினை மேற்கொள்வதுமாகிய முகவர் அரசாங்கம் என அழைக்கப்பட்டது. அரசாங்கம் இயற்றும் விதிகள் அல்லது சமூகத் தொடர்புகளுக்கான விதிகள் சட்டங்களாக அழைக்கப்பட்டது.
பிளன்சிலி (Bluntschli) கார்ணர் (Garner) போன்ற கல்விமான்கள் அரசியல் விஞ்ஞானக் கற்கை நெறியென்பது அரசு பற்றிய கற்கை என்று கருத்துக் கூறுகின்றார்கள். லீக்கொக் (Leacock) போன்றவர்கள் அரசியல் விஞ்ஞானம் என்பது அரசாங்கம் பற்றிய கற்கை நெறி எனக் கருத்துக் கூறுகின்றார்கள். கெட்டல் (Gettel) கில்கிறிஸ்ற் (Gilchrist) போன்றவர்கள் அரசியல் விஞ்ஞானமானது அரசு, அரசாங்கம் பற்றிய கற்கை நெறியெனக் கருத்துக் கூறுகின்றனர். உண்மை யாதெனில் அரசியல் விஞ்ஞானக் கல்வி என்பது அரசு, அரசாங்கம் ஆகிய இரண்டு விடயங்கள் பற்றியதுமான கல்வியாகும். ஆயினும், அரசு என்பது இக்கல்வியின் மைய அலகாகவுள்ளது. அரசு இல்லாமல் அரசாங்கம் இல்லை. அண்மைக்கால அமெரிக்கக் கல்விமான்கள் மனிதன் அரசியல் விலங்கு என்ற கருத்தினை நிராகரிக்கின்றனர். அத்துடன் அரசு என்ற எண்ணக்கருவினையும் நிராகரிக்கின்றனர். பதிலாக இவர்கள் அரசியல் முறைமை (Political System) என்ற புதிய பெயரை வழங்குகின்றார்கள். ஆயினும் அரசியல் விஞ்ஞானம் பற்றிய கல்வி அரசு, அரசாங்கம் என்பவற்றுடன் தொடர்புபட்டதாகும்.
அரசியல் விஞ்ஞானம்
அரசியல் விஞ்ஞானம் கற்கை நெறியானது மிகவும் பரந்த ஒரு பாடநெறியாகும். அத்துடன் விசையியக்கப் (Dynamic) பண்பினைக் கொண்ட ஒரு பாட நெறியுமாகும். காலத்திற்கு காலம் பல மாற்றங்களையும் அபிவிருத்திகளையும் உள்வாங்கி வளர்ந்து வரும் பாட நெறியாகும். ஆர்.எம்.சல்ரோ (R.H.Saltau) என்பவர் அரசியல் விஞ்ஞானத்தின் எல்லைகளை வரையறுத்துக் கூறுவது இலகுவானதல்ல எனக்கூறுகிறார். அரசு, அரசாங்கம் தொடர்பாகவும் கடந்த காலத்திலும், நிகழ்காலத்திலும் இவற்றிற்கிடையிலிருந்த உறவு தொடர்பாகவும் அரசியல் விஞ்ஞானத்தில் கற்பிக்கப்படுகிறது. காலத்திற்கு காலம் முறையாக ஏற்படும் அபிவிருத்தி பற்றியும் எதிர்காலத்தில் ஏற்படக் கூடிய அபிவிருத்தி பற்றியும் எதிர்வு கூறுகின்றது.
ஹொப்ஸ், வெபர், மெரியம் போன்ற அதிகாரக் கோட்பாட்டாளர்கள் அரசியல் விஞ்ஞானத்தினைக் கற்பதற்கு அதிகாரத்தின் நோக்கம், அதிகாரத்தின் மூலவளங்கள் பற்றி ஆராய வேண்டும் எனக் கூறுகிறார்கள்.
உண்மையில் அதிகாரத்தினை மட்டும் விளங்கிக் கொண்டால் போதாது. மனிதர்களுடைய உளவியல், அரசியல் தத்துவங்கள் போன்றவற்றையும் விளங்கிக் கொள்ள வேண்டும். அத்துடன் ஏனைய நிறுவனங்கள் பற்றியும் விளங்கிக்கொள்ள வேண்டும். தொழிற்சங்கங்கள், திருச்சபைகள், கூட்டுத்தாபனங்கள் போன்ற நிறுவனங்கள் தொடர்பாகவும் கவனம் செலுத்த வேண்டும். அதிகாரத்திற்கான போராட்டத்தில் இந்நிறுவனங்கள் வகிக்கும் பங்கு மிகவும் காத்திரமானது.
மரபுசார் நோக்கில் அரசியல் விஞ்ஞானமானது அரசு பற்றிய கடந்த கால, நிகழ்கால, எதிர்கால காட்சி நிலைகளை ஆய்வு செய்கின்ற ஒரு கற்கை நெறியாகும். இன்னோர் வகையில் கூறின் காலத்திற்கு காலம் அரசின் தன்மை எத்தகையதாக இருந்தது என்பது தொடர்பாக ஆய்வு செய்கின்ற ஒரு கற்கை நெறியாகும். வுரலாற்று நோக்கில் அரசு எவ்வாறு இருந்தது என்பதற்கு அதிகாரத்தின் தோற்றம், பரிணாமம் (Evaluation) என்பவற்றின் அடிப்படையில் அரசியல் விஞ்ஞானிகள் விளக்கம் கொடுக்கிறார்கள். அரசியல் விஞ்ஞானக் கற்கை நெறியை தற்காலத்துடன் தொடர்புபடுத்தி நோக்கும் போது இருக்கின்றதும், தொழிற்பட்டுக் கொண்டிருக்கின்றதுமான அரசியல் நிறுவனங்களிலேயே பிரதான கவனம் செலுத்த வேண்டும். தற்கால நிறுவனங்கள், எண்ணங்கள், காட்சிகள் என்பவற்றை விளங்கிக் கொள்வதற்கு அதிகாரத்தின் பரிணாமம், அரசியல் நிறுவனங்கள் பற்றிய கற்கை பெரிதும் உதவுகிறது. ஆராட்சியில் ஊகம் என்பது பிரதானமானதாகும். ஆகவே அரசின் தோற்றம், இயல்பு செயற்பாடு, இலக்கு தொடர்பாக அனுபவ அவதானம் (Empirical Observation) ஊடாக ஆராட்சி செய்ய வேண்டும்.
ஆயினும் அரசியல் விஞ்ஞானமானது அதிகாரம் (Power) பற்றிய கல்வியாகவும் விளக்கமளிக்கப்படுகிறது. அதிகாரம் என்றால் என்ன? அதிகாரப் போராட்டத்திற்கான காரணங்கள் எவை? போன்ற வினாக்கள் விஞ்ஞானிகளால் எழுப்பப்படுகின்றன. லாஸ்வெல், கப்லன், மோகன்தோ, ரஸ்ஸல் போன்ற ஆய்வாளர்கள் இவ்வாறான வினாக்களை எழுப்புகின்றார்கள். இவர்கள்
என பல்வேறு விளக்கங்களை அதிகாரத்துடன் தொடர்புபடுத்தி கூறுகின்றார்கள்.
அரசு சமூகத்தில் உள்ள எல்லா நிறுவனங்களிலிருந்தும் வேறானது. அரசியல் கட்சிகள் வாக்குச் சீட்டிற்காக ஒன்றை ஒன்று தாக்குகின்றன. அதிகாரம் அரசின் அந்தஸ்தினை உயர்த்துகின்றது. இவையே அதிகாரம் பற்றிய உண்மையான விடயங்களாகும்.
விசையியக்கம் கொண்ட ஒரு பாடப்பரப்பாக அரசியல் விஞ்ஞானம் காணப்படுகின்றது. இதனால் அரசியல் விஞ்ஞானம் எவ்வாறான பாடப்பரப்பினை கொண்டிருக்க வேண்டும் என்பது விவாதிக்கப்பட்டது. யுனெஸ்கோவின் (Unesco) அனுசரனையுடன் சர்வதேச விஞ்ஞான சங்கம் இது தொடர்பான இறுதித் தீர்மானத்தினை எடுத்திருந்தது. இத்தீர்மானத்தின்படி அரசியல் விஞ்ஞானப் பாடப்பரப்பாக பின்வரும் விடயங்கள் ஏற்றுக்கொள்ளபட்டது.
1980 களின் பின்னர் அரசறிவியலின் வியாபகமானது கொள்கை விஞ்ஞானமாக (Policy Science) அல்லது கொள்கை ஆய்வாக (Policy Analysis) மாற்றமடைந்தது. நடைமுறையில் அரசாங்கத்தின் கொள்கைகள் எத்தகையது. இவற்றின் புதிய காட்சிநிலைகள் எவை? பொதுக் கொள்கையின் விளைவுகள் எவ்வாறு அமையும் என்பவைகள் பற்றிய ஆய்வாக மாறியது.
அரசியல் விஞ்ஞானத்தின் விசையியக்கம் அரசு, அரசாங்கம் என்பவற்றுடன் மட்டும் மட்டுப்படுத்தப்படக் கூடியதல்ல. அரசியல் கட்சிகள், நலன் பேணும் குழுக்கள், சுதந்திரம், சமத்துவம் இவற்றிற்கு இடையிலான தொடர்புகள், அரசின் அதிகாரத்திற்குள் பாதுகாக்கப்பட வேண்டிய தனிமனித சுதந்திரம் பற்றிய விவிடயங்கள், அரசியல் சமூகமயமாதல், அரசியல் கலாசாரம், அரசியல் அபிவிருத்தி,மோதல்களும் மோதல்களுக்கு தீர்வுகாணுதல் போன்ற விடயங்கள் பற்றிய கற்கையாகவும் அரசியல் விஞ்ஞானம் விசையியக்கம் பெற்று செல்கின்றது.
அரசியல் விஞ்ஞானம் ஒரு விஞ்ஞானம்
அரசியல் விஞ்ஞானம் ஒரு கலையா? அல்லது விஞ்ஞானமா? என்ற விவாதம் காலங்காலமாய் நடைபெறுகின்றது. அரசியல் விஞ்ஞானம் ஒரு கலை என்றும், அது ஒரு விஞ்ஞானம் என்றும் இரு பக்க வாதங்கள் முன்வைக்கப்படுகின்றன. அரசியல் விஞ்ஞானத்தை ஒரு கலை என்பதில் பெருமளவிற்கு முரண்பாடு எழவில்லை. அரசியல் விஞ்ஞானத்தை ஒரு விஞ்ஞானமாக நிரூபிப்பதில் தான் பெருமளவிற்கு முரண்பாடு எழுகின்றது. இங்கு அரசியல் விஞ்ஞானத்தை ஒரு விஞ்ஞானமாக அழைக்கலாமா? அவ்வாறாயின் எவ்வளவு தூரம் அது விஞ்ஞான ரீதியான முடிவுகளை முன்வைக்கின்றது என்ற வினா எழுகின்றது.
திட்டமிட்ட ஆய்வுகள் அனைத்தும் விஞ்ஞான ஆய்வுகள் என்றே அழைக்கப்படுகின்றது. இவ்வாதத்தின் அடிப்படையில் அரசியல் விஞ்ஞானத்தினை ஒரு விஞ்ஞானக் கற்கை நெறி அழைக்கலாம்.அரசியல் விஞ்ஞானத்தில் திட்டமிட்ட ஆய்வுகள் முக்கியம் பெற்று வருகின்றன.
பொதுவாக திட்டமிட்ட ஆய்வு ஒன்று பின்வரும் நான்கு செய்முறைகளை உள்ளடக்கியிருக்கும்.
காட்சி நிலை ஒன்று தொடர்பாக முதலில் அவதானம் மேற்கொள்ளப்பட்டு தகவல்கள் சேகரிக்கப்பட்டு தேவை, முக்கியத்துவம் கருதி அவை வகைப்படுத்தப்படும். பின்னர் நோக்கத்திற்கு இசைவான முறையில் அவற்றின் பொதுவான அம்சங்கள் அனுமானிக்கப்பட்டு அந்த நிகழ்வு பற்றிய முடிவு எதிர்வு கூறப்படுகிறது. திட்டமிட்ட ஆய்வு ஒன்றிற்குரிய முதல் மூன்று நிலைகளும் திருப்திகரமான முறையில் அரசியல் விஞ்ஞானத்தில் பூர்த்தி செய்யப்படுகிறது. ஆனால் ஆய்வின் எதிர்வு கூறலை நிரூபித்தல் என்பதில் பிரச்சினை எழுகின்றது. இது அரசியல் விஞ்ஞானத்திற்கு மாத்திரமன்றி எல்லா சமூக விஞ்ஞானங்களுக்கும் பொதுவானதாகும். மனித உறவுகள், மனித நடத்தைகள் பற்றிய ஆய்வுகள் சிக்கலானதும், குழப்பமானதுமாகும். இதனால் இயற்கை விஞ்ஞானத்திற்குரிய திட்டமிட்ட ஆய்வு முறைமை பூரணப்படுத்தப்படாவிட்டாலும், முதல் மூன்று நிலைகளும் திருப்திகரமாக உள்ளதால் அரசியல் விஞ்ஞானத்தினை ஒரு விஞ்ஞானக் கற்கை நெறி என அழைக்கலாம்.
அரசியல்
அரசியல் விஞ்ஞானக் கற்கை நெறியில் உள்ளடக்கப்படும் பாடப்பரப்புக்கள் தொடர்பாக கருத்தொற்றுமை காணப்பட்டாலும் சிறப்பானதும் பொருத்தமானதுமான பெயர் எது என்பதிலேயே வேறுபட்ட கருத்துக்கள் காணப்படுகின்றன. பொருத்தமான பெயர் அரசியல் விஞ்ஞானக் கல்விக்கான பாடப்பரப்புக்கள் அனைத்தையும் உள்ளடக்கியதாகக் காணப்பட வேண்டும். சில சிந்தனையாளர்கள் அரசியல் விஞ்ஞானப் பாடப்பரப்பிலுள்ள விடயங்களைக் கற்பதற்கு அரசியல் (Politics) என்ற பதத்தினைப் பயன்படுத்துகின்றார்கள்.
அரசியல் என்ற பதத்தினை பயன்படுத்தியவர்களில் அரிஸ்டோட்டில் முதன்மையானவராகும். ஜெலினெக், ஜெனற், பொலக் போன்ற அரசியல் விஞ்ஞானிகளும் பழைய பெயராகிய அரசியல் என்ற பதத்தினையே பயன்படுத்தினார்கள்.
அரசியல் என்ற பதமானது இரண்டு பகுதிகளைக் கொண்டதாகும். ஓன்று கோட்பாட்டு அரசியல், மற்றையது பிரயோக அரசியல் என்பதாகும். உண்மையில் அரசில் என்ற பதமானது நடைமுறை அரசியல் பிரச்சினைகளைக் குறித்து நிற்கின்றது. அரசியல் பிரச்சினைகளானது நாட்டிற்கு நாடு வேறுபட்டதாகும். ஒரு நாட்டின் அரசியலானது ஏனைய நாடுகளின் அரசியலிலிருந்து வேறுபட்டதால் ஒவ்வொரு பிரச்சினைகளும் தனக்குரிய தனித்துவமான தீர்வுகளையும் கொண்டிருக்கும். இலங்கை அரசியலும், பிரித்தானிய அரசியலும் அல்லது ரஸ்சியாவின் அரசியலும் ஒரே மாதிரியானவைகளல்ல. மேலும் ஒரு நாட்டிற்குள்ளேயே அரசியலின் பரிமாணம் வேறுபட்டதாக இருக்கும். ஓரு நாட்டின் அரசியல் பிரச்சினைகளுக்கு ஒரு கட்சி முன்வைக்கும் தீர்வானது மற்றைய ;கட்சிகள் முன்வைக்கும் தீர்வினை விட வேறுபட்டதாக இருக்கலாம்.
பெர்கஸ் (Burgess) சீலி (Seely) லீக்கொக் (Leacock) கார்ணர் (Ganner) போன்றவர்கள் அரசியல் என்ற பதத்தினை நடைமுறை அரசியல் (Practical Politics) என்ற பொருளிலேயே பயன்படுத்துகின்றார்கள். இது அரசு பற்றிய விஞ்ஞானப் பகுப்பாய்வாக இல்லாது அரசாங்கத்தின் செயற்பாட்டினையே குறித்து நிற்கின்றது.
பொதுவாக ஒரு நாட்டின் அரசியலில் ஈடுபடுகின்ற ஒருவரை அரசியல்வாதி என்று அழைக்கின்றோம். அரசியல்வாதி ஒரு அரசியல் விஞ்ஞான மாணவனல்ல. அரசியல் விஞ்ஞான மாணவன் அரசின் இயல்பு, நிலை, தோற்றம், அபிவிருத்தி, ஒழுங்கமைப்பு போன்றவற்றை புலன் விசாரணைக்குட்படுத்துகின்றான். அரசியல்வாதி அரசு என்ற எண்ணக்கருவினை புலன் விசாரனை செய்வதில்லை. அவன் ஒரு அரசியல்வாதி என்ற நிலையில் ஏதோவொரு கட்சியின் அங்கத்தவனாக இருந்து நடைமுறைப் பிரச்சினைகளுக்கூடாகவும், நிர்வாகத்திற்கூடாகவும் தனது நலனில் அக்கறை செலுத்துகின்றான்.
எவ்வாறாயினும் அரசியல் என்ற பதம் புதிய கருத்துக்களையும் பெற்றுக் கொண்டுள்ளது. இருபதாம் நூற்றாண்டின் மத்திய பகுதியில் அமெரிக்க கல்வியிலாளர்கள் அரசியல் விஞ்ஞானத்தின் அண்மைக்கால அபிவிருத்தியாக அரசியலை அரசியல் விஞ்ஞானத்தின் ஒரு பகுதியாக ஏற்றுக் கொள்கின்றார்கள்.
அரசியல் மனித வாழ்க்கையின் மையமாக இருப்பதுடன், மனித செயற்பாடுகளிலும் தங்கியுள்ளது. மனித வாழ்க்கை வௌ;வேறு வகையான செயற்பாடுகளின் தொகுதியாக உள்ளது. இதன்படி அரசியல் என்பது வேறுபட்ட கழகங்கள், குழுக்கள், தொழிற்சங்கங்கள், தேசிய, சர்வதேசிய நிறுவனங்கள் போன்றவற்றில் காணப்படுகின்றன. இக்குழுக்களின் எல்லா மட்டத்திலும் அதிகாரத்திற்கான போராட்டமும், செல்வாக்கும் நடைபெறுகின்றன. ரோபேர்ட் டால் (Robert Dahl) என்பவர் ஒவ்வொரு மனித நிறுவனங்களுக்கும் அரசியல் பார்வை அல்லது நிலைப்பாடு உள்ளது. இவ் எல்லா நிறுவனங்களும் நிர்வாக அமைப்பினை (அரசாங்கத்தினை) பெற்றுள்ளன. இங்கு எல்லா நிலைகளிலும் அதிகாரத்திற்கான போராட்டம் நிகழ்கின்றது. இது இயற்கையான அரசியல் விளையாட்டாகவுள்ளது எனக் கூறுகின்றார்.