Education is the Most Powerful Weapon Which You Can Use to Change the World. – Nelson Mandela-

1 1 1 1 1 1 1 1 1 1 Rating 0.00 (0 Votes)

 

( தினக்குரல் , புதிய பண்பாடு இதழில் 2013.07.27, 2013.07.28 ஆகிய திகதிகளில் பிரசுரிக்கப்பட்டது )

clip_image002

இலங்கையில் மாகாணசபைகளை உருவாக்குவதற்கு இந்தியாவின் ஆதரவுடன் மேற்கொள்ளப்பட்ட பதின்மூன்றாவது அரசியல்யாப்புத் திருத்தமானது இனமோதல் தீர்வில் மிகவும் முக்கியம் வாய்ந்த திருப்பமாகும்.இலங்கை மக்கள் நல்லிணக்கத்துடன் வாழ்வதற்குத் தேவையான பல அடிப்படை விடயங்கள் பதின்மூன்றாவது அரசியல் யாப்புத் திருத்தத்திற்குள் காணப்படுவதாக பொதுவானதொரு கருத்துநிலையுள்ளது. ஆனால் வடக்கு கிழக்கு மாகாணங்கள் எதிர்காலத்தில் ஒன்றாக இணைந்து இயங்கமுடியாததொரு நிலையினை நிரந்தரமாக அரசாங்கம் உருவாக்கியதுடன், மாகாணசபைகளுக்கு வழங்கப்பட்டிருந்த காணி மற்றும் காவல்துறை அதிகாரங்களை இதுவரை அமுல்படுத்தாது விட்டுள்ளது. தற்போது காணி மற்றும் காவல்துறை அதிகாரங்களை செறிவு நீக்கம் செய்வதற்கு அரசாங்கம் முயற்சி செய்கின்றது.இதன்மூலம் தமிழ்மக்களைப் பாரபட்சப்படுத்தி, அன்னியப்படுத்த இலங்கை அரசாங்கம் முயற்சிக்கின்றது. 1987 ஆம் ஆண்டு மாகாணசபைகளை உருவாக்க இந்தியா முயற்சித்த காலத்தில் இலங்கை ஆட்சியாளர்களிடம் இப்பண்பு காணப்பட்டிருந்தது. இதனை விபரிப்பதே இக்கட்டுரையின் நோக்கமாகும். இலங்கையின் அரசியல் கலாசாரத்தில் புரையோடிக் காணப்படும் இப்பண்பு தற்போது மீண்டும் மேற்கிளம்பி வருகின்றது.

 

சிதம்பரம் , நட்வர்சிங் தூதுக்குழு

இலங்கையின் ஐனாதிபதியாக இருந்த ஜே.ஆர் ஜெயவர்த்தனாவுடனும் ஏனைய இலங்கைத் தலைவர்களுடனும் பேச்சுவார்த்தை நடாத்த 1986 ஆம் ஆண்டு வைகாசி மாதம் சிதம்பரம், நட்வர்சிங் ஆகிய இரு அமைச்சர்கள் உட்பட்ட தூதுக் குழுவொன்றை இந்தியாவின் பிரதம மந்திரியாக இருந்த ராஜீவ் காந்தி கொழும்பிற்கு அனுப்பியிருந்தார். இக் குழு திம்புப் பேச்சுவார்த்தையின் தோல்விக்குப் பின்னர் இனப் பிரச்சினையினைத் தீர்ப்பதற்கான இலங்கை அரசாங்கத்தின் அடிப்படை அணுகு முறைகளை ஆய்வு செய்தது.

இனப் பிரச்சினையைத்; தீர்ப்பது தொடர்பாக இந்திய அமைச்சர்களாகிய நட்வர்சிங் மற்றும் சிதம்பரம் ஆகிய இருவரும் ஜே.ஆர் ஜெயவர்த்தனாவுடனும், ஐக்கிய தேசியக் கட்சித் தலைவர்கள்,அரசாங்கத்தின் முக்கிய அமைச்சர்கள், எதிர்கட்சித் தலைவர்கள், தமிழர் ஐக்கிய விடுதலை முன்னணித் தலைவர்கள், இலங்கைத் தொழிலாளர் காங்கிரஸ் தலைவர்கள், கிழக்குமாகாண இஸ்லாமிய, கிறிஸ்தவ சமய தலைவர்கள் ஆகியோர்களுடன் நீண்ட சந்திப்புக்களையும், விவாதங்களையும் நடாத்தியிருந்தனர்.

இதன்விளைவாக, இலங்கை அரசாங்கத்திற்கும், தமிழர் ஐக்கிய விடுதலை முன்னணிக்கும் இடையில் இரண்டு தடவைகள் பேச்சுவார்த்தை நடைபெறுவதற்கான தயார் நிலையினை சிதம்பரம் தூதுக்குழு ஏற்படுத்திக் கொடுத்தது. இரண்டு தடவைகள் நடைபெற்ற பேச்சுவார்த்தையானது மாகாணசபைகள் உருவாக்கப்படுவதற்கான முன்மொழிவுகள் முன்வைக்கப்படுவதற்கான வாய்ப்பினை ஏற்படுத்திக் கொடுத்தது. இதன்மூலம் இலங்கை அரசாங்கம் அதிகாரப் பரவலாக்கத்தின் அடிப்படை அலகாக மாகாண சபைகள் உருவாக்கப்படுவதை ஏற்றுக் கொண்டது.

மாகாண சபைகளை உருவாக்கும் நோக்கில் இலங்கையின் அரசியல் திட்டத்தினைத் திருத்துவதற்கான ஆலோசனைகள் ஐம்பது பக்கங்கள் கொண்ட அறிக்கையாகத் தயாரிக்கப்பட்டது. இவ் அறிக்கை மாகாண சபைகளுக்கான அமைச்சர்கள், மத்திய, மாகாண அரசாங்கங்களுக்கான அதிகாரங்கள், இரண்டிற்கும் பொதுவான அதிகாரப்பட்டியல், மாகாண நீதிபரிபாலனம் போன்றவைகளைக் கொண்டிருந்தது.

ஆயினும், தமிழ் மக்களுடைய முக்கிய கோரிக்கைகள் சில இங்கு தீர்க்கப்படாமல் விடப்பட்டிருந்தன. ஜே.ஆர் ஜெயவர்த்தனாவும், தமிழர் ஐக்கிய விடுதலை முன்னணித் தலைவர்களும் நிதிப் பங்கீடு, சட்டம்,ஒழுங்கு போன்ற விடயங்களில் உடன்பாட்டிற்கு வந்திருக்கவில்லை.

ஜெ.என்.டிக்ஸிற்றின் பணி

இந்நிலையில் இலங்கைக்கான இந்தியத் தூவராகப் பணியாற்றிய ஜே.என்.டிக்ஸிற் ஜே.ஆர் ஜெயவர்த்தனாவுடனும், ஏனைய இதர அரசியல் தலைவர்களுடனும் ஆனிமாதம் தொடக்கம் ஐப்பசி மாதம் வரை நடாத்திய பேச்சுவார்த்தையின் பின்னர் ஜே.ஆர் ஜெயவர்த்தனா சில ஆலோசனைகளை முன்வைத்தார். அவைகளாவன

  • கிழக்கு மாகாணத்தில் உள்ளடங்கியிருக்கும் மட்டக்களப்பு, அம்பாறை, திருகோணமலை மாவட்டங்கள் இன,சமய அடிப்படையில் மீள் வரையப்படவேண்டும்.
  • அம்பாறை மாவட்டத்தில் உள்ள சிங்கள மக்கள் வாழும் பகுதி ஊவா மாகாணத்துடன் இணைக்கப்படவேண்டும்.
  • மட்டக்களப்பிலும், அம்பாறையிலும் முஸ்லீம் மக்கள் வாழும் பிரதேசம் தனி மாகாணமாக உருவாக்கப்படும்.
  • திருகோணமலையிலும், மட்டக்களப்பிலும் தமிழ் மக்கள் வாழும் பிரதேசம் தனியாக்கப்பட்டு வடமாகாணத்துடன் இணைக்கப்படும்.
  • திருகோணமலை நகரம், துறைமுகம், சிங்கள மக்கள் பெரும்பான்மையாக வாழும் பிரதேசம் என்பன தனியாகப் பிரிக்கப்பட்டு மத்திய அரசாங்கத்தின் நிர்வாகப்; பிரதேசத்திற்குள் உள்ளடக்கப்படும்.

ஜே.ஆர் ஜெயவர்த்தனாவின் சிந்தனையில் கிழக்கு மாகாண எல்லைக்கோடு மீள் வரையப்படவேண்டும் என்பது உறுதியாக இருந்ததை டிக்ஸிற் அறிந்து கொண்டார்.

டிசம்பர் 19ஆம் திகதி பிரேரணை

1986ஆம் ஆண்டு, மார்கழி மாத நடுப்பகுதியில் சிதம்பரம் தலைமையிலான தூதுக்குழுவினருடன் நட்வர்சிங்கும் (NatwarSingh) கொழும்பிற்கு வருகை தந்து பேச்சுவார்த்தையினை மீண்டும் தொடங்கினார்கள்.

இச்சந்தர்ப்பத்தில் ஜே.ஆர் ஜெயவர்த்தனா தனது மந்திரி சபையையும் கிழக்கு மாகாண பாராளுமன்ற உறுப்பினர்களையும் ஒன்றாகக்கூட்டி வடமாகாணத்துடன் கிழக்கு மாகாணத்தை இணைப்பதற்கான எதிர்ப்பினை உருவாக்கி அதனை இந்திய அமைச்சர்களுக்கு வெளிப்படுத்தியிருந்தார்.

இதனால் புதிய பிரேரணை ஒன்று வரையப்;பட்டு இந்திய அரசாங்கத்திற்கும், தமிழ் இராணுவக் குழுக்களுக்கும் , தமிழ் நாடு அரசாங்கத்திற்கும் ,தமிழர் ஐக்கிய விடுதலை முன்னணிக்கும் சிதம்பரம் தூதுக் குழுவினரால் அறிவிக்கப்பட்டது. இது பின்னர் டிசம்பர் 19ஆம் திகதி பிரேரணை என அழைக்கப்பட்டது. இப்பிரேரணையின் படி

  • கிழக்கு மாகாணத்தின் எல்லைகள் மீள் வரையப்படும்.
  • கிழக்கு மாகாணத்தில் சிங்களவர்கள் பெரும்பான்மையாக வாழும் பிரதேசம் தனியாகவும், தமிழர்கள் பெரும்பான்மையாக வாழும் பிரதேசம் தனியாகவும் பிரித்தெடுக்கப்படும்.
  • இரண்டு மாகாண சபைகள் உருவாக்கப்படும். ஒன்று வட மாகாணத்திலும், மற்றையது மீள் வரையப்பட்ட கிழக்கு மாகாணத்திலும் உருவாக்கப்படும்.
  • இரண்டு மாகாண சபைகளும் உடன்பாடான விடயங்களில் நிறுவன ரீதியான தொடர்புகளைக் கொண்டிருக்க முடியும்.
  • இலங்கையில் துணை ஐனாதிபதிப் பதவி உருவாக்கப்பட்டு பரீட்சிப்பதற்கு உடன்படவேண்டும். இவர் தமிழ் மக்களில் இருந்து தெரிவு செய்யப்படவேண்டும்.

இப்பிரேரணைக்கான ஆதரவு தமிழ் அரசியல் கட்சித் தலைவர்களிடமிருந்தும், தமிழ் இராணுவக் குழுக்களிடமிருந்தும் கிடைக்காததால் நடைமுறையில் செயற்பாட்டுத்தன்மையினை இப் பிரேரணை இழந்திருந்தது.

யாழ்ப்பாணம் மீதான வான் வழி உணவு விநியோகத்தின் பின்னர் இந்தியாவுடன் மிகவும் நெருக்கமான வெளியுறவுக் கொள்கையினை இலங்கை கடைப்பிடிக்க ஆரம்பித்தது. இக் கொள்கை மாற்றத்;தினையே இந்தியா இலங்கையிடமிருந்து எதிர்பார்த்திருந்தது. பெருமளவிற்கு இலங்கை அரசாங்கத் தலைவர்கள் இந்தியாவுடனான உறவினை சிநேகபூர்வமாக மீளமைக்கும் மன உணர்வினைப் பெறத்தொடங்கினர். அதேநேரம் தமிழீழ விடுதலைப் புலிகள் இந்திய அரசாங்கத்தின் அழுத்தங்களின் விளைவாக இந்திய அரசாங்கத்தின் உத்தரவாதம் உள்ள உடன்பாடு ஒன்றிற்கு வருவதற்கு சம்மதம் தெரிவித்தனர். இச்சூழ்நிலை இலங்கை, இந்திய ஒப்பந்தம் கைச்சாத்திடப்படுவதற்கான அடித்தளத்தினை ஏற்படுத்திக் கொடுத்தது. 1987ஆம் ஆண்டு ஆடி மாதம் 29ஆம் திகதி இலங்கை,இந்திய ஒப்பந்தம் கைச்சாத்திடப்பட்டது.

ஜே.ஆர் ஜெயவர்த்தனாவின் ஆசை

ஜே.ஆர் ஜெயவர்த்தனா தமிழ் பிரதேசங்களுக்கு சில அதிகாரங்களைப் பங்கீடு செய்வதற்கு விருப்பம் கொண்டிருந்தார். ஆனால் இலங்கை அரசாங்கத்துடன் சிதம்பரம் குழுவினர் நடாத்திய பேச்சுவார்த்தையின் போது வடமாகாணத்துடன் கிழக்கு மாகாணத்தினை இணைப்பதற்கும், இப்பிரதேசங்களைத் தமிழர் தாயகமாக ஏற்றுக்கொள்வதற்கும், இப் பிரதேசங்களுக்கு நிதி,நிர்வாக அதிகாரங்கள் வழங்குவதற்கும் ஜே.ஆர் ஜெயவர்த்தனா விருப்பமற்றிருந்ததை உணர்ந்து கொண்டது.

அதாவது வடக்கு,கிழக்கு மாகாணங்களை ஒன்றாக இணைத்து அதற்குச் சட்டம், ஒழுங்கு,நிதி அதிகாரங்களை பூரணமாக வழங்குவதற்கு அவர் தயாராக இருக்கவில்லை. ஆனால் நிர்வாக சேவை, கல்வி, பொதுப் பயன்பாட்டுச் சேவைகள் போன்றவற்றிலும், காவல் துறையிலும் சில பதவிகளைத் தமிழ் மக்களுக்கு வழங்குவதற்கு விரும்பியிருந்தார். அதேநேரம் இராணுவத்தில் தமிழ் மக்கள் சேர்க்கப்படுவதை இவர் விரும்பவில்லை. தமிழ் மொழியை அங்கீகரிக்கப்பட்ட மொழியாக்க அவர் விரும்பினாலும், தமிழ் மொழியை உத்தியோக மொழியாக்குவதை அவர் விரும்பவில்லை. இவ்வாறு செய்தால் சிங்கள மக்களின் கோபத்திற்கு தான் உள்ளாக வேண்டியிருக்கும் என்று நியாயம் கூறியிருந்தார்.இவருடைய இந் நியாயங்களை ஆர்.பிரேமதாசா, லலித் அத்துலத்முதலி போன்ற அரசியல் தலைவர்களும் ஏற்றுக்கொண்டிருந்தனர்.

இலங்கையின் அரசியல் கலாசாரத்தினைப் புரிந்து கொள்ள ஜே.ஆர் ஜெயவர்த்தனாவின் சிந்தனைகளும்,நியாயங்களும் போதுமானதாகும். இலங்கையின் அரசியல் கலாசாரம் இன்றுவரை இச்சிந்தனைகளாலும், நியாயங்களினாலுமே நிரம்பியுள்ளன. இவ்வரசியல் கலாசாரத்தினை மாற்றியமைக்க கூடிய சூழ்நிலை உருவாக்கப்பட வேண்டும். அதுவரை தமிழ் மக்கள் நல்லிணக்க அரசியல் நீரோட்டத்திற்குள் உள்ளீர்க்கப்படப் போவதில்லை.

 

 
Share

Who's Online

We have 27 guests and no members online

+1 Me

Subscribe

Enter your email address:

Delivered by FeedBurner

 About Prof. Thanabalasingam Krishnamohan

Prof. Thanabalsingam Krishnamohan is a Professor in Political Science in Eastern University of Sri Lanka .