ஜனநாயகம் என்ற பதம் மிகவும் பழமையானதாகும். இப்பதம் கிரேக்கத்திலிருந்து பயன்படுத்தப்பட்டுள்ளமைக்கு ஆதாரங்கள் உள்ளன. ஜனநாயகம் (Democracy )என்ற சொல் கிரேக்க சொல்லான டெமோஸ் (Demos )என்ற சொல்லில் இருந்தும் கரரிய (Kratia )என்ற சொல்லில் இருந்தும் பெறப்பட்டதாகும். டெமோஸ் என்ற சொல் மக்கள்(People) என்ற பொருளிலும், கரரிய என்ற சொல் அதிகாரம்(Power) என்ற பொருளிலும் பயன்படுத்தப்படுகிறது. மொழி இலக்கணப்படி இதன் கருத்து மக்களுடைய அதிகாரம் (Power of the People) என்பதாகும். அரிஸ்டோட்டில் வழிதவறியிருந்த அரசாங்கம் ஒரு சிறப்பான வடிவத்தினை பெற்றுக் கொள்ளுதல் என்ற பொருளில் ஜனநாயகத்திற்கு விளக்கமளிக்கிறார். நவீன காலத்தில் ஜனநாயகம் என்பது ஒரு சிறப்பான அரசாங்க வடிவம் என்பது எல்லோராலும் ஏற்றுக் கொள்ளப்பட்டுள்ளது.
வரைவிலக்கணங்கள்
ஜனநாயகம் தொடர்பான வரைவிலக்கணங்கள் வவ்வேறுபட்ட அறிஞர்களால் கொடுக்கப்பட்டுள்ளது. பேராசிரியர் சீலி(Seely) “ஜனநாயகம் என்பது ஒரு அரசாங்கமுறைமை. இதில் ஒவ்வொருவரும் இதன் பங்குதாரர்கள்” எனக் கூறுகின்றார். பார்கர்( Barker) என்பவர் “கலந்துரையாடலிலான அரசாங்க முறை என்கின்றார்”. ஆபிரகாம் லிங்கன் ( Abraham Lincoln) என்பவர் “மக்களுடைய, மக்களிலாலான, மக்களுக்கான அரசாங்கம்” என்கிறார். டைசி ( Dicey ) என்பவர் ஜனநாயகம் என்பது “ஒரு அரசாங்க முறையாகும். அரசினை ஆளும் அதிகாரம் சட்டரீதியாக சமூகத்திலுள்ள எல்லா அங்கத்தவர்களிடமும் முழுமையாக கையளிக்கப்படும். ஒரு குறிப்பிட்ட வர்க்கம் அல்லது வர்க்கங்களிடம் ஆளும் அதிகாரம் வழங்கப்படமாட்டாது” என்கிறார். கார்னர்(Garner) என்பவர் “ஜனநாயகம் என்பது ஒரு அரசாங்க முறையாகும் இது இறைமை அதிகாரத்தினை மக்கள் தமக்கிடையில் பகிர்ந்து கொள்கின்ற உரிமைகளை வழங்குகின்ற ஒன்றாகும்” என்கிறார்.
இவ்வரைவிலக்கணங்களினூடாக நாம் பெறக் கூடிய உண்மை, அரச அதிகாரத்தின் இறுதிப் பொறுப்பு மக்களிடமேயுள்ளது. இயற்கையாக மக்களின் நேரடி பங்குபற்றலினால் அல்லது அவர்களின் பிரதிநிதிகளினூடாக உருவாக்கப்படுகின்ற அரசாங்கம் என்பதாகும்.
ஜனநாயகத்தின் பண்புகள்
ஜனநாயகம் என்பது சிறப்பாக இயங்க வேண்டுமாயின் சில அடிப்படை அம்சங்கள் காணப்படல் வேண்டும்.
சமத்துவமும் சுதந்திரமும்
சமத்துவமும் சுதந்திரமும் ஜனநாயகத்தின் இரண்டு பிரதான அடிப்படைத் தத்துவங்களாகும். ஜனநாயக தத்துவத்தின்படி சட்டத்தின் முன் எல்லோரும் சமமானவர்களாகும். ஜனநாயக அரசாங்கம் ஒன்று சமூக, பொருளாதார வாய்ப்புக்களை சமத்துவமாக எல்லோருக்கும் ஏற்படுத்திக் கொடுக்க வேண்டும். சுதந்திரம் என்பது ஒரு மனிதன் தனது சுய முன்னேற்றத்திற்கு அவசியமானது எனக் கருதும் எல்லாவற்றையும் சமூகத்தின் ஏனைய அங்கத்தவர்களுக்கு எவ்வித பாதிப்புமின்றி செய்வதற்குள்ள உரிமையாகும். இச்சுதந்திரங்கள் ஒவ்வொரு பிரசைக்கும் கிடைப்பதை ஜனநாயகம் உத்தரவாதப்படுத்த வேண்டும்.
சகிப்புத் தன்மை
ஜனநாயகம் சகிப்புத் தன்மையினை முதன்மைப்படுத்துகிறது. சகிப்புத் தன்மையில்லாவிட்டால் ஜனநாயகம் என்பது வெற்றி பெற முடியாது. ஜனநாயக சமூகத்தில் கருத்து வெளியிடும் சுதந்திரம் ஒவ்வொரு பிரசைக்கும் உண்டு. கருத்து வெளியிடும் சுதந்திரத்தினை கட்டுப்படுத்துவது சர்வாதிகார ஆட்சியினையே ஏற்படுத்தும்.
சுதந்திர சமூக முறைமை
சுதந்திரம், சமத்துவம், சகிப்புத் தன்மை என்பவற்றுடன் இச் சமூக முறைமை மிகவும் நெருக்கமான தொடர்பு கொண்டதாகும். ஒவ்வொரு மனிதனும் சமத்துவமாகவும் சுதந்திரமாகவும் இருந்தால் ஒவ்வொருவரும் மனதில் உள்ளதை வெளிப்படுத்தவும் விமர்சிக்கவும் அரசாங்கத்தின் கொள்கைகளை எதிர்க்கவும் முடியும். உண்மையான ஜனநாயகத்தினை சுதந்திரம் இல்லாது பெற்றுக் கொள்ள முடியாது.
சம்மதத்தினாலான நிர்வாகம்
சுதந்திpரமான சமூகத்தில் ஒவ்வொருவரினதும் சம்மதத்தின் அடிப்படையிலேயே தீர்மானங்கள் எடுக்கப்படுதல் வேண்டும். ஒவ்வொரு தீர்மானங்களும் நீண்ட விவாதங்களின் பின்னரே எடுக்கப்படுதல் வேண்டும். நிர்வாகம் என்பது உண்மையான மக்கள் அபிப்பிராயத்தினை வெளிப்படுத்துகின்றதாக இருக்க வேண்டும்.
கலந்துரையாடலிலான தீர்மானங்கள்
ஜனநாயகம் சிறப்பாக இயங்க வேண்டுமானால் ஒவ்வொரு பிரச்சினை தொடர்பாகவும் முடிவு எடுப்பதற்கு முன்னர் நீண்ட விவாதங்கள் நடைபெற வேண்டும். எடுக்கப்படுகின்ற தீர்மானங்கள் எல்லோருடைய ஆதரவுடனும் ஏகமனதாக எடுக்கப்படுமாயின் அது மிகவும் சிறப்பானதாக அமையும். அல்லது பெரும்பான்மையோர் ஆதரவுடனாவது தீர்மானங்கள் எடுக்கப்படல் வேண்டும்.
பிரசித்த இறைமை
ஜனநாயகம் என்பது இறுதியான அதிகாரத்தினை மக்களிடமே கொண்டுள்ளது. ஜனநாயகத்தில் குறிப்பிட்ட வர்க்கமோ அல்லது வர்க்கங்களோ முதன்மையானதாக கருதப்படுவதில்லை. முழுச் சமூக அமைப்பும் ஜனநாயகத்தில் மிகவும் உயர்ந்த ஸ்தானத்திலேயே உள்ளது ரூசோவின் வார்த்தையில் கூறுவதாயின் உண்மையான ஜனநாயகம் என்பதில் மக்களின் குரலே கடவுளின் குரலாக மதிக்கப்படும்.
அரசியல்யாப்பு ரீதியான அரசாங்க மாற்றம்
ஜனநாயகத்தில் மக்களிடமே இறுதி அதிகாரம் காணப்படுவதினால் அவர்கள் அரசாங்கத்தினை மாற்றியமைக்கும் சக்தி கொண்டவர்களாக காணப்படுகிறார்கள். அரசாங்கத்தினை மாற்றியமைப்பதற்காக அரசியல்திட்டம் எவ்வழிவகைகளை பரிந்துரைத்துள்ளதோ அவ்வழியினூடே அரசாங்கத்தினை மாற்றியமைக்கிறார்கள். இதனால் ஜனநாயகத்தில் தேர்தல் முதன்மையானதாக கருதப்படுவதுடன் அரசாங்கத்தின் ஆயுட்காலத்தினை தீர்மானிப்பதாகவும் அரசியல்திட்டம் உள்ளது. இதனால் ஒவ்வொரு ஜனநாயக அரசியல் திட்டமும் புதிய அரசாங்கத்தினை உருவாக்குவதற்கான வழிவகைகளை எடுத்துக் கூறுகின்றவைகளாகவே காணப்படும்.
ஜனநாயகத்தின் இயல்புகள்
ஜனநாயகம் இரண்டு வகையான இயல்புகளைக் கொண்டதாகும். ஒன்று நேரடி ஜனநாயகம் மற்றையது மறைமுக ஜனநாயகம் ஆகும்.
நேரடி ஜனநாயகம்
நேரடி ஜனநாயகம் என்பது மக்கள் நேரடியாக அரசாங்கத்தில் பங்குபற்றி அரசாங்கத்தினை இயக்குவதாகும். மக்களில் வயது வந்தவர்கள் காலத்திற்குக் காலம் அரச கூட்டத்தினை கூட்டுவதற்காக ஒன்று கூடி தமக்குத் தேவையான சட்டங்களை இயற்றுவதுடன் அதனை நடைமுறைப்படுத்துபவர்களாகவும் இருப்பார்கள். அது மாத்திரமன்றி நியமனங்கள் கொள்கை உருவாக்கங்கள் என்பனவும் நேரடியாக மக்களினாலேயே மேற்கொள்ளப்படும். புராதன கிரேக்க நகர அரசுகளின் அரசாங்கத்தில் மக்கள் நேரடியாக பங்குபற்றியிருந்தார்கள். சில ஆயிரம் சனத்தொகையினைக் கொண்ட கிரேக்க நகர அரசுகளுக்கு இது பொருத்தமானதாக காணப்பட்டது.
நேரடி ஜனநாயகப் பண்புகள் நவீன ஆபிரிக்காவில் ஓரளவு காணப்படுவதாக கூறப்படுகிறது. நவீன ஆபிரிக்காவின் தலைநகரங்களில் மேற்கு தேச ஜனநாயகம் காணப்பட்டாலும் சில பிரதேசங்களில் நேரடி ஜனநாயகப் பண்புகள் காணப்படுகிறது எனக் கூறப்படுகிறது.
ஜனநாயகம் தொடர்பாக ஆய்வு செய்பவர்கள் நேரடி ஜனநாயகம்தான் மிகவும் சிறப்பானது எனக் கூறுகிறார்கள். அதே வேளை இது சிறிய அரசுகளுக்கே மிகவும் பொருத்தமானது. மக்கள் தாமாகவே தம்மை இயக்கிக் கொள்கின்ற நேரடி ஜனநாயகமே உண்மையான ஜனநாயகமாக இருக்க முடியும் எனவும் கூறுகிறார்கள்.
நேரடி ஜனநாயகம் நேருக்கு நேர் (Face to Face) ஜனநாயகமாகும். இதில் மக்கள் தமது தொடர்ச்சியான பங்களிப்பினை வழங்குகிறார்கள். தூய ஜனநாயகம் தொடர்பாக காந்தி தனது கடுரைகளில் பெருமளவிற்கு குறிப்பிடுகின்றார். பாக்கிஸ்தானில் அறிமுகப்படுத்தப்பட்ட அடிப்படை ஜனநாயகம் என்பது பெருமளவிற்கு கிராமிய மக்களை நேரடியாக அரசியல் விடயங்களில் ஈடுபடுத்தும் நோக்கம் கொண்டதாகவே இருந்தது. மேலும் ஆசிய, ஆபிரிக்க நாடுகளில் மேற்கொள்ளப்படும் சமூக அபிவிருத்தி திட்டங்கள் மக்களை நேரடியாக ஆட்சியில் பங்கெடுக்கச் செய்யும் ஒரு முயற்சியேயாகும் . இத்திட்டத்தின்படி ஆசிய, ஆபிரிக்க நாடுகளில் கிராமிய மக்கள் மத்தியில் அதிகாரத்தினை பரவலாக்கம் செய்து அதன் மூலம் அபிவிருத்தி திட்டங்களை மேற்கொள்கிறார்கள். மக்கள் தமது பிரச்சினைகளை தாமே தீர்த்துக் கொள்கின்ற பண்பு இதன்மூலம் வளர்வதனால் இதனை நேரடி ஜனநாயகம் எனலாம்.
மறைமுக ஜனநாயகம்
மறைமுக ஜனநாயகம் என்பது மக்கள் நேரடியாகவன்றி தமது பிரதிநிதிகளுடாக அரசாங்கத்தினை உருவாக்கித் தம்மைத் தாமே ஆட்சி செய்வதாகும். இது ஒரு சிக்கலான அரசாங்க முறையாகும். சரியான முறையில் பிரதிநிதிகள் செயற்படாவிட்டால் மிக விரைவிலேயே தவறான வழிக்கு அரசாங்கம் திசை திருப்பப்படலாம். பிரதிநிதித்துவ அரசாங்கம் என்பது ஒரு நபர் பலருடைய நலன்களுக்காக சேவையாற்ற நியமிக்கப்பட்டவர் என்பதாகும். பாராளுமன்ற பேரவை (council of parliament) என்ற வடிவில் இது அமைந்திருக்கும்.
நவீன அரசுகளில் மறைமுக ஜனநாயகமே பெருமளவிற்கு காணப்படுகிறது. நிலப்பரப்பாலும் சனத்தொகையாலும் பெரிய அரசுகளாக இவை காணப்படுவதால் மக்கள் எல்லோரும் இன்று ஆட்சியில் பங்கு கொள்ள முடியாத நிலையுள்ளது. இதனால் மக்கள் தாம் தேர்ந்தெடுத்த பிரதிநிதிகளுடாக மறைமுகமாக ஆட்சி அலுவல்களில் பங்கெடுத்து வருகிறார்கள். மறைமுக ஜனநாயகத்தில் தேர்தல் தொகுதிகள், சட்டத்துறை, நிர்வாகத்துறை, அரசியல் கட்சிகள் போன்ற முக்கிய மூலக்கூறுகள் பங்கெடுக்கின்றன.
மறைமுக ஜனநாயகத்தில் மக்கள் நேரடியாக அரசாங்கத்தில் பங்குபற்ற முடியாது. பதிலாக மக்கள் தமது பிரதிநிதிகளை தேர்தல் மூலம் தெரிவு செய்து அவர்கள் ஊடாக அரச கொள்கையினை உருவாக்கி சட்ட ஆக்க நடவடிக்கைகளில் பங்குபற்றுகின்றார்கள். ஆகவே மறைமுக ஜனநாயகத்தின் தவிர்க்க முடியாத ஒரு பகுதியாக தேர்தல் தொகுதகள் மாறிவிடுகின்றன. ஓரு அரசில் காணப்படும் தேர்தல் தொகுதிகள் அவ் அரசின் சனத்தொகை, நில விஸ்தீரணம் என்பவற்றைப் பொறுத்து தீர்மானிக்கப்படுகிறது. இங்கு சனத்தொகையின் அளவு என்பது வாக்களிக்கத் தகுதியான பிரசைகளையே கருத்தில் எடுக்கிறது. அனேக அரசுகளில் 18 வயதிலிருந்து 21 வயதிற்கு மேற்பட்ட பிரசைகள் அனைவரும் வாக்களிக்கத் தகுதியுடையவர்களாக கருதப்படுகிறார்கள். ஜனநாயகத்தில் வாக்குரிமை என்பது ஒவ்வொரு பிரசையினதும் இயற்கையான பிரிக்க முடியாத உரிமையாக கருதப்படுகிறது. இது தொடர்பாக ஒவ்வொரு அரசினதும் அரசியல் திட்ட ஏற்பாடுகளை பாராளுமன்ற சட்டங்கள் எடுத்துக் கூறுகின்றன.
சட்ட ஆக்க செயற்பாட்டினை முமுமையாக கொண்டுள்ள அமைப்பே சட்டத்துறையாகும். மக்களால் தெரிவு செய்யப்பட்ட பிரதிநிதிகள் ஒன்று கூடி தேவையான சட்டங்களை இயற்றுகிறார்கள். சட்டங்கள் சட்டத்துறையினால் இயற்றப்படுகின்ற போது ஜனநாயகத்தில் மக்களும் அரசாங்கமும் ஒன்றாக இணைக்கப்படுகின்றனர். சட்டத்துறை நாட்டிற்கு நாடு வௌ;வேறுபட்ட பெயர்களால் அழைக்கப்படுவதுடன் ஓரங்க சட்டசபை ஈரங்க சட்டசபை என இருவகையாகவும் அழைக்கப்படுகின்றன. கீழ் சபை, மேல் சபை எனப் பொதுவாக இரண்டு சபைகளை ஈரங்க சட்டசபை கொண்டுள்ளது.
மக்களால் தெரிவு செய்யப்பட்ட பிரதிநிதிகளால் உருவாக்கப்படும் சட்டங்களை அமுலாக்கம் செய்யும் நிறுவனமே நிர்வாகத் துறையாகும். இந்நிறுவனம் நலன்புரி அரசு ஒன்றிற்கான எல்லாச் செயற்பாடுகளையும், நிர்வாகங்களையும் மேற்கொள்ளலாம். இதன் இயல்புகள் நாட்டிற்கு நாடு வேறுபட்டதாக காணப்படும்.
மறைமுக ஜனநாயகம் கட்சிகளின் தொழிற்பாடு இன்றி வெற்றிகரமாக தொழிற்பட முடியாது. கட்சிகளினடிப்படையில் தேர்தல் தொகுதிகளில் இருந்து சட்டத்துறைக்கு பிரதிநிதிகள் தெரிவு செய்யப்படுகிறார்கள். பெரும்பான்மைப் பலத்தினைப் பெற்ற கட்சி அங்கத்தவர்களே சட்ட சபையில் ஆளும் அதிகாரத்தினை பொறுப்பேற்கின்றது. ஆளும் கட்சியே சட்டங்களை இயற்றி அவற்றை நடைமுறைப்படுத்துகிறது.
பிரதிநிதிகள் மீதான கட்டுப்பாடு
மறைமுக ஜனநாயகத்தில் வாக்காளர்கள் தாம் தெரிவு செய்யும் பிரதிநிதிகள் மீது முழுமையான கட்டுப்பாட்டினை கொண்டுள்ளார்கள். பிரதிநிதிகள் மீது மக்கள் கட்டுப்பாட்டினை கொண்டிருக்காவிட்டால் இவர்கள் மக்களுடைய பொது விருப்பத்தினை முழுமையாக கவனத்தில் எடுக்காது செயற்பட முற்படலாம். பிரதிநிதிகள் மீது மறைமுகமான கட்டுப்பாட்டினை ஏற்படுத்தவும், பொது விருப்பு மீதான பிரதிநிதிகளின் கவனத்தினை ஈர்க்கவும் சில விசேட ஏற்பாடுகள் ஜனநாயக அரசாங்க முறையில் பின்பற்றப்படுகிறது. அவைகளாவன சர்வஜன வாக்கெடுப்பு, தொடக்க உரிமை திருப்பியழைத்தல் போன்றவைகளாகும்.
சர்வஜன வாக்கெடுப்பு என்பது கட்டாய மீள் பரிசீலித்தல் என்பதைக் குறித்து நிற்கின்றது. குறிப்பிட்ட ஒரு மசோதா அல்லது அரசியல் திட்டத்தில் குறிப்பிட்ட விடயத்தில் திருத்தத்தினை அல்லது மாற்றத்தினை முன்மொழிதல் போன்ற விடயங்களுக்கு பொது மக்களுடைய அபிப்பிராயங்களை அறிந்து கொள்வதற்கு சர்வஜன வாக்கெடுப்பு நடாத்தப்படலாம். குறிப்பிட்ட மசோதாவிற்கு ஆதரவாக மக்கள் தீப்பளித்தால் அது சட்டமாக்கப்படும். அல்லது மசோதா நிராகரிக்கப்படும். தேவையற்ற, மக்களுக்கு விருப்பமில்லாத சட்டங்கள் சட்ட சபையில் நிறைவேற்றப்படுவதை தடுப்பதற்கு இது பயன்படுகிறது. இம்முறை இன்று சுவிற்சர்லாந்தில் காணப்படுகிறது.
தொடக்க உரிமை என்பது பிரசைகள் அரசியல் திட்டத்தில் திருத்தங்களை கொண்டு வருவதற்கும் சட்ட உருவாக்கத்தில் பங்கு பற்றுவதற்கும் பயன்படுத்துகின்ற ஒரு முறையாகும். வாக்களிக்கத் தகுதியுடைய பிரசைகள் எழுத்து மூலமான விண்ணப்பங்களை சமர்ப்பித்து சிலவகையான சட்டங்களை இயற்றும்படி வேண்டலாம். அல்லது சில மசோதாக்களை முன்மொழிந்து சட்டமாக்கும்படி வேண்டலாம்.
தேர்தல் மூலம் தெரிவு செய்யப்பட்ட பிரதிநிதியை ராஜினாமாச் செய்யும்படி அல்லது அவரது காலம் முடிவடைவதற்கு முதல் மீண்டும் தேர்தல் வைக்கும்படி மக்களினால் வேண்டப்படலாம். இவ்வாறு வேண்டப்படுதலே திருப்பியழைத்தல் எனப்படுகிறது. திருப்பியழைத்தலூடாக வாக்காளர்கள் தமது பிரதிநிதியின் செயற்பாடு தமது விருப்பிற்கு மாறானது என எண்ணும் போது அவரை ராஜினாமா செய்யும்படி கட்டாயப்படுத்தலாம்.
ஜனநாயகத்தின் வகைகள்
ஜனநாயகமானது காலம், அரசுகள் என்பவற்றைப் பொறுத்து வேறுபடுகிறது. ஆனால் ஜனநாயகத்தின் வடிவம் தொடர்பாக பொதுவான உடன்பாட்டிற்கு வருவதில் அரசறிவியலாளர்கள் தவறிவிடுகிறாhர்கள். சூழ்நிலைகளுக்கு ஏற்ப அதன் வடிவங்களும் தன்மைகளும் வேறுபடுவதனால் ஜனநாயக ஆட்சி முறைக்கு பொதுவான முறைப்படுத்தப்பட்ட வடிவத்தினை வழங்க முடியாதுள்ளது. தூய ஜனநாயகம், தாராண்மை ஜனநாயகம், மக்கள் ஜனநாயகம், அடிப்படை ஜனநாயகம், சோசலிச ஜனநாயகம், கைத்தொழில் ஜனநாயகம், பங்குபற்றல் ஜனநாயகம் என பல்வேறு ஜனநாயக வகைகள் காணப்படுகின்றன. ஆயினும் உலகில் தற்போது நிலவும் ஜனநாயகத்தினை பின்வரும் பெரும் மூன்று பகுதிகளாக வகைப்படுத்தலாம்.அவைகளாவன தாராண்மை ஜனநாயகம்,மாக்சிச ஜனநாயகம்,மூன்றாம் உலகின் ஜனநாயகம் என்பவைகளாகும்.