(தினக்குரல், புதிய பண்பாடு இதழில் 2013.01.05 , 2013.01.06 ஆகிய திகதிகளில் பிரசுரிக்கப்பட்டது)
2009ஆம் ஆண்டு இலங்கையின் உள்நாட்டு யுத்தம் முடிவுக்கு வந்ததன் பின்னர் சமர்பிக்கப்பட்ட தருஸ்மன் அறிக்கை, கற்றுக்கொண்ட பாடங்களும் நல்லிணக்க ஆணைக்குழு சமர்பித்த அறிக்கை, சார்ள்ஸ் பெட்றி கையளித்துள்ள உள்ளக அறிக்கை ஆகிய மூன்று அறிக்கைகளும் விடைகாணமுடியாத பல புதிய புதிர்களை எம்மத்தியில் உருவாக்கியுள்ளனவேயன்றி இலங்கையில் புரையோடிப்போயிருக்கும் இனமோதலுக்கு இவைகள் விடைகாண முயலவில்லை. இவ்வறிக்கைகள் போட்டுள்ள புதிய புதிர்கள் அவிழ்க்கப்படுகின்றவரை இனமோதலுக்கான தீர்வினை எல்லோரும் பிற்போட்டுள்ளார்கள். புதிர்கள் போடுவதும் அதனை அவிழ்ப்பதற்குக் காலம் கடத்துவதும் காலங்காலமாக அரசியலில் கையாளப்படும் தந்திரோபாயமாகும். இதன்மூலம் உண்மையான பிரச்சினைகள் விவாதத்திற்கு எடுத்துக் கொள்ளப்படாமல் திசைதிருப்பப்படுகின்றது.
தருஸ்மன் அறிக்கை
மனிதாபிமான மீட்பு நடவடிக்கை ஒன்றை பூச்சிய மக்கள் இழப்புக்களுடன் செய்ததாக இலங்கை அரசாங்கம் கூறுகின்றது. இதற்கு முரண்பட்டதாக இலங்கை அரசாங்கமும், தமிழீழ விடுதலைப் புலிகளும் சர்வதேச மனிதாபிமானச் சட்டம், சர்வதேச மனித உரிமைகள் சட்டம் ஆகிய இரண்டிற்கும் எதிராகப் பரந்தளவிலான பாரதூரமான குற்றங்களைப் புரிந்ததாகக் கூறும் குற்றச்சாட்டுக்களை நிபுணர்குழு இனம் கண்டது. இவற்றில் சில யுத்தக் குற்றங்களாகவும், மானிட சமுதாயத்திற்கு எதிரான குற்றங்களாகவும் அமையலாம் என குழு தெரிவிக்கின்றது. உண்மையில் யுத்தம் நடைபெற்றமுறைமையானது, யுத்தத்தின் போதும், சமாதானத்தின் போதும் தனிநபர்களின் மதிப்பைப் பாதுகாப்பதற்கு என உருவாக்கப்பட்ட சர்வதேசச் சட்டத்தின் மீது பாரதூரமான பாதிப்பினைச் செய்துள்ளது.
ஐக்கியநாடுகள் நிபுணர்கள் குழு தனது அறிக்கையில் சர்வதேச மனிதாபிமானச் சட்டம், சர்வதேச மனித உரிமைகள் சட்டம் ஆகிய இரண்டையும் இலங்கை அரசாங்கமும், தமிழீழ விடுதலைப்புலிகளும் மீறியுள்ளதாகக் குற்றம் சாட்டியுள்ளது. அதாவது இருதரப்பும் யுத்தக் குற்றம் புரிந்துள்ளதாகவும், மனிதாபிமானத்திற்கு எதிராகக் குற்றம் இழைத்துள்ளதாகவும் குற்றம் சாட்டியுள்ளது.
இலங்கை தரப்பில் அரசாங்கத்தின் உயர்மட்ட அதிகாரிகளும், இராணுவத் தலைவர்களும் யுத்தக் குற்றங்களுக்குப் பொறுப்பானவர்கள். இதேபோல தமிழீழ விடுதலைப்புலிகளின் உயர்மட்டத் தலைவர்கள் யுத்தக் குற்றங்களுக்குப் பொறுப்பானவர்கள் எனத் தெரிவித்துள்ளது. பரந்து விரிந்த ஷெல்தாக்குதலுடனான பொதுமக்கள் கொலை, மனிதாபிமான செயற்பாட்டு இடங்கள், வைத்தியசாலைகள் மீதான ஷெல் தாக்குதல்கள், மனிதாபிமான உதவிகளை மறுத்தமை, பாதிக்கப்பட்டவர்கள், யுத்தத்தில் உயிர் தப்பியவர்கள் மீதான மனித உரிமைகள் மீறல், மோதல் நிகழ்ந்த இடத்துக்கு வெளியேயான மனித உரிமை மீறல்கள் ஆகியவற்றை இலங்கை அரசாங்கத்தின் உயர்மட்ட அதிகாரிகளும், இராணுவத் தலைவர்களும் புரிந்த கொடுரமான ஐந்து யுத்தக் குற்றங்களாக ஐக்கியநாடுகள் நிபுணர்கள் குழு அடையாளப்படுத்தியுள்ளது.
தமிழீழ விடுதலைப்புலிகள் புரிந்த மிகவும் கொடூரமான யுத்தக் குற்றங்களாகத் தாக்குதல்களைத் தடுப்பதற்காகப் பொதுமக்களைக் கேடயங்களாகப் பயன்படுத்தியமை, தமது கட்டுப்பாட்டுப் பிரதேசத்திலிருந்து வெளியேற முயற்சித்த பொதுமக்களைக் கொலை செய்தமை, யுத்தக் கருவிகளைப் பொதுமக்களுக்கு அருகில் இருந்து பயன்படுத்தியமை, பலாத்காரமாகச் சிறுவர்களை ஆட்சேர்த்தமை,பலாத்காரமான தொழிலாளர் உழைப்பு,தற்கொலைத் தாக்குதல் மூலம் பொதுமக்களைக் கொலை செய்தமை ஆகியவற்றை அடையாளப்படுத்தியுள்ளது.
கற்றுக் கொண்ட பாடங்கள் மற்றும் நல்லிணக்க ஆணைக் குழு
சர்வதேச மனிதாபிமானச் சட்டத்தின்படி தமிழீழ விடுதலைப் புலிகள் யுத்தசூனியப் பிரதேசங்களில் மேற்கொண்ட மனித உரிமைமீறல்கள் தொடர்பாக கற்றுக்கொண்ட பாடங்கள் மற்றும் நல்லிணக்க ஆணைக்குழுவின் அறிக்கையின் அத்தியாயம் நான்கு பிரிவு இரண்டில் தனது அவதானங்களைப் பின்வருமாறு கூறுகின்றது. தங்களின் இராணுவச் செயற்திறனை முன்னெடுத்துச் செல்வதற்குப் பொதுமக்களை மனிதக் கேடயங்களாகப் பயன்படுத்தியுள்ளனர். பொதுமக்கள் தங்கியிருந்த நிலையங்களில் யுத்தக் கருவிகளை வைத்திருந்ததுடன், அங்கிருந்தபடி அவற்றைப் பயன்படுத்தியுள்ளனர்.
மேலும் பாதுகாப்பான இடங்களுக்குத் தப்பிச் செல்ல முயன்ற பொதுமக்கள் மீது துப்பாக்கிப் பிரயோகம் செய்துள்ளனர். யுத்தம் முடிவடையும் இறுதிக்காலகட்டத்திலும் சிறுவர்களைப் பலவந்தமாக ஆட்சேர்ப்பு செய்து அவர்களை யுத்தத்திலீடுபடச் செய்துள்ளனர். யுத்தம் நடைபெறும் பிரதேசத்தில் மாத்திரமன்றி ஏனைய இடங்களிலும் பொதுமக்கள் ஆபத்தை எதிர்நோக்குவார்கள் எனத் தெரிந்தும் தரைக்கண்ணி வெடிகளை மற்றும் ஏனைய கண்ணி வெடிகளைப் புதைத்துள்ளனர்.யுத்தம் செய்யும் நோக்கத்திற்காகப் பொதுமக்களைப் பலவந்தப்படுத்தி தமக்கு உதவக்கூடிய சேவைகளை அவர்கள் மூலம் பெற்றுக் கொண்டுள்ளனர். யுத்தம் முடிவடையும் காலகட்டத்தில் பொதுமக்கள் அதிகமாகக் கூடியிருந்த யுத்த சூனியப் பிரதேசத்திலிருந்து பொதுமக்களையும் தமிழீழ விடுதலைப் புலிகளையும் இனம்கண்டு கொள்ள முடியாததொரு சூழ்நிலையினை உருவாக்கியுள்ளனர். தற்கொலைக் குண்டுத்தாக்குதலை மேற்கொண்டு அப்பாவிப் பொதுமக்களைத் தொடர்ந்தும் படுகொலை செய்துள்ளனர்.
கற்றுக்கொண்ட பாடங்கள் மற்றும் நல்லிணக்க ஆணைக்குழு தனது அறிக்கையில் யுத்தசூனியப் பிரதேசத்தில் வாழ்ந்த பொது மக்கள் மீது இருதரப்பும் துப்பாக்கிப் பிரயோகம் மேற்கொண்டதனால் பல பொதுமக்கள் கொல்லப்பட்டுள்ளனர். பலர் காயமடைந்துள்ளனர் எனக்கூறுகின்றது. யுத்தத்தின் போதும், யுத்தத்தின் பின்னரும் ஏற்பட்ட பொதுமக்களின் உயிரிழப்புக்கள் அல்லது காயமடைந்தவர்கள் பற்றிய உத்தியோக பூர்வப் பதிவுகளைப் பொதுநிர்வாக அதிகாரிகளோ அல்லது அப்பிரதேசத்திலுள்ள பாதுகாப்புப்படை உத்தியோகத்தர்களோ சேகரித்து வைத்திருக்கவில்லை.
பாதுகாப்புப் படையினர் தமது உயிரிழப்புக்கள், காயமடைந்தவர்களின் எண்ணிக்கை தொடர்பான விபரங்களை சேகரித்து வைத்திருக்கின்றார்கள். ஆனாலும் தமிழீழ விடுதலைப் புலிகள் தரப்பில் ஏற்பட்ட சேதம் தொடர்பாக எவ்வித விபரங்களும் சேகரிக்கப்பட்டிருக்கவில்லை. சுகாதார அமைச்சு மாத்திரம் ஒரளவு இவைகள்பற்றிய புள்ளி விபரங்களை சேகரித்து வைத்துள்ளது. ஆயினும் ஊடகங்கள், ஏனைய அதிகாரிகள் வெவ்வேறுபட்ட புள்ளிவிபரங்களைச் சேகரித்து வைத்திருக்கின்றார்கள்.
யுத்தத்தின் இறுதிக்கட்டத்தில் பெருமளவு பொதுமக்கள் கொல்லப்பட்டும்,காயமடைந்தும் இருந்தார்கள் என்பது உண்மையாகும். இதற்கு நாடெங்கிலுமுள்ள பாதிக்கப்பட்ட எல்லாக் குடும்பங்களிலுமுள்ள வீட்டிலுள்ளவர்கள் பற்றிய ஆய்வொன்று செய்யப்படவேண்டியது அவசியமாகும். இராணுவத்திடம் வந்து சிலர் சரணடைந்ததை தாம் நேரில் பார்த்ததாக ஆணைக்குழுமுன் தோன்றி சாட்சியமளிக்கையில் பலர் தெரிவித்துள்ளனர்.
எனவே இக்குற்றச்சாட்டுக்கள் தொடர்பாக விசாரணை செய்வது அரசாங்கத்தின் கடமையாகும். இவ்விசாரணையின் போது இராணுவத்தினர் யாராவது சட்டவிரோதமாகச் செயற்பட்டிருந்தால் குற்றமிழைத்தவர்களுக்கு எதிராக வழக்குத் தாக்கல்செய்து தண்டனை வழங்கவேண்டும். உத்தியோகபூர்வமாகச் சரணடைந்தவர்கள் காணமல் போய்விட்டார்கள் என்ற குற்றச்சாட்டு நிருபிக்கப்பட்டால், இது குற்றவியல் சட்டத்திற்கமையச் செய்யப்பட்ட குற்றமாகக் கருதப்படல் வேண்டும். எனவே இத்தகைய நிகழ்வுகள் குறித்து பூரண விசாரணை நடாத்தி அவசியமாயின் குற்றமிழைத்தவர்களுக்கு எதிராக வழக்குத் தாக்கல் செய்து தண்டிக்க வேண்டும்.
வைத்தியசாலைகள் உள்ள பகுதிகளில் யுத்தம் நடைபெற்றுள்ளது. யுத்தம் முடிவடைந்த இறுதிக்காலப்பகுதியில் அப்பகுதியிலுள்ள மக்களுக்கு மருந்து விநியோகம் வழங்கப்பட்டதா என்பது தொடர்பாக மேலும் விசாரணை நடாத்தப்படல் வேண்டும். இத்தகைய விசாரணைகளின் போது காயமடைந்த பொதுமக்களின் எண்ணிக்கை, அவர்களுக்கு ஏற்பட்ட காயங்களின் விபரம், காயமடைந்த தமிழீழ விடுதலைப்புலிகளின் எண்ணிக்கை,அவர்களுக்கு மருத்துவ சிகிச்சையளித்தமை, தற்காலிக வைத்தியசாலைகளில் காயமடைந்தவர்களுக்குச் சிகிச்சை வழங்கும் வசதியிருந்ததா? போன்றவற்றை ஆதாரபூர்வமாகத் தெரிந்து கொள்ள முடியும்.
கற்றுக்கொண்ட பாடங்கள் மற்றும் நல்லிணக்க ஆணைக்குழு தனது அறிக்கையின் அத்தியாயம் நான்கு பிரித்தானியாவில் இயங்கும் சனல் 4 தொலைக்காட்சியில் ஒளிபரப்பப்பட்ட இலங்கைக் கொலைக்களம்: தண்டிக்கப்படாத யுத்தக் குற்றங்கள் (Sri Lanka Killing Field: War Crimes Unpunished) என்னும் காணொளி தொடர்பாக பரிசீலனைக்கு எடுத்து தனது அவதானங்களையும், சிபார்சுகளையும் பதிவுசெய்துள்ளது. அரசாங்கம் சுயாதீனமான விசாரணையொன்றை நடாத்தி உண்மையை அல்லது இந்தக் காணொளி மூலம் செய்யப்பட்டிருக்கும் முறைப்பாட்டின் உண்மையைத் தெரிந்து கொள்வது அவசியமாகும். இவ்வாறானதொரு நடவடிக்கை எடுப்பதற்கு இரண்டு காரணங்கள் உள்ளன.
அ) இக்காணொளியினைப் பெற்றுத் தந்தவர்கள், தகவல்கொடுத்தவர்களின் குற்றச்சாட்டு நிரூபிக்கப்படல் வேண்டும். திரு மெஸ்ர்ஸ் அல்ஸ்ரன் (Messrs Alston) மற்றும் ஹெய்ன்ஸ் (Heyns) ஆகியோர்களினால் நியமிக்கப்பட்ட நிபுணர்கள் தடுப்புக்காவலில் இருந்தவர்கள் மீது மரணதண்டனை விதிக்கப்பட்டது உண்மையென்றும், பாலியல்ரீதியல் துஸ்பிரயோகம் செய்யப்பட்டமை உண்மையானவையென்றும் கூறகின்றார்கள். எனவே இது குறித்து விசாரணை செய்து குற்றமிழைத்தவர்கள் கண்டறியப்பட்டு தண்டிக்கப்படல் வேண்டும்.
ஆ) இக்காணொளி செயற்கையாக உருவாக்கப்பட்டிருக்குமாயின் இதன் விளைவு மிகவும் ஆபத்தானதாகி விடும். எனவே இது தொடர்பான உண்மைகளைக் கண்டறியவேண்டிய தேவையுள்ளது. யார் இக் காணொளியினைத் தயாரித்தார்களோ, யார் இக்காணொளியினை ஒளிபரப்பினார்களோ அவர்கள் தவறான தகவல்களை வழங்கும் கலாசாரம் ஒன்றிற்கான பொறுப்பினை ஏற்கவேண்டும். இக்காணொளி இலங்கை மக்களின் கௌரவத்தினை பாரியளவில் பாதிக்கும்.
அதேபோன்று சனல் 4 (Channel 4) தொலைக்காட்சி நிறுவனம் ஒளிபரப்பிய இலங்கைக் கொலைக்களம்: தண்டிக்கப்படாத யுத்தக் குற்றங்கள் (Sri Lanka Killing Field: War Crimes Unpunished) என்னும் தலைப்பிடப்பட்ட காணொளி தொடர்பான மூலத் தகவல்கள் எங்கிருந்து பெறப்பட்டன, அதன் உண்மைத்தன்மைகள் எத்தகையது என்பது போன்ற விடயங்களை நல்லிணக்க ஆணைக்குழு முன் தோன்றித் தெரிவிக்குமாறும் கேட்கப்பட்டது.ஆனால் யாரும் சாட்சியமளிக்கவில்லை. எனவே யுத்த காலத்தில் புரியப்பட்டதாகக் கூறப்படும் யுத்தக் குற்றங்களுக்கும், சனல்4 தொலைக்காட்சி ஒளிபரப்பிய காணொளி தொடர்பாகவும் மேலதிக புலன் விசாரணைகள் செய்யப்படல் வேண்டும் என நல்லிணக்க ஆணைக்குழு சிபார்சு செய்துள்ளது.
நல்லிணக்க ஆணைக்குழு முன் தோன்றி சாட்சியமளிக்க வருமாறு சர்வதேச மன்னப்புச் சபை, மனித உரிமைகள் விழிப்பு,சர்வதேச நெருக்கடிநிலை குழு (Crisis Group) போன்ற அமைப்புக்களுக்கு அழைப்பு விடுக்கப்பட்டது. ஆயினும் இவ்வமைப்புக்கள் இவ்வழைப்பினை நிராகரித்திருந்ததுடன் தமது அபிப்பிராயத்தினை பின்வருமாறு முன்வைத்தன. “தற்போதைய அரசாங்கம் ஆணைக்குழுவிற்கூடாக முதலிருந்த அரசாங்கத்தினதும், தமிழீழ விடுதலைப்புலிகளினதும் செயற்பாடுகளை விசாரணைக்குட்படுத்தி பொறுப்புக்கூறவைக்க முயற்சிக்கின்றதேயன்றி யுத்தம் இறுதிக்கட்டத்தினை அடைந்தபோது அரசாங்கம் செயற்பட்ட விதத்தினை விசாரணைக்குட்படுத்தவில்லை. சர்வதேசத்தினுடைய எதிர்பார்க்கையினையும், சர்வதேசத்தரத்தினையும் இது கொண்டிருக்கவில்லை. “இதேபோன்று தருஸ்மன் குழுவும் தனது கருத்தினைப் பின்வருமாறு பதிவு செய்துள்ளது.” இவ்வறிக்கை ஆழமான குறைபாடுகள் கொண்டது. சர்வதேச தரத்தினைக் கொண்டிருக்கவில்லை. உள்நாட்டு மோதல்களுக்கான காரணங்களை விசாரிப்பதற்கான அல்லது சர்வதேச மனிதாபிமான மற்றும் மனிதஉரிமைகள் சட்டம் என்பவைகள் மிகவும் மோசமாக மீறப்பட்டமையினை விசாரிப்பதற்கு ஏற்ற முறைமையியலை பின்பற்றியிருக்கவில்லை.”
உள்ளக அறிக்கை 2012
தருஸ்மன் குழு அறிக்கையில் கூறப்பட்டிருந்த சிபார்சிற்கு இணங்க ஐக்கிய நாடுகள் சபையின் பொதுச் செயலாளரினால் உள்ளக மீளாய்விற்கான அறிக்கை ஒன்றைத் தயாரிப்பதற்கான குழு ஒன்று நியமனம் செய்யப்பட்டது. இக்குழுவிற்கு ஐக்கியநாடுகள் சபையில் இராஜதந்திரியாக இருந்து பணியாற்றி ஓய்வு பெற்ற சார்ள்ஸ் பெட்றி என்பவர் நியமனம் செய்யப்பட்டார். இவர் 2009ஆம் ஆண்டு இலங்கையில் உள்நாட்டு யுத்தம் முடிவிற்கு வந்த இறுதிக்காலங்களிலும் அதன் பின்னரும் ஐக்கிய நாடுகள் சபையின் செயற்பாடுகள் தொடர்பாக அவதானித்துக் கொண்டிருந்தவராவார்.
ஐக்கிய நாடுகள் சபையின் பொதுச் செயலாளர் உள்ளக அறிக்கையினை வெளியிட்டபோது “ஐக்கிய நாடுகள் சபை தனது பொறுப்பினை ஏற்றுக்கொள்வதில் தோல்வியடைந்து விட்டது.” எனத் தெரிவித்திருந்தார். பெட்றி தனது அறிக்கையில் “மனித உரிமைகள் பேரவை ,பாதுகாப்புச்சபை அங்கத்தவர்கள், இலங்கையில் பணியாற்றிய ஐக்கிய நாடுகள் சபை அங்கத்தவர்கள், ஐக்கியநாடுகள் சபைச் செயலகம் ஆகியன தமது பொறுப்புக்களை ஏற்றுக் கொள்வதில் தோல்வியடைந்து விட்டன” எனத் தெரிவித்துள்ளார்.
இலங்கை அரசாங்கத்தடன் ஐக்கிய நாடுகள் சபை பரிமாறிக் கொண்ட ஆவணங்கள், ஐக்கிய நாடுகள் சபையின் அங்கத்துவ நாடுகள், நிறுவனங்கள், பெரும் எண்ணிக்கையில் மக்கள் சமர்பித்த ஆவணங்கள் உட்பட 7000 ஆவணங்கள் பெட்றி குழுவினால் பரிசீலிக்கப்பட்டது.
அறிக்கையில் சிபார்சு செய்யப்பட்ட விடயங்களை ஆழமாக கவனத்தில் கொள்வதற்காகவும், மேற்கொண்டு செய்ய வேண்டிய பணிகளை எடுத்துரைப்பதற்கும் சிரேஸ்ட நிலையிலுள்ள ஐக்கிய நாடுகள் சபை அணியொன்றைத் தான் உடனடியாக நியமிக்கவுள்ளதாக பான்-கீ-மூன் கூறியுள்ளார். மேலும் விரைவில் ஏனைய செயற்பாடுகள் ஆரம்பிக்கப்படும் என்ற உத்தரவாதத்தினையும் வழங்கியிருந்தார். ஐக்கிய நாடுகள் சபையின் பொறுப்புக்கூறுதல், வெளிப்படைத்தன்மை ஆகிய இரு அணுகு முறைகளுக்கு இணங்க இவ் அறிக்கை பொதுமக்களுக்கு வழங்கப்பட்டிருந்தது.
யுத்த காலத்தில் இலங்கை அரசாங்கத்துடன் தொடர்புகளை ஏற்படுத்துவதில் ஐக்கிய நாடுகள் சபை சிரமங்களை எதிர்கொண்டது. அரசாங்கம் உள்ளூர் தொலைத்தொடர்பு சாதனங்களை தனது கட்டுப்பாட்டில் வைத்திருந்து கடுமையானதும், அவதூறானதுமான விடயங்களை வெளியிட்டு வந்தது. ஐக்கிய நாடுகள் சபை உத்தியோகத்தர்களை அச்சுறுத்தி அழுத்தங்களைப் பிரயோகித்து விமர்சனத்திற்குள்ளாக்கியது. இதற்குப் பயந்து ஐக்கிய நாடுகள் சபை உத்தியோகத்தர்கள் யுத்த வலயத்திலிருந்து வெளியேறியிருந்தனர் என பெட்றி அறிக்கை நியாயப்படுத்துகின்றது.
அதேநேரம் 2008ஆம் ஆண்டு புரட்டாதி மாதம் யுத்தப் பிரதேசத்திலிருந்து ஐக்கிய நாடுகள் சபைப் பிரதிநிதிகளை வெளியேற்றுவது என பான் கீ மூன் எடுத்த தீர்மானத்தினை உள்ளக அறிக்கை கேள்விக்குள்ளாக்கியதுடன், ஐக்கிய நாடுகள் சபைப் பிரதிநிதிகள் யுத்தப் பிரதேசத்திலிருந்து வெளியேறிய பின்னரே பொதுமக்களுடைய பாதுகாப்பினை உத்தரவாதப்படுத்த முடியாது போனது எனவும் குற்றம்சாட்டுகின்றது.
யுத்த காலப்பகுதியில் ஐக்கிய நாடுகள் ஸ்தாபனத்தின் மனிதாபிமானப் பணிகளுக்கு பொறுப்பாகவிருந்த ஜோன் ஹோல்ம்ஸ் ஐக்கிய நாடுகள் ஸ்தாபனத்தின் இயலாமை தொடர்பாக பின்வருமாறு கேள்வியெழுப்புகின்றார். “யுத்தத்தின் போது ஏற்பட்ட உண்மையான இழப்புக்களை வெளியிட்டிருந்தால் கூட யுத்தத்தினை நிறுத்தியிருக்க முடியாது. பொதுமக்களைப் பாதுகாப்பதை விட புலிகளை அழிப்பதற்கே அரசாங்கம் முன்னுரிமை வழங்கியது. இந்நிலையில் யுத்தத்தினை நிறுத்துவது சாத்தியமாக இருக்கவில்லை. சிறிய நாடு ஒன்றின் உள்நாட்டு யுத்தத்தினை நிறுத்துவதற்குக் கூட பலமற்றிருக்கும் நிறுவனமாகவுள்ள ஐக்கிய நாடுகள் ஸ்தாபனத்தினால் எவ்வாறு உலக அமைதியை ஏற்படுத்த முடியும்.”
நெருக்கடிநிலை
ஐக்கியநாடுகள் சபை நிபுணர்கள் குழுவின் அறிக்கை இலங்கை அரசாங்கத்தினையும், தமிழீழ விடுதலைப்புலிகளையும் யுத்தக்குற்றவாளிகளாக்கி விசாரணை நடாத்த முயலுகின்றது. ஐக்கிய நாடுகள் சபை, மற்றும் மனிதவுரிமைகள் பேரவை மூலம் அழுத்தத்தினைக் கொடுத்து இலங்கை அரசாங்கத்தினை சர்வதேச அளவில் தனிமைப்படுத்தித் தண்டிக்க முற்படுகிறது. இதன்மூலம் ஐக்கிய நாடுகள் சபைக்கு அதிகளவில் நிதி வழங்கும் வல்லரசுகளின் நலன்களை நிறைவேற்ற ஐக்கியநாடுகள் சபை முயற்சிக்கின்றதா என்றதொரு சந்தேகம் எழுகின்றது. அவ்வாறாயின் ராஜதந்திரச் செயற்பாட்டின் மூலமே இது சாத்தியமாகும் என்பதால் இதனை முறியடிக்கக் கூடிய வியூகங்களை வகுத்து செயற்பட வேண்டிய தேவை இலங்கைக்கு உள்ளது. தந்திரோபாய ரீதியில் ஐக்கிய நாடுகள் சபைக்கு இலங்கை அரசாங்கம் வளைந்து கொடுக்குமாயின் இலங்கையினை யுத்தக்குற்றவாளியாக்கும் முயற்சியை ஐக்கியநாடுகள் சபை கைவிடவும் கூடும். அவ்வாறு நிகழுமாயின் ஐக்கிய நாடுகள் சபையினால் தமிழ் மக்கள் நிரந்தரமாகக் கைவிடப்படவும்கூடும்.
இந்நிலையில் கற்றுக்கொண்ட பாடங்கள் மற்றும் நல்லிணக்க ஆணைக்குழு சிங்கள அரசியல்வாதிகள் தமிழ் மக்கள் ஏற்றுக்கொள்ளக்கூடிய தீர்வினை வழங்குவதில் தோல்வியடைந்துள்ளதாகவும், தமிழ் அரசியல்வாதிகள் இராணுவ பிரிவினைவாதிகளைத் தூண்டுவோராக இருந்துள்ளதாகவும் குற்றம்சாட்டியுள்ளது. ஆயினும் கற்றுக்கொண்ட பாடங்கள் மற்றும் நல்லிணக்க ஆணைக்குழு முடிந்தவரை அரசாங்கத்தினை யுத்தக்குற்றங்களிலிருந்து பாதுகாக்க முயற்சிக்கின்றது என்றே கூறலாம். ஆயினும் இவ் அறிக்கைக்குள் காணப்படும் விடயங்களை நடைமுறைப்படுத்தும் அதிகாரம் இவ் ஆணைக்குழுவிற்கு இல்லாததால் இவ் அறிக்கை கூட அமுலாக்கத்திற்கு அரசாங்கத்தினை எதிர்பார்த்துக் காத்திருக்கின்றது. ஆனால் அரசாங்கமோ இவ் அறிக்கையின் அமுலாக்கம் தொடர்பாக எவ்வித கவனமும் இதுவரை செலுத்தாதுள்ளது.
இறுதியாக வெளியிடப்பட்ட உள்ளக அறிக்கை ஐக்கிய நாடுகள் சபை தன்னைத்தான சுயவிமர்சனத்திற்குள்ளாக்கியுள்ள அறிக்கையேயன்றி அதன்மூலம் தமிழ்பேசும் மக்களுக்கு எவ்வித விமோசனமும் கிடைக்கப்போவதில்லை. இதனைப் புரிந்துகொள்ள இவ்வறிக்கை வெளியிடப்பட்ட பின்னர் பான்-கீ-மூன் தெரிவித்த கருத்து போதுமானதாகும். “எங்களுடைய குறைபாடுகளை வெற்றி கொள்வதற்கும், தவறுகளிலிருந்து பாடம் கற்பதற்கும், எங்களுடைய பொறுப்பினைப் பலப்படுத்துவதற்கும், எதிர்காலத்தில் அர்த்தமுடனும், செயற்திறனுடனும் செயற்படுவதற்கும் நாங்கள் கடமைப்பட்டுள்ளோம்” எனக் கூறுகின்றார். தமிழ் மக்களின் மரணம் ஐக்கிய நாடுகள் சபை பாடம் கற்பதற்கே உதவியுள்ளது என்பதை பான்-கீ-மூன் உறுதிப்படுத்தியுள்ளார்.
இறுதி யுத்தம் முடிவடைந்து எதிர்வரும் வைகாசி மாதத்துடன் நான்கு வருடங்கள் முடிவடையப் போகின்றது. மரணித்த ஒருவர் எவ்வாறு மரணித்தார் என்பதற்கு செய்யப்படும் மரணத்தின் பின்னான மருத்துவ உடல் பரிசோதனைகள் போன்றே இவ் அறிக்கைகள் உள்ளன. முதல்பரிசோதனையினை தருஸ்மன் குழுவும், இரண்டாவது பரிசோதனையினை நல்லிணக்க ஆணைக்குழுவும், மூன்றாவது பரிசோதனையினை பெட்றி குழுவும் செய்துள்ளது. வெற்றிகரமாக யார் பரிசோதனை செய்துள்ளார்கள் என்று மதிப்பீடு செய்யும் வகையில் இவைகள் தொடர்பான விமர்சனங்களும் வந்து கொண்டிருக்கின்றன. அதேநேரம் வன்னியில் நிகழ்ந்த அவலங்களும், மரணங்களும் சமூகவிஞ்ஞானிகளுக்கு ஆராச்சிக்கான ஆய்வுக்களமாகவும் மாறியுள்ளது. தமிழ் மக்கள் வன்னியில் எவ்வாறு பாதிக்கப்பட்டார்கள், எத்தனை பேர்கள் இறந்தார்கள் போன்ற விபரங்களடங்கிய பரிசோதனை அறிக்கைகளே இப்போது வழங்கப்பட்டுள்ளன. ஆனால் அதற்குள் தமிழ் மக்களுக்கு நியாயம் கிடைக்கக் கூடிய பொறிமுறைகள் காணப்பட்டாலும், அதனை நிறைவேற்றக்கூடிய அதிகாரம் அறிக்கைகளைத் தயாரி;த்தவர்களுக்கு வழங்கப்படவில்லை. அறிக்கைகள் தயாரிப்பதும் அதனை வெளியிடுவதுமாக காலம் கடத்துவது புரிந்த குற்றங்களை நீண்டகாலத்தில் மறைக்க உதவுமேயன்றி பயனுள்ள விடயங்களை தமிழ் மக்களுக்காக முன்னோக்கி நகர்த்தவதற்கு உதவப்போவதில்லை.