(தினக்குரல், புதிய பண்பாடு இதழில் 2013.02.09 , 2013.02.10 ஆகிய திகதிகளில் பிரசுரிக்கப்பட்டது)
இலங்கை தமிழ் இராணுவக் குழுக்களுக்கு இந்தியா வழங்கி வந்த இராணுவப் பயிற்சியும்,ஆயுத உதவிகளும் இலங்கையில் இனமோதல் குறிப்பிடத்தக்களவு விரிவடையக் காரணமாகின. இந்தியா 1987 ஆம் ஆண்டு இலங்கையுடன் செய்து கொண்ட ஒப்பந்தத்தின் அடிப்படையில் அமைதிகாக்கும் படையினை அனுப்பியதுடன், தமிழீழ விடுதலைப்புலிகளுடன் யுத்தத்திலும் ஈடுபட்டு இறுதியில் 1991 ஆம் ஆண்டு ராஜீவ்காந்தி படுகொலையும் செய்யப்பட்டார். இலங்கையின் உள்விவகாரத்தில் இந்தியாவின் தலையீடு எல்லா சமூக மக்களுக்கும் சந்தேகத்தினை ஏற்படுத்தியதுடன், இது இந்தியா உள்நோக்கத்துடன் மேற்கொள்ளும் சதியாகவும் நோக்கப்பட்டது. அனேக சிங்கள மக்கள் இந்தியாவினை இலங்கைத் தமிழ் மக்களுக்கு ஆதரவானதொரு நாடாகக் கருதியதுடன், இந்தியா இலங்கையினைப் பலவீனப்படுத்தி இரண்டாகத் துண்டாட விரும்புவதாக நம்பினர். மறுபக்கத்தில் தமிழீழ விடுதலைப்புலிகளை இந்தியா அழித்து தனது நலன்களைப் பாதுகாப்பதாக தமிழ் மக்கள் நம்பினர்.குறிப்பாக 2009 ஆம் ஆண்டு இறுதி யுத்தத்தின்போது இந்தியா இதனையே செய்திருந்ததாகவும் நம்புகின்றனர். ஆயினும், யுத்தத்தின் பின்னரும் இலங்கையின் உள்நாட்டு விவகாரத்தில் இந்தியா தொடர்ந்து அக்கறை செலுத்துவதன் நோக்கம் கவனத்தில் கொள்ளப்படல் வேண்டும்.
இந்தியாவின் முயற்சி
2009 ஆம் ஆண்டு உள்நாட்டு யுத்தம் முடிவுக்குக் கொண்டுவரப்பட்டதன் பின்னர் இலங்கைக்கும் இந்தியாவிற்கும் இடையிலான உறவு பின்வரும் பிரதான விடயங்களுக்கு முக்கியத்துவம் வழங்குவதாகவேயிருந்தது.
ஆயினும், இந்தியாவின் இம்முயற்சியில் மந்த நிலை காணப்பட்டதுடன், இருதரப்புப் பேச்சுவார்த்தைக்கூடாக அரசியல் தீர்வினைக் காண்பதற்கு இந்தியா பாரிய முயற்சிகள் எதனையும் மேற்கொள்ளவில்லை.
மிகவும் காலம் தாழ்த்தி இந்தியா 2011 ஆம் ஆண்டு தை மாதம் தொடக்கம் தமிழ்தேசியக் கூட்டமைப்பிற்கும் இலங்கை அரசாங்கத்திற்கும் இடையில் பேச்சுவார்த்தை நிகழ்வதற்கு ஆதரவு தெரிவிக்கத் தொடங்கியது.சுதந்திரத்தினையும்,அர்த்தமுள்ள ஐனநாயக நிறுவனங்களை மீளக் கட்டமைப்பதற்கும், மற்றும் வடக்கு,கிழக்கு மாகாணங்களில் இருந்து இராணுவத்தினை வெளியேற்றி பயனுள்ள அதிகாரப் பரவலாக்கத்திற்கு முக்கியத்துவம் வழங்கக்கூடிய இருதரப்புப் பேச்சுவார்த்தைக்கு இந்தியா பின்வரும் விடயங்களுக்கூடாக அழுத்தம் கொடுக்க எண்ணியது.
யுத்தம் முடிவடைந்து நான்கு வருடங்கள் பூர்த்தியாகப் போகும் நிலையில் இலங்கை அரசாங்கம் வட மாகாணத்தில் ஆழமாக மேற்கொள்ளும் இராணுவமயமாக்கம் மற்றும் அரச குடியேற்றங்களால் தாம் ஓரம்கட்டப்படுவதாகவும் இன இணக்கப்பாடு என்பதனூடாகத் தாம் படிப்படியாக வலுவிழக்கச் செய்யப்படுவதாகவும் தமிழ் மக்கள் மனவேதனைப்படுகின்றார்கள். அத்துடன், யுத்தத்தின் இறுதி மாதங்களில் மிகவும் கொடுமையாகக் கொல்லப்பட்ட பொதுமக்கள் தொடர்பான பொறுப்புக் கூறுதல் அல்லது புலன்விசாரணை செய்தல் என்பதை அரசாங்கம் தொடர்ந்து தவிர்த்து வருகின்றமை மூலம் தமிழ் மக்களின் மனவேதனை மேலும் அதிகரிப்பதாகக் கூறப்படுவதையும் இலகுவில் புறம்தள்ளி விடமுடியாது.
சுயநல செயற்பாடு
இந்திய அரசாங்கம் மிகவும் தயக்கத்துடன் இலங்கை அரசாங்கம்மீது கொடுக்கும் அழுத்தமானது ஒருவகையில் சுயநலமிக்க,தந்திரோபாயமிக்க செயற்பாடாகும். குறிப்பாக, யுத்தத்தின் பின்னர் இலங்கையில் பலமடைந்து செல்லும் சீனாவின் செல்வாக்கினால் தற்போதைய அரசாங்கம் அரசியல் ரீதியாகவும், நிதி ரீதியாகவும் பலமடைந்து வருகின்றது.இதனால் இந்தியா தனக்கு இருக்கக்கூடிய சொந்த பொருளாதார நலன்களையும்,அரசியல் செயற்பாடுகளையும் இலங்கையில் இழக்க வேண்டியுள்ளது.
இயல்பிலேயே இந்தியா தனது நாட்டிற்குள்ளிருக்கும் காஷ்மீர் போன்ற பிரதேசங்களில் நிகழும் உள்நாட்டு மோதல்களினால் பலவீனமடைந்துள்ளதுடன், இதனால் ஏற்படக்கூடிய சர்வதேச விசாரணைகளுக்கும் பயப்படுகின்றது. இதன்வழி உலகிலுள்ள ஏனைய அரசாங்கங்களுடன் மிகவும் நெருக்கமாகக் கூட்டிணைந்து செயற்படுவதில் தயக்கம் காட்டுகின்ற மனப்பாங்குள்ளதொரு நாடாக இந்தியாவுள்ளது. இன்று ஒரு எல்லைக்கு அப்பால் சென்று நியாயம் பேசக்கூடிய நிலையில் இந்தியா தன்னைத் தயார்படுத்தவில்லை.அவ்வாறு இந்தியா எல்லை மீறிச் செல்லுமாயின் இந்தியாவின் பலவீனங்களை உலகநாடுகள் கூர்மைப்படுத்தும்,அம்பலப்படுத்தும். எனவே இந்தியா எல்லை கடந்து இலங்கை விவகாரத்தில் தலையீடு செய்யுமாயின் அதன் பலாபலன்களை அனுபவிக்க வேண்டி வரலாம் என்பது இந்தியாவிற்கு நன்கு தெரியும்.
இந்நிலையிலும் யுத்தத்திற்குப் பின்னர் இலங்கையில் அடிப்படை மாற்றத்தினைக் கொண்டு வருவதற்கு இந்தியா முயற்சிப்பதற்கு பல காரணங்கள் உள்ளன.
மனக்கவலை
இந்தியா நீண்டகாலமாக இலங்கை மீது பல்வேறு அழுத்தங்களைப் பிரயோகித்து வந்துள்ளது. இதன்மூலம் நிலைத்திருக்கக் கூடிய சமாதானத்தினை அடையக்கூடிய கொள்கையினை உருவாக்க வைப்பதே இந்தியாவின் நோக்கம் என இந்தியத் தரப்பிலிருந்து நியாயம் கூறப்பட்டது. ஆனால், இந்தியா எதிர்பார்த்தது போல் நிலைத்திருக்கக்கூடிய சமாதானம் நோக்கி இலங்கையினை வழிநடத்த முடியவில்லை. இதற்கிடையில் என்றுமில்லாதளவிற்கு நிதியுதவியினை இலங்கைக்கு வழங்குவதில் இந்தியா ஆர்வம் காட்டினாலும்,யுத்தத்திற்குப் பின்னரான சவால்களை எதிர்கொள்வதில் இலங்கை தோல்வியடைந்தே வருகின்றது. அரசாங்கத்தின் செயற்பாடுகளும், அதிகரித்துவரும் இராணுவத்தின் அரசியல் அதிகாரமும் வன்முறைகள் மீண்டும் இலங்கையில் ஏற்பட்டுவிடுமோ என்ற புதிய மனக்கவலைகளை அதிகரிக்கச் செய்துள்ளன.
யுத்தத்திற்குப் பின்னரான நியாயமானதும், நிலைத்திருக்கக்கூடியதுமான மீள்குடியேற்றங்களில் இராணுவ மேலாதிக்கத்தினை இலங்கை அரசாங்கம் பிரயோகிப்பதாகக் கூறப்படும் கருத்துக்களுக்கு இந்தியா மதிப்பளிக்க வேண்டிய தேவை உருவாகியுள்ளது.இதற்காக இந்தியா ஐக்கிய அமெரிக்கா,ஐரோப்பிய யூனியன் மற்றும் ஜப்பான் ஆகிய நாடுகளுடன் மிகவும் நெருக்கமாகப் பணியாற்ற வேண்டியுள்ளதுடன்,இலங்கையின் தற்போதைய கொள்கை ஏற்புடையதல்ல என்பதையும் இந்நாடுகளுக்கு உணர்த்தி வருகின்றது.
இலங்கையின் தற்போதைய நிலைவரம் தொடர்பாக சித்தாந்த ரீதியாக இரண்டு பிரதான விடயங்களைக் கருத்தில் எடுக்க வேண்டும். ஒன்று அரசு ஒன்றின் ஆட்சியானது மனித சமுதாயத்திற்கானதாகும். இரண்டாவது ஆட்சியும் மனிட சமுதாயமும் ஒன்றிலிருந்து ஒன்று பிரிக்க முடியாத இரட்டைப் பிறவிகளாகும். துரதிர்ஷ்டவசமாக இலங்கையின் தற்கால அனுபவத்தில் இவ் விரட்டைப் பிறவிகள் ஒன்றை விட்டு ஒன்று பிரிந்துள்ளதுடன் ஒன்றுடன் ஒன்று ஒத்துவராத வேறுபட்ட கோரிக்கைகளை இரண்டும் முன்வைக்கின்றன.
இங்குள்ள பிரச்சினை யாதெனில் இலங்கையின் சமூக, அரசியல் தேவைகளை விட இந்தியாவின் நலன்கள் முதன்மையானதா என்பதேயாகும். இந்தியாவினைப் பொறுத்தவரை தற்போதைய அரசாங்கம் நீடித்திருக்கவும் வேண்டும். அதேநேரம் தமிழ்ச் சமுதாயமும் நீடித்திருக்க வேண்டும். இந்தியாவின் நலன்கள் இவ்விரண்டிற்கும் இடையிலேயே தரித்து நிற்கின்றன. இந்நிலையில், நீதிக்காக தமிழ் மக்கள் எவ்வளவு காலம் காத்திருக்கப் போகின்றார்கள்?