(தினக்குரல், புதிய பண்பாடு இதழில் 2013.03.02 , 2013.03.03 ஆகிய திகதிகளில் பிரசுரிக்கப்பட்டது)
2012ஆம் ஆண்டு பங்குனிமாதம் 22ஆம் திகதி ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையின் பத்தொன்பதாவது கூட்டத்தொடரில் ஐக்கிய அமெரிக்காவினால் இலங்கையின் யுத்தப் பிரதேசத்தில் நிகழ்ந்த மனித உரிமைமீறல்கள் தொடர்பான விடயங்களை விவாதிப்பதற்குச் சமர்பிக்கப்பட்ட பொறிமுறையினால் இந்தியா திரிசங்கு நிலைக்குத் தள்ளப்பட்டது. இந்நிலையில் 2013ஆம் ஆண்டு மாசிமாதம் 25ஆம் திகதி ஜேனிவாவில் ஆரம்பமாகிய ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையின் இருபத்திரெண்டாவது கூட்டத்தொடர் பங்குனிமாதம் 22ஆம் திகதி நிறைவடையவுள்ளது. இக் கூட்டத்தொடரின் போது இலங்கையில் இறுதி யுத்தத்தின் போது நிகழ்ந்த மனித உரிமை மீறல்கள் தொடர்பாக மீண்டும் ஐக்கிய அமெரிக்காவினால் இலங்கைக்கு எதிராகக் குற்றப் பிரேரணை சமர்ப்பிக்கப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. அமெரிக்காவினால் இலங்கைக்கு எதிரான குற்றப் பிரேரணை சமர்பிக்கப்பட்டால், இந்தியா தனது முழுமையான ஆதரவினை அதற்கு வழங்க வேண்டும் என இந்தியாவிற்குள்ளிருந்து குறிப்பாகத் தமிழகத்திலிருந்து பலமான அபிப்பிராயம் உருவாகியுள்ள நிலையில் இந்தியப் பிரதமர் அலுவலகமும் இந்தியர்களின் பொது அபிப்பிராயத்திற்கு இந்திய அரசாங்கம் மதிப்பளிக்கும் எனத் தெரிவித்துள்ளது. இலங்கைக்கு எதிரான ஜேனிவாத் தீர்மானத்தில் அமெரிக்காவிற்கு அரசியல் நோக்கங்கள் உள்ளதுபோல் சர்வதேச விடயங்கள் தொடர்பில் இந்தியா எடுக்கும் தீர்மானங்களுக்குப் பின்னாலும் அரசியல் நோக்கங்கள் இருக்கின்றன.
இந்தியாவின் நியாயமும் நம்பிக்கையும்
நாற்பத்தியேழு அங்கத்தவர்களைக் கொண்ட ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையின் பத்தொன்பதாவது கூட்டத்தொடரின் போது அமெரிக்காவினால் சமர்பிக்கப்பட்ட இலங்கைக்கு எதிரான பிரேரணைக்கு இந்தியா உட்பட இருபத்திநான்கு நாடுகள் ஆதரவாகவும், சீனா, ரஸ்சியா உட்பட பதினைந்து நாடுகள் எதிராகவும் வாக்களித்ததுடன் எட்டு நாடுகள் வாக்களிப்பில் கலந்து கொள்ளாமல் விலகிக் கொண்டன. இப்பிரேரணைக்கு ஆதரவாக இந்தியா வாக்களித்தமைக்கு பின்வரும் மூன்று பிரதான காரணங்கள் இருந்தன.
இலங்கையுடன் பலமான தந்திரோபாய அரசியல், வர்த்தக உறவுகளை உருவாக்குவதே இந்தியாவின் பிரதான இலக்காகும். சர்வதேச அரங்கில் இலங்கை தொடர்பான விடயங்களை இந்தியா தனது சுய நலனிற்கு ஏற்றவாறு திட்டமிட்டுச் செயற்படுத்தி வருகின்றது என்பதை ஒரே நிகழ்வினை இரண்டு விதமாக கையாண்டிருந்மை மூலம் உணரலாம்.
2009ஆண்டு செக்கோஸ்லேவேக்கியாவினைப் பயன்படுத்தி இலங்கைக்கு எதிரான மனித உரிமைமீறல்கள் தொடர்பான குற்றப் பிரேரணையினை ஐக்கிய அமெரிக்கா சமர்ப்பித்த முதல் சந்தர்ப்பத்தில் இலங்கையினைப் பாதுகாப்பதற்கான அனைத்து முயற்சிகளையும் இந்தியா மேற்கொண்டு இலங்கையினை இக்குற்றச்சாட்டிலிருந்து விடுவித்திருந்தது. இதன்மூலம் இலங்கையின் நம்பிக்கைக்குரிய நண்பனாக மாறுவதுடன், இறுக்கமான நெருக்கத்தினை உருவாக்கி இலங்கையிலிருக்கும் சீனாவின் செல்வாக்கினைப் படிப்படியாகக் குறைக்க முடியும் என இந்தியா நம்பியது.
இரண்டாவது சந்தர்ப்பத்தில் 2012ஆம் ஆண்டு பங்குனிமாதம் 22ஆம் திகதி ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையின் பத்தொன்பதாவது கூட்டத்தொடரில் நேரடியாக ஐக்கிய அமெரிக்காவினால் இலங்கையின் யுத்தப் பிரதேசத்தில் நிகழ்ந்த மனித உரிமைமீறல்கள் தொடர்பான விடயங்களை விவாதிப்பதற்காகச் சமர்பிக்கப்பட்ட பிரேரணையினை இந்தியா ஆதரித்து வாக்களித்தது. இந்தியாவின் உள்நாட்டு அரசியலில் தமிழகம் வகிக்கும் வகிபாகமும், மத்திய அரசில் அங்கம் வகிக்கும் திராவிட முன்னேற்றக் கழகத்தின் அழுத்தமும் இலங்கைக்கு எதிராக இந்தியாவினை வாக்களிக்க வைத்தது எனக் கூறப்படுகிறது. இந்தியாவின் செல்வாக்கினால் இத்தீர்மானத்தினை சில ஆசிய நாடுகளும் ஆதரித்து வாக்களித்தன. இந்தியா இலங்கைக்கு மிக அண்மையில் உள்ள நாடு என்பதால் தனது பிரேரணைக்கு இந்தியாவின் ஆதரவு மிகவும் பயனுடையது என்பது ஐக்கிய அமெரிக்காவின் கருத்தாக இருந்தது. ஆயினும் தனது சுயநலனிற்காக ஒரேநிகழ்வினை இரு வேறு காலப்பகுதிகளில் இரண்டு விதமாக இந்தியா கையாண்டது என்பதே உண்மையாகும்.
மனித உரிமைகள் பேரவையின் பத்தொன்பதாவது கூட்டத்தொடரின் தீர்மானத்திற்கு ஆதரவாக இந்தியா வாக்களித்தமை யுத்தத்திற்குப் பின்னரான இலங்கை, இந்திய உறவில் விரிசலை ஏற்படுத்தியுள்ளது. சில ஆய்வாளர்கள் இலங்கைக்கு எதிராக வாக்களிப்பதன் மூலம் இலங்கையில் வளர்ந்து வரும் சீனாவின் செல்வாக்கிற்கு இந்தியா உதவியுள்ளதாக விமர்சிக்கின்றனர். உண்மையில் இலங்கைக்கு எதிராக இந்தியா வாக்களித்ததன் மூலம் புதிதாக உருவாகியுள்ள சர்வதேச சூழலை சீனா தனக்குச் சாதகமாகப் பயன்படுத்தியுள்ளது என்பதை நிராகரிக்க முடியாது.
பல நூற்றாண்டுகளாக இலங்கைக்கும் இந்தியாவிற்கும் இடையில் நீடித்துவரும் உறவானது தந்திரோபாய பாதுகாப்பு நோக்கத்தினை அடிப்படையாகக் கொண்டதாகும். இந்து சமுத்திரப் பிராந்தியப் பாதுகாப்பின் முன்னணிப் படையாக இலங்கை உள்ளது என்பதை இந்தியா உறுதியாக நம்புகின்றது. இந்தியாவின் இடவமைவு புவிசார் ரீதியில் இலங்கைக்கு மிகவும் அண்மையானதாகையால் இலங்கையின் அபிவிருத்தியில் யதார்த்தமாக இந்தியாவே முக்கிய பங்பாற்ற முடியும் என்றும் இந்தியா நம்புகின்றது. எனவே மனித உரிமைகள் பேரவையின் பத்தொன்பதாவது கூட்டத்தொடரில் இலங்கைக்கு எதிரான பிரேரணைக்கு ஆதரவாக இந்தியா வாக்களித்தமை மூலம் இந்தியாவிற்கு எவ்வித ஆபத்தும் நிகழ்ந்து விடப்போவதில்லை என இந்திய கொள்கை வகுப்பாளர்கள் நம்புகின்றனர்.
2004ஆம் ஆண்டு சுனாமிப் பேரலை இலங்கையை தாக்கிய போது சிலமணி நேரத்திற்குள் இந்திய கடற்படையினால் மட்டுமே உதவிக்காக இலங்கைக் கடற்பரப்பிற்குள் நுழைய முடிந்தது. இது சீனாவினை விட இந்தியாவிற்கு அளவற்ற தந்திரோபாய நன்மைகளை இலங்கையிலிருந்து பெற்றுக் கொள்ள முடியும் என்பதை எடுத்துக் காட்டப் போதுமானதாகும் என இந்திய கொள்கை வகுப்பாளர்கள் கூறுகின்றார்கள். ஆகவே சீனா இலங்கையிலிருந்து இந்தியாவிற்கு எதிராக எந்தவொரு மோசமான நிலைப்பாட்டை எடுத்துக் கொண்டாலும் அதிலிருந்து மிகவும் விரைவாக இந்தியாவினால் மீளமுடியும் இவ் யதார்த்தத்தினை சீனாவும், இலங்கையும் நன்கு புரிந்து வைத்துள்ளன எனவும் இந்திய கொள்கை வகுப்பாளர்கள் நம்புகின்றனர்.எனவே தேவைக்கு ஏற்றால் போல் இலங்கையினை தாக்கவும் முடியும்,அரவணைக்கவும் முடியும் என்பதே இந்தியாவின் கொள்கையாகும்.
வரையறை தேவை
தழிழீழ விடுதலைப் புலிகள் இராணுவ ரீதியாக தோற்கடிக்கப்பட்டதன் பின்னர் இலங்கையில் இறுதி சமாதானம் அடையப்பட்டு விட்டதாகவோ, சிறுபான்மையினரின் மனத்துயரம் விலகி விட்டதாகவோ கருத முடியாது. இலங்கையில் நல்லிணக்கம் ஏற்பட வேண்டுமாயின் இனமோதலுக்கான அரசியல் தீர்வு முன்வைக்கப்பட வேண்டும். துரதிஸ்டவசமாக இலங்கை அரசாங்கத்தினால் அரசியல் தீர்விற்கான முன்மொழிவுகள் எதுவும் இதுவரை சமர்பிக்கப்படவில்லை. இலங்கை ஜனாதிபதி இது தொடர்பாகக் கூறும்போது. “நாங்கள் நிலைத்திருக்கக் கூடிய அரசியல் தீர்வில் ஆர்வமாக உள்ளோம். ஆனால் அரசியல் தீர்வானது யுத்தத்தின் பின்னரான சூழ்நிலையைக் கருத்தில் கொண்டு ஏற்றுக் கொள்ளக் கூடியதாக இருக்க வேண்டும்” எனக் கூறுகின்றார். இங்கு யுத்தத்திற்குப் பின்னரான சூழ்நிலை என்பது என்ன? என்ற வினாவிற்குத் தெளிவானதொரு வரையறையினை அரசாங்கம் வகுக்கவேண்டும். இவ்வாறு வரையறுக்காதவிடத்து அரசியல் தீர்வு விடயத்தில் பாசாங்கு நிலையிலேயே அரசாங்கம் தொடர்ந்துமுள்ளது என்ற பொதுக் கருத்தினை மாற்றியமைக்க முடியாது போகலாம். இது நீண்டகாலத்தில் சர்வதேச தலையீட்டிற்குக் குறிப்பாக இந்தியாவின் தலையீட்டிற்குரிய இடமாகவும் மாறிவிடலாம். ஏனெனில் இந்தியா தனது தேவையின் நிமித்தம் அடிக்கவும் செய்யும் அல்லது அரவணைக்கவும் செய்யும்.
நீதிக்காகக் காத்திருக்கும் மக்கள்
ஐக்கிய அமெரிக்கா மேற்கு நாடுகளுடன் இணைந்து யுத்தக்குற்றங்கள், மனித உரிமைகள் மீறல் தொடர்பில் இலங்கையினைத் தண்டிக்க முயற்சிக்குமாக இருந்தால் இறைமையுடய அரசு என்ற வகையில் அதைத் தடுக்க அனைத்து வழிகளையும் பயன்படுத்த வேண்டும். இதற்கு ஏற்றாற் போன்று தனது வெளியுறவுக் கொள்கையில் தற்போது அது பல்வேறு தந்திரோபாயங்களைக் கையாண்டு வருகின்றதுடன், யுத்தக் குற்றங்கள், மனித உரிமை மீறல்கள் தொடர்பாக இலங்கை மீது குற்றம் சுமத்தும் நாடுகளுடன் உறவும் இல்லை பகையும் இல்லை (Love and Hate Relation) என்ற நிலையினைப் பேணிவருகின்றது.
புலம் பெயர்ந்து சர்வதேச நாடுகளில் வாழும் தமிழ் மக்கள் (Diaspora) சர்வதேச சமூகத்தில் உருவாக்கி வரும் யுத்தக் குற்றங்கள் மற்றும் மனித உரிமை மீறல்கள் தொடர்பான கருத்துக்கள், பரப்புரைகள், அழுத்தங்களை முறியடிக்க வேண்டிய பெரும் சவால்களை இலங்கை எதிர் கொண்டுள்ளது. தமிழீழ விடுதலைப் புலிகளின் சர்வதேச வலையமைப்புத் தொடர்ந்தும் செயற்படுவதாகவும், புலம் பெயர்ந்து வாழும் தமிழ் மக்கள் மத்தியில் ஈழம் என்ற எண்ணக்கரு இன்னமும் வலுவடைந்துள்ளதாகவும் இலங்கை நம்புகின்றது. ஏனெனில் புலம் பெயர்ந்து வாழும் தமிழ் மக்கள் 'நாடு கடந்த தமிழீழ அரசு” ஒன்றை உருவாக்கியுள்ளார்கள். இவ் அரசிற்கு இதுவரை சர்வதேச அங்கீகாரம் கிடைக்காவிட்டாலும், உத்தியோகப்பற்றற்ற உறவுகளை சில அரசுகள் இதனுடன் பேணிவருவதாகக் கூறப்படுகின்றது. இது தமக்கு கிடைக்க இருக்கும் சர்வதேச அங்கீகாரத்தின் முதற்படி என புலம் பெயர்ந்து வாழும் தமிழ் மக்கள் நம்புகின்றார்கள்.
எல்லோரும் வெற்றியடையும் கொள்கை
புவிசார் அரசியலின் வழி பூகோள நன்மைகளை சீனா எதிர்காலத்தில் பெறுவதற்காக இலங்கையில் தனது கால்களை ஆழமாகப் பதிக்க வேண்டியுள்ளது. ஆகவே சீனாவின் கவன ஈர்ப்பு மையத்தினுள் அடுத்து வருகின்ற பல தசாப்தங்களுக்கு இலங்கை இருக்கும் என்பதில் சந்தேகம் இல்லை. இதற்காக இலங்கையின் பொருளாதாரத்தினைக் கட்டமைப்பதில் மிகவும் நெருக்கமாக இருந்து சீனா பணியாற்றுவதுடன், இராணுவ ரீதியான உறவினையும் முதன்மைப்படுத்தவும் முயற்சிக்கலாம்.
மேலும் யுத்தக் குற்றம், மனித உரிமை மீறல்கள் தொடர்பாகப் பாதுகாப்புச் சபை இலங்கைக்கு எதிராக தீர்மானங்களை மேற்கொள்ளுமாயின் அதிலிருந்து இலங்கைப் பாதுகாத்துக் கொள்ள சீனா மற்றும் ரஸ்சியாவின் ரத்து அதிகாரம் (Veto) உதவும். ஏனெனில் சீனா உருவாக்கும் கடல் பாதுகாப்பு வலைப்பின்னலில் இலங்கை பிரதான வகிபாகத்தினைக் கொண்டுள்ளதால், இலங்கையினை ஐக்கிய நாடுகள் பாதுகாப்புச் சபையில் பாதுகாக்க வேண்டிய தேவை சீனாவிற்குள்ளது. இதனால் யுத்தத்திற்குப் பின்னரான அபிவிருத்தியில் இலங்கையிலிருந்து பிரித்து விட முடியாததொரு பங்காளியாக சீனா தன்னை மாறியுள்ளது. இதனால் இலங்கையின் தலைவிதியை எதிர்காலத்தில் சீனா தீர்மானித்துவிடுமோ என்றதொரு அச்சம் தோன்றியுள்ளது. இதற்கு இலங்கை கொள்கை வகுப்பாளர்கள் இடமளிப்பார்களாயின் இலங்கையின் எதிர்காலம் சூனியநிலைக்குச் சென்றுவிடக் கூடிய ஆபத்து தோன்றிவிடலாம்.
மறுபக்கத்தில் ஆசியாவின் மையமாக இலங்கையினை மாற்றி இந்து சமுத்திரப் பிராந்தியம் முழுவதும் தனது இராணுவக் கூட்டினைப் பலப்படுத்துவதற்கான இராஜதந்திர முயற்சிகளை ஐக்கிய அமெரிக்கா செய்து வருகின்றது. இதற்கு சீனாவின் செல்வாக்கினை இலங்கையிலிருந்து புறந்தள்ள வேண்டும் என ஐக்கிய அமெரிக்கா நம்புகின்றது. இதற்காகவே இலங்கை அரசாங்கம் மீது யுத்தக் குற்றங்களைச் சுமத்தி உலகத்தினையும், தமிழ் மக்களையும் ஏமாற்றுகின்ற தந்திரோபாய விளையாட்டில் ஐக்கிய அமெரிக்கா ஈடுபட்டுள்ளது. உண்மையில் ஐக்கிய அமெரிக்காவின் பிரதான இலக்கு இலங்கையில் ஆழமாக வேரூன்றி வளரும் சீனாவின் செல்வாக்கினை இல்லாதொழிப்பதேயாகும். எனவே வன்னியில் இலங்கை இராணுவம் மேற்கொண்ட யுத்தப் படுகொலைகளை சர்வதேசமயப்படுத்தி இலங்கையின் சீனச்சார்பு வெளியுறவுக் கொள்கையில் மாற்றத்தினை ஏற்படுத்த வேண்டும் என ஐக்கிய அமெரிக்கா எதிர்பார்க்கின்றது. இதற்காக சர்வதேச அரங்கிலிருந்து இலங்கையினைத் தனிமைப்படுத்த அல்லது தனது நண்பர்களுடன் இணைந்து இலங்கைக்கு எதிரான கடுமையான வர்த்தக, பொருளாதாரக் கொள்கைகளை உருவாக்க அமெரிக்கா முயற்சிக்கலாம்.
அதேநேரம் இந்து சமுத்திரப்பிராந்தியத்தில் ஐக்கிய அமெரிக்காவிற்கு இருக்கும் நலன்களை நேர்கணியத்தில் வைத்தே இந்தியா நோக்குகின்றது. இன்னோர் வகையில் கூறின் சீனா ஏற்கனவே தென்னாசியாவில் தனக்கானதொரு இடத்தினை உருவாக்கியுள்ளது. இதனால் இந்தியா சீனாவுடன் தென்னாசியப் பிராந்தியத்தில் இருதரப்பும் வெற்றியடையும் (Win-Win) உறவினை உருவாக்கவே விரும்புகின்றது. இதற்காக சீனாவினைப் பாரிய வர்த்தகப் பங்காளியாக இந்தியாவும் ஏற்றுக்கொண்டுள்ளது. இந்நிலையில் இலங்கையினை மையமாகக் கொண்டு இந்தியாவும், சீனாவும் இருதரப்பும் வெற்றி எனும் நிலையினை உருவாக்குவதுடன் ஐக்கிய அமெரிக்காவுடன் இணைந்து தந்திரோபாய ரீதியான வெற்றி தோல்வியற்ற நிலையினை உருவாக்க இந்தியா எண்ணுகிறது. எனவே சீனா, இந்தியா, ஐக்கிய அமெரிக்கா ஆகிய மூன்று நாடுகளும் தமக்கிடையிலான தந்திரோபாய உறவினை நேர்கணியத்தில் பேணுவதற்காக இலங்கையின் மனித உரிமை மீறல் விவகாரத்தினை நமது கையில் எடுத்துள்ளன.
இந்நிலையில் ஐக்கிய நாடுகள் சபை மனித உரிமைகள் பேரவையின் இருபத்திரெண்டாவது கூட்டத்தொடரில் மீண்டும் ஐக்கிய அமெரிக்காவினால் அரங்கேற்றப்பட இருக்கும் இலங்கைக்கு எதிரான யுத்தக்குற்றப் பிரேரணையால் யுத்தத்தினால் பாதிக்கப்பட்ட தமக்கு நீதி கிடைக்கும் என்ற நம்பிக்கையுடன் இலங்கைத் தீவின் சிறுபான்மைத் தமிழ் மக்கள் காத்திருக்கின்றார்கள். இங்குள்ள கேள்வி இலங்கைத் தமிழ்மக்களுக்குத் தீர்வு கிடைக்குமா? இப்போராட்டத்தில் இலங்கைத் தமிழ்மக்களும் வெல்லுவார்களா? என்பதேயாகும். இக்காலப்பகுதியில் இலங்கைத் தமிழ் மக்களுக்கான அரசியல் தீர்வுப்பொதி உருவாகக்கூடிய இராஜதந்திரப் பொறிமுறையினை தமிழ் அரசியல் தலைவர்கள் புத்திசாலித்தனமாக உருவாக்கிச் செயல்படுத்த வேண்டும். ஏனெனில் பல்லாயிரக்கணக்கான தமிழ் மக்களின் படுகொலைகளைச் சாட்சியாக வைத்து வல்லரசுகள் தமது நலன்களுக்காகப் போராடுவது போன்று தமிழ் மக்களும் அதனையே சாட்சியாக வைத்து தமது உரிமைக்காகப் போராடுவதில் தவறில்லை. தமிழ் மக்களுக்குக் கிடைத்திருக்கும் இப் பிறிதொரு சந்தர்ப்பத்தை தமிழ் அரசியல் தலைவர்கள் நழுவவிடக்கூடாது.