( தினக்குரல் , புதிய பண்பாடு இதழில் 2013.05.18, 2013.05.19 ஆகிய திகதிகளில் பிரசுரிக்கப்பட்டது )
தென்கிழக்காசியா மற்றும் கிழக்காசியவிலுள்ள தனது அயல் நாடுகளுடன் சச்சரவுகளில் சீனா ஈடுபட்டுள்ளது. குறிப்பாக யப்பான்,பிலிப்பையின்ஸ்,வியட்நாம் போன்ற நாடுகளுடன் சீனாவிற்கு இருக்கும் தகராறு பிராந்தியத்தில் பெரும் பதட்டத்தினை ஏற்படுத்தக் கூடியதாகும். இந்நிலையில் லடாக் பிரதேச அத்துமீறலால் சீனாவிற்கு ஏற்படக்கூடிய புதிய நெருக்கடியை மீள்சிந்தனைக்குட்படுத்தி சீனா லடாக் (Ladakh) பிரதேசத்திலிருந்து தனது மக்கள் விடுதலை இராணுவத்தை மீளழைக்க முடிவுசெய்திக்கின்றது. 2013 ஆம் ஆண்டு சித்திரை மாதம் 15 ஆம் திகதி ஜம்மு காஸ்மீர் மாநிலத்தின் கிழக்குத் திசையிலுள்ள எல்லையூடாக லடாக் பிரதேசத்தின் டெப்சாங் பள்ளத்தாக்கிற்குள் (Depsang Valley ) பத்தொன்பது கிலோ மீற்றர் தூரம் முன்னேறியிருந்த சீனாவின் மக்கள் விடுதலை இராணுவம், இந்திய இராணுவத்துடன் நடாத்திய பேச்சுவார்த்தையினைத் தொடர்ந்து 2013 ஆம் ஆண்டு வைகாசி மாதம் 5ஆம் திகதி தான் கைப்பற்றியிருந்த இந்திய நிலபரப்பிலிருந்து பின்வாங்கி தான் நிலைகொள்ள வேண்டிய இடங்களுக்குச் சென்றுள்ளது.
விமர்சனங்கள்
சீனாவின் மக்கள் விடுதலை இராணுவம் இந்திய நிலபரப்பிலிருந்து பின்வாங்கியதில் எவ்வித ஆச்சரியமும் இல்லை. இருதரப்பும் அறிவுபூர்வமாக சிந்தித்து இருதரப்புத் தகராறுகளையும் தீர்த்துள்ளனர்.சீனாவில் ஏற்பட்டுள்ள தலைமைத்துவ மாற்றத்துடன் புதிய அரசியல் திருப்புமுனை ஏற்பட்டுள்ளது.சீனாவின் தலைமைத்துவம் இந்தியாவுடன் உறுதியான உறவினைப் பேணக் கூடியவகையிலும், சூழலுக்கு தகுந்த வகையிலும்; தனது கொள்கைகளை மாற்றியமைக்கத் தயாராகவுள்ளது என்ற செய்தியை வழங்கியுள்ளது.அயலவர்களுடன் தகராறுகளில் ஈடுபடுகின்ற கொள்கைகளை முடிந்தவரை தவிர்த்தல் என்பதே சீனாவின் பெரும் தந்திரோபாயமாகும் என விமர்சகர்கள் தெரிவிக்கின்றனர்.
சமகால சர்வதேச உறவுகள் நிலையத்தின் ஆய்வாளர் பு சைகியோங் ( Fu Xiaoqiang ) சீனாவும்,இந்தியாவும் எல்லைத் தகராறுகளைத் தீர்ப்பதற்கான திறன்வாய்ந்தவர்கள் என்பதை இது எடுத்துக்காட்டியுள்ளதுடன்,நீண்டகாலமாகத் தீர்க்க முடியாதிருந்த சர்ச்சைக்குத் தீர்வு கிட்டியுள்ளது எனத் தெரிவித்துள்ளார்.
பீக்கிங் பல்கலைக்கழக தென்னாசிய பிராந்தியம் தொடர்பான ஆராட்சியாளரும்,ஆயுதப்பரிகரணம் மற்றும் ஆயுதக்கட்டுப்பாட்டு நிறுவன இயக்குனருமாகிய ஹான் கூ ( Han Hua) சீனக்கம்யூனிசக்கட்சியின் உத்தியோக பூர்வப்பத்திரிகையாகிய குளோபல் ரைம்ஸ் ( Global Times) பத்திரிகைக்கு வழங்கிய செவ்வியில் 'இந்தியாவுடனான உறவுகள் தொடர்பாக சீனா எதிர்காலத்தில் எடுக்கவேண்டிய தீர்மானங்கள் எத்தகையதாக இருக்க வேண்டும் என்பதை ஏனைய நாடுகளுடன் சீனாவிற்கு தற்போதிருக்கும் பிரதேசத்தகராறுகள் மூலம் உறுதிப்படுத்த வேண்டும்' எனக்கூறியுள்ளார்.
இந்திய-சீன உறவு
இந்திய சீன எல்லைப்பிரதேசத்தில் ஏற்பட்ட நெருக்கடி நிலை இந்திய வெளிவிவகார அமைச்சர் சல்மன் குர்சிட் ( Salman Khurshid) சீனாவிற்கு மேற்கொள்ளவிருந்த உத்தியோக பூர்வ விஜயத்தில் பாதிப்பினை ஏற்படுத்தி விடலாம் என்றதொரு அச்சம் நிலவியிருந்தாலும், இவருடைய சீன விஜயம் திட்டமிடப்பட்டபடி அமையும் என அவருடைய அமைச்சு செயலகம் அறிவித்திருந்தது.
இந்திய வெளிவிவகார அமைச்சர் சல்மன் குர்சிட் சீனாவிற்கு மேற்கொள்ளும் விஜயம் தொடர்பாக இந்தியாவிற்குள் பல கருத்துப்பரிமாறல்கள் நடைபெற்றிருந்தன.குறிப்பாக சீனாவிற்கும் இந்தியாவிற்கும் இடையில் எல்லைத்தகராறு இருப்பதால் இந்திய வெளிவிவகார அமைச்சர் தனது திட்டமிட்ட சீன விஜயத்தினை ரத்து செய்ய வேண்டும் என எதிர்கட்சிகள் மற்றும் வெகுஜனத் தொடர்புசாதனங்கள் கோரிக்கை விடுத்திருந்தன.
ஆயினும் இரு தரப்பு உறவினைப் பலப்படுத்துவதன் முக்கியத்துவத்தினையும், சீனாவுடன் மிகவும் நெருக்கமாக இருந்து செயல்பட வேண்டியதன் அவசியத்தினை இந்தியா உணர்ந்து செயற்படுவதையும், இதன்மூலம் உணர்ச்சி பூர்வமான விடயங்களை சிறப்பாகக் கையாளக்கூடிய உயர்ந்த ஞானம் கொண்ட நாடாக இந்தியா உள்ளது என்பதையும் வரலாற்றில் பதிவு செய்யக் கிடைத்திருக்கும் பிறிதொரு சந்தர்ப்பமாக இந்திய வெளிவிவகார அமைச்சரின் விஜயம் இராஜதந்திரிகளால் நோக்கப்பட்டது.
இந்திய வெளியுறவு அமைச்சர் சல்மன் குர்சிட் மற்றும் சீன வெளியுறவு அமைச்சர் வாங் யி ( Wang Yi) ஆகிய இருவருக்கும் இடையில் இரண்டு மணித்தியாலங்கள் நடைபெற்ற பேச்சுவார்த்தையில் சீன மக்கள் விடுதலை இராணுவம் அண்மையில் டெப்சங் பள்ளத்தாக்கில் மேற்கொண்ட படையெடுப்பு தொடர்பாக கலந்துரையாடப்பட்டிருந்தது.அத்துடன் சீனத் தலைவர் லி கிஹயங் (Li Keqiang) வைகாசிமாதம் 20ஆம் திகதி இந்தியாவிற்கு மேற்கொள்ளவிருக்கும் உத்தியோகபூர்வ விஜயம் தொடர்பாகவும், இந்தியப் பிரதமர் மன்மோகன் சிங் இவ்வருட இறுதியில் சீனாவிற்கு மேற்கொள்ளவுள்ள விஜயம் தொடர்பாகவும் கலந்துரையாடப்பட்டது. இருநாட்டுத்தலைவர்களும் பரஸ்பரம் மேற்கொள்ளவிருக்கும் விஜயத்தின் மூலம் இருநாட்டிற்குமிடையில் ஏற்பட்டுள்ள பதட்டம் நீங்கும் என எதிர்பார்க்கப்படுகின்றது.
சீனா சென்றடைந்த இந்திய வெளிவிவகார அமைச்சர் லடாக் பிரதேச அத்துமீறல் தொடர்பாக கருத்துத் தெரிவிக்கையில் 'அண்மையில் நிகழ்ந்தது போன்ற பகைமையுணர்வுடனான படையெடுப்பு எதிர்காலத்தில் நடைபெறக்கூடாது. இருநாட்டு விசேட பிரதிநிதிகள் அடுத்துவருகின்ற இருமாதங்களில் சந்தித்து எல்லைத்தகராறுகள் தொடர்பாக விரிவாக கலந்துரையாடுவார்கள். இதன் போது இருதரப்பும் தமது ஆலோசனைகளை முன்வைக்கலாம். அண்மையில் நிகழ்ந்த படையெடுப்புத் தொடர்பாக இந்தியா எவ்வித பிரேதப்பரிசோதனையினையும் செய்ய விரும்பவில்லை. படையெடுப்பிற்குள்ளான பிரதேசத்தில் உருவாக்கப்பட்ட தீர்விற்கான பொறிமுறை தொடர்பில் இந்தியா திருப்தியாகவுள்ளது' எனத் தெரிவித்துள்ளார்.
தென்சீனக்கடல் பிரதேசத்திலும்,கிழக்குச் சீனக் கடல் பிரதேசத்திலுமுள்ள அயல்நாடுகளுடன் சீனாவிற்குப் பிரதேசத்தகராறு ஏற்பட்டுள்ளது. குறிப்பாக யப்பானுடன் தற்போது டைஒயூ மற்றும் சென்காகூ தீவுகள் ( Diaoyu and Senkaku Islands) தொடர்பாக சீனாவிற்கு தகராறு ஏற்பட்டுள்ளது.இதற்காகத் தமது ஆக்கிரமிப்புக் கடல் படையினை இருதரப்பும் தொடர்புடைய இடங்களுக்கு அனுப்பியுள்ளன. இவ்வாறானதொரு தகராற்றில் தொடர்புபடுவதற்கு சீனாவிற்கு எவ்வித தேவையும் சூழலும் இதுவரை ஏற்படவில்லை. இந்நிலையில் 2000 ஆம் ஆண்டு தொடக்கம் இந்தியாவுடன் மிகவும் இறுக்கமான நட்புறவினை சீனா வளர்க்க வேண்டிய சர்வதேசத் தேவை ஏற்பட்டுள்ளது.
ஆயினும் இந்தியாவிற்கும் சீனாவிற்கும் இடையிலான பிரதேச எல்லைத்தகராற்றினால் 2006ஆம் ஆண்டிற்கும் 2009ஆம் ஆண்டிற்கும் இடையில் இந்தியாவிற்கும் சீனாவிற்கும் இடையிலான இருதரப்பு உறவு பெரும் பதட்டத்திற்குள்ளாகியது. ஆனால் அதிகார மையாமாக ஆசியாவினை உருவாக்குதல் என்ற ஐக்கிய அமெரிக்காவின் கொள்கை மற்றும் சீனாவிற்கும் அதன் அயல்நாடுகளுக்கும் ஏற்பட்டுள்ள தகராறுகளினால் இந்தியாவிற்கும் சீனாவிற்கும் இடையிலான இருதரப்பு உறவில் 2010ஆம் ஆண்டு தொடக்கம் பெரும் முன்னேற்றம் ஏற்பட்டு வருகிறது.
இந்நிலையில் குர்சிட் மேற்கொண்ட சீன விஜயம் சீனாவிற்கும் இந்தியாவிற்குமிடையில் பொதுவானதொரு இலக்கு நோக்கி இருநாடுகளும் பயணிக்கவும்,தந்திரோபாய கூட்டுறவு பங்காளர் நிலையினை மேலும் முன்னோக்கி நகர்த்தவும் உதவும் என எதிர்பார்க்கப்பட்டது. மேலும் இரு நாடுகளுக்கும் இடையிலான எல்லைத்தகராறுகளை தீர்ப்பதற்கான பொறிமுறையினைக் கண்டுபிடிப்பதற்கும் உதவும் எனவும் நம்பப்படுகிறது. எல்லைத் தகராறுகளைத் தீர்ப்பதற்கு நட்புறவு ஆலோசனைகளை இருநாடுகளும் தற்போது பயன்படுத்துகின்றன.எல்லைப் பிரதேசங்களில் உறுதியையும்,சமாதானத்தினையும் இருநாடுகளும் பேணி இருதரப்பும் ஏற்றுக் கொள்ளக்கூடிய நியாயமான தீர்வினை பெற்றுக்கொள்ள இருநாடுகளும் முயற்சிக்க வேண்டும் என்பதே சமாதானத்தை நேசிப்பவர்களின் எதிர்பார்ப்பாகும்.
இராஜதந்திரப் பாடங்கள்
சீனாவுடனான் தகராற்றின் மூலம் இந்தியா பின்வரும் இராஜதந்திரப் பாடங்களை கற்றுக் கொண்டுள்ளது எனக் கூறமுடியும்.
ஒன்று இராஜதந்திர அழுத்தத்தினை எதிர்காலத்தில் இந்தியா மீது சீனா எவ்வாறு பிரயோகிக்கும் என்பதை விளங்கிக்கொள்ள லடாக் ஆக்கிரமிப்பு போதுமானதாகும். கிழக்குச் சீனக்கடல் மற்றும் தென்சீனக்கடல் பிராந்தியத்திலுள்ள அயல்நாடுகள் மீது செல்வாக்குச் செலுத்தக் கூடிய உறுதிமிக்கதொரு நாடாக சீனா வளர்ந்து வருகின்றது. இந்த உறுதிநிலையினை இந்தியாவிற்கு எதிராகவும் தன்னால் நிரூபித்துக்காட்ட முடியும் என்பதை லடாக் ஆக்கிரமிப்பு மூலம் சீனா உறுதிப்படுத்தியுள்ளது.
இரண்டாவதாக பிராந்திய அரசியல் சூழலை கட்டுப்படுத்தி எவ்வாறு தனக்குச் சாதகமாக்கி வெற்றிகொள்ள முடியும் என்பதை சீனா கற்றுக்கொண்டுள்ளது. பிரச்சினையொன்றை தானே உருவாக்கி பொருத்தமான நேரத்தில் அதனை தீர்க்கின்ற இராஜதந்திரத்திறன்; தனக்கு இருப்பதை நிரூபித்துள்ளது. இந்தியாவினை தற்காப்பு நிலைக்குச் செல்லவைத்து எதிர்விளைவு எவ்வாறு இருக்கும் என்பதை சீனா வெற்றிகரமாகப் பரீட்சித்துப் பார்த்துள்ளது.
மூன்றாவதாக முன்னேற்பாட்டுடன் கூடிய அபாயமிக்க வீரதீரச்செயல்களை செய்யும் மனநிலையில் சீனா உள்ளதுடன், இதற்காக எவ்வித அச்சமும் கொள்ளாததொரு நாடாக தன்னை வெளிக்காட்டியுள்ளது. மேலும் தமது விடங்களில் சீனா எதிர்காலத்தில் எவ்வாறு செயற்படும் என்று ஊகித்து கொள்வதில் நேரத்தை செலவழித்துக் கொண்டிருக்கின்ற நிலையில் தனது எதிரிகளை தொடர்ந்து வைத்திருக்கும் இராஜதந்திரத்தினை சீனா கையாண்டு வருகின்றது. இதற்காக தென்சீனக்கடல் மற்றும் கிழக்கு சீனக்கடல் பிராந்தியத்தில் சீனாவின் கடல்படை ஆக்கிரமிப்பு நோக்குடன் கண்காணிப்புப்பணியில் ஈடுபட்டுவருகின்றது. அதேநேரம் இந்தியாவிற்கு உறுதியானதும், நேர்மையானதுமான கௌரவத்தினை தான் வழங்குவதாக காட்டிக்கொள்வதுடன்,சில சந்தர்பங்களில் இவ்வாறு கௌரவம் வழங்கும் நிலையிலிருந்து சீனா விலகிவிடலாம் எனறு இந்தியா அச்சம் கொள்ளக்கூடிய சமிச்சையினையும் வழங்குகின்றது.
நான்காவதாக பகுத்தறிவிற்குட்படாது சீனா செயற்படுவதாகக் காட்டிக்கொள்வதன் மூலம் தனது எதிரிநாடுகள் சீனாவினைப் புரிந்துகொள்வதில் போரட வைக்கின்ற தந்திரோபாயத்தினைக் கையாளுகின்றது.சீனத்தலைவர் லடாக் பிரதேசத்திற்கு விஜயம் மேற்கொண்டு சில வாரங்களுக்குப் பின்னர் சீன மக்கள் விடுதலை இராணுவம் அத்துமீறி லடாக் பிரதேசத்திற்குள் நுழைந்தது. இது சீனாவின் பகுத்தறிவிற்கு எதிரான செயற்பாடாக இருந்ததுடன், பின்னர் ஆக்கிரமித்த பிரதேசத்திலிருந்து சீன மக்கள் விடுதலை இராணுவம் வெளியேறியிருந்தன. இது உண்மையில் சீனா கையாண்ட தந்திரோபாய செயற்பாடாகும். சீனத் தலைவர் இந்தியாவிற்கு மேற்கொள்ளவிருக்கும் விஜயத்தின் போது எல்லைத்தகராறுகள் தொடர்பாக புதிய பிரேரணைகளை சீனா முன்வைப்பதற்கான முன்னேற்பாடாகவே இச்சம்பவம் நோக்கப்படுகின்றது. உண்மையில் எல்லைத்தகராறு தொடர்பாக சீனா யாருடனும் சமரசம் செய்யத் தயாராக இல்லை என்பதையே சீன இராஜதந்திரிகள் வெளிக்காட்டியுள்ளனர்.
பிறிக் ( BRIC ) அமைப்பு
பிறேசில்,ரஸ்சியா,இந்தியா,சீனா ஆகிய நாடுகள் உருவாக்கிய பிறிக் (BRIC) என அழைக்கப்படும் அபிவிருத்தியடைந்து வரும் நாடுகளின் அமைப்பாகும். இது 2009 ஆம் ஆண்டு ஆனிமாதம் ஆரம்பிக்கப்பட்டதாகும். பிறிக் நாடுகளில் வளர்ச்சியடையும் சனத்தொகை, பொருளாதாரம் ஆகியவற்றிற்கு ஈடுகொடுக்கும் வகையில் இருபத்தியொராம் நூற்றாண்டில் உலகத்தில் பெரும் பொருளாதார வளம்மிக்க நாடுகளாக இவைகள் எழுர்ச்சியடையும்.நான்கு பிறிக் நாடுகளின் சனத்தொகை 2.8 பில்லியனாகும். இது உலக மொத்த சனத்தொகையில் 40 சதவீதமாகும்.உலகமொத்த தேசியஉற்பத்தியில் 25சதவீதத்திற்கு மேற்பட்ட பொருளாதார உற்பத்தியை இந்நாடுகள் கொண்டுள்ளன.
2003 ஆம் ஆண்டு கோல்மன் சாக்ஸ் (Goldman Sachs) தனது ஆய்வில் சீனாவும் இந்தியாவும் 2050 ஆம் ஆண்டில் உலக பொருளாதாரத்தில் முறையே முதலாம் மற்றும் மூன்றாம் இடங்களைப் பெற்றுக்கொள்ளும் என எதிர்வு கூறியிருந்தார். 2000ஆம் ஆண்டிற்கும் 2008 ஆம் ஆண்டிற்கும் இடைப்பட்ட காலத்தில் பிறிக் நாடுகள் உலகப்பொருளாதாரத்திற்கு 16 இருந்து 22 சதவீத பங்களிப்பினை வழங்கியிருந்ததுடன் பூகோளப் பொருளாதாரத்தின்; வளர்ச்சிக்கு 30 சதவீத பங்களிப்பினைச் செய்திருந்தன. இது இந்தியாவிலும் சீனாவிலும் பாரிய மத்தியதரவர்க்கம் ஒன்றை உருவாக்கி பாரிய நுகர்வோர் படையொன்றினை உருவாக்கியுள்ளது.
எனவே பூகோளவிடயங்களில் இருநாடுகளும் ஆழமாகவும், கூட்டுறவுடனும் செயற்பட்டு பொருளாதார விடயங்களுக்கு முன்னுரிமை கொடுத்து அபிவிருத்தியை உறுதியாக்கவே விரும்புகின்றன. இதனால்; எதிர்காலத்தில் யுத்தத்தில் ஈடுபட இருநாடுகளும் முயற்சிக்க மாட்டாது என நம்பமுடியும்.
சமகாலத்தில் பெரும் வல்லரசுகளாக வளர்ந்து வரும் சீனாவும் இந்தியாவும் மேற்குத்தேச நாடுகளின் அழுத்தங்களுக்குள்ளாகியுள்ளன. சீனாவிற்கும் இந்தியாவிற்கும் இடையிலான உறவினை சகிக்கமுடியாத சில மேற்குத் தேச விமர்சகர்கள் இதனை ரக்கனுக்கும் யானைக்கும் இடையிலான போட்டியாக வர்ணிக்கின்றனர். இரு தரப்பும் எதிர்கொள்கின்ற பெரும் சர்ச்சைக்குரிய விடயங்கள் எவ்வாறு நோக்கப்படுகின்றன,எவ்வாறு கையாளப்படுகின்றன என்பதே மேற்குத் தேச விமர்சகர்களின் சகிப்பற்ற நிலைக்குக் காரணமாகும்.
இந்தியாவும் சீனாவும் வரலாற்றிலிருந்து பல பாடங்களைக் கற்றுக்கொண்டுள்ளன.எனவே எதிர்காலத்தில் பரஸ்பரம் தங்களுக்கிடையிலான அரசியல் மற்றும் பாதுகாப்பு தொடர்பான நம்பிக்கையினைக் கட்டியெழுப்பவும், தங்களுக்கிடையிலான வேறுபாட்டினைக் கட்டுப்பாட்டிற்குள் வைத்திருக்கவும், இருதரப்பும் தமக்கிடையில் உறுதியான பொருளாதாரத்தினை கட்டியெழுப்பவும் முயற்சிக்கும் என்பதே யதார்த்தமாகும்.