Education is the Most Powerful Weapon Which You Can Use to Change the World. – Nelson Mandela-

1 1 1 1 1 1 1 1 1 1 Rating 0.00 (0 Votes)

( தினக்குரல் , புதிய பண்பாடு இதழில் 2013.06.08, 2013.06.09 ஆகிய திகதிகளில் பிரசுரிக்கப்பட்டது )

clip_image002 கட்டற்ற வாணிபவாதம் ஆரம்பமாகிய காலத்திலிருந்து இலாப நோக்கிலான வர்த்தகத்திற்கான கப்பல் போக்குவரத்திற்குப் பயன்படுத்தபட்ட இந்து சமுத்திர பிராந்தியத்தில் மேற்குத்தேச நாடுகளினால் அதிகம் கவரப்பட்டிருந்த நாடாகிய இலங்கை, இன்று தந்திரோபாய, வர்த்தக மற்றும் இராணுவ நலன்களுக்காக ஐக்கிய அமெரிக்கா,இந்தியா,சீனா ஆகிய நாடுகளால் அதிகம் கவரப்பட்டுள்ளது. சில சர்வதேச அரசியல் பகுப்பாய்வாளர்கள் இந்தியாவினைச் சுற்றி சீனா வகுத்துள்ள 'முத்துமாலைத் தொடர்' தந்திரோபாயத்தின் ஒரு பகுதியாக இலங்கையில் உருவாக்கப்பட்ட அம்பாத்தோட்டை துறைமுகத்துடன் இணைந்த வகையில் பெருந்தெருக்கள் மற்றும் வர்த்தக நோக்கிலான செயற்பாடுகளை சீனா இப்போது ஆரம்பித்துள்ளதாக கூறுகின்றார்கள். மறுபக்கத்தில்; இந்தியாவும், சீனாவும் போட்டி போட்டுக் கொண்டு உள்நாட்டு யுத்தத்தினால் பாதிக்கப்பட்ட இலங்கையின் பெருந்தெருக்கள், புகையிரதப்பாதைகள், துறைமுகங்கள், மின்உற்பத்தி நிலையங்கள் போன்றவற்றை செப்பனிடுவதற்கும்,அபிவிருத்தி செய்வதற்கும் ஏறக்குறைய ஆறு பில்லியன் அமெரிக்க டொலரினை செலவிட்டுள்ளதாகவும் கூறுகின்றார்கள்.இதன் தொடர்ச்சியாகவே 2013 ஆம் ஆண்டு வைகாசி மாதம் 27 ஆம் திகதியிலிருந்து 30 ஆம் திகதி வரையிலான காலப்பகுதியில் சீனாவிற்கும் இலங்கைக்கும் இடையில் பல சர்வதேச ஒப்பந்தங்கள் கைச்சாத்திடப்பட்டன எனக் கூறலாம்.

வரலாற்று உறவுப்பலம்

சீனாவின் புதிய ஜனாதிபதியாக 2013 ஆம் ஆண்டு பங்குனி மாதம் எக்ஸ் ஐ ஜிம்பிங் (Xi Jinping) பதவியேற்ற பின்னர் கிழக்கு ஆசியா நாடுகளுக்கு விஜயம் செய்து சீனாவின் அரசியல், பொருளாதார,சமூக மாற்றங்கள் தொடர்பாக தெளிவுபடுத்தியிருந்தார். இதன் தொடர்ச்சியாக இலங்கையுடன் சீனாவிற்கு நீண்டகாலமாகத் தொடரும் உறவிற்கு புத்தூக்கம் கொடுப்பதற்கு சீன ஜனாதிபதி முயற்சித்துள்ளார்.

சமாதான சகவாழ்வு, பரஸ்பர இருதரப்பு உதவிகள், பரஸ்பரம் நன்மை தரக்கூடிய கூட்டுறவு,காலத்திற்கு ஏற்றவகையில் பலப்படுத்தப்படும் இருநாட்டுமக்களுக்கிடையிலான நட்புறவு போன்ற வழிகாட்டும் தத்துவங்களின் அடிப்படையில், ஏறக்குறைய ஐம்பது வருடங்களாக இலங்கைக்கும் சீனாவிற்கும் இடையிலான இராஜதந்திர உறவு தொடர்ந்து நீடித்து வருகின்றது. சீனாவிற்கும் இலங்கைக்கும் இடையிலான இவ் உறவு மாறிவரும் சர்வதேச சூழலுக்கு இசைவடைந்து முன்னோக்கிச் செல்கின்றது. இதன்மூலம் இருநாடுகளும் சிறந்த நண்பர்களாக, சிறந்த பங்காளர்களாக, பரஸ்பரம் நம்பிக்கை கொண்டவர்களாக தாம் இருவரும் இருப்பதை உலகிற்கு எடுத்துக்காட்டி வருகின்றனர்.

இதன்தொடர்ச்சியாக இலங்கை ஜனாதிபதி மகிந்த இராஜபக்ஸாவினை சீனாவிற்கு அழைத்து சீன ஜனாதிபதி பேச்சுவார்த்தை நடாத்தியுள்ளார். இது இலங்கை ஜனாதிபதி சீனாவிற்கு மேற்கொண்ட ஏழாவது உத்தியோகபூர்வ விஜயமாகப் பதிவுசெய்யப்பட்டுள்ளது. ஒருவகையில் இருநாடுகளுக்குமிடையிலான வரலாற்று உறவுப்பலத்தை இது எடுத்துக்காட்டுவதாக கூறலாம்.

சீன ஜனாதிபதி எக்ஸ் ஐ ஜிம்பிங் மற்றும் இலங்கை ஜனாதிபதி மகிந்த இராஜபக்ஸ ஆகிய இருவருக்கும் இடையில் சீனாவின் மக்கள் மகா மண்டபத்தில் ( Great Hall of the People )2013 ஆம் ஆண்டு வைகாசி மாதம் 28ஆம் திகதி பேச்சுவார்த்தை நடைபெற்றது. இப் பேச்சுவார்த்தையின் போது இலங்கையின் உள்நாட்டு விவகாரங்களில் ஏனைய நாடுகள் தலையிடுவதை சீன ஜனாதிபதி வன்மையாகக் கண்டனம் செய்திருந்தார்.

மேலும் இருநாட்டுத்தலைவர்களும் சீனாவிற்கும் இலங்கைக்கும் இடையில் நிலவி வரும் உறவினை தந்திரோபாய கூட்டுப் பங்காளர் (strategic cooperative partnership ) உறவாகத் தரமுயர்த்தி இருநாட்டு மக்களுக்கும் நன்மை தரக்கூடிய பொதுவான அபிவிருத்தியில் கவனம் எடுப்பது எனவும் தீர்மானித்துக் கொண்டனர்.

மாற்றமடைந்து வரும் சர்வதேச சூழலைப் பயன்படுத்தி அபிவிருத்தியடைந்து வரும் நாடுகள் மிகவும் வேகமாக வளர்ச்சியடைந்து வருகின்றதுடன், பெரும் எண்ணிக்கையில் சர்வதேசச் சந்தைகளும் வளர்ந்து வருகின்றன. இந்நிலையில் இலங்கையுடன் இணைந்து பணியாற்ற சீனா விரும்புகின்றதாக சீன ஜனாதிபதி எக்ஸ் ஐ ஜிம்பிங் தெரிவித்துள்ளார்.

தந்திரோபாய கூட்டுப்பங்காளர் உறவிற்கான அடிப்படைகள்

இருதரப்பு உறவினடிப்படையில் நீண்டகால அபிவிருத்திக்காக சீனாவிற்கும் இலங்கைக்கும் இடையிலான உறவினை தந்திரோபாய கூட்டுப்பங்காளர் உறவாக தரமுயர்த்தி பெருமைப்படுத்த பின்வரும் விடயங்களை இருநாட்டுத் தலைவர்களும் தெரிவு செய்து கொண்டனர்.

  • உயர்மட்ட தொடர்பினை பேணுவது, மிகவும் நெருக்கமான அரசியல் தொடர்பினைப் பேணுவது, பிரதேச ஒருமைப்பாடு,இறைமை,சுதந்திரத்தைப்பாதுகாத்தல் என்பவைகளுக்காக இருதரப்பும் ஒருவருக்கு ஒருவர் ஆதரவாக இருத்தல், இருநாடுகளும் தமது தேசிய சூழலுக்கு பொருத்தமான அபிவிருத்திப் பாதைகளைத் தெரிவு செய்வதுடன் நல்லாட்சி அனுபவங்களைப் பரிமாறிப் பலப்படுத்துதல்.
  • இருதரப்பு வர்த்தகம்,முதலீடுகளை விஸ்தரித்தல், முதலீடு மற்றும் நிதி கூட்டுறவின் மூலம் வர்த்தகச் செயல்திறனை விரைவுபடுத்துதல், விவசாயத்துறையில் வெளிப்படையான கூட்டுறவு,விண்வெளி தொழில்நுட்பத்தில் அதிக கவனம் செலுத்துதல்; என்பவைகளுடன், இலங்கையின் போக்குவரத்து உட்கட்டமைப்பு நிர்மாணத்துறையில் சீனாவின் ஈடுபாட்டினை இரு நாடுகளும் வரவேற்றுக் கொண்டன.
  • சட்டங்களைஅமுல்படுத்துதல்,நாட்டின் பாதுகாப்பு மற்றும் இராணுவம் ஆகிய துறைகளில் கூட்டுறவுடன் இணைந்து செயற்படுதல்,தீவிரவாதம்,பயங்கரவாதம், பிரிவினைவாதம் ஆகிய மூன்று கொடிய படைகள் நடாத்தும் எல்லை கடந்த குற்றச் செயல்கள் ,போதைப் பொருள் வர்த்தகம் உட்பட்ட அனைத்து செயல்களையும் இல்லாதொழிப்பதற்கு ஒன்றாகப் பணியாற்றுதல்.
  • இருநாட்டு இளைஞர்களுக்கிடையிலான சீரிய உறவுப் பரிமாற்றத்திற்கான பொறிமுறையினை உருவாக்குவது மற்றும்,இருநாட்டு மக்களுக்கிடையிலான உறவு பரிமாற்றத்தை விரிவுபடுத்துதல், சீனாவின் உதவியுடன் இலங்கையில் சீன மொழி கற்பதற்கான நிலையத்தினை ஆரம்பித்தல், சீனாவின் கலாசார நிலையத்தினை இலங்கையில் நிறுவுதல் என்பவைகளை இருநாடுகளும் வரவேற்றிருந்தன. உல்லாசப் பிரயாணம், சமயம், கலாசார மரபுகளை பாதுகாத்தல் மற்றும் பயன்படுத்துதல் என்பவைகளைக் கூட்டாகப் பேணுதலும் தரம் உயர்த்துதலும்.

பிராந்திய மற்றும் சர்வதேச விவகாரங்களை இணைத்தலும் உறுதியாகப்; பரிமாறுதலும்;, மாறும் சர்வதேசச் சூழல் மரபுசாராத பாதுகாப்பு அச்சுறுத்தல்கள் மற்றும் பூகோள விவகாரங்களை, எதிர்கொண்டு சமாளித்தல், அபிவிருத்தியடைந்து வரும் நாடுகளின் நலன்கள், உரிமைகளைப் பாதுகாத்தல் போன்ற விடயங்களை இருநாடுகளும் வரவேற்றுக் கொண்டன. மேலும் சார்க் அமைப்புடன் சீனா ஆழமான கூட்டுறவினைப் பேணுவதற்கு இலங்கையின் ஆதரவு தெரிவிக்கப்பட்டது.

அபிவிருத்திக்கான உதவி

இலங்கைக்கும், சீனாவிற்கும் இடையில் தான் அறிந்தவரையில் பதின்மூன்று உடன்படிக்கைகள் கைச்சாத்திடப்பட்டதாக இலங்கையின் வெளிவிவகார அமைச்சர் ஜி.எல்.பீரிஸ் தெரிவித்துள்ளார். இதன்படி இலங்கைக்கு 2.2 பில்லியன் அமெரிக்க டொலர் கடனுதவியை சீனா வழங்கவுள்ளது. இக்கடனுதவியைப் பயன்படுத்தி கண்டியிலிருந்து யாழ்ப்பாணத்திற்கான அதிவேக நெடுஞ்சாலை அமைக்கப்படவுள்ளது.

இதற்காக 1.5 பில்லியன் அமெரிக்க டொலரை தனியார் துறை முதலீடாக சீனா மேற்கொள்வதற்கு உடன்பட்டுள்ளது. இக்கடனுதவியூடாக உருவாக்கப்படவுள்ள கண்டி-யாழ்ப்பாண அதிவேக நெடுஞ்சாலையின் மூலம் கிடைக்கும் வருமானங்கள்; குறிப்பிட்டகாலத்திற்கு இதற்கு முதலீடு செய்த தனியார்துறை நிறுவனத்திற்கு வழங்கப்படக்கூடிய ஆபத்து உள்ளது. மேலும் புகையிரசேவை விஸ்தரிப்பு, தெற்கு அதிவேக நெடுஞ்சாலை, கொழும்பு துறைமுகம் ஆகியவற்றின் அபிவிருத்திக்கு உதவி வழங்க சீனா உடன்பட்டுள்ளது.

சீனாவின் பிரதமமந்திரி லி கிகுய்ங் ( Li Keqiang) இலங்கையில் அம்பாந்தோட்டையில் கைத்தொழில் வலயத்தினை உருவாக்குவதற்கும், செயற்கைக்கோள் தொடர்பாடல்,விண்வெளி ஆராட்சி,கடல்சார்ந்த கைத்தொழில் போன்றவற்றினை அபிவிருத்தி செய்யத் தயாராக இருப்பதாக இலங்கை ஜனாதிபதியிடம் தெரிவித்துள்ளார்.

இலங்கையின் உற்பத்திப் பொருட்களுக்கு வரி விதிக்காமல் சீனச்சந்தையில் விற்பனை செய்வதற்கு சீனாவிடம் இலங்கை அனுமதி கோரியுள்ளது. தேயிலை, இரத்தினக்கற்கள்,தங்க ஆபரணங்கள், வாசனைப்பொருட்கள் போன்ற இலங்கையின் உற்பத்திப் பொருட்களை சீனாவில் சுதந்திரமாக விற்பனை செய்வதற்கு சுதந்திரவர்த்தக உடன்படிக்கை உதவும் என இலங்கை எதிர்பார்ப்பதுடன், இதன்மூலம் இலங்கைக்கு ஏற்படும் வர்த்தகச் சமமின்மையினைக் குறைக்க முடியும் எனவும் இலங்கை எதிர்பார்க்கின்றது.இதற்காக கூட்டுக்குழு ஒன்றை உருவாக்குவதற்கு இருநாடுகளும் இணக்கம் தெரிவித்துள்ளன.

சீனாவுடன் அதிகளவில் நட்புறவினை இலங்கை பேணுவதால் இந்தியாவிற்கு ஏற்படக் கூடிய அச்சத்தினை நீக்க வேண்டிய தேவை இலங்கைக்கு உள்ளது.இந்தியா இலங்கையினுடைய மிகவும் நெருங்கிய உறவும், நட்பும் கொண்ட நாடாகும். இலங்கை சீனாவுடன் கொண்டிருக்கும் நட்புறவினால் இந்தியாவுடனான உறவு எந்தவகையிலும் பாதிக்கப்படமாட்டாது. இலங்கையின் மிகவும் நட்புநாடுகளாகிய இந்தியாவும் சீனாவும் தமக்கிடையில் நடாத்தும் போட்டியில் ஒருவர் தோல்விடைந்து மற்றவர் வெற்றியடைய இலங்கை உதவிசெய்யாது. ஆனால் இலங்கையின் இறைமை சர்வதேசளவில் பாதுகாக்கப்படுவதற்கும், பொருளாதார அபிவிருத்திக்கும் தொடர்ந்து சீனா ஆதரவு வழங்கும் என்பது இலங்கையின் கருத்தாகும்.

இலங்கையின் வெளியுறவு அமைச்சர் இது தொடர்பாக கூறும் போது 'சீனாவின் உதவியுடனேயே தமிழீழ விடுதலைப் புலிகளை இலங்கையினால் தோற்கடிக்க முடிந்தது.யுத்தத்தின் பின்னர் துரித பொருளாதார அபிவிருத்தியை நோக்கி இலங்கை முன்னேறி வருகின்றது. பயங்கரவாதம் அழிக்கப்பட்ட பின்னர் துரித பொருளாதார அபிவிருத்திக்கான உதவியை சீனா எமக்கு வழங்கி வருகின்றது. பொருளாதார அபிவிருத்திக்கான உதவிகளை எங்கிருந்து பெறுவது என்பதை தீர்மானிக்கும் அதிகாரம் இலங்கையிடமேயுள்ளது'என்று கூறியுள்ளார். இலங்கையின் வெளியுறவு அமைச்சரின் இக்கூற்று மிகவும் கவனமாக இந்தியாவினால் பரீசீலிக்கப்பட வேண்டியதாகும்..

பாதுகாப்பு ஏற்பாடு

பாதுகாப்புத் தொழில் நுட்பம்,இலங்கை படைகளுக்கான பயிற்சி போன்றவற்றிக்கும் சீனா உதவி செய்ய தயாராகவுள்ளதுடன் இதற்காக தனியானதொரு ஒப்பந்தத்திலும் இருநாடுகளும் கைச்சாத்திட்டுள்ளன. இலங்கைக்கும் சீனாவிற்கும்; இடையிலான பாதுகாப்பு ஒப்பந்தத்தில் ,பாதுகாப்புக்கான தொழில்நுட்பங்களை வழங்குதல்,இராணுவத்திற்குத் தேவையான பயிற்சிகளை வழங்குதல்,அமைச்சு மட்டத்தில் இருநாடுகளுக்குமிடையில் ஆழமான கூட்டுறவினை பேணுதல் போன்ற விடயங்கள் முக்கியம் பெற்றுள்ளதாகக் கூறப்படுகின்றது. 'இலங்கையின் இராணுவக்கட்டமைப்பினை தரமுயர்த்துவதற்கு தனியானதொரு ஒப்பந்தத்தில் சீனாவும் இலங்கையும் கைச்சாத்திட்டுள்ளதாக. இலங்கையின் வெளிவிவகார அமைச்சர் ஜி .எல் பீரிஸ் தெரிவித்துள்ளார். மேலும் இவர் இலங்கையுடன் சீனா பேணும் ஆழமான உறவினால் எந்தவொரு நாட்டிற்கும் ஆபத்து ஏற்படப் போவதில்லை' எனவும்; தெரிவித்துள்ளார்.

மியன்மாரிலிருந்து பாக்கிஸ்தான் வரையிலான துறைமுக அபிவிருத்திக்கு சீனா மேற்கொண்டு வரும் முதலீட்டினால் எதிர்காலத்தில் சீனாவின் அரசியல், இராணுவ செல்வாக்கு இந்துசமுத்திரப் பிராந்தியத்தில் அதிகமாகலாம் என்ற அச்சம் இந்தியாவிற்குள்ளது. இதேபோன்று இலங்கையின் துறைமுகங்களை அபிவிருத்தி செய்வதற்கு சீனா மேற்கொள்ளும் முதலீடுகள் இந்தியாவின் பாதுகாப்பிற்கு ஆபத்தானது என இந்தியா கருத இடமுள்ளது. இதற்கு இலங்கை ஜனாதிபதி மறுப்புத் தெரிவித்துள்ளதுடன், சீனா இலங்கையில் காட்டும் அக்கறை யாவும் வர்த்தக நோக்கிலானதாகும் எனக் கூறியுள்ளார்.

அதேநேரம் இந்தியாவிற்கான இலங்கைத் தூதுவர் காரியவாசம் ( Kariyawasam) சீனாவிற்கும் இலங்கைக்கும் இடையிலான உறவு மிகவும் பழைமையானதுடன்,மிகவும் முக்கியமானதுமாகும். இவ் உறவின் பிரதான நோக்கம் அபிவிருத்திக்கான வாய்ப்புக்களைத் தேடிக்கொள்வதாகும்.சீனாவின் பிரதான இலக்கு இலங்கையின் உட்கட்டமைப்பு வசதிகளை பலப்படுத்துவதாகும். பிராந்தியத்தின் பாதுகாப்பு,சமாதானம், தந்திரோபாய சமனிலை என்பன பாதிக்கப்படும் வகையில் இலங்கை எச்சந்தர்ப்பத்திலும் செயற்படமாட்டாது. இலங்கை தனது பிரதேசத்தை அல்லது கடல்பிரதேசத்தை ஒரு நாடு இன்னொரு நாட்டிற்கு எதிராகப் பயன்படுத்துவதற்கு அனுமதிக்கமாட்டாது.இலங்கை தனது இரு அயல் நாடுகளுடனும் நட்புறவினைப் பேணவே விரும்புகின்றது. இந்தியா ஏதாவது சிக்கல்களுக்குள் உட்படுமாயின் இலங்கையும் சிக்கல்களுக்குட்படும்' எனத் தெரிவித்துள்ளார். எனவே இந்தியாவினை சிக்கலுக்குள்ளாக்கி தானும் சிக்கலுக்குள்ளாக இலங்கை விரும்பவில்லை என்ற செய்தி பகிரப்பட்டுள்ளது.

இந்தியா என்னசெய்யவேண்டும்

இந்தியா தனது அயல்நாடுகளை மிகவும் மகிழ்ச்சியாக வைத்திருக்க வேண்டிய சூழல் உருவாகியுள்ளதாக அமெரிக்க இராணுவ வரலாற்றாசிரியர்கள் கூறுகின்றனர். இந்தியாவின் அயல்நாடுகள் ஏனைய நாடுகளுடன் பாதுகாப்பு மற்றும் அரசியல் கூட்டுக்களை உருவாக்காமல் பாதுகாக்க வேண்டிய பொறுப்பு இந்தியாவிற்குள்ளது. குறிப்பாக பூகோள கடல் போக்குவரத்தில் தந்திரோபாயமிக்க இடத்தில் அமைந்துள்ள இலங்கையுடன் இந்தியா மிகவும் ஆழமான நட்பினை பேணுதல் வேண்டும். ஏட்வேட் லற்வாக் (Edward Luttwak)என்னும் ஐக்கிய அமெரிக்க இராணுவ வல்லுனர் 'சீனா தனது அயல்நாடுகளுடன் தொடர்ச்சியாக தகராற்றில் ஈடுபட்டு வருகின்றது. இந்தியா தனது பிராந்தியத்தில் தனக்குள்ள நீண்ட கால நலனைக் கருத்தில் கொண்டு அயல்நாடுகளுடன் தகராற்றில் ஈடுபடுவதை தவிர்க்க வேண்டும்';எனக் கூறுகின்றார்.

றோபேர்ட் கப்லன் ( Robert Kaplan) போன்ற தந்திரோபாய வல்லுனர்களும் இதேகருத்தினை வலியுறுத்துகின்றனர். றோபேர்ட் கப்லன் 'இருபத்தியொராம் நூற்றாண்டிற்கு இலங்கை மிகவும் முக்கியமானதொரு நாடாகும். வரலாற்றுக்காலம் தொடக்கம் பிரதான கடல் தொடர்பாடல் வலைப்பின்னலுக்கு மிகவும் பயனுள்ள நாடாக இலங்கை இருந்துள்ளது. கண்டங்களுக்கிடையிலான 90 சதவீதமான வர்த்தகப் பொருட்கள் கடல் மார்க்கமாகவே எடுத்துச் செல்லப்படுகின்றன' எனக் கூறுகின்றார்.

இலங்கையின் வெளியுறவுக் கொள்கையினைக் கட்டுப்படுத்த இந்தியாவின் உள்நாட்டு அரசியல் விடயங்களை இந்தியா பயன்படுத்தக்கூடாது.இந்தியாவின் தேசிய நலனுக்காக தமிழ்நாட்டு அரசியல்வாதிகளின் அரசியல் செயற்பாடுகள் கட்டுப்படுத்தப்பட வேண்டும். உள்நாட்டு யுத்தத்தின் போது இலங்கை புரிந்த யுத்தக் குற்றங்களுக்காக அயல்நாடுகளிடமிருந்து பெரும் அழுத்தத்தினை இலங்கை எதிர்கொண்டுவருகின்றது. இந்நிலையில் சீனாவுடன் இணைந்து இலங்கையினைப் பாதுகாக்கும் கூட்டமைப்பினை உருவாக்கி இந்தியா செயற்பட வேண்டும் என ஏட்வேட் லற்வாக் ஆலோசனை கூறுகின்றார்.

அதேநேரம் சீனா அயல்நாடுகளுடன் தகராறுகளில் ஈடுபடுவது போன்று இந்தியா அயல்நாடுகளுடன் தகராறுகளில் ஈடுபடாது தவிர்த்துக் கொள்ளுதல் வேண்டும். யப்பான்,தாய்வான்,வியட்நாம்,இந்தியா போன்ற அயல் நாடுகளுடன் சீனா தகராற்றில் ஈடுபட்டு தன்னைத்தானே செயலிழக்க வைக்கும் பொறிமுறையினை உருவாக்கியுள்ளது.

ஐக்கிய அமெரிக்கா தனது அயல் நாடுகளுடன் தகராற்றில் ஈடுபட்டிருந்தால் அதுவே ஐக்கிய அமெரிக்காவிற்கான அழிவு வித்தாக அமைந்திருக்கும். இதனால் தான் ஐக்கிய அமெரிக்கா தனது அயல்நாடுகளாகிய கனடா அல்லது மெக்ஸிக்கோ போன்ற நாடுகளை ஒருபோதும் அச்சுறுத்தவில்லை. பிராந்திய வல்லாதிக்கம், இயற்கை வளங்கள், எல்லைத்தகராறுகள் போன்றவற்றிற்காக ஐக்கிய அமரிக்கா இவ்வாறு கனடா அல்லது மெக்ஸிக்கோ போன்ற அயல்நாடுகளை அச்சுறுத்தியிருந்தால் சோவியத்யூனியன் தலைமையிலான அணியுடன் இந்நாடுகள் இணைந்திருக்கும். இதன்விளைவு ஐக்கிய அமெரிக்காவின் பாதுகாப்பினைப் பெரிதும் பாதித்திருக்கும்.

இந்தியா உள்நாட்டு அரசியல் அழுத்தத்திற்கு வளைந்து கொடுப்பதிலிருந்து விடுபடவேண்டும்.இந்தியாவிற்கு நீண்டகாலத்தில் இந்து சமுத்திரப் பிராந்தியத்தில் இருக்கக் கூடிய நலன்களை மதிப்பீடு செய்யத் தவறக்கூடாது. சீனா இலங்கையில் மேற்கொள்ளும் உட்கட்டமைப்பு அபிவிருத்தித் திட்டங்களை இந்தியா தனக்கான தொல்லையாக எடுத்துக் கொள்ளத் தேவையில்லை. ஆனால் பாதுகாப்பு உடன்பாடுகளில் சீனாவுடன் இலங்கை கைச்சாத்திடக் கூடாது என்ற எச்சரிக்கையினை இந்தியா இலங்கைக்கு விடுக்கலாம்.ஆனால் இதுவரை அவ்வாறான கோரிக்கைகள் இந்தியாவிலிருந்து வரவில்லை என்பதும், இலங்கை இந்தியாவினை விட்டு விலகிச் சென்றுள்ளது என்பதுவுமே யதார்த்தமாகும்.

ஐக்கிய அமெரிக்காவும் இந்தியாவும் தேவையானளவிற்கு இலங்கை தொடர்பாக கவனம் செலுத்தவில்லை.சீனாவின் தந்திரோபாயச் செயற்பாடுகளுக்கு இலங்கை அண்மைக்காலமாக அனுமதியளித்து வருகின்றது. இந்நிலையில் 'ஐக்கிய அமெரிக்காவும் இந்தியாவும் இலங்கை, நேபாளம், வங்காளதேசம், மியன்மார் போன்ற நாடுகளில் காலூன்றியுள்ள சீனாவினை வெற்றிகொள்வதற்கு மிகவும் அமைதியாக சீனாவுடன் போட்டியிடவேண்டும்' என றோபேர்ட் கப்லன் ஆலோசனை கூறியுள்ளார்.

ஆசிய,பசுபிக் பிராந்தியம் மிகவும் வேகமான பொருளாதார செழிப்புமிககதொரு பிராந்தியமாக வளர்ந்து வருகின்றது. இப்பொருளாதார திரட்சியுள்ள இடத்திலிருந்து இலங்கை தனது பொருளாதார அபிவிருத்திக்கான உதவியைப் பெற்றுக் கொள்ளத்தொடங்கியுள்ளது. இதில் யாரும் தவறு காணவோ அல்லது அச்சம் கொள்ளவோ தேவையில்லை. சீனா தனது கைத்தொழில் துறைக்குத் தேவையான சக்திவளத்தில் ஏறக்குறைய 70 சத வீதத்தினை இந்துசமுத்திர பிராந்தியத்தினூடக இறக்குமதி செய்து வருகின்றதுடன்,இந்து சமுத்திரப் பிராந்தியத்திலும், உலகளாவிய ரீதியிலும்; சீனா மிகவும் வேகமாக பலமடைந்தும், அதிகாரத்தைப் பெற்றும் வளர்ந்து வருகின்றது. இதனால் இலங்கை எவ்விதத்திலும் அச்சமடையாமல், சீனாவின் எழுச்சி மூலம் கிடைக்கும் பலாபலன்களைத் தானும் அறுவடை செய்து அனுபவிப்பதில் கவனம் செலுத்தத்த தொடங்கியுள்ளது போல் தெரிகின்றது. அவ்வாறாயின் இதில் எவ்வித தவறும் இருக்கமுடியாது. ஏனெனில் 'எங்களுடைய உறவும், தன்மையும், இயல்பும் இதுதான் என இலங்கையின் வெளியுறவு அமைச்சர் கூறும் கருத்து இலங்கை எங்கு நோக்கிச் செல்கின்றது என்பதைக் கோடிட்டுக் காட்டியுள்ளது.

 

Share

Who's Online

We have 26 guests and no members online

+1 Me

Subscribe

Enter your email address:

Delivered by FeedBurner

 About Prof. Thanabalasingam Krishnamohan

Prof. Thanabalsingam Krishnamohan is a Professor in Political Science in Eastern University of Sri Lanka .