Education is the Most Powerful Weapon Which You Can Use to Change the World. – Nelson Mandela-

1 1 1 1 1 1 1 1 1 1 Rating 0.00 (0 Votes)

(தினக்குரல், புதிய பண்பாடு இதழில் 2012.12.22 , 2012.12.23 ஆகிய திகதிகளில் பிரசுரிக்கப்பட்டது)

clip_image002 சுதந்திர இலங்கையின் பிரதம மந்திரி டி.எஸ் சேனநாயக்கா பாக்கிஸ்தானுக்கு மேற்கொண்ட முதல் விஜயத்துடன் இருநாடுகளுக்குமிடையிலான நட்புறவுக்கான் அடித்தளம் இடப்பட்டது. அன்றிலிருந்து இன்று வரை இரு நாடுகளும் சாத்தியமான சகல வழிகளிலும் தமக்கிடையிலான உறவுகளைப் பலப்படுத்துவதற்கான அரசியல் செயற்பாடுகளில் ஈடுபட்டு வருகின்றன. சீனாவினைப் போன்று பாகிஸ்தானும் நேரடியான இராணுவ உதவிகளை இலங்கைக்கு வழங்கி வந்துள்ளது. இந்தியாவிற்கு எதிரான வெளியுறவுக் கொள்கையினைப் பின்பற்றுகின்ற சீனாவும், பாகிஸ்தானும் நேரடியாக இலங்கைக்கு இராணுவ உதவிகளை வழங்கியமை ஆச்சரியமிக்கதொன்றல்ல.

ஜனாதிபதி ஷிஆ - உல் - ஹக் வழங்கிய உதவி

1984ஆம் ஆண்டு பாகிஸ்தானுக்கு விஜயம் மேற்கொண்டிருந்த இலங்கை ஜனாதிபதி ஜே. ஆர். ஜெயவர்தனாவின் வேண்டுகோளுக்க இணங்க இலங்கையின் இனமோதலைத் தீர்ப்பதற்குத் தேவையான இராணுவ உதவிகளை பாக்கிஸ்தான் வழங்கியிருந்தது. இவைகள் தமிழ் பிரிவனைவாத இயக்கங்கள் அனைத்திற்கும் எதிராக அப்போது பயன்படுத்தப்பட்டிருந்தன. மேலும், இலங்கையின் இராணுவ உயர்நிலை அதிகாரிகளுக்கு கெரில்லாக்களுக்கு எதிரான தாக்குதல் நடத்துவது தொடர்பாகவும், பாகிஸ்தான் பயிற்சியை வழங்கியிருந்தது.

1985ஆம் ஆண்டு இலங்கைக்கு ஐந்து நாட்கள் உத்தியோகபூர்வ விஜயத்தினை மேற்கொண்டு இலங்கை வந்திருந்த பாக்கிஸ்தானிய ஜனாதிபதி ஷிஆ-உல்-ஹக் (Zia-ul-haq) இலங்கை நடத்தும் பயங்கரவாதத்திற்கு எதிரான யுத்தத்திற்கு பாகிஸ்தான் பூரண ஆதரவினைத் தெரிவிப்பதாகக் கூறியதோடு, இலங்கையின் ஐக்கியம், ஒருமைப்பாட்டினைப் பேணுவதற்கு அயல்நாடுகளும் நண்பர்களும் ஆகக் கூடுதலான ஆதரவினை வழங்க வேண்டும் என அழைப்பு விடுத்திருந்தார். இலங்கையின் உள்நாட்டு யுத்தத்தில் இராணுவத்தி;ற்கு தேவையான உதவிகளை இலங்கை அரசாங்கம் இஸ்ரேலிடம் இருந்தும் பெற்றுக் கொண்டிருந்தது. இதனால் மேற்கு ஆசிய நாடுகள் இலங்கை தொடர்பாக அச்சம் கலந்த நிலைப்பாட்டிலிருந்தன. இதனை சமப்படுத்துவதற்கு இலங்கை பாகிஸ்தானுடன் வைத்திருந்த நட்புறவு வாய்ப்பாக இருந்தது. இலங்கையின் இன மோதலில் இந்தியாவின் செயற்பாட்டினை பாகிஸ்தான் பலமாக எதிர்த்ததுடன், இலங்கையின் இறைமை, சுயாதிபத்தியம் என்பவற்றினைப் பாதுகாப்பதற்கு சாத்தியமான அனைத்து உதவிகளையும் வழங்கியது.

ஜனாதிபதி முஸரப் வழங்கிய உதவி

1999 ஆம், 2000 ஆம் ஆண்டுகளில் பாகிஸ்தான் ஜனாதிபதி முஸரப் (Musharraf) இலங்கைக்கு பெருந்தொகையான இராணுவ உதவிகளை வழங்கியிருந்தார். இக்காலகட்டம் தமிழீழ விடுதலைப் புலிகள் தாம் இழந்திருந்த யாழ்ப்பாணத்தினை மீளக் கைப்பற்றிருந்த காலமாகும். இந்தியா இலங்கையுடன் பாதுகாப்பு ஒப்பந்தத்தினைச் செய்து கொள்வதில் தயக்கம் காட்டியதுடன், இலங்கை எதிர்பார்த்த இராணுவத் தளபாடங்களை வழங்குவதற்கு இந்தியா தயக்கம் காட்டியிருந்த தருணத்தில் பாகிஸ்தானிடம் உதவி கோருவது இலங்கைக்குத் தவிர்க்க முடியாததாகியது. இதனடிப்படையில் 2007ஆம், 2008ஆம், 2009ஆம் ஆண்டுகளில் பெருந்தொகையான ஆயுதங்களை இலங்கைக்கு பாகிஸ்தான் விற்பனை செய்திருந்தது.

ஏற்கனவே கூறியது போன்று சீனாவிற்கு இலங்கை அரசாங்கத்துடன் இருந்த நட்புறவினடிப்படையில் சீனாவின் தூண்டுதலுக்கு ஏற்ப கடனடிப்படையிலான இராணுவத் தளபாட உதவிகளை பாகிஸ்தான் இலங்கைக்கு வழங்கியது. அதாவது இந்தியாவும், மேற்குத் தேச நாடுகளும் இலங்கைக்கு இராணுவ உதவிகள் வழங்குவதை இடைநிறுத்தியிருந்த காலத்தில் சீனா இராணுவத் தளபாட உதவிகளை வழங்கியதுடன், பாகிஸ்தானை இராணுவ தளபாட உதவிகளை வழங்குமாறும் ஆர்வப்படுத்தியது.

இலங்கைக்கு சீனா யுத்தவிமானங்களை வழங்கியிருந்தது. ஆனால் இவ் யுத்தவிமானங்களைச் செலுத்துவதற்குரிய பயிற்சி பெற்ற விமானிகள் இலங்கையிடம் இருக்கவில்லை. பாக்கிஸ்தானுக்கு ஏற்கனவே இவ்வகையான யுத்த விமானங்களைச் சீனா விற்றிருந்ததுடன், அவைகளைச் செலுத்துவதற்கான பயிற்சியையும் வழங்கியிருந்தது. இந்நிலையில் சீனா இலங்கைக்கு தான் வழங்கிய யுத்த விமானங்களைச் செலுத்துவதற்குரிய பயிற்சியை இலங்கை விமானிகளுக்கு வழங்குமாறு பாக்கிஸ்தானிடம் கேட்டிருந்ததுடன் அதனை ஆர்வப்படுத்தியுமிருந்தது. மறுபக்கத்தில் யுத்த நிறுத்தம் நடைமுறையிலிருந்த காலத்தில் இலங்கையின் பிரதேச ஒருமைப்பாடு, இறைமை என்பவற்றை பாதுகாத்து இலங்கையின் இனமோதலுக்கு சமாதானப் பேச்சுவார்த்தை மூலம் தீர்வு காண வேண்டும் என்பதில் பாகிஸ்தான் அக்கறையுடைய நாடாக இருந்தது.

2008ஆம் ஆண்டு யுத்த நிறுத்தம் கைவிடப்பட்ட போது பாகிஸ்தான் ஜனாதிபதி முஸரப் ”இலங்கையனால் எதிர்கொள்ளப்படும் சவால்களை பாகிஸ்தான் தெளிவாகப் புரிந்து வைத்துள்ளது. பயங்கரவாதத்திற்கு எதிராக இலங்கை எடுக்கும் முயற்சிகளுக்கு பாகிஸ்தான் தனது ஆதரவினைத் தெரிவிக்கின்றதுடன், இலங்கையின் இறைமையும், பிரதேச ஒருமைப்பாடும் பாதுகாக்கப்பட வேண்டும்” எனத் தெரிவித்திருந்தார்.

2009ஆம் ஆண்டு வைகாசி மாதம் இலங்கை உள்நாட்டு யுத்தத்தில் முழுமையான வெற்றியைப் பெற்றுக் கொண்ட போது பாகிஸ்தான் அதனை வரவேற்று தனது உறுதியான ஆதரவினைத் தெரிவித்ததோடு, இலங்கையின் பிரதேச ஒருமைப்பாடு, இறைமை, ஐக்கியம் என்பவைகளுக்காக மீண்டும் தனது ஆதரவினைத் தெரிவித்துக் கொண்டது.

ஜனாதிபதி அசிவ் அலி ஷர்டாரி

2010ஆம் ஆண்டு கார்த்திகை மாதம் பாக்கிஸ்தான் ஜனாதிபதி அசிவ் அலி ஷர்டாரி (Asif Ali Zardari) மேற்கொண்ட விஜயத்தின் மூலம் இரு நாடுகளுக்கும் இடையிலான உறவு பலப்படுத்தப்பட்டது. பாக்கிஸ்தான் ஜனாதிபதி அசிவ் அலி ஷர்டாரி இலங்கை ஜனாதிபதியுடன் அரசியல் மற்றும் பாதுகாப்பு விடயங்களுக்கு அப்பால் வர்த்தக, கூட்டு முதலீடுகள் மற்றும் புதிய விடயங்களில் கூட்டாகச் செயற்படுவது தொடர்பாக உடன்பாடு கண்டிருந்தார். இதனைவிட மேலும் பல ஒப்பந்தங்களிலும் இரு நாடுகளும் கைச்சாத்திட்டுக் கொண்டன. பயங்கரவாதம் எவ்வடிவில் தோன்றினாலும் அதனை இருநாடுகளும் இணைந்து தோற்கடிப்பது இவ்வொப்பந்தங்களில் காணப்பட்ட பிரதான விடயமாகும். பிராந்தியப் பாதுகாப்புத் தொடர்பாக இரு நாடுகளும் பொதுவான நிலைப்பாடுகளையும், கருத்தினையும் கொண்டுள்ளன. இருநாடுகளும் இந்தியாவிடமிருந்து தமக்கு அச்சுறுத்தல் ஏற்படுவதாக கருதுகின்றன. தமிழ் இராணுவக் குழுக்களைப் பயன்படுத்தி இலங்கையின் அரசியல், பொருளாதார உறுதித்தன்மையினை இந்தியா சீர்குலைத்து வந்ததாக பாக்கிஸ்தானும் நம்பியது. எனவே இந்தியாவின் அச்சுறுத்தலிலிருந்து இலங்கையினைப் பாதுகாப்பதற்குத் தேவையான இராணுவ உதவிகளை வழங்கி தமிழீழ விடுதலைப் புலிகளைத் தோற்கடிப்பதற்கு பாக்கிஸ்தான் உதவியது எனவும் கூறப்படுகின்றது. இதனை இலங்கை வந்திருந்த பாக்கிஸ்தான் ஜனாதிபதி அசிவ் அலி ஷர்டாரி “இலங்கையிலிருந்து பயங்கரவாதம் தோற்கடிக்கப்பட்டதற்கு பாராட்டுத் தெரிவித்ததுடன் பயங்கரவாதம் மீண்டும் தலைதூக்கினால் அதற்கு எதிராக போராடுவதற்கு இலங்கைக்கு உதவத்தயாராக இருப்பதாகவும் தெரிவித்திருந்தார்”. எதிர்காலத்தில் பாதுகாப்புத் துறையுடன் இரு நாடுகளும் இறுக்கமாக இணைந்து செயற்படவேண்டிய தேவையுள்ளதாக பாக்கிஸ்தான் ஜனாதிபதி அசிவ் அலி ஷர்டாரி தெரிவித்துள்ளார். இலங்கையில் உள்நாட்டு யுத்தம் நடைபெற்ற காலத்தில் இலங்கைக்கான இராணுவத்தளபாடங்களை வழங்கிய பிரதான நாடு பாக்கிஸ்தான் என்பதும், இலங்கை இராணுவத்திற்கு தேவையான பயிற்சிகளை அவ்வப்போது பாக்கிஸ்தான் வழங்கியும் வந்ததுள்ளது என்பதும் இதன் மூலம் புலனாகின்றது. இதற்கு அடுத்த நிலையில் சீனா இருந்தது என்பதும் இங்கு கவனத்தில் கொள்ளவேண்டிய விடயங்களாகும்.

உள்நாட்டுப் போரில் பாக்கிஸ்தான்

பாக்கிஸ்தான் வழங்கிய கடடுப்பாடற்ற இராணுவ உதவி உள்நாட்டுப் போரில் இலங்கை வெற்றியடைவற்கு உதவியது என்பதை இலங்கை ஜனாதிபதியும் அண்மையில் கோடிட்டுக் காட்டியுள்ளார். 2012ஆம் ஆண்டு புரட்டாதி மாதம் 11ஆம் திகதி தொடக்கம் 15ஆம் திகதி வரையில் இலங்கையில் நடைபெற்ற 58ஆவது பொதுநலவாயநாடுகளின் பாராளுமன்ற அமைப்பின் மகாநாட்டில் பங்குபற்றுவதற்காக 22 பாக்கிஸ்தானிய பாராளுமன்ற உறுப்பினர்கள் இலங்கை வந்திருந்தார்கள். இவர்களை அலரி மாளிகைக்கு அழைத்து விருந்தளித்த இலங்கை ஜனாதிபதி அங்கு ஆற்றிய உரையில் “இலங்கையில் மூன்று தசாப்தங்களாக நடைபெற்ற உள்நாட்டுப் போரிற்கு பாக்கிஸ்தான் துணிவுடன் தொடர்ந்து ஆதரவளித்துள்ளது. இதன் மூலம் இலங்கை மண்ணிலிருந்து பயங்கரவாதத்தினை பூரணமாக இல்லாதொழிக்க முடிந்தது. பாக்கிஸ்தானின் உதவியும், ஆதரவும் இல்லாமல் பயங்கரவாதத்தினை தோற்கடித்திருக்க முடியாது. இதன் மூலம் இலங்கையின் உண்மையான நண்பனாகத் தான் இருப்பதை பாக்கிஸ்தான் நிரூபித்துள்ளது. மேலும் பாக்கிஸ்தான் மீது எமது மக்களுக்கு எப்போதும் ஆழமான அன்பு உள்ளது. இதன்மூலம் இரு நட்பு நாடுகளுக்குமிடையில் பலமான இருதரப்பு உறவுகளை மேலும் வலுப்படுத்தி இரு தரப்பும் பிராந்திய, பூகோள விவகாரங்களில் நெருங்கிச் செயற்பட வழிசெய்துள்ளது”. எனத் தெரிவித்துள்ளார்.

எனவே 2009ஆம் ஆண்டு யுத்தம் முப்பது வருடகால உள்நாட்டு யுத்தம் முடிவுக்கு கொண்டுவரப்பட்ட போது 40,000 மேற்பட்ட அனைத்துத் தமிழ் பொது மக்களும் பாக்கிஸ்தான் தடையின்றி வழங்கிய சகலவகையான இராணுவ உதவிகளினாலேயே கொலை செய்யப்பட்டனர் எனலாம். இதனால் இறுதிக்கட்ட யுத்த காலத்தில் இலங்கை இராணுவத்திற்கு ஆயுத விநியோகம் உட்பட்ட சகல உதவிகளையும் வழங்கிய பாக்கிஸ்தானும் சர்வதேச விதிகளுக்குக் கட்டுப்பட்டு இதற்கான பொறுப்பினைக் கூறவேண்டும்.

 

Share

Who's Online

We have 146 guests and no members online

+1 Me

Subscribe

Enter your email address:

Delivered by FeedBurner

 About Prof. Thanabalasingam Krishnamohan

Prof. Thanabalsingam Krishnamohan is a Professor in Political Science in Eastern University of Sri Lanka .