யாப்பியல்வாதம் பற்றிய கற்கையானது ஒப்பீட்டரசியலில் முக்கியமான இடத்தினைப் பிடித்துள்ளது. டைசி என்பவர் நேரடியாகவோ அல்லது மறைமுகமாகவோ அரசின் இறைமை அதிகாரத்தினை பயிற்றுவிப்பது யாப்பு ஆகும்' எனக் கூறுகின்றார். அரசறிவியலாளர்கள் அரசின் தோற்றம், அபிவிருத்தி, இயல்பு, ஒழுங்கமைப்பு, நோக்கம், செயற்பாடுகள் என்பவற்றை விளங்கிக் கொள்வதற்கு அரசறிவியலாளர்களுக்கு யாப்புப் பற்றிய அறிவு தேவையாகும்.
1. கருத்து
யாப்பியல் வாதம் என்பது ஒரு நவீன எண்ணக்கருவாகும். அத்துடன் சட்டம், ஒழுங்கு என்பவற்றினால் மக்கள் ஆளப்படுவதற்கான அரசியல் ஆவணமாகும். தனிப்பட்டவர்களின் உயர்ந்த பண்பு என்பதனை விட சட்டத்தின் உயர் பண்பினை இது வெளிப்படுத்துகின்றது. அரசியல் யாப்பு தேசியவாதம், ஜனநாயகம் போன்ற எண்ணக்கருக்களை பிரதிபலித்துக் காட்டுகின்றது. பிரெற்றிச் என்பவர் 'யாப்பியல் வாதமானது அரசாங்க செயற்பாட்டிற்கென பகுக்கப்பட்டு வழங்கப்பட்ட அதிகாரத்தை வெளிப்படுத்துகின்ற ஒரு செய்முறையாகும்.' எனக் கூறுகின்றார்.
யாப்பு என்பதை அரசாங்கத்தின் அதிகாரங்கள் எத்தகையது, ஆளப்படுவதற்கான உரிமைகள் எத்தகையது, அதிகாரத்திற்கும், உரிமைக்கும் இடையிலான உறவு என்பது பற்றிய கூட்டுத் தத்துவம் எனக் கூறலாம். வியர் என்பவர் 'யாப்பு என்ற பதம் பொதுவாக இரண்டு பொருளிலில் பயன்படுத்தப்படுகின்றது எனக் கூறுகின்றார். ஒன்று அரசாங்கத்திற்குரிய முழுச் செயற்பாட்டினையும் விபரிக்கின்றது இரண்டாவது சட்டங்களின் தொகுப்பு உருவாக்கப்பட்டு அரசாங்கத்தினை ஆளுகின்றது எனக் கூறுகின்றார்.
2. யாப்பியல் வாதத்தின் அபிவிருத்தி
சட்ட ஆட்சியே யாப்பியல் வாதத்தின் அடிப்படையாகும்.சட்ட ஆட்சி நீண்ட வரலாற்றினைக் கொண்டதாகும்.ஏ.வி டைசி (A.V.Dicey) 1889ஆம் ஆண்டு யாப்பியல் வாதத்தினை சட்ட ஆட்சியின் அடிப்படையில் ஒழுங்குபடுத்தியுள்ளார். எனவே யாப்பியல்வாத எழுச்சியானது அரசின் வரலாற்றுத் தொடர்ச்சியினால் தீர்மானிக்கப்படுகின்ற ஒன்றாகும். மேலும் யாப்பியல் வாதத்தின் அபிவிருத்தி பற்றிய வரலாறானது அரசியல் நிறுவனங்களின் வரலாற்றுடன் தொடர்புடையதாகும்.
ஆகவே யாப்பியல் வாதத்தின் அபிவிருத்தியை வரலாற்றின் அடிப்படையிலேயே நோக்க வேண்டியுள்ளது. இவ்வகையில் அவற்றைப் பின்வருமாறு வகைப்படுத்தலாம்.
கிரேக்க யாப்பியல்வாதம்
யாப்பியல்வாதத்தின் முதனிலைப் பண்பினை கிரேக்க கால நகர அரசுகள் பெற்றுக் கொள்கின்றன. கிரேக்க கால நகர அரசுகளில் அரசியல் பிரிவினைவாதம் என்பது பிரதான வாழ்வியல் பண்பாகக் காணப்பட்டது. பிரஜைகளின் நலம், சுதந்திரம் என்பதே நகர அரசு முறைமையின் பண்பாக இருந்தது. அனேக நகர அரசுகள் நேரடி ஜனநாயக ஆட்சி முறைமையினைக் கொண்டிருந்தன. கிரேக்கத் தத்துவ ஞானிகளாகிய பிளேட்டோ, அரிஸ்ரோட்டில் போன்றவர்கள் ஒழுக்கவியல் அடிப்படையில் அரசியல் நிறுவனங்கள் பற்றிய ஆய்வினை மேற்கொண்டிருந்தார்கள்.
உரோம யாப்பியல்வாதம்
கிரேக்க நகர அரசுகள் உரோமர்களினால் கைப்பற்றப்பட்டு சாம்ராச்சியமாக மாற்றப்பட்டதனால் உரோமர் கால யாப்பியல்வாதமும் பெரும் மாற்றத்தினையடைந்தது. உரோம சாம்ராட்சிய ஆட்சியாளர்கள் தமது ஆட்சி முறைமைக்கான ஓர் கருவியாக அரசியல் திட்டத்தினை உருவாக்கிக் கொண்டார்கள். கி.மு 500 ஆம் ஆண்டில் மன்னராட்சி நீக்கப்பட்டு குடியரசு முறை அறிமுகப் படுத்தப்பட்டதுடன் உரோம யாப்பியல் வாதமும் மாற்றத்திற்குள்ளாகியது. உரோமர்கள் தமது சட்டத் தொகுப்பினை யாப்பியல்வாதத்தின் வளர்ச்சிக்குப் பயன்படுத்தியிருந்தார்கள். பிரதிநிதித்துவ அரசாங்க முறைமையானது யாப்பியல் வாதத்தின் பிரதான பண்பாக இருந்தது. ஆட்சியாளர்களின் சட்ட இறைமை, சட்டத்தின் பலம் என்பன முதன்மையடையலாயிற்று.
மத்திய கால யாப்பியல்வாதம்
மத்திய காலத்தில் யாப்பியல்வாதம் பெரும் மாற்றத்திற்குள்ளாகியது.மத்திய கால அரசுகள் நிலப்பிரபுக்களால் ஆளப்பட்டன.மக்களுடைய உரிமைகள்,கடமைகள் நிலத்துடன் தொடர்புபடுத்தப்பட்டன.சட்டம், நீதி,இராணுவம்,நிதி என்பவைகள் தனியார் சொத்துடைமையின் ஒரு பகுதியாக்கப்பட்டது.ஒவ்வொரு பிரபுவும் யுத்தம்,வர்த்தகம்,நிதி,நீதி போன்றவற்றைத் தீர்மானிப்பவராக இருந்தார்.இது சமூகத்தில் ஒருங்கினைப்பு இன்மையினைத் தோற்றிவித்தது.
நீண்டகாலத்தில் பிரபுத்துவ சமூக அமைப்பிலான யாப்பியல் வாதத்திலும் மாற்றம்ஏற்படலாயிற்று. உரோமானிய சட்டத்தின் ஆதிக்கமும் மாற்றத்திற்குள்ளாகியது. பதிலாக பைபிள் சட்டங்கள் முக்கியம் பெறலாயிற்று. தேவாலயமும், தேவாலயத்தின் கொள்கைகளும் முக்கிய இடம் பெறலாயிற்று. எவ்வாறாயினும் அரசியல் சிந்தனையாளர்களாகிய சென். அகஸ்ரின், சென்.தோமஸ் மாக்கியவல்லி போன்றவர்கள் தேவாலயத்தின் அதிகாரத்தினைக் குறைப்பதற்காக மதச் சார்பற்ற தன்மையினை உருவாக்க முயன்றனர். மன்னர்களின் எழுச்சிக்குப் பின்னர் போப்பாண்டவர் வெற்றி கொள்ளப்பட்டு ஐரோப்பாவில் மன்னராட்சி உருவாகியதுடன் புதிய யாப்பியல் வாதம் தோற்றுவிக்கப்பட்டது.
மறுமலர்ச்சிக்கால யாப்பியல்வாதம்
மத்தியகாலத்தின் முடிவில் மனிதத்துவம் விஞ்ஞான நோக்கு என்பன முதன்மைப்படுத்தப்பட்ட மறுமலர்ச்சி யுகம் ஒன்று ஐரோப்பாவில் தோற்றம் பெற்றது. மத்தியகால எண்ணக்கருவாகிய சர்வதேசியம் என்பது அழிக்கப்பட்டு, மதச்சார்பற்ற, இறைமையுடைய தேசிய அரசுக்கள் தோற்றம் பெற்றன. இதற்கு மாக்கியவல்லி எழுதிய இளவரசன்,போடின் எழுதிய குடியரசு போன்ற நூல்கள் பங்காற்றின. இதனால் ஐரோப்பாவில் இங்கிலாந்து,பிரான்ஸ்,இத்தாலி,ஸ்பெயின் போன்ற அரசுகள் தோற்றம் பெற்றன. இவ்வாறு தோற்றம் பெற்ற அரசுகள் பூரண மன்னராட்சிக்குட்பட்ட அரசுக்களாக இருந்தன. மன்னராட்சி அரசுகளில் ஜனநாயகப் பண்புகள் குறைந்து காணப்பட்டதுடன், உண்மையான அரசியல் யாப்பு பண்புகளும் குறைந்து காணப்பட்டன.
பிரித்தானிய யாப்பியல்வாதம்
பிரித்தானியா யாப்பியல்வாதம் ஐரோப்பாவில் முக்கிய இடத்தினைப் பெற்றுக் கொண்டது. எலிசபெத் மகாராணியின் பொற்கால சகாப்தத்துடன் சர்வதிகார ஆட்சி முறை பிரித்தானியாவில் முடிவுக்குக் கொண்டுவரப்பட்டது ஸ்டுவார்ட் மன்னர்களை மக்கள் எதிர்த்தார்கள். பிரித்தானியாவில் 1640-1648 ஆம் ஆண்டுக்கிடையில் நடைபெற்ற உள்நாட்டுப் போர் அரசா அல்லது சட்டமா உயர்ந்தது என்பதையும், அரசனுடைய தோல்வியும், மக்களுடைய வெற்றியும் மக்களே இறமையாளர்கள் என்பதையும் தீர்மானித்தது.
1688 ஆம் ஆண்டு நடைபெற்ற மகோன்னதப் புரட்சி பாராளுமன்ற இறைமைக்கு அடித்தளமிட்டது.ஐனநாயக முறைமைக்கான இயக்கம் தொடர்ந்து இயங்கியமையால் 1837,1867,1884 ஆகிய ஆண்டுகளில் நிறைவேற்றப்பட்ட சட்டங்களால் அதிகளவிலான அதிகாரங்கள் மக்களிடம் சென்றடைந்தன. 1911ஆம் ஆண்டு நிறைவேற்றப்பட்ட பாராளுமன்ற சட்டம் பிரபுக்கள் சபையின் அதிகாரத்தைக் குறைத்தது. 1949 ஆம் ஆண்டு இயற்றப்பட்ட சட்டம் பிரபுக்கள் சபைக்கிருந்த நிதி சாராத மசோதாக்களை நிறைவேற்றுகின்ற அதிகாரத்தை இல்லாமல் செய்தது. பாராளுமன்றத்திற்கு பொறுப்புக் கூறுகின்ற அமைச்சர்கள், மக்களுக்குப் பொறுப்புக் கூறுகின்ற பாராளுமன்றம்,சமத்துவம், சுதந்திரம், என்பன முதன்மைப்படுத்தப்பட்ட அரசியல் சமுதாயம் என்பன தோற்றம் பெற்றன.டைசி இதனை சட்ட ஆட்சி என அழைக்கின்றார்.
ஆங்கில யாப்பியல் வாதம் அனேக நூற்றாண்டுகளாக தாராண்மை நிறுவனங்களாகத் தொடர்ந்து இயங்கி வருகின்றன. பிரித்தானியாவின் அரசியல் நிறுவனங்கள் உலகின் எல்லாப் பகுதிகளிலும் காணப்படுவதுடன், தாயகத்தினால் அறிமுகப்படுத்தப்பட்ட யாப்பியல் பண்பாகவும் இது மதிக்கப்படுகின்றது. சுதந்திரத்தின் பின்னரும் அனேக காலனித்துவ நாடுகள் பிரித்தானிய யாப்பியல் பண்புகளைக் கொண்டிருப்பது இதனாலேயே ஆகும்.
பிரான்சிய யாப்பியல் வாதம்
ரூசோ சமூக ஒப்பந்தக் கோட்பாட்டில் 'மனிதன் பிறக்கும் போது சுதந்திரமாகப் பிறக்கின்றான்' அவன் எல்லா இடத்திலும் சங்கிலியால் பிணைக்கப்பட்டுள்ளான் எனக் கூறுகிறார். இதன் எதிரொலியாக 1789 ஆம் ஆண்டு தேசிய காங்கிரசில் 'மனிதனுடைய உரிமைகள்' என்ற பிரகடனமாக இவரின் இக்கூற்று ஏற்றுக் கொள்ளப்பட்டது. மனிதர்கள் சுதந்திரமாகவும் சமமான உரிமைகளுடனும் பிறக்கின்றார்கள். ஒவ்வொரு அரசியல் நிறுவனமும் மனிதனிடமிருந்து பறிக்க முடியாத உரிமைகளைப் பாதுகாக்க வேண்டும்.
1875 ஆம் ஆண்டு மூன்றாவது குடியரசு யாப்பு உருவாக்கப்படும் வரை பல தடவை பலமற்ற மன்னர்கள் எழுச்சியடைந்து தோல்வியடைந்தனர்.இரண்டாம் உலகப் போர் காலத்தில் பாராளுமன்ற அரசாங்க முறைமை, அரசியல் யாப்பு ரீதியான ஜனாதிபதி முறைமை நிலவியது. 1946 ஆம் ஆண்டு நான்காவது குடியரசு யாப்பு உருவாக்கப்பட்டாலும் இறுதியில் அதுவும் தோல்வியடைந்தது.
1958 இல் ஐந்தாவது அரசியல் யாப்பு நடைமுறைக்கு வந்திருந்தது. இது சார்ள்ஸ் டி. கோல் என்ற இராணுவத் தளபதியினால் உருவாக்கப்பட்டதாகும். இப்புதிய அரசியல் திட்டம் பலமான ஜனாதிபதி, பலவீனமான பிரதம மந்திரி, பலவீனமான பாராளுமன்றம் என்பவற்றைக் கொண்டிருந்தது. இங்கு ஜனாதிபதி மிகவும் பலமானதோர் நிலையில் வைத்து உருவாக்கப்பட்டிருந்தார். இதனால் இவ்வரசியல் திட்டம் ஒருவகையில் மன்னராட்சிக்கான அரசியல் திட்டமென்றும் அழைக்கப்பட்டது. பிரான்சிய அரசியல் திட்டம் சுதந்திரம், சமத்துவம், சகோதரத்துவம் என்பவைகளை முதன்மைப் படுத்திய ஒன்றாகக் காணப்படுகின்றது.
ஐக்கிய அமெரிக்க யாப்பியல் வாதம்
ஐக்கிய அமெரிக்காவின் 1776ஆம் ஆண்டு சுதந்திரப் பிரகடனத்தில் ரூசோவின் சமூக ஒப்பந்தக் கோட்பாடு எதிரொலித்துள்ளது. இப்பிரகடனம் 'எல்லா மனிதர்களும் சமத்துவமாக உருவாக்கப்பட்டார்கள்.இவர்கள் பறிக்க முடியாத சில உரிமைகளுடன் படைக்கப்பட்டுள்ளார்கள் என்ற தத்துவத்தினை ஏற்றுக் கொண்டுள்ளது. ஐக்கிய அமெரிக்க அரசியல் திட்டத்தினை உருவாக்கியவர்கள் சமஷ்டி அரசாங்க முறையினை ஏற்றுக் கொண்டிருந்தனர். மேலும் ஐக்கிய அமெரிக்க யாப்பில் பிரித்தானிய சிந்தனையாளர் மொண்டஸ்கியூவினால் உருவாக்கப்பட்ட வலுவேறாக்கத் தத்துவம் ஏற்றுக்கொள்ளப்பட்டிருந்தது. அதிகார வலுவேறாக்கத் தத்துவத்திற்கு உதவியாக சமநிலைத் தலையீடு என்ற தத்துவத்தினையும் இது ஏற்றுக்கொண்டுள்ளது. ஐக்கிய அமெரிக்காவின் மூன்று பிரதான துறைகளாகிய சட்டத்துறை காங்கிரசினாலும், நிர்வாகத்துறை ஜனாதிபதியினாலும், நீதித்துறை உயர் நீதிமன்றத்தினாலும் வழிநடத்த அதிகாரம் வழங்கப்பட்டுள்ளது. எனவே அரசாங்கத்தின் மூன்று பிரதான அரசாங்க மூலங்களும் அதிகார வலுக் கோட்பாட்டின் அடிப்படையில் செயற்படுகின்றது. அதேநேரத்தில் சமநிலைத் தலையீடும் பின்பற்றப்படுகின்றது.
முதலாம் உலகப் போருக்குப் பின்னரான யாப்பியல் வாதம்
முதலாம் உலகப் போரின் பின்னர் உலக யாப்பியல் வாதப் பண்பில் ஆச்சரியப்படத்தக்க பாரிய மாற்றங்கள் ஏற்பட்டுள்ளன. 'ஜனநாயகத்திற்கான பாதுகாப்பு என்ற சுலோகம் பொதுவானதொரு எண்ணக்கருவாக்கப்பட்டது. பிரதிநிதித்துவ அரசாங்கம், பொறுப்புள்ள அரசாங்கம் என்ற எண்ணக்கருவிற்கு எதிரான கருத்துக்கள் வளரத் தொடங்கின. ரஷ்யாவில் கம்யூனிசத்தின் எழுச்சியும், இத்தாலியில் பாசிசத்தின் எழுச்சியும், ஜேர்மனியில் நாசிசத்தின் எழுச்சியும் இதற்கு சாட்சியங்களாகின. இந்நாடுகளில் அறிமுகப்படுத்தப்பட்ட புதிய யாப்பியல் பண்பில் இரண்டு புதிய மூலக்கூறுகள் முதன்மைப்படுத்தப்பட்டன. முதலாவதாக தனிக்கட்சி ஆட்சிமுறையூடான அரசியல் சர்வதிகாரத்தினை ஏற்படுத்துதல், இரண்டாவதாக இச்சர்வதிகாரத்தின் மூலம் சமூக, பொருளாதார, அரசியல், ஆத்மீக விடையங்களை நேரடியாகக் கட்டுப்படுத்துதல் என்பனவாகும். ஆயினும் முதலாம் உலகப் போருக்குப் பின்னர் சர்வதேசச் சங்கம் உருவாக்கப்பட்டு இறைமையுடைய அரசுகளுக்கிடையிலான மோதல்களை சமாதானமாகத் தீர்ப்பதற்கு சர்வதேசச் சங்கப் பட்டயம் முயற்சித்தது. இது யாப்பியல் வாத அபிவிருத்தியின் புதிய பரிமாணமாகும்.
இரண்டாம் உலகப் போருக்குப் பின்னரான யாப்பியல் வாதம்
இரண்டாம் உலகப் போரின் போது இத்தாலி, ஜேர்மனி, யப்பான் ஆகிய நாடுகளில் தோன்றிய சர்வதிகார ஆட்சி முறைமை அழித்தொழிக்கப்பட்டது. ஆனால் சோவியத் ரஸ்சியாவில் தோன்றிய பாட்டாளி வர்க்க சர்வதிகார ஆட்சி அழிக்கப்படாமல் தொடர்ந்து பாதுகாக்கப்பட்டது. இதன் விளைவாக இரண்டாம் உலகப் போரின் பின்னர் உலகத்தில் பல கம்யூனிஸ நாடுகள் தோற்றம் பெற்றதுடன், சோவியத் ரஸ்சியா மாதிரியிலான யாப்பியல்வாதத்தினை நடைமுறைக்கும் கொண்டு வந்தன. இரண்டாம் உலக மகா யுத்தம் அனேக காலனித்துவ நாடுகள் விடுதலை பெறுவதற்கும் அடிப்படையாக இருந்தன. இந்நாடுகள் பிரித்தானியா அல்லது ஐக்கிய அமெரிக்கா அல்லது இரண்டையும் கலந்து உருவாக்கப்பட்ட யாப்பியல் பண்புகளைப் பின்பற்றியிருந்தன.
மேலும் இரண்டாம் உலகப் போரின் பின்னர் ஐக்கிய நாடுகள் சபை உருவாக்கப்பட்டது. ஐக்கிய நாடுகள் சபை ஜனநாயகம் ,தேசியவாதம் என்பவற்றினை ஆதரித்ததுடன் சர்வதேசியத்தினையும் ஆதரித்தது.சர்வதேசச் சட்டம்,மனிதவுரிமைகள் சட்டம்,மனிதாபிமானச் சட்டம் என்பன முதன்மைப்படுத்தப்பட்டன.இதன் மூலம் சமாதான சர்வதேச ஒழுங்கினை உருவாக்க முயற்சிக்கப்பட்டது.