Education is the Most Powerful Weapon Which You Can Use to Change the World. – Nelson Mandela-

ஜனாதிபதி அரசாங்க முறை - 3.3 out of 5 based on 9 votes
1 1 1 1 1 1 1 1 1 1 Rating 3.33 (9 Votes)

1776 ஆம் ஆண்டு ஆடி மாதம் 4ஆம் திகதி சுதந்திரப் பிரகடனத்தை ஜக்கிய அமெரிக்கா வெளியி;டப்பட்ட போது ஜக்கிய அமெரிக்கா குடியரசில் 13 குடியேற்ற நாடுகள் இணைந்து கொண்டன. 1787 ஆம் ஆண்டு பிலடெல்பியாவில் கூட்டப்பட்ட மகா நாட்டின் போது இக் குடியேற்ற நாடுகள் ஒன்றிணைந்து தமக்கான அரசியல் யாப்பினை வரைந்து கொண்டன. இவ் அரசியல் முறையில் பிரதான நிர்வாகியாக ஜனாதிபதி விளங்குகின்றார். ஜக்கிய அமெரிக்காவின் அரசியல் திட்டத்தை வரைந்தவர்கள் ஜனாதிபதியை அரசியல் திட்ட ஆட்சியாளராக உருவாக்கவே விரும்பியிருந்தார்கள். ஆனால் இதற்குப் புறம்பாக ஜனாதிபதியானவர் ஜக்கிய அமெரிக்க அரசாங்கத்தினுடைய தத்துரூபமான நிர்வாகியாகிவிட்டார்.

1. ஜனாதிபதி நியமனம்

ஐக்கிய அமெரிக்க ஜனாதிபதியாக, ஒருவர் தெரிவு செய்யப்படுவதற்கு அரசியலமைப்பு மூன்று தகைமைகளை எதிர்பார்க்கின்றது.

  • ஜக்கிய அமெரிக்காவில் பிறந்தவராக இருக்க வேண்டும்.
  • ஜக்கிய அமெரிக்க குடியுரிமை உடையவராகவும், 35 வயதை அடைந்தவராகவும் இருக்க வேண்டும்.
  • 14 வருடங்கள் தொடர்ந்தேர்ச்சியாக ஜக்கிய அமெரிக்காவில் வாழ்ந்து வருபவராகவும் இருக்க வேண்டும்.

ஐக்கிய அமெரிக்க ஜனாதிபதியின் தகைமைகள் அரசியற்திட்ட ரீதியாக வரையறுக்கப்பட்டாலும், இதற்கு அப்பால் எழுதப்படாத சட்டங்கள் அல்லது சமூக சம்பிரதாயங்கள் வேறு சில தகைமைகளை எதிர்பார்க்கின்றது. அவைகளாவன

  • ஒரு வெள்ளையராக இருக்க வேண்டும்.
  • ஆணாக இருக்க வேண்டும்.
  • மதத்தால் கிறிஸ்தவராக இருத்தல் வேண்டும்.
  • ஜக்கிய அமெரிக்காவின்; வடக்கு அல்லது மேற்கு மானிலங்களைச் சேர்ந்தவராக இருக்க வேண்டும்.
  • 65 வயதிற்குக் குறைந்தவராக இருக்க வேண்டும்.
  • உடல், உள ஆரோக்கியமானவராக இருத்தல் வேண்டும்.
  • வட ஜரோப்பிய இன உறவினைக் கொண்டவராக இருக்க வேண்டும் - இது பெருமளவிற்கு ஜக்கிய இராச்சியத்தின் உறவினையே குறிக்கின்றது.

இவற்றினை விட பல்கலைக்கழக பட்டதாரியாக, மாநில ஆளுநராக, காங்கிரஸ் உறுப்பினராக, கபினட் அங்கத்தவராக இருக்க வேண்டும் என எதிர்பார்க்கப்படுகின்றது. மேலும் திருமணமாகாதவராக அல்லது விவாகரத்துச் செய்தவராக இருக்கக் கூடாது. கிறிஸ்தவராக இருக்க வேண்டும் என எதிர்பார்க்கப்பட்டாலும் அவர் கத்தோலிக்கராக இருக்கக் கூடாது. பதிலாக புரட்டஸ்தாந்து சமய பிரிவினராக இருக்க வேண்டும். இராணுவத்தினைச் சேர்ந்தவராகவோ இதற்கு முதல் இரண்டு தடவை போட்டியிட்டு தோல்வியடைந்தவராகவோ இருக்கக் கூடாது. மேலும் தென்பகுதி மானிலங்களைச் சேர்ந்தவராகவோ, யூதராகவோ, நாஸ்திகராகவோ கீழைத்தேய நாடுகளில் இன உறவுகளைக் கொண்டவராகவோ இருக்கக் கூடாது என்பதும் எதிர்பார்க்கப்படுகின்றது. இவ்வாறு எழுதப்படாத மரபுகள் ஜக்கிய அமெரிக்க ஜனாதிபதியைத் தீர்மானிப்பதில் பங்கு வகித்தாலும் ரொசிஸ்ரர் என்ற அரசறிவியலாளர் ஜனாதிபதியின் ஆளுமை தொடர்பான சில அவதானங்களை முன்வைக்கின்றார்.

  • நல் நடத்தை காரணமாக சமூக மதிப்பை பெற்றவராகவும்,
  • மன உறுதி மிக்கவராகவும், உறுதியான தீர்மானங்களை விரைவில் மேற்கொள்ளக் கூடியவராகவும்
  • பேச்சுத்திறன் கொண்டவராகவும், புத்திக் கூர்மை கொண்டவராகவும்
  • பார்வையிலும், விருப்பங்களிலும் நடுத்தரமானவராகவும், உண்மையாக உழைக்கக் கூடியவராகவும் இருப்பவர்கள் ஐக்கிய அமெரிக்க ஜனாதிபதியாக தெரிவு செய்யப்பட்டுள்ளார்கள் எனக் கூறுகின்றார்.

2. தேர்தல் கல்லூரி

ஐக்கிய அமெரிக்க ஜனாதிபதி தேர்தல் கல்லூரி ஒன்றின் மூலம் தெரிவு செய்யப்படுகின்றார். தேர்தல் கல்லூரியானது காங்கிரசின் இரு சபைகளின் அங்கத்தவர்களுக்கு சமமான உறுப்பினர்களைக் கொண்டிருக்கும். தற்போது இதன் எண்ணிக்கை 538 ஆகும். தேர்தல் கல்லூரிக்கான உறுப்பினர்களில் 100 அங்கத்தவர்கள் செனட் சபையிலிருந்தும், 435 உறுப்பினர்கள் பிரதிநிதிகள் சபையிலிருந்தும், 03 அங்கத்தவர்கள் வாசிங்டன் மானிலத்திலிருந்தும் தெரிவு செய்யப்படுகின்றார்கள்.

435 தேர்தல் கல்லூரி உறுப்பினர்களில் சாதாரண பெரும்பான்மையாகிய 270 தேர்தல் கல்லூரி உறுப்பினர்களின் ஆதரவை ஒருவர் பெற்றால் அவர் ஜனாதிபதியாக தெரிவு செய்யப்படுவார். தேர்வாளர்களின் தேர்தல் நவம்பர் மாதத்தின் முதலாவது திங்களை அடுத்து வரும் செவ்வாய்க்கிழமை நடைபெறும். தனிப்பட்ட வாக்காளர்களின் வாக்குகள் மாநில ரீதியாக எண்ணப்பட்டு ஒவ்வொரு மாநி லத்திலும் ஜனாதிபதி தேர்வாளர்கள் பெற்ற பெரும்பான்மை வாக்குகள் அறிவிக்கப்படும்.

இதன் பின்னர் ஜனாதிபதி தேர்வாளர்கள் தமது மாநிலத் தலைநகரங்களில் டிசம்பர் மாதத்தின் இரண்டாவது புதன் கிழமை ஒன்றாகக்கூடி தமது வாக்குகளை தமது ஜனாதிபதி வேட்பாளருக்கு அளிக்கின்றனர். இவர்களுக்கு இரண்டு வாக்குகள் வழங்கப்படும். இதில் ஒன்றை ஜனாதிபதிக்கும் மற்றையதை உப ஜனாதிபதிக்கும் வழங்கலாம். பின்னர் வாக்குப் பெட்டிகள் மூடப்பட்டு செனட் தலைவருக்கு அனுப்பி வைக்கப்படும். வாக்குகள் எண்ணும் பணி ஜனவரி 6ஆம் திகதி நடைபெற்று தெரிவு செய்யப்பட்ட ஜனாதிபதி 20ஆம் திகதி உயர் நீதிமன்ற, தலைமை நீதிமன்ற நீதிபதி முன்பாக சத்தியப் பிரமாணம் செய்து கொள்வார்.

3. ஜனாதிபதியின் அதிகாரங்கள்

ஜக்கிய அமெரிக்க ஜனாதிபதியின் அதிகாரங்களை இரண்டாகப் பிரித்துக் கூறலாம்.

  1. அரசியல் திட்ட அதிகாரங்கள்
  2. தொழில்நுட்ப வளாச்சியின் மூலமான அதிகாரங்கள்

அரசியல் திட்ட அதிகாரங்கள்

ஐக்கிய அமெரிக்க அரசியல் யாப்பின் 1ஆம் விதியின் 2ஆம், 3ஆம், பிரிவுகள் ஜனாதிபதியின் அதிகாரங்கள், கடமைகள் தொடர்பாகக் கூறுகின்றன. இவ்வகையில் ஜனாதிபதி ஒருவர் அரசியல் திட்ட ரீதியாக நிர்வாகத்துறை, சட்டத்துறை, நீதித்துறை, நிதித்துறை சார்ந்த அதிகாரங்களையும், அவசரகாலங்களில் சில விசேட அதிகாரங்களையும் கொண்டு காணப்படுகின்றார்.

நிர்வாகத்துறை அதிகாரங்கள்

ஜனாதிபதி நாட்டிற்கும், நாட்டின் நிர்வாகத்திற்கும் தலைவராவார். காங்கிரஸ் இயற்றும் சட்டங்களையும், நீதிமன்றத் தீர்ப்புக்களையும் நடைமுறைப்படுத்துகின்றார். நாட்டின் நிர்வாகத்திற்குத் தேவையான உயர் அதிகாரிகளை நியமிப்பது, அவர்களை இடமாற்றம் செய்வது, வெளிநாடுகளுடன் இராஜ தந்திர உறவுகளை மேற்கொள்வது, வெளிநாடுகளுக்கான ஜக்கிய அமெரிக்கத் தூதுவர்களை நியமிப்பது போன்ற அதிகாரங்கள்; ஜனாதிபதிக்கு வழங்கப்பட்டுள்ளது. இவ் அதிகாரங்களை ஜனாதிபதி செயற்படுத்தும் போது ஓரளவிற்கு செனட் சபையின் அனுமதியில் தங்கியிருக்க வேண்டிய தேவை ஏற்படலாம். ஆயினும் செனட் சபையினை 'அன்புரிமைக் கோட்பாட்டின்' மூலம் ஜனாதிபதி கட்டுப்படுத்துவதால் ஜனாதிபதிக்கு செனட் சபையின் அனுமதியை பெறுவதில் அதிக சிரமம் இருப்பதில்லை.

சட்டத்துறை அதிகாரங்கள் .

ஐக்கிய அமெரிக்க சட்டத் துறையானது, காங்கிரஸ் என அழைக்கப்படுகின்றது. காங்கிரஸிற்கு செய்திகளை அனுப்பி வைப்பதற்கும், பிரத்தியேகக் கூட்டங்களைக் கூட்டுதல், அதன் இணைப்புக் கூட்டத்தை நடாத்தவும் இவருக்கு அதிகாரம் உள்ளது. தான் விரும்பும் சட்டங்களை இயற்ற தனது பரிந்துரைகளை அனுப்பலாம். காங்கிரஸ் இயற்றும் சட்டங்கள் தொடர்பாக மறுப்பாணைகளை பயன்படுத்தவும் அதிகாரம் உள்ளது.

நீதித்துறை அதிகாரங்கள்

குற்றவாளிகளை மன்னித்தல், குற்றங்களை ஒத்திப் போடுதல், தள்ளிப் போடுதல், தலைமை நீதிமன்றத்தின் நீதிபதிகளை நியமனம் செய்தல் போன்ற அதிகாரங்களை இவர் கொண்டுள்ளார்.

நிதித்துறை

ஜக்கிய அமெரிக்காவின் வருடாந்த வரவு செலவுத்திட்டத்தினை தயார் செய்வதில் அதிக அதிகாரம் உடையவராக ஜனாதிபதி காணப்படுகின்றார்.

அவசர காலம்

அவசரகாலங்களில் வெளிநாடுகளுக்கு எதிராகப் போர்ப் பிரகடனம் செய்யவும், நாட்டில் அவசர கால நிலைமையினை பிரகடனப்படுத்தவும் அதிகாரம் உடையவர்.

தொழில்நுட்ப வளாச்சியின் மூலமான அதிகாரங்கள்

ஐக்கிய அமெரிக்க ஜனாதிபதியின் அதிகாரங்களை தொழிநுட்பங்களும் தீர்மானிக்கின்றன. அணுவாயுதங்கள், செய்மதி, இணையம் , தன்னியக்க வாகனங்கள், தொலைக்காட்சி முதலானவை தேசிய வாழ்வில் ஒன்றாக கலந்து விட்டன. இதனால் ஐக்கிய அமெரிக்க ஜனாதிபதியின் அதிகாரங்களை இவைகளும் தீர்மானிக்கின்றன.

4. அரசியலில் ஜனாதிபதியின் வகிபாகம்

அரசியல் யாப்பில் இரண்டாம் அத்தியாயம் நிர்வாகத் துறை அதிகாரங்கள் ஜனாதிபதியிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளதாகக் கூறினாலும்; இதற்குப் புறம்பாக அமெரிக்க அரசியலில் ஜனாதிபதியின் வகிபாகம் பின்வரும் வழிகளில் காணப்படுவதாகக் கூறப்படுகின்றது.

அரசின் தலைவரும் , அரசாங்கத்தின் தலைவரும்

ஐக்கிய அமெரிக்க ஜனாதிபதி அரசின் தலைவராகவும், அரசாங்கத்தின் தலைவராகவும் காணப்படுகின்றார். உதாரணமாக வெளிநாட்டுத் தூதுவர்களை வரவேற்பது, வெள்ளை மாளிகையில் நத்தார் மரத்தில் விளக்கேற்றுவது, வெளிநாட்டு உறவினைப் பேணுவது போன்ற கடமைகளை மேற்கொள்கிறார்.

பிரதம தளபதி

ஐக்கிய அமெரிக்கா அரசியல் யாப்பு ஜனாதிபதியை ஆயுதப்படைகளின் பிரதம தளபதியாகப் பிரகடனப்படுத்துகின்றது. ஆரம்ப காலங்களில் சில ஜனாதிபதிகள் யுத்தங்களுக்கு நேரடியாகவே தலைமை தாங்கினார்கள். இதற்கு உதாரணங்களாக 1794 ஆம் ஆண்டு விஸ்கி யுத்தத்தின் போது ஜனாதிபதி வாசிங்டனும், இரண்டாம் உலக யுத்தத்தின் போது யப்பானுக்கு எதிரான செயற்பாட்டில் ஹரி ரியூமனும், வட வியட்நாமில் குண்டு வீச்சு நடவடிக்கைகளுக்கு லிங்டன் ஜோன்சனும், 1970ஆம் ஆண்டு கம்போடியா மீதான தலையீட்டின் போது ரிச்சார்ட் நிக்சனும் ரேரடியாக தலைமை தாங்கியதைக் குறிப்பிடலாம். மேலும், யுத்த காலத்தில் மட்டுமன்றி சமாதான காலத்திலும் ஜனாதிபதி ஆயுதப் படைகளின் தளபதியாகக் காணப்படுகின்றார்.

வெளியுறவுக் கொள்கை வகுப்பாளர்

அரசியல் திட்ட ரீதியாக ஐக்கிய அமெரிக்காவின் வெளியுறவுக் கொள்கைகளை உருவாக்குவதில் ஜனாதிபதி முதன்மை பெறுகின்றார். இதன் மூலம் இவர் இராஜ தந்திர ரீதியாக வெளிநாட்டு அரசாங்கங்களின் அங்கீகாரத்தினை பெற்று விடுகின்றார். அரசியல் திட்டம் இவற்றிற்கு செனட்சபையின் 2ஃ3 பங்கு ஆதரவு தேவை எனக் குறிப்பிடுகின்றது. ஆயினும் ஜனாதிபதி வெளிநாடுகளுடன் உடன்படிக்கைகளில் கைச்சாத்திட்டுக் கொள்வதில் முதன்மை அதிகாரத்தினைக் கொண்டவராகக் காணப்படுகின்றார்.

பிரதம நிர்வாகி

சட்டங்கள் சரியாக அமுல் நடத்தப்படுகின்றனவா என்பதை அவதானிப்பதில் ஜனாதிபதி கவனமாக இருக்கின்றார். இதனால் அரசியல் திட்டத்தின் பிரதம நிர்வாகி என்ற நிலையினை ஆரம்பகாலத்திலிருந்தே பெற்று வருகின்றார். ஜனாதிபதிக்கு இக்கடமையினை சிறப்பாகச் செய்வதற்கு மூன்று மில்லியன் ஊழியர்களைக் கொண்ட பணிக்குழு உதவி செய்கின்றது.

சட்டவாக்க அதிகாரி

ஜக்கிய அமெரிக்க அரசியல் திட்டத்தின் சரத்து 02 ஜனாதிபதி காங்கிரஸின் நிகழ்ச்சி நிரலினை தயார் செய்வதில் பிரதான பங்கு வகிக்கின்றார் எனக் கூறுகின்றது. ஒரு மசோதா கையொப்பத்திற்காக ஜனாதிபதிக்கு அனுப்பப்படுகின்ற போது அதில் கையெழுத்திட்டு அதனைச் சட்டமாக்காலம் அல்லது நியாயமான காரணங்களுடன் அதனை நிராகரித்து காங்கிரசிற்கு திருப்பி அனுப்பலாம் அல்லது 10 நாட்களுக்கு தாமதப்படுத்தலாம். ஆயினும் காங்கிரஸ் ஜனாதிபதியினால் வீட்டோ செய்யப்பட்ட மசோதாவை 2/3 பங்கு உறுப்பினர்களின் விருப்பத்துடன் மீண்டும் ஜனாதிபதிக்கு திருப்பியனுப்பலாம். அப்போதும் ஜனாதிபதி இவ் மசோதாவினை நிராகரிப்பதற்கு பொக்கெட் வீட்டோ என அழைக்கப்படும் மறுப்பானையினை பயன்படுத்தலாம்.

பொருளாதாரத்தின் தலைவர்

ஜக்கிய அமெரிக்காவின் தேசிய பொருளாதாரத்தின் பிரதான தலைவராக ஜனாதிபதி விளங்குகின்றார். மக்கள் தமது பொருளாதாரத்தை தாமே நிர்ணயிப்பதற்கு பல வழிகளையும் ஜனாதிபதி ஏற்படுத்திக் கொடுத்துள்ளார். இவற்றில் ஒன்றே வருடாந்த வரவு செலவுத்திட்டமாகும். மேலும் பொருளாதாரத்தின் தலைவராக அவர் விளங்குவதற்கு 'பொருளியல் ஆலோசனை சபை' அவருக்கு உதவி வருகின்றது.

பிரச்சனைகளைத் தீர்த்து வைப்பவர்

சர்வதேச பிரச்சினைகள் பலவற்றையும் தீர்த்து வைப்பவராக ஜனாதிபதி காணப்படுகின்றார். இவ்விதமான செயற்பாட்டின் போது அவர் கூட்டாகவே இயங்குகின்றார். உதாரணமாக ஜோன் எப். கென்னடி 1962ஆம் ஆண்டு கியூபா ஏவுகணைப் பிரச்சினையின் போது அதனைத் தீர்ப்பதற்கு தேசிய பாதுகாப்பு சபையினைக் கூட்டியிருந்தார். இதே போல் ஜனாதிபதி நிக்ஷன், போட் ஆகியோருக்கு தேசிய பாதுகாப்பு ஆலோசகர் ஹென்றி கிசிங்கர் பல சர்வதேசப் பிரச்சினைகளையும் தீர்ப்பதற்கு உதவி செய்துள்ளார்.

எனவே ஜக்கிய அமெரிக்க அரசியல் திட்டம் ஜனாதிபதிக்கு வழங்கியுள்ள அதிகாரங்களை அவதானிக்கும் போது, ஜனாதிபதிக்கு இரண்டு வகையான பதவி நிலைகளை வழங்கியுள்ளதாகக் கூறப்படுகின்றது.அவைகளாவன உள்நாட்டு ஜனாதிபதி மற்றும் வெளிநாட்டு ஜனாதிபதி என்பவைகளாகும். இவற்றில் வெளிநாட்டு ஜனாதிபதி, உள்நாட்டு ஜனாதிபதியை விட காத்திரமானவராவார். இதனை அரோன் வின்ட சேய் என்பவர் பின்வருமாறு விபரிக்கின்றார். 'அமெரிக்காவில் ஒரு ஜனாதிபதி இருந்தாலும் இரண்டு ஜனாதிபதி அலுவலகங்கள் காணப்படுகின்றன. முதலாவது அலுவலகம் உள்நாட்டு அலுவல்களையும், இரண்டாவது அலுவலகம் பாதுகாப்பு மற்றும் வெளிவிவகாரங்களையும் நிர்ணயிக்கின்றது' என்கிறார். ஜக்கிய அமெரிக்க அரசியலில் அதிக முக்கியத்துவம் வாய்ந்தவராக கருதப்படும் ஜனாதிபதியின் அதிகாரங்கள் நிர்வாகத்துறை அதிகாரி என்ற நிலைக்கப்பால் தனிமனிதனுடைய திறமையில் தங்கியிருப்பதாகவும் உள்ளது. ஆயினும் காங்கிரசினதும் பணிக்குழுவினதும் இணக்கத்திலேயே இவர் பெருமளவு தங்கியுள்ளார் என்பதையும் கவனத்தில் கொள்ள வேண்டும்

Share

Who's Online

We have 24 guests and no members online

+1 Me

Subscribe

Enter your email address:

Delivered by FeedBurner

 About Prof. Thanabalasingam Krishnamohan

Prof. Thanabalsingam Krishnamohan is a Professor in Political Science in Eastern University of Sri Lanka .