அரசியல் விஞ்ஞானத்திலும்,அரசு என்ற நிறுவனத்திலும் மிகவும் அடிப்படையான ஒரு எண்ணக்கருவாக இறைமை கருதப்படுகின்றது. ஆயினும் இதன் பண்புகளைத் தெளிவாக்குவதிலும் வரையறை செய்வதிலும் சிக்கல்களும் கருத்து முரண்பாடுகளும் காணப்படுகின்றன. இறைமை என்ற பதம் பிரான்சிய சொல்லாகிய சவறினேற் (Soverainete ) என்பதிலிருந்தும், இலத்தீன் சொல்லாகிய சுப்ரிமிஸ்ரஸ் (Supremitas )என்பதிலிருந்தும் தோற்றம் பெற்றதாகும்.
இறைமை என்பது அரசொன்றின் மிகவும் அடிப்படையான மூலக்கூறாகும். அத்துடன் அரசு கொண்டிருக்க வேண்டிய அதிகாரங்களை வெளிப்படுத்தும் பதமுமாகும் மிகவும் நேரடியான கருத்தில் ஒரு அரசு கொண்டிருக்க வேண்டிய மிக உயர்ந்த அதிகாரம் ( Supreme Power )அல்லது மேலான அதிகாரம் என இறைமைக்கு விளக்கம் கூறலாம். இங்கு இறைமை என்பது அரசினுடைய மேலான அதிகாரம் என்பதும், அரசின் அடிப்படையான மூலக்கூறு என்பதும் ஏற்றுக் கொள்ளப்படுகின்றது.
வரைவிலக்கணங்கள்
வில்லோபி ( Willoughby ) என்பவர் “ஓர் அரசினுடைய உயர்ந்த விருப்பமே இறைமை” என வரையறை செய்கின்றார். வூட்றோ வில்சன் ( Woodrow Wilson)என்பவர் “ஓர் அரசு சட்டங்களை உருவாக்கவும் அதனை நடைமுறைப்படுத்தவும் கொண்டிருக்கும் அதிகாரமே இறைமை” என வரையறை செய்கின்றார். பேகஸ் (Burgess) என்பவர் “ஓர் அரசு தனது மக்களின் மீதும் அம்மக்களின் நிறுவனங்களின் மீதும் செலுத்துகின்ற சுயமானதும் நிறைவானதும் எல்லையற்றதுமான அதிகாரமே இறைமை” என வரையறை செய்கின்றார்.
இவ்வரைவிலக்கணங்கள் யாவும் இறைமை என்ற பதம் ஒரு அரசு கொண்டிருக்கும் சட்டவாக்கம், அமுலாக்கம், நீதிபரிபாலனம் ஆகிய அதிகாரங்கள் அவற்றின் மேலாண்மை போன்றவற்றையே கருத்தில் கொள்கின்றன.
இறைமையின் வேறுபட்ட தன்மைகள்
இறைமை என்ற பதம் அரசியல் விஞ்ஞானத்தில் பல்வேறு வகையில் பயன்படுத்தப்படுகின்றது. இவ்வகையில் உள் இறைமை (Internal Sovereignty) இவெளி இறைமை (External Sovereignty), பெயரளவு இறைமை (Titular Sovereignty ) சட்ட இறைமை (Legal Sovereignty ) அரசியல் இறைமை (Political Sovereignty ) மக்கள் இறைமை (Popular Sovereignty ) பன்மை இறைமை (Pluralistic Sovereignty)என்பன முதன்மையானவைகளாகும்.
உள் இறைமை
உள் இறைமை என்பது ஒரு அரசு தனது மக்கள் மீதும், பிரதேசத்தின் மீதும் செலுத்தும் அதிஉயர் அதிகாரமாகும். அரசு ஒன்றின் எல்லைக்குள் உள்ள தனிப்பட்டவர்கள் அல்லது தனிப்பட்டவர்கள் அங்கத்துவம் வகிக்கும் நிறுவனங்கள் மீது அரசு முழு நிறைவான ( Absolute )அதிகாரத்தினைச் செலுத்துவதை குறித்து நிற்கின்றது. அரசு முழுநிறைவானதாக இருப்பதுடன் அதன் எல்லைக்குள் சட்ட ரீதியான கட்டுப்பாடுகள் கட்டளைகளை பெற்றுக் கொள்ளாததுமாக இருக்க வேண்டும். அரசை எதிர்க்கக் கூடிய மனிதர்கள் அல்லது நிறுவனங்கள் அரசின் எல்லைக்குள் தோன்றாததுடன் அவ்வாறு தோன்றின் அவற்றை அழிப்பதற்கான உயர் அதிகாரம் அரசிடம் இருப்பதை உள்இறைமை குறித்து நிற்கின்றது.
வெளி இறைமை
வெளி இறைமை என்பது ஒரு அரசு உலகத்திலுள்ள வேறு எந்த ஒரு அரசின் தலையீடோ அல்லது கட்டாயப்படுத்தலோ இன்றி சுதந்திரமாகச் செயற்படுதலைக் குறித்து நிற்கின்றது. ஒரு அரசு தனது அதிகாரத்தினைப் பயன்படுத்தி சர்வதேச ஒப்பந்தங்கள் கூட்டுக்கள் அல்லது சர்வதேச சட்டங்களுக்கு உட்படுகின்ற போது அதன் இறைமை பறிக்கப்படக் கூடாது. இவைகள் அரசு ஒன்றிற்குரிய சுய வரையறைகள் என விபரிக்கப்படுகின்றன. மக்களைக் கட்டாயப்படுத்துகின்ற அதிகாரம் அரசிற்கு வெளியே யாரிடமும் இருக்கக் கூடாது. மக்கள் தமது மகிழ்ச்சிக்காக தாம் வாழும் அரசிற்கு மட்டுமே கீழ்ப்படிவார்கள்.
அரசு தனது சொந்த விருப்பத்திற்கு இணங்க செயற்படும். ஏனைய வெளி அதிகாரத்தின் விருப்பத்திற்கு ஏற்ப செயற்பட வேண்டியதில்லை. ஒரு அரசின் இறைமையினை பிற அதிகார சக்திகள் கட்டுப்படுத்த முடியாது என்பதுடன், பிரிக்கவும் முடியாது. இறைமையை பிரிக்கவோ கட்டுப்படுத்தவோ முயற்சித்தால் இறைமையானது அழிக்கப்பட்டுவிடும். இறைமை அரசின் ஒரு பகுதி என்பதுடன் ஒவ்வொரு அரசும் இறைமையினை இழந்து விடாமல் இருக்க வேண்டும். கெட்டல் (Gettell )என்பவர் இது தொடர்பாகக் கூறும் போது “இறைமை முழு மையானதாக இல்லாவிட்டால் அரசு நீடித்து வாழ முடியாது. இறைமை பிரிக்கப்பட்டால் ஒன்றிற்கு மேற்பட்ட அரசுகள் தோற்றம்பெறும். அரசிற்கு சட்ட ரீதியான அதிகாரம் இங்கு இல்லாமல் போய்விடும்.இதனால் அரசின் இறைமை பின்னடைவினை சந்திக்கும். இறைமையின் வியாபகத்திற்கு சட்ட ரீதியான தடை எதுவும் இருக்கக் கூடாது” என்கின்றார்.
பெயரளவு இறைமை
பெயரளவு ( Titular )இறைமை என்பது இறைமையானது உண்மையில் நடைமுறையில் இருக்காத நிலையினைக் குறித்து நிற்கின்றது. இங்கு இறைமை என்ற பதம் அரசன் அல்லது மன்னன் அரசின் மிக உயர்ந்த அதிகாரம் உடையவனாகக் கருதப்படுவான். ஆனால் இது உண்மையானதல்ல. அரசனுடைய முழு நிறை அதிகாரம் என்பது இன்று முடிவடைந்து விட்டது. இன்று ஜனநாயகம் எல்லா நாடுகளிலும் நிலை பெற்றுள்ளது. இதனால் அரசன் இன்று அரசாங்கத்தின் ஒரு பகுதியாக கருதப்படுவதுடன் அரசனிடம் இறைமை என்பதும் இருப்பதில்லை. அரசன் அரசாங்க இயந்திரத்தின் ஒரு பகுதியாகும் பொழுது அவர் இறைமையினன் பெற்று விடுவதில்லை. பதிலாக அரசாங்கத்தின் உதவியாளராகவும் சேவகராகவும் செயற்படுகின்றார். மக்கள் அல்லது அவர்களுடைய பிரதிநிதிகள் பாராளுமன்றத்தினை உருவாக்கி அவர்களே உண்மையான இறைமையாளர்களாகின்றனர். அரசன் பெயரளவில் மட்டுமே இயங்குகின்றார். உதாரணமாக பிரித்தானிய இராணியினையும் பாராளுமன்றத்தினையும் குறிப்பிடலாம்.
மக்கள் இறைமை
மக்கள் இறைமை என்பது மக்களுக்குரிய அடிப்படையானதும் பிரிக்க முடியாததுமான இறைமையாகும். மக்கள் இறைமையானது 16ஆம், 17ஆம் நூற்றாண்டுகளில் அரசனின் கொடுங்கோண்மை அதிகாரத்திற்கு எதிராக மக்கள் தமது உணர்வுகளை வெளிப்படுத்திய பொழுது எழுச்சியடைந்ததாகும். ரூசோ ( Rousseau ) மக்கள் இறைமையின் பரப்புரையாளராக கருதப்படுபவராகும். இவருடைய கோசம் பிரான்சியப் புரட்சிக்கு காரணமாகியிருந்ததுடன் அமெரிக்கப் புரட்சிக்கும் பயன்படுத்தப்பட்டது. பிறைஸ் ( Bryce )என்பவர் இது தொடர்பாக கூறும் போது மக்கள் இறைமை ஜனநாயகத்தின் காவல் மதமும் அடிப்படை மதமுமாகும் என்கின்றார்.
மக்கள் இறைமையானது தேர்தல் தொகுதி அல்லது வாக்காளர் இறைமையாகவே கருதப்படுகிறது. ஆனால் தேர்தல் தொகுதி இறைமையானது அரசியலமைப்பு ஊடாக வெளிப்படுத்தப்படாதவரை இது சட்ட ரீதியானதாக ஏற்றுக் கொள்ளப்படுவதில்லை. வாக்காளர்கள் இறைமை அதிகாரத்தை தாங்களாக அனுபவிப்பதில்லை. பதிலாக அவர்கள் தமது பிரதிநிதிகளைத் தெரிவு செய்கின்றார்கள். பிரதிநிதிகளைப் பெரும்பான்மையாகக் கொண்டுள்ள கட்சி சட்டசபை பொறுப்பினை ஏற்றுக் கொள்வதுடன் சட்ட சபை ஊடாக இறைமை அதிகாரத்தினைப் பிரயோகிக்கும் மக்கள் இறைமை என்பது பெரும்பான்மை வாக்காளாகளின் அதிகாரத்தினால் வெளிப்படுத்தப்படுவதாக இருக்கும். இதற்காக மக்களுக்கு வாக்குரிமை வழங்கப்படுகின்றது.
ஆனால் மக்கள் தமது இறைமையினைப் பிரயோகிப்பதற்காகப் பயன்படுத்தும் வாக்குரிமை தொடர்பாக பல விமர்சனங்கள் முன்வைக்கப்பட்டுள்ளன.
இறைமை பற்றிய கோட்பாடுகள்
இறைமை பற்றிய கோட்பாடுகளைக் காலத்திற்குக் காலம் பல அரசியல் விஞ்ஞானிகள் முன் வைத்துள்ளார்கள். இவர்களின் இறைமை பற்றிய கோட்பாடுகளுக்குள் அவர்கள் வாழ்ந்த காலச் சூழ்நிலையின் தாக்கம் பிரதிபலித்திருந்தன. இவ்வகையில் ஜீன் போடின் (Jean Boadin ) , ஹோப்ஸ்( Hobbes ) , லொக் ( Locke ) , ரூசோ ( Rousseau ) , ஒஸ்ரின் ( Austin ) , குருடியஸ் ( Grotius ) , ஹெகல் ( Hege ) l, ஜோன் மில்டன் ( John Milton ) , லஸ்கி ( Laski ) , மஐவர் ( MacIver ) , மெயின் ( Maine )என இவர்களைப் பட்டியல்படுத்த முடியும்.
ஜீன் போடினின் இறைமை பற்றிய கோட்பாடு
ஜீன் போடின் 1530 - 1596 காலப்பகுதியில் பிரான்சில் வாழ்ந்த அரசியலறிஞராகும். இறைமை பற்றிய கோட்பாட்டாளர்களுள் காலத்தால் முந்தியவராக இவர் கருதப்படுகின்றார். 1576ஆம் ஆண்டு வெளியிடப்பட்ட குடியரசு ( Republic )என்ற நூலில் இறைமை பற்றிய தனது கோட்பாட்டினை இவர் முன்வைக்கின்றார். போடினின் கருத்துப்படி இறைமை என்பது மக்கள் மீதும், குடிகள் மீதும் செலுத்தப்படுகின்ற எவ்விதமான சட்டங்களினாலும் தடை செய்யப்படாத மிக உயர்ந்த அரசின் அதிகாரமே இறைமை எனக் கூறுகின்றார்.
இறைமையின் உறைவிடமாக தனிமனிதனையே ஜீன் போடின் குறிப்பிடுகின்றார். ஜீன் போடின் பலரிடமோ அல்லது ஒரு குழுவிடமோ இறைமை உறைவதை நிராகரிக்கின்றார். அரசு என்பது மக்கள் குடும்பங்களினதும், மக்கள் சொத்துக்களினதும் இணைப்பாகும். இவ் அரசு இறைமை அதிகாரத்தினடிப்படையில் ஆட்சி புரியப்பட வேண்டும். ஒரு அரசில் சட்டங்களை உருவாக்குவதும் அதனை அமுலாக்குவதும் அரசின் இறைமையே ஆகும். இதனால் சட்டங்களின் உற்பத்தி மையம் இறைமையேயாகும். இதனால் சட்டத்தினை விட இறைமை உயர்வானதாகும். ஆயினும் சமுதாயக் கடமை, சமூகம் பொறுப்பு சமுதாய நீதி, சர்வதேசச் சட்டம் என்பவற்றினை விட இறைமை உயர்ந்ததல்ல என்ற கருத்தினை ஜீன் போடின் முன்வைக்கின்றார். ஜீன் போடின் இறைமையின் பிரயோகத்திற்கு சில கட்டுப்பாடுகளை விதிக்கின்றார்.
இறைமை என்பது மக்களின் மீதும் குடிகளின் மீதும் செலுத்தப்படுகின்ற எவ்வித சட்டங்களுக்கும் கட்டுப்படாத மிக உயர்ந்த அதிகாரம் என்று ஜீன் போடின் முன் வைக்கும் இறைமை பற்றிய கருத்துடன் மேற்குறிப்பிட்ட இரண்டு கட்டுப்பாடுகளும் முரண்பாடுகளை கொண்டுள்ளன. இது ஜீன் போடின் இற்குள் காணப்பட்ட முரண்பாட்டினை வெளிப்படுத்துவதாக விமர்சகர்கள் கூறுகின்றார்கள்.
ஜீன் போடின் இறைமை பற்றிய கோட்பாட்டினை முன்வைப்பதற்கு அவர் வாழ்ந்த காலச் சூழ்நிலை பெரும் பங்களிப்பு செய்திருந்தது. இவர் வாழ்ந்த காலப்பகுதியில் பிரான்சில் உள்நாட்டு யுத்தம் நடைபெற்றிருந்தது. இதனை விரும்பாத ஜீன் போடின் அதிகாரம் மிக்க மன்னன் ஒருவனாலேயே இக்குழப்பம் மிகுந்த சூழ்நிலையினை முடிவுக்கு கொண்டு வர முடியும் என நம்பியிருந்தார். உறுதி ஐக்கியம் அமைதி என்பன ஒரு சமுதாயத்தில் பலம் வாய்ந்த மன்னனொருவனின் மூலமே அடையப்படுவது சாத்தியமானதாகும். இதனால் இறைமையின் உறைவிடமாகத் தனிமனிதனான மன்னன் விளங்க வேண்டும் என்பது ஜீன் போடின் வாதமாகும். உண்மையில் பிரான்சில் இடம் பெற்றிருந்த சிவில் யுத்தத்தின் வெளிப்பாடே ஜீன் போடின் இறைமை பற்றிய சிந்தனையாகும். இந்நிலையில் சிவில் யுத்தங்களுக்குத் தீர்வினையும் சமுதாய மீட்சியையும் வேண்டி நின்ற ஜீன் போடின் தனிமனித இறைமை பற்றி சிந்தித்திருந்தார். இதனாலேயே ஜீன் போடின் முழுநிறை முடியாட்சியை வலியுறுத்தியிருந்தார்.
ஜீன் போடின் இறைமை என்பது எவ்வித சட்டங்களுக்குக் கட்டுப்படாத மிக உயர்ந்த அதிகாரம் என வாதிட்டாலும் இறைமையானது தெய்வீகச் சட்டம், இயற்கைச் சட்டம், சர்வதேசச் சட்டம் போன்றவற்றிற்குக் கட்டுப்பட வேண்டும் எனவும் வாதிடுகின்றார். இது இறைமை தொடர்பாக அவரிடம் காணப்பட்ட அக முரண்பாட்டினை வெளிப்படுத்தியது. ஜீன் போடின் காலத்தில் தெய்வீகச் சட்டம் இயற்கைச் சட்டம் சர்வதேசச் சட்டம் போன்ற யாவும் பெருமளவிற்கு ஒன்றிலிருந்து வேறுபடுத்தப்படாமலிருந்துடன் சாராம்சத்தில் தெய்வீக நீதி என்ற மதச் சிந்தனையுடன் பிணைக்கப்பட்டதாகவேயிருந்தது. இக்காலத்தில் முதன்மை பெற்றிருந்த கிறிஸ்தவ மதம் சார்ந்த சிந்தனைகளாகவே தெய்வீக நீதியும் விளங்கியிருந்தமையால் பாப்பரசரின் கட்டளைகளுக்கு இறைமை கட்டுப்பட்டிருக்க வேண்டிய தேவை இருந்தது. இச்சூழ்நிலையின் தாக்கமே இறைமை தொடர்பான இவரின் அகமுரண்பாட்டிற்கு காரணமானதால் தனிமனித இறைமை அவனது பூரணத்துவம் தொடர்பாக ஜீன் போடின் சிந்திக்கின்றார்.
தோமஸ் கொப்ஸ்ஸின் இறைமை பற்றிய கோட்பாடு
ஜீன் போடின் போன்று ஹோப்ஸ் தனது இறைமை பற்றிய கருத்தினை முன்வைப்பதற்கு அவர் வாழ்ந்த காலச் சூழ்நிலை பெரும் பங்களிப்புச் செய்திருந்தது. 1588 – 1679 காலப்பகுதியில் இங்கிலாந்தில் ஹோப்ஸ் வாழ்ந்திருந்தார். இவர் வாழ்ந்த காலப்பகுதியில் இங்கிலாந்தில் சிவில் யுத்தம் நடைபெற்றிருந்தது. இதனால் இங்கிலாந்தில் உறுதியானதும் ஸ்திரமானதுமான அரசியல் சமுதாயம் நிலவவில்லை. இதனால் உறுதியான அரசியல் சமுதாயத்தினை உருவாக்கும் நோக்கில் அதிகாரம் படைத்த தனிமனித இறைமையாளனின் அவசியத்தை ஹோப்ஸ் வலியுறுத்த முற்பட்டார். ஹோப்ஸ் இன் பதினைந்தாம் வயதில் ஆட்சி செய்த முதலாம் ஜேம்ஸ் அவரது மகன் முதலாம் சாள்ஸ் ஆகியோர்களின் திறமையற்ற தலைமைத்துவத்தினாலும் பொருளாதார செலவீனங்களின் மத்தியில் நடத்தப்பட்ட யுத்தங்களினாலும் இங்கிலாந்தின் நிதி நிலைமை மோசமடைந்ததுடன் குழப்பமான சமுதாயமாக இங்கிலாந்து மாறியிருந்தது. ஹோப்ஸ் கிடைத்த இவ் அனுபவம் பலம் வாய்ந்த மன்னர்கள் பற்றிய சிந்தனையினை ஹோப்ஸ் க்கு கொடுத்திருந்தது.
மனிதன் சுயநலம் மிக்கவன் விலங்கு வாழ்க்கை வாழ்பவன் என்ற தனது சிந்தனையின் அடிப்படையில் இறைமை பற்றிய கோட்பாட்டினை ஹோப்ஸ் வடிவமைக்கின்றார். 1642 இல் இவரால் வெளியிடப்பட்டிருந்த Deceive என்ற நூலின் மூலமாக இறைமை பற்றிய கோட்பாடு வெளியிடப்பட்டிருந்தது. ஹோப்ஸ் இன் கருத்துப்படி “நிபந்தனை எதுவுமின்றி மக்கள் தமது அதிகாரங்களை மன்னனிடம் ஒப்படைத்து விடுகின்றார்கள். இவ்வாறு மக்களிடமிருந்து அதிகாரம் பெற்ற மன்னனே இறைமையின் உறைவிடம் என்றும் அதனால் அந்த மன்னனே சகல அதிகாரங்களும் கொண்டவனாக அச்சமுதாயத்தில் விளங்குவான்” என்றும் ஹோப்ஸ் கூறுகின்றார்.
சமூக பொருளாதார, அரசியல் அதிகாரங்களை தனிமனிதனான மன்னனிடம் ஒன்று குவிப்பதன் மூலம் முழு நிறைவான இறைமையாளனாக மன்னரைக் காணுகின்றார். இறைமையின் உறைவிடமாகிக மன்னனிடம் இருக்கும் இறைமை ஏனையவர்களிடம் பிரிக்கப்படுவதை ஹோப்ஸ் வரவேற்கவில்லை. மன்னனுடைய ஆட்சி கொடுங்கோண்மையானதாக இருப்பினும் அதனை மக்கள் மாற்றக் கூடாது என ஹோப்ஸ் கூறுகின்றார். இங்கு மதமோ, சமுதாய ஒழுக்கமோ மன்னனுக்கு மேலானதாகக் காணப்பட மாட்டாது. இதனால் சகல அதிகாரங்களும் கொண்டவனாக தனிமனித இறைமையாளன் காணப்படுவான். ஹோப்ஸ் இன் நோக்கில் இறைமையானது முழு நிறைவானது, சர்வ வல்லமையுடையது, நிரந்தரமானது, சர்வவியாபகம் கொண்டது. பிரிக்க முடியாதது ஆகும். முடிவாக சமூகக் கட்டளை ஒன்றை நடைமுறைப்படுத்தப்பலமான அதிகாரம் ஒன்றின் முன் தேவையினை உணர்ந்த ஹோப்ஸ் இறைமையின் முழுமைத் தன்மையினை ( Absoluteness ) தன் கோட்பாட்டால் ஆழமாக வலியுறுத்தி வரம்பற்ற முடியாட்சியினை ( Absolute Monarchy) ஆதரித்து நிற்கின்றார்
ஜோன் லொக்கின் இறைமை பற்றிய கோட்பாடு
ஜோன் லொக் 1632 – 1704 காலப்பகுதியில் இங்கிலாந்தில்; வாழ்ந்திருந்தார். 1642 ஆம் ஆண்டிலிருந்து பிரித்தானிய மன்னனுக்கு எதிராக மக்கள் கிளர்ச்சிகளை அனுபவித்திருந்ததுடன் 1688 ஆம் ஆண்டு பிரித்தானியாவின் “மகோன்னதப் புரட்சியையும்” (Glorious Revolution in Britain) அனுபவித்திருந்தார். இவ் அனுபவங்களை அடிப்படையாகக் கொண்டு 1690 ஆம் ஆண்டில் அரசாங்கத்தின் இரண்டு உடன்படிக்கைகள் ( Two Treatises of Government )என்ற நூலை வெளியிட்டார். இந்நூலில் இறைமை பற்றிய ஆய்வினை ஜோன் லொக் மேற்கொண்டார்.
இங்கு இறைமை பற்றி ஜோன் லொக் கூறும் போது இறைமை மக்களிடமும் மன்னனிடமும் காணப்படும். சட்டவாக்கம் அதிகாரம் மக்களிடம் இருக்கும். மக்களின் உரிமைகளைப் பாதுகாப்பது அரசின் கடமையாகும். மக்களின் விருப்பத்தை மீறி ஆட்சி செய்ய அரசனுக்கு அதிகாரம் கிடையாது. மக்கள் விரும்பும் போது அரசாங்கத்தை மாற்றியமைக்க முடியும் எனக் கூறுகின்றார்.
இங்கு உயர்ந்த அதிகாரத்தின் உறைவிடமாக மக்களையும் சகல அதிகாரங்களினதும் பிரிக்க முடியாத மூலகங்களாக மக்களே விளங்குகின்றார்கள் என்பதையும் ஜோன் லொக் முதன்மைப்படுத்துகின்றார்.
மக்களினால் அமைக்கப்பட்ட சட்டத்துறை உயர்வான அமைப்பாக விளங்கினாலும் எல்லாச் சந்தர்ப்பங்களிலும் அதன் மேலாண்மை பேணப்பட முடியாது என்பதை லொக் ஏற்றுக் கொள்கின்றார். இதனால் சட்டத்துறை செயலிழக்கும் போது உயர் அதிகாரத்தின் உறைவிடத்தின் மறு பகுதியாகிய மன்னன் உயர்வானவனாக காணப்படுவான் என்ற கருத்தினை முன்வைக்கின்றார். சட்டத்துறை உயர் அதிகாரம் கொண்ட அமைப்பாகிய போதிலும் அதனுடைய உயர்வுத் தன்மை முதன்மையானதல்ல. சில நோக்கங்களுக்காக மக்களினால் அமைக்கப்பட்ட சட்டத்துறை மட்டுப்படுத்தப்பட்ட அதிகாரங்களையே கொண்டிருக்கும் என்றும் ஜோன் லொக் கூறுகின்றார்.
உயர்ந்த அதிகாரத்தின் ஊற்றாக மக்களே விளங்குகின்றனர். மக்கள் இறைமையினை வலியுறுத்துவதே லொக்கின் நோக்கமாகும். உயர்ந்த அதிகாரம் யாரிடம் இருந்தாலும் அது மக்கள் குரலுக்கு மதிப்பளிப்பதாக இருக்க வேண்டும். சட்டம் பொதுநலனை அடிப்படையாகக் கொண்டு ஏற்படுத்தப்பட்டது. சட்டத்தின் முன் சகலரும் சமம் இவ்வகையில் அரசனும் சமூகத்தின் ஓர் அங்கத்தவன் என்ற வகையில் சட்டத்தின் முன் அரசனும் சமமானவனாகும். அரசாங்கம் என்பது உயர் அதிகாரம் கொண்ட மக்களால் ஏற்றுக் கொள்ளப்பட்ட ஒரு அமைப்பு என்ற முடிவுக்கு ஜோன் லொக் வருகின்றார்.
ரூசோவின் இறைமை பற்றிய கோட்பாடு
ரூசோ 1712 – 1778 காலப்பகுதியில் பிரான்சில் வாழ்ந்த சிந்தனையாளராகும். இவர் காட்டுமிராண்டிகளாக வாழ்ந்த மக்கள் அரசு தோன்றுவதற்கு முன்னர் பொது நல நோக்கம் கொண்டவர்களாகவும் முன்னேற்றமடைந்தவர்களாகவும் மாறிவிட்டனர் என்ற கருத்தின் அடிப்படையில் மக்கள் அரசியலதிகாரத்தினைப் பகிர்ந்து கொள்ள தகுதியானவர்கள் என்ற முடிவிற்கு வருகின்றார். இதனடிப்படையில் இறைமை பற்றிய தனது கோட்பாட்டினை ரூசோ முன்வைக்கின்றார்.
இறைமை தொடர்பாக ரூசோ கூறும் போது இறைமை என்பது அரசின் மேலான அதிகாரமாகும். இவ் இறைமை முழு நிறைவானதும் நிச்சயமானதும் பிரிக்க முடியாததும் பாரதீனப்படுத்தப்பட முடியாததும் ஐக்கியமானதும் பிரதிநிதித்துவப்படுத்தப்பட முடியாததுமாகும் எனக் கூறுகின்றார்.
ரூசோ இவ் இறைமையின் உறைவிடமாகப் “பொது விருப்பத்தையும்” (General Will )மக்களையுமே காண்கின்றார். இங்கு பொது விருப்பு என்பது சமுதாயத்தின் பொது நன்மை என்பதாகவே கருதப்படுகின்றது. மாறாக எல்லோருடைய எல்லா விருப்பங்களையும் குறித்து நிற்கவில்லை. பொது நன்மையை விரும்பும் தனிநபர்களின் இணைப்பு பொது விருப்பமாகக் கொள்ளப்படுகின்றது. இப் பொது விருப்பின் பிரயோகமானது பெரும்பான்மை மக்களினால் தேர்வு செய்யப்பட்ட இறைமையாளனிடம் இருக்கும் என்பதே ரூசோவின் வாதமாகும். இவ்விடத்தில் ரூசோ இறைமை கூட்டானது அது சமுதாய ஒப்பந்தத்தின் மூலம் உருவாக்கப்பட்டது. பொது விருப்பத்தினை அடிப்படையாகக் கொண்டது. இதனால் எப்;போதும் பாரதீனப்படுத்தப்பட முடியாதது என்று கூறுகின்றார்.
ஒஸ்ரின் இறைமை பற்றிய கோட்பாடு
1790 – 1859 காலப்பகுதியில் வாழ்ந்த ஜோன் ஓஸ்ரின் 1832ஆம் ஆண்டு “சட்டவியலுக்கான விளக்கவுரை” ( Lectures on Jurisprudence )என்ற நூலை வெளியிட்டிருந்தார். இந்நூலின் மூலமாக இறைமை பற்றிய தனது கோட்பாட்டை முன்வைக்கின்றார். ஓஸ்ரின் கருத்துப்படி “நிர்ணயம் செய்யப்பட்ட மேலான மனிதன் ஏனைய மேலானவர்களிடமிருந்து வரும் கட்டளைகளுக்குக் கீழ்படியாமலும் அவனுடைய கட்டளைகளுக்கு சமுதாயத்தின் பெரும்பாலானோர் வழக்கமாகக் கீழ்படிவதனாலும் அந்த மனிதன் அச்சமூகத்தில் இறைமையாளனாகக் கருதப்பட வேண்டும். இம் மேலான மனிதனை உள்ளடக்கிய இச் சமூகம் சுதந்திரம் பெற்ற அரசியற் சமூகமாகும்” எனக் கூறுகின்றார்.
இக்கருத்தின் படி இறைமையின் இயல்புகளை ஓஸ்ரின் தெளிவுபடுத்துகின்றார். அதாவது இறைமையாளனின் அதிகாரம் சட்ட ரீதியாக முழுநிறைவானதும் எல்லையற்றதுமாகும். இறைமை பிரிக்கப்பட முடியாததுடன் இரண்டு நபர்களுக்கிடையில் வெவ் வேறான முறையில் செயற்படுத்தப்பட முடியாததுமாகும். இதனால் ஒருவர் ஏனையவர்களைக் கட்டுப்படுத்த முடியுமாயின் அதுவே உண்மையான இறைமையாகும்.
இறைமையின் உறைவிடம் ஆதிக்க எல்லை என்பவற்றை ஓஸ்ரின் விளக்க முற்படும் போது இறைமை என்ற உயர்ந்த அதிகாரம் ஒவ்வொரு சுதந்திர அரசியல் சமுதாயத்திற்கும் அவசியமானதாகும். இதனால் ஒவ்வொரு சமுதாயத்திலும் மிக உயர்ந்தவனாகவோ இறைமையாளனாகவோ நிர்ணயிக்கப்பட்ட ஒருவனோ அல்லது ஒரு குழுவோ இருக்க வேண்டும். எல்லா மக்களும் அல்லது பொது விருப்பம் அவனை இறைமையாளன் என ஏற்க வேண்டும். இவ் இறைமையாளன் தனக்குத் தானே எல்லைகளை உருவாக்க முடியும். அவர் ஏனையவர்களின் கட்டளைகளுக்கு கீழ்ப்படியக் கூடாது என விளக்குகின்றார்.
ஓஸ்ரின் கூறும் இறைமைக்கான கருத்துக்கள் மேலும் வியாக்கியானப்படுத்தப்படல் வேண்டும்.ஏனெனில் பல கருத்து முரண்பாடுகள் இதற்குள் காணப்படுகின்றன. இறைமை அதிகாரம தலை சிறந்த மனிதனிடம் ஒப்படைக்கப்பட வேண்டும் எனக் கூறுவதன் மூலம் மக்கள் இறைமை என்ற கருத்துடன் ஓஸ்ரின் முரண்படுகின்றார். இவருடைய சிந்தனை முடியாட்சிக்கு பொருத்தமானதாகும். ஓஸ்ரின் முழுநிறை இறைமையினை வலியுறுத்துவதன் மூலம், அரசு என்பது சமூக நன்மையினை உயர்த்தும் வழக்கமான ஒரு கருவி என்னும் கருத்தை நிராகரிக்கின்றார்.
இறைமை பற்றிய பன்மைவாதக் கோட்பாடு
பன்மைவாதம் ஒப்பீட்டு ரீதியில் அரசியல் விஞ்ஞானத்திற்கு புதியதாகும். நகர அரசுகள் காணப்பட்ட கிரேக்க காலத்தில் அரசுகள் மிகவும் பலமான நிறுவனங்களாக காணப்பட்டன. மத்திய கால ஐரோப்பாவில் அரசு திருச்சபை என்பவற்றிற்கு இடையில் இறைமை தொடர்பான எவ்வித போட்டியும் ஏற்பட்டிருக்கவில்லை.
பன்மைவாதக் கோட்பாடு பத்தொன்பதாம் நூற்றாண்டின் இறுதியில் உருவாக்கப்பட்டதாகும். மெயிற்லன்ட (Maitland) கிராப்பி (Krabbe) மெயின் (Maine) கிளார்க் (Clark) சிட்ஜ்விக் (Sidgwick) ஜி.டி.எச்.கோல் (G.D.H.Cole) பொலற் (Follett) லஸ்கி (Laski) மைக்கைவர் (Maciver) பென்தம் (Bentham) போன்ற பல கல்விமான்கள் பன்மைவாதக் போட்பாட்டின் வளர்ச்சிக்குப் பங்களிப்புச் செய்துள்ளனர். எல்லா அதிகாரங்களும் அரசிற்குள் கட்டுப்படுவதுடன் அரசிற்குள் எவ்வித சமூக நிறுவனங்களும் அதிகாரம் செலுத்த முடியாது என்ற ஒருமைவாத கருத்தினை பன்மைவாத கோட்பாடு நிராகரிக்கின்றது.
ஒருமைவாதக் கோட்பாட்டாளர்களாகிய ஹோப்ஸ், ஹெகல், ஒஸ்ரின் போன்றவர்கள் முழு நிறைவான கட்டுப்படுத்த முடியாத, பிரிக்க முடியாத பாரதீனப்படுத்தப்பட முடியாத (Inalienable) அதிகாரத்தினை அரசிற்கு வழங்குகின்றார்கள். இக்கருத்துக்கள் அடிப்படையற்றதும் கற்பனையானதுமாகும் என பன்மைவாதக் கோட்பாட்டாளர்கள் கூறுகின்றார்கள். பிக்கிஸ் (Figgis) இது தொடர்பாகக் கூறும் போது மரபுரீதியான இறைமைக் கோட்பாடு போற்றுதற்குரிய மூட நம்பிக்கையாகும் எனக் கூறுகின்றார்.
பன்மைவாதக் கோட்பாட்டாளர்கள், அரசும் ஏனைய சமூக அமைப்புக்களும் சமூக நலன்களிற்கான நிறுவனங்களாகும். மனிதனின் சமூக இயல்பானது மதம், கலாசாரம், பொருளாதாரம் போன்ற வேறுபட்ட அமைப்புக்களுக்கு ஊடாக வெளிப்படுத்தப்படுகிறது. இவ் அமைப்புக்கள் மனிதனின் சமூக வாழ்க்கையின் அபிவிருத்திக்கு பங்களிப்புச் செய்கின்றன. சமூக நிறுவனங்களில் குடும்பம், குலம் போன்றவைகள் அரசு என்ற நிறுவனத்தினை விட பழமையானதுடன் அவற்றின் அந்தஸ்திற்கு ஏற்ப அரசிற்கு சமமான அதிகாரம் கொண்டவைகளுமாகும். ஆகவே அரசினை மட்டும் இறைமையுடைய நிறுவனமாக அங்கீகரிப்பது நீதியற்றதாகும் என்பது பன்மைவாதிகளின் கருத்தாகும்.
பன்மைவாதிகளில் ஒருவராகிய லஸ்கி என்பவரின் கருத்துப்படி “ஒரு அரசின் இறைமையானது பன்மைத்தன்மை கொண்டதும், அரசியல் திட்ட ரீதியானதும், பொறுப்புடையதுமாகும். மட்டுப்படுத்தப்படக் கூடிய இவ் இறைமையானது, மேலாண்மை பெறுவதை விட கட்டுப்படுத்தப்படக் கூடியது. நிரந்தரமானது என்பதை விட தேர்தல் தொகுதிகளின் விருப்பத்தினால் அது மாற்றமடைந்து செல்லும். அதன் அதிகாரங்கள் வியாபிக்கக் கூடியவை. உள்வாரியாகவும், வெளிவாரியாகவும் அதன் நடவடிக்கைகள் மட்டுப்படுத்தபட்டவையாகவும் மீள் பார்வைக்குரியவையாகவும் காணப்படும்.” எனக் கூறுகின்றார்.
பென்தம் (Bentham) என்பவர் இறைமை என்பது “சட்டத்தின் மூலம் எல்லையற்றதாகவிருந்த போதிலும் நீதி முறைப்படி எல்லையற்றதல்ல. ஒரு இறைமையாளன் தனது அதிகாரத்தைச் சட்டங்களை உருவாக்கிக் கொள்வதன் மூலம் நிலை நாட்டிக் கொள்ள முடிந்த போதிலும் இவ் இறைமையின் நோக்கம் பெரும்பாலான மக்களின் விருப்பத்தை பூர்த்தி செய்வதாக அமைய வேண்டும்” எனக் கூறுகின்றார்.
சுருக்கமாகக் கூறுவோமாயின் பன்மைவாத சிந்தனையாளர்கள் அரசும் ஏனைய அமைப்புக்களும் சமூகத்தில் சில அந்தஸ்துக்களை பெற்றிருக்கின்றன. இதில் அரசு அதிக முக்கியத்துவத்தினையும் அதிக கௌரவத்தினையும் பெற்றிருப்பதை மறுக்கிறார்கள். இவர்களுக்குள் உள்ள தீவிரவாதிகள் அரசினை பூரணமாக அழிப்பதற்கும் அதனுடைய அதிகாரப் பங்கீட்டினையும் தொழிற்பாட்டினையும் அழிப்பதற்கும் ஆழமாக சிந்திக்கின்றனர். சில பன்மைவாதிகள் அராஜகத்;திலிருந்து சிறியளவிலேயே வேறுபடுகின்றனர்.
பன்மைவாதம் அரசின் இறைமை பற்றிய ஒருமைவாதக் கோட்பாட்டினை (Monistic) எதிர்க்கின்றது. பன்மைவாதிகள் அரசின் இறைமையானது சமூகத்தின் ஏனைய தொண்டர் அமைப்புக்களின் மீது விஸ்தரிக்கப்பட முடியாதது. தொண்டர் அமைப்புக்கள் அரசிற்கு சமமாக தமக்கே உரிய அதிகார எல்லைக்குள் இருந்து செயற்படக் கூடியவையாகும்.
அரசு முழு நிறைவானதும் கட்டுப்பாடற்றதுமான அதிகாரத்தினை கொண்டிருக்க முடியாது. அதன் அதிகாரங்கள் சமூக வழக்காறுகள், சம்பிரதாயங்கள் சர்வதேசச் சட்டங்கள் ஒப்பந்தங்கள் உடன்படிக்கைகள் என்பவற்றினால் மட்டுப்படுத்தப்படுகின்றன. ஜனநாயக பாரம்பரியத்திற்குள் மக்கள் அபிப்பிராயம் என்பது இறைமை மீதான கட்டுப்பாடாகவே உள்ளது. மக்களுடைய உரிமைகள் கூட அரசின் அதிகாரத்தினை மட்டுப்படுத்துகின்றது.
இவ்வகையில் இறைமை பிரிக்கப்பட முடியாதது என்ற கருத்து இங்கு நிராகரிக்கப்படுகின்றது. இறைமை ஒரு அரசிற்குள் செயற்படும் பல்வேறு சங்கங்களிற்கிடையிலும் அரசிற்கிடையிலும் பிரிக்கப்படுகின்றது. அரசும் ஏனைய சங்கங்களும் மக்களிடமிருந்து விசுவாசத்தினை பெற்றுக் கொள்கின்றன. இது தொடர்பாக லஸ்கி பின்வருமாறு கூறுகின்றார். “மக்கள் சில நேரங்களில் அரசை விட சங்கங்களிற்கு அதிக விசுவாசத்தினை வெளிக்காட்டுகின்றனர். மக்கள் அரசிற்கெதிரான தமது மனத்துயரங்களை கொண்டிருக்க முடியாது என்ற கருத்தினை பன்மைவாதிகள் நிராகரிக்கின்றார்கள். ஒரு நாட்டில் சுதந்திர இயக்கங்களை ஸ்தாபிக்கவும் அரசின் இ;றைமைக்கு எதிரான மனத்துயரங்களை, அதிருப்தியினை, கருத்துக்களை வெளியிடுவதற்கும் மக்களிற்கு உரிமையுள்ளது”