தேர்தல் என்பது வாக்காளர்களின் விருப்பத் தெரிவின் அடிப்படையில் சட்டசபை பிரதிநிதிகளுக்கான ஆட்சேர்ப்பாகும். வாக்காளர்கள் தங்களின் வாக்குகளினால் சட்டசபை பிரதிநிதிகளை தெரிவு செய்கின்றார்கள். சுருக்கமாக கூறின் தேர்தல் என்பது பெரும்பான்மை வாக்குகளின் அடிப்படையில் பிரதிநிதிகள் தேர்தல் தொகுதியில் அல்லது மாவட்டத்தில் இருந்து தெரிவு செய்யப்படுவதை குறித்து நிற்கின்றது. நாட்டினை ஆளுகின்ற பிரதிநிதிகள் தேர்தல் ஊடாகவே தெரிவு செய்யப்படல் வேண்டும் என்பது ஜனநாயக கோட்பாட்டின் அடிப்படை வாதமாகும். எல்லா ஜனநாயக நாட்டிலும் சட்டசபை உறுப்பினர்கள், உள்ளுராட்சி மன்ற உறுப்பினர்கள் அரசியல் கட்சி நிர்வாக உத்தியோகத்தர்கள் போன்ற அனைவரும் தேர்தல் மூலமே தெரிவு செய்யப்படுகின்றார்கள். சில நாடுகளில் ஜனாதிபதி, உப ஜனாதிபதி, நீதிபதிகள் என்பவர்கள் கூட தேர்தல் மூலமே தெரிவு செய்யப்படுகிறார்கள். ஜனநாயக பாரம்பரியத்தில் தேர்தல் என்பது மிகவும் முக்கியமானதாகும். ஆகவே மக்கள் தமது பிரதிநிதிகளை தெரிவு செய்வதற்கான தேர்தலில் பங்குபற்றுவதற்கு உரித்துடையவர்களாகின்றனர். தேர்தல் ஒன்றில் வேட்பாளர்களுக்கு இடையில் ஆகக்கூடிய ஆதரவினை பெறுகின்றவர் பிரதிநிதியாக தெரிவு செய்யப்படுகின்றார். இவர் மக்களின் பிரதிநிதியாக ஏற்றுக் கொள்ளப்படுகின்றார்.
தேர்தலின் வகைகள்
பொதுவாக தேர்தல்கள் இரண்டு வடிவங்களை கொண்டதாக காணப்படுகின்றன. ஒன்று நேரடித் தேர்தல் மற்றையது மறைமுகத் தேர்தல் ஆகும்.
நேரடித் தேர்தல்
இவ்வகையான தேர்தலில் வாக்காளர்கள் தமது பிரதிநிதிகளை தெரிவு செய்வதற்கு நேரடியாகவே தேர்தலில் பங்கு பற்றுகின்றார்கள். நேரடியாகத் தேர்தலில் பங்கு பற்றுவதற்காக வாக்காளர்கள் ஒவ்வொருவரும் தேர்தல் வாக்களிப்பு நிலையத்திற்குசமூகமளிக்கும்படி வேண்டப்படுவார்கள். நேரடித் தேர்தலில் வாக்காளர்கள் பெரும்பான்மை ஆதரவினால் தமது பிரதிநிதியை தெரிவு செய்து கொள்கின்றார்கள். நேரடியான தேர்தல் முறையானது முழுமையான ஜனநாயகப்பண்பினை கொண்டதாகும். ஒவ்வொரு ஜனநாயக நாட்டினதும் சட்டசபை பிரதிநிதிகள் அனைவரும் நேரடி தேர்தல் முறை மூலமாகவே தெரிவு செய்யப்படுகின்றார்கள். உதாரணமாக பிரித்தானிய பொது மக்கள் சபை, ஐக்கிய அமெரிக்காவின் பிரதிநிதிகள் சபை, இந்தியாவின் பொதுமக்கள் சபை ( Lokh Sabha ) போன்றவற்றை குறிப்பிடலாம். நேரடித்; தேர்தல் முறைமையின் கீழ் வாக்காளர்களுக்கும் பிரதிநிதிகளுக்கும் இடையில் நேரடியான தொடர்பு காணப்படும். இதனால் பிரதிநிதிகள் வாக்காளர்களின் பொது விவகாரங்களில் ஆர்வமும் கூர்மையான அவதானமும் கொண்டவர்களாக காணப்படுவர். மக்களிடையே அரசியல் விழிப்புணர்வு ஏற்பட்டு பொது விவகாரங்களில் ஆர்வமும் எழுச்சியும் ஏற்படுகின்றது. வாக்காளர்கள் அரசு எதிர்நோக்கும்அரசியல் பிரச்சினைகளை விளங்கிக் கொள்வதற்கும் மக்கள் இறைமையின் முக்கியத்துவத்தினை வெளிப்படுத்துவதற்கும் நேரடித் தேர்தல் வாய்ப்பானது எனக் கூறப்படுகின்றது.
ஆயினும் நேரடித் தேர்தல் முறைமையில் கல்வியறிவு அற்ற வாக்காளர்கள் பிரச்சாரத்தின் வழி உணர்ச்சி வசப்படுத்தப்பட்டு தவறாக வழி நடாத்தப்படக்கூடிய சந்தர்ப்பங்கள் காணப்படுகின்றன. இதனால் தவறான கொள்கைகள் சித்தாந்தங்களை கொண்டவர்கள் பிரதிநிதிகளாவதற்கு சந்தர்ப்பம் இருப்பதாக கூறப்படுகின்றது. அத்துடன் சாதி, மதம், பிரதேசம், இனம், பணச் செல்வாக்கு போன்ற பண்புகள் தேர்தலில் செல்வாக்குச் செலுத்தக்கூடிய சந்தர்ப்பம் காணப்படுவதாக கூறப்படுகின்றது.
மறைமுகத் தேர்தல்
இவ்வகையான தேர்தலில் வாக்காளர்கள் தமது பிரதிநிதிகளை தெரிவு செய்வதற்கு நேரடியாக தேர்தலில் பங்கு பற்றுவதில்லை. பதிலாக மறைமுகமாகவே பங்குபற்றுகின்றார்கள். உதாரணமாக ஐக்கிய அமெரிக்காவில் ஜனாதிபதி, உபஜனாதிபதி ஆகியோரை தெரிவு செய்வதற்கு மறைமுகத் தேர்தலே பயன்படுத்தப்படுகின்றது. இங்கு மக்கள் தேர்தல் கல்லூரி ( Electoral Collage ) அங்கத்தவர்களை தெரிவு செய்வார்கள். தேர்தல் கல்லூரி அங்கத்தவர்களே ஜனாதிபதி, உபஜனாதிபதி ஆகிய இருவரையும் தெரிவு செய்கின்றார்கள். இதே போல இந்திய ஜனாதிபதியை மக்களால் தெரிவு செய்யப்பட்ட சட்டசபை உறுப்பினர்கள் தேர்தல் மூலம் தெரிவு செய்கின்றார்கள். அதாவது மக்கள் சட்டசபை உறுப்பினர்களை தெரிவு செய்ய சட்டசபை உறுப்பினர்கள் தேர்தல் மூலம் ஜனாதிபதியை தெரிவு செய்கின்றார்கள்.
இங்கு மறைமுகத் தேர்தலானது இரண்டு வகையான பண்புகளை வெளிப்படுத்துகின்றது. ஒன்று மக்கள் தங்கள் பிரதிநிதிகளை நேரடியாக தெரிவு செய்கின்றார்கள். மற்றையது மக்களால் தெரிவு செய்யப்பட்ட பிரதிநிதிகள் ஜனாதிபதியை தெரிவு செய்கின்றார்கள். மறைமுகத் தேர்தலில் பங்குபற்றுகின்ற வாக்காளர்கள் பொதுவாக கல்வியறிவு கொண்டவர்களாகவே காணப்படுவார்கள். இதனால் இவர்களின் வாக்குகள் எப்போதும் சுய மதிப்பீட்டின் அடிப்படையிலானதாகவே காணப்படும். பிரச்சாரத்திற்கு மதிப்பளிப்பதாக இருக்க மாட்டாது. அரசியல் விழிப்புணர்வும் புத்திசாதுரியமும் கொண்டவர்களே மறைமுகத் தேர்தலில் பங்குபற்றுவதால் தேர்தல் முடிவுகள் எப்போதும் உயர் ஜனநாயகப் பண்பு கொண்டதாகவே காணப்படும். உதாரணமாக ஐக்கிய அமெரிக்காவில் ஜனாதிபதியை தேர்தல் கல்லூரி மூலமாக தெரிவு செய்கின்ற போது தேர்தல் கல்லூரி அங்கத்தவர்கள் விழிப்புணர்வுடன் செயற்பட்டே ஜனாதிபதியை தெரிவு செய்கின்றார்கள்.
ஆயினும் மக்கள் தமது இறைமையினை நேரடியாக அனுபவிப்பதற்கு இத்தேர்தல் தடையாக உள்ளது எனக் கூறப்படுகின்றது. மேலும் நேரடித் தேர்தல் முறைமையானது மறைமுகத் தேர்தல் முறைமையினை விட அதிக ஜனநாயகப் பண்பினை கொண்டதாகும். மறைமுகத் தேர்தல் மூலமாக தெரிவு செய்யப்படுகின்ற பிரதிநிதி நேரடியாக மக்களுக்கு பொறுப்புக்கூறத் தேவையில்லை என்பதால் மக்களுடன் அவர் நேரடித் தொடர்பினை கொண்டிருப்பதில்லை எனவும் கூறப்படுகின்றது.