ஓவ்வொரு அரசாங்கமும் நிர்வாகம் செய்வதற்காகச் சில விதிகளையும் ஒழுங்குகளையும் உருவாக்குகின்றன. இவ்விதிகளுக்கும் ஒழுங்குகளுக்கும் ஒரு அரசின் எல்லைகளுக்குள் வாழும் மக்கள் மாத்;திரமே கட்டுப்படல் வேண்டும். அரசிற்குள் அதன் அதிகாரங்கள் மீறப்பட்டால் மீறுபவர்கள் தண்டிக்கப்படுகின்றார்கள். சாதாரணமாக இவ்விதிகள், ஒழுங்குகளே சட்டங்கள் என அழைக்கப்படுகின்றன. உண்மையில் ஒழுங்கமைக்கப்பட்ட சமூக வாழ்க்கை என்பது சில விதிகள் அல்லது சட்டங்கள் இன்றி சாத்தியமற்றதாகும். சமூகத்தில் காணப்படும் நிறுவனங்கள், அமைப்புக்கள் கூட தம்மை முகாமை செய்வதற்குச் சில துணைவிதிகளை உருவாக்குகின்றன. ஆயினும் |சட்டம்| என்ற சொல் அரசாங்கத்தினால் அதற்குரிய பிரமாணத்திற்கு ஏற்ப இயற்றப்பட்டு பிரயோகிக்கப்படுகின்ற போதே அதற்குரிய உண்மையான பெறுமானத்தினைப் பெறுகின்றது.
வரைவிலக்கணம்
சொல் இலக்கணப்படி சட்டம் என்ற சொல் மொழிக்கு மொழி வேறுபட்ட நிலையில் தோற்றம் பெறுவதும் பயன்படுத்தப்படுவதாகவும் உள்ளது. பழைய ரியுரொனிக் (Teutonic) சொல்லாகிய லாக் (Lag ) என்பதிலிருந்து லா (Law ) என்னும் சொல்பெறப்பட்டதாகக் கூறப்படுகிறது. லாக் (Lag )என்னும் சொல் சமமான முறையில் இடுதல், வைத்தல், அமைத்தல் என்ற கருத்துடையது. சிலர் இலத்தீன் சொல்லாகிய ஜுஸ் ( Jus ) என்பதிலிருந்து லா ( Law ) என்ற சொல் பெறப்பட்டதாகக் கூறுகிறார்கள். ஜுஸ் ( Jus ) என்ற சொல் பிறிதொரு இலத்தீன் சொல்லாகிய ஜுங்கேரே (Jungere ) என்பதுடன் தொடர்புடையதாகும். இச்சொல்லின் பொருள் கட்டுப்பாடு ( Bond ) அல்லது பிணைத்தல் ( Tie ) என்பதாகும்.
சட்டம் என்றால் என்ன என்பதற்கு பல்வேறு வரைவிலக்கணங்கள் பல்வேறு சிந்தனையாளர்களால் முன் வைக்கப்பட்டுள்ளது. அரிஸ்டோட்டில் தீவிர “உணர்ச்சிகளை நீக்கிய பகுத்தறிவே சட்டம் “எனக் கூறுகின்றார். ஒஸ்ரின் “இறைமையின் கட்டளையே சட்டம்” எனக் கூறுகிறார். கிராப்பி (Krabbe) “மனிதர்களின் பொதுவானதும் குறிப்பானதுமான உணர்வுகள் அல்லது உரிமைகளில் இருந்து வருகின்ற எழுதிய அல்லது எழுதாத விதிகளின் முமுமை அல்லது தொகுப்பு சட்டம்“ எனக் கூறுகிறார். சல்மொன்ட் (Salmond) என்பவர் “அரசினால் அங்கீகரிக்கப்பட்டதும், நீதியான நிர்வாகத்தில் பிரயோகிக்கப்பட்டதுமான விதிகளின் திரட்சியே சட்டம்” எனக் கூறுகிறார். ஒக்ஸ்போட் ஆங்கில அகராதி “அதிகாரத்தினால் சட்டக் கோப்புச் செய்யப்பட்ட விதிகளே சட்டம்” எனக் கூறுகிறது. இவ்வரைவிலக்கணங்களுடாக ஒரு பொது முடிவிற்கு வருவதாயின் “ஒழுங்கமைக்கப்பட்ட சமூகத்தில் இறைமை பெற்ற அரசியல் அதிகாரத்தினால் செயற்படுத்தப்படும் சமூக அங்கத்தவர்களின் புற நடத்தைகள் பற்றிய பொதுவான விதிகளே சட்டமாகும்”.
சட்டத்தின் மூலகங்கள்
சட்டத்தின் அபிவிருத்திக்குப் பல்வேறு காரணிகள் பங்களிப்புச் செய்துள்ளன. ஆயினும் சர்வதேச அளவில் எல்லா நாடுகளிலும் சட்டத்தின் வளர்ச்சிக்குப் பங்களிப்புச் செய்த காரணிகளாக பின்வருவன ஏற்றுக் கொள்ளப்பட்டுள்ளன.
வழக்காறுகள்
வழக்காறுகள் மக்களால் மிகவும் சிறப்பாக ஒழுங்குபடுத்தப்பட்டு நடைமுறைப்படுத்தப்பட்ட சமூக ஒழுங்கு முறைகளாகும். சமூக ஒழுங்கு முறைகள் படிப்படியாக அபிவிருத்தியடைந்து வந்ததேயன்றி திடீரென தோன்றியதல்ல. காலப்போக்கில் இவ் ஒழுங்கு முறைகள் சமூக மக்களின் வழக்காறுகளாக மாற்றமடைந்தன. புராதன காலத்தில் மரபுகள், மூட நம்பிக்கைகள் மனிதனது சமூக நடத்தையில் செல்வாக்குச் செலுத்தியிருந்தன. மக்கள் தமது பழக்க வழக்கங்களுக்கு அப்பால் சில அவசியமான நடைமுறைகளையும் பின்பற்றியிருந்தார்கள். இவைகளே பின்னர் வழக்காறுகளாக மாற்றமடைந்தன. இன்று வழக்காறுகள் முக்கிய பங்கு வகிக்கின்றன. இன்றைய மக்களுடைய வாழ்க்கை வழக்காறுகளினால் மிகவும் சுலபமாக்கப்பட்டுள்ளதுடன், மக்களுடைய வழக்காறுகளை அடிப்படையாகக் கொண்டே சட்டங்களும் இயற்றப்படுகின்றன. உலகில் வழக்காறுகளைச் சட்டமாகக் கொண்டிராத நாடுகளே இல்லை எனலாம். உதாரணமாக இங்கிலாந்தில் வழக்காறுகள் சட்டத்தில் பெரும் பங்கு வகிக்கின்றன.
சமயம்
சட்டத்தினை உருவாக்குவதில் மதம் முக்கிய பங்கு வகி;க்கின்றது. புராதன சமூகத்தில் மதம் ஆழமான செல்வாக்குச் செலுத்தி வந்ததுடன் மதத்திற்கும் வழக்காறுகளுக்கும் இடையிலான வேறுபாடு மிகவும் குறுகியதாகவே காணப்பட்டது. மக்கள் வழக்காறுகளில் மட்டுமன்றி, மதக் கோட்பாடுகளிலும் ஆழமான நம்பிக்கை கொண்டவர்களாகக் காணப்படுகிறார்கள். மதத்தலைவர்கள் மதத்தத்துவத்திற்கு ஏற்ப மக்கள் கீழ்படிந்து நடக்க வேண்டும் என எதிர்பார்க்கிறார்கள். கீழ்படிய மறுக்கும் மக்கள் நிகழ்காலத்திலும், மறுபிறப்பிலும் இறைவனால் தண்டிக்கப்படுவார்கள் என்று பிரச்சாரப்படுத்துகிறார்கள். இதனால் சில நாடுகளில் மதக் கோட்பாடுகள் சட்டங்களாக ஏற்றுக் கொள்ளப்பட்டுள்ளன. இவ்வகையில் கிறிஸ்தவ, இஸ்லாமிய, இந்து, பௌத்த போன்ற மதத்தத்துவங்கள் சட்டங்கள் உருவாக்கப்படுவதற்குப் பெரும் பங்களிப்புச் செய்துள்ளன.
சமநீதி
சட்டம் நீதியாகவும் சமத்துவமாகவும் பிரயோகிக்கப்படல் வேண்டும். சமநீதி என்பது நீதித் தீர்ப்புக்களாலான சட்டங்களைக் குறித்து நிற்கிறது. இது புதிய சட்டங்களை உருவாக்குவதற்கும் பழைய சட்டங்களைத் திருத்துவதற்குமான ஏற்றுக் கொள்ளப்பட்ட முறைமையாகும். சமநீதி மிகவும் பழைய எண்ணக்கருவாகும். உரோமர் காலத்தில் இது பிரயோகிக்கப்பட்டு வந்திருந்தது. சில சந்தர்ப்பங்களில் சாதாரண சட்டங்கள் தோல்வியடைகின்ற போது நீதி வழங்குவதற்குச் சட்டம் சமநீதியைப் பயன்படுத்தியுள்ளது. சமநீதி என்பது சட்டத்திற்குப் பிரதியீடான ஒன்றல்ல. பதிலாக நெகிழ்ச்சியான சட்ட உருவாக்கமாகும். சமூக மாற்றங்களுக்கு ஏற்ப சட்டங்களைப் பிரயோகிப்பதற்குச் சமநீதி என்பது பெரிதும் பயன்படுகிறது.
நீதிமன்றத் தீர்ப்புகள்
அரசுகள் சட்டத்தினை உருவாக்குபவைகளாக மட்டும் இருக்கக் கூடாது. பதிலாக சமூக வழக்காறுகளை வியாக்கியானப்படுத்துபவைகளாகவும் இருக்க வேண்டும். குறிப்பிட்ட ஒரு விடயத்தில் சட்டத்தின் பிரயோகம், சட்டத்திற்கான வியாக்கியானங்கள் என்பவற்றை நீதிமன்றங்களே வழங்குகின்றன. நீதிபதிகள் நடைமுறையில் இருக்கின்ற எழுதிய, எழுதாத சட்டங்களை அடிப்படையாகக் கொண்டே பிரச்சினைகளுக்குத் தீர்ப்பு வழங்குகிறார்கள். சட்டத்தில் அல்லது சட்டத்தின் ஒரு பகுதியில் உள்ள உண்மையான கருத்திற்குப் புறம்பாக வேறுபட்ட புதிய கருத்துக்கள் முன் வைக்கப்பட்டால் மாத்திரமே நீதிமன்றம் புதிய சட்டங்களுக்கான சிபார்சுகளை முன்வைக்க வேண்டும். இருக்கின்ற சட்டங்களை மாற்றவும் புதிய விடயங்களை சேர்க்கவும் நீதிமன்ற வியாக்கியானங்களும், சிபார்சுகளும் உதவுகின்றன. நீதிமன்றங்கள் இருக்கின்ற சட்டங்களை அடிப்படையாக கொண்டல்லாமல் பொது அறிவின் அல்லது விதியினை அடிப்படையாகக் கொண்டும் தீர்ப்புக்களை வழங்குகின்றன. இத்தீர்ப்புக்கள் பின்னர் முன்மாதிரிச் சட்டங்களாக உபயோகிக்கப்பட்டன. தற்காலத்தில் நீதிமன்றங்களின் முக்கியமான தீர்ப்புக்கள் பதிவு செய்யப்பட்டு எதிர்காலத்தில் வழக்குகளை விசாரிப்பதற்கான முன்மாதிரிச் சட்டங்களாகப் பயன்படுத்தப்படுகின்றன.
சட்டசபைச் சட்டங்கள்
சட்ட உருவாக்கத்திற்குச் சட்ட சபை முன் மாதிரியான அமைப்பாக கூறப்படுகிறது. ஒவ்வொரு நாட்டினதும் சட்டசபையானது பெரும் எண்ணிக்கையான சட்டங்களை இயற்றுகிறது. சட்ட சபை சட்டங்களை இயற்றுகின்ற போது வழக்காறுகளையும் மதக் கோட்பாடுகளையும் கருத்திலெடுக்கிறது. அதே நேரத்தில் இருக்கின்ற சட்டங்கள் ஏற்றுக் கொள்ளக் கூடியதா? இல்லையா என்பதையும் சட்டசபை தீர்மானிக்கிறது. சட்ட சபையினால் இயற்றப்படும் சட்டத்திற்கும் வழக்காறுகள், மதக் கோட்பாடுகளுக்கும் இடையில் மோதல்கள் ஏற்பட்டால் சட்டம் இயற்றப்படுவதற்கு முன்னர் எந்த ஏற்பாடு நடைமுறையில் இருந்ததோ அதுவே ஏற்றுக் கொள்ளப்படும். சட்டத்தின் எல்லா மூலகங்களையும் விட சட்டத்துறைச் சட்டங்கள் மிகவும் சிறப்பானதாகும்.
சட்டத்தின் வகைப்பாடுகள்
சட்ட வல்லுனர்களால் சட்டம் பல்வேறு வகையாக வகைப்படுத்தப்படுகிறது. இவர்களுள் மக்ஐவர் (MacIver) சட்டத்தின் வகைப்பாடுகளை மிகவும் சிறப்பாக முன்வைத்துள்ளார். மக்ஐவா சட்டங்களை அடிப்படையில் இரண்டாக வகைப்படுத்துகின்றார். ஒன்று இயற்கைச் சட்டம், இரண்டாவது நேர்நிலைச் சட்டங்கள் (Positive) என்பதாகும். நேர் நிலைச் சட்டங்கள் இரண்டு வகைப்படும். ஒன்று தேசியச் சட்டம் இரண்டாவது சர்வதேசச் சட்டம். தேசியச் சட்டம் இரண்டு வகைப்படும். ஒன்று சாதாரணச் சட்டம் இரண்டாவது அரசியல் யாப்புச் சட்டம். சாதாரணச் சட்டம் இரண்டு வகைப்படும். ஒன்று தனியார் சட்டம் இரண்டாவது பொதுச் சட்டம் (Public Law). பொதுச் சட்டம் மூன்று வகைப்படும். ஒன்று குடியியல் சட்டம் இரண்டாவது குற்றவியல் சட்டம் மூன்றாவது நிர்வாகச் சட்டம் என்பதாகும். இதனை பின்வரும் வரைபடம் எடுத்துக் காட்டுகிறது.
சர்வதேசச் சட்டமும் , தேசியச் சட்டமும்
வெவ் வேறுபட்ட ஒப்பந்தங்கள், சர்வதேச மகாநாடுகள், அரசுகளுக்கிடையிலான ராஜதந்திரத் தொடர்புகள், நிபுணத்துவம் வாய்ந்த நீதிபதிகள், ஆட்சியாளர்களின் சட்டவியாக்கியானங்கள் போன்றவற்றின் மூலம் சர்வதேசச் சட்டங்கள் உருவாக்கப்படுகின்றன. ஆயினும் சில ஆய்வாளர்கள் சர்வதேசச் சட்டத்தினை சீரானதொரு சட்டமாக ஏற்றுக் கொள்வதில்லை. சர்வதேசச் சட்டத்திற்குள் இரண்டு வகைகள் காணப்படுகிறன. ஒன்று பொதுச் சர்வதேசச் சட்டம், இரண்டாவது தனியார் சர்வதேசச் சட்டம் என்பதாகும். பொதுச் சர்வதேசச் சட்டம் அரசுகளுக்கிடையிலான உறவுகளைத் தீர்மானிப்பதாகும். இதற்குள்ளும் பல்வேறு வகைகள்; காணப்படுகின்றன. சர்வதேச யுத்தச் சட்டம், சர்வதேசச் சமாதானச் சட்டம், சர்வதேச நடுநிலைச் சட்டம் போன்றவைகளாகும். தனியார் சர்வதேசச் சட்டம் சர்வதேச நாடுகளின் பிரசைகளுக்கு இடையில் உறவினை தீர்மானிக்க உதவுகிறது.
இறைமையுடைய அரசு அதன் பிரதேச எல்லைக்குள் வாழும் மக்கள் மீது பிரயோகிக்கப்படுவதற்காக உருவாக்குவதே தேசிய சட்டமாகும். இது அரசிற்குள் வாழும் மக்களின் தனிப்பட்ட தொடர்புகளையும், பொதுத் தொடர்புகளையும் தீர்மானிக்கிறது. ஆயினும் இவ் இரண்டு சட்டங்களுக்கும் இடையிலான தத்துவார்த்த வேறுபாடு யாதெனில் தேசியச் சட்டம் இறைமை அதிகாரத்தினை பாதுகாக்க, சர்வதேசச் சட்டம் உலகத்தில் நாகரீக சமூகத்தினை உருவாக்குகிறது.
அரசியல் யாப்புச் சட்டமும் , சாதாரண சட்டமும்
இரண்டு சட்டங்களும் இறைமை அதிகாரமுடைய அரசு தனது வரையறுக்கப்பட்ட நிலப்பரப்பில் வாழும் மக்களுக்காக இயற்றும் சட்டங்களேயாகும். ஆனால் இரண்டும் ஒன்றிலிருந்து ஒன்று வேறுபட்டதுடன் மீற முடியாத வகையில் மக்களுடன் இணைக்கப்பட்டதுமாகும். அரசியல் யாப்புச் சட்டம் என்பது அரசாங்கம் பின்பற்றும் அடிப்படை கொள்கையின் பின்னனியில் அதிகாரம் எவ்வாறு பிரயோகிக்கப்படும் என்பதை வெளிப்படுத்துவதாக இருக்கும். யுhப்பு எழுதியதாக அல்லது எழுதாததாக அல்லது பாதி எழுதியதாக அல்லது பாதி எழுதாததாக காணப்படலாம்.
சாதாரணச் சட்டம் சட்டசபையினால் உருவாக்கப்படுவதாகும் அல்லது அதன் அதிகாரத்தினைப் பெற்றுக் கொண்ட அதிகார பீடத்தினால் உருவாக்கப்படுவதாகும். சாதாரண சட்டங்கள் பிரசைகளுக்கும் அரசிற்கும் இடையிலான உறவினையும் பிரசைகளுக்கும், பிரசைகளுக்கும் இடையிலான உறவினையும் தீர்மானிக்கிறது. ஆனால் சாதாரண சட்டங்கள் யாப்புச் சட்டத்திற்குக் கட்டுப்பட்டு அல்லது உட்பட்டே இயற்றப்படல் வேண்டும். சாதாரண சட்டத்திற்கும் யாப்புச் சட்டத்திற்கும் இடையில் முரண்பாடு ஏற்படுமாயின் யாப்புச் சட்டமே சரியானதாக ஏற்றுக் கொள்ளப்படும். சில நாடுகளில் சாதாரண சட்டத்திற்கும் யாப்புச் சட்டத்திற்கும் இடையில் அதிக வேறுபாடு இருப்பதில்லை. உதாரணமாக இங்கிலாந்தில் இவ் இரண்டிற்கும் இடையில் அதிக வேறுபாடு இருப்பதில்லை.
சாதாரண சட்டம் இரண்டு வகைப்பாடுகளைக் கொண்டது. ஒன்று பொதுச் சட்டம், இரண்டாவது தனியார் சட்டம் என்பதாகும். பொதுச் சட்டம் என்பது அரசிற்கும் சாதாரண பிரசைகளுக்கும் இடையில் உறவினை ஒழுங்குபடுத்துவதாகும். இச்சட்டங்கள் பிரசைகளின் தொழிற்பாட்டிற்கும் அரசின் கடமைகளுக்கும் இடையில் சமனிலையினைப் பேணுவதற்குப் பயன்படுத்தப்படுகிறது. அரசின் தொழிற்பாடுகளில் பிரசைகளின் நலன்கள் பாதுகாக்கப்படல் வேண்டும். இதற்கான உத்தரவாதத்தினைப் பொதுச் சட்டம் வழங்குகிறது.
தனியார் சட்டம் ஒரு அரசிற்குள் வாழும் பிரசைகளுக்கிடையிலான உறவினை ஒழுங்குபடுத்துகிறது. அரசு தனியார் சட்டத்தினூடாக பிரசைகளையும், அவர்களின் உரிமைகளையும் பாதுகாப்பதுடன் ஒருவர் மற்றவர் மீது தலையீடு செய்வதிலிருந்தும் பாதுகாப்பு வழங்குகிறது. இவ்வகையான சட்டங்களுக்கு உதாரணமாக திருமண உறவுச் சட்டம், விவாகரத்துச் சட்டம், உடன்படிக்கைச் சட்டம,; ஒப்பந்தச் சட்டம் போன்றவற்றைக் குறிப்பிடலாம். இச்சட்டங்கள் பிரசைகளின் தனிப்பட்ட வாழ்க்கையினைத் தீர்மானிப்பவைகளாகும்.
குடியியல் சட்டமும் , குற்றவியல் சட்டமும்
குடியியல் சட்டம் என்பது பிரசைகளுக்குள் ஒருவர் மற்றவரின் நலனைப் பாதிப்பிற்குட்படுத்துவது, தவறான குடியியல் செயற்பாடுகளில் ஈடுபடுவது போன்றவற்றிலிருந்து பிரசைகளைப் பாதுகாப்பதாகும். உதாரணமாக வாங்கிய கொடுப்பனவுகளை அல்லது மீதிகளை கொடுக்காமல் இருப்பது, ஒப்பந்தங்கள், உடன்படிக்கைகளை மீறுவது போன்றவற்றைக் குறிப்பிடலாம்.
குற்றவியல் சட்டம் என்பது பிரசைகளின் உயிர், உடைமைகளை இழக்கும்படி செய்யப்படும் தவறுகளிலிருந்து பிரசைகளைப் பாதுகாப்பதாகும். உதாரணமாக களவு, கொள்ளை, கொலை போன்றவைகளைக் குற்றவியல் சட்டம் தடுத்து பிரசைகளுக்கு பாதுகாப்பு வழங்குகிறது.
நிர்வாகச் சட்டம்
நிர்வாகச் சட்டம் என்பது அரசின் நிர்வாகக் கடமைகளுக்கும் பிரசைகளுக்கும் இடையிலான உறவினைத் தீர்மானிக்க உதவுகிறது.
சட்டத்திற்கு கீழ்ப்படிதல் என்பது தொடர்பாக பல்வேறுபட்ட கருத்துக்கள் முன்வைக்கப்படுகின்றன. நெறிமுறையாளர்கள் ( Moralist ) சட்டத்திற்கு கீழ்படிதல் என்பது நெறிமுறை சார்ந்த கடமையாகும் என வாதிடுகிறார்கள். தெய்வீக உரிமைக் கோட்பாட்டினை ஆதரிப்போர் அரசிற்குக் கீழ்ப்படிய மறுப்பது இறைவனுக்கு கீழ்ப்படிய மறுப்பதற்குச் சமம் எனக் கூறுகிறார்கள். சமூக ஒப்பந்தக் கோட்பாட்டினை ஆதரிப்போர் அரசின் தோற்றம் சம்மதம் என்பதை அடிப்படையாகக் கொண்டதாகும். ஒப்பந்தம் பிரசைகள் அரசினை ஏற்கும்படி செய்வதால் அரசிற்கு கீழ்படிவது பிரசைகளின் கடமையாகும். ஆகவே அரசு இயற்றும் சட்டங்களுக்கு பிரசைகள் கீழ்படிந்தேயாக வேண்டும் எனக் கூறுகிறார்கள்.
இவ்விளக்கங்கள் ஊடாக சட்டத்திற்குப் பிரசைகள் கீழ்படிய வேண்டும். சட்டத்தினை பிரசைகள் மீறினால் அது தண்டனைக்குரிய குற்றமாகும். அரசிலுள்ள சமூக விரோதச் சக்திகளை அரசு இல்லாதொழிக்க வேண்டுமானால் பிரசைகள் சட்டத்திற்குக் கீழ்படிய வேண்டும் என்பன விளங்கிக் கொள்ளப்படுகிறது. திருடர்கள், ஆயுதம் தரித்த கொள்ளையர்கள் மற்றும் குற்றம் புரியும் மன உணர்வு கொண்டவர்கள் சட்டம் ஒழுங்குகளை மீறுவதற்குத் தயங்குவதில்லை என்பதுடன் அதனை ஒரு மகிழ்ச்சியான செயலாகவும் கருதுகிறார்கள். இவ் இயல்பு கொண்ட மக்கள் ஒவ்வொரு சந்தர்ப்பத்திலும் சட்டத்தினை மீறுவதற்குத் தயங்குவதில்லை என்பதுடன் அதனை ஒரு மகிழ்ச்சியான செயலாகவும் கருதுகிறார்கள். இவ் இயல்பு கொண்ட மக்கள் ஒவ்வொரு சந்தர்ப்பத்தினையும் சட்டத்தினை மீறுவதற்குப் பயன்படுத்துவார்கள். இவர்கள் எல்லோரும் சட்டத்திற்குக் கீழ்படிந்தேயாக வேண்டும். சட்டத்திற்குக் கீழ்படியாமல் இருந்தால் தண்டனையில் இருந்து தப்ப முடியாது. சட்டத்திற்குக் கீழ்படிதலை மக்கள் தமது பழக்கமாக உருவாக்கிக் கொள்ள வேண்டும்.
பிரசைகள் சமூக, அரசியல் பொறுப்புணர்வு கொண்டவர்களாக இருக்க வேண்டும். நேர்மை புத்திசாலித்தனம், கல்வி வளர்ச்சி கொண்டவர்களாகப் பிரசைகள் இருக்க வேண்டும். இப்பிரசைகள் உணர்வுபூர்வமாகச் சட்டத்திற்கு எவ்வாறு கீழ்படிந்து நடப்பது என்பதையும், சமாதானம், சமூக முன்னேற்றம் என்பவற்றிற்குச் சட்டத்தினை எவ்வாறு பயன்படுத்துவது என்ற நெறிமுறையுணர்வு தெரிந்தவர்களாகவும் இருக்க வேண்டும். சட்டத்திற்குக் கீழ்;;படிதலை ஒரு பழக்கமாக அல்லாமல் தமது கொள்கையாகக் கடைப்பிடிக்க வேண்டும. லஸ்கியின் வார்த்தையாகிய “நலன்புரி சமூகம் ஒன்றிற்காகச் சட்டத்திற்குக் கீழ்படிதல் அவசியமானதாகும். சட்டங்கள் கீழ்படிதலை மட்டும் வலியுறுத்துவதாக இருக்கக் கூடாது. அரசின் பௌதீகப் பலத்தினாலும், ஏற்றுக் கொள்ளக் கூடிய அதிகாரத்தினாலும் சட்டங்கள் உருவாக்கப்படுபவைகளாக இருக்க வேண்டும்” என்பது கவனத்தில் கொள்ளத்தக்கதாகும்.