Education is the Most Powerful Weapon Which You Can Use to Change the World. – Nelson Mandela-

ஜனாதிபதியை வலுப்படுத்தியுள்ள பதினெட்டாவது அரசியலமைப்புத் திருத்தம் - 3.5 out of 5 based on 2 votes
1 1 1 1 1 1 1 1 1 1 Rating 3.75 (2 Votes)

 

(தினக்குரல் 2011.11.06 , 2011.11.13 ஆகிய திகதிகளில் பிரசுரிக்கப்பட்டது)

clip_image002 காலம் சென்ற முன்னைநாள் ஜனாதிபதி ஜே.ஆர் ஜெயவர்த்தனாவினால் உருவாக்கப்பட்டு 1978 ஆம் ஆண்டு முதல் நடைமுறையிலிருக்கும் இலங்கை ஜனநாயக சோஷலிச குடியரசின் அரசியல் யாப்பு இதுவரை பதினேட்டுத்தடவைகள் திருத்தப்பட்டுள்ளது. இவ்வகையில் அண்மையில் மூன்றில் இரண்டு பெரும்பாண்மையுடன் நிறைவேற்றப்பட்ட பதினெட்டாவது அரசியலமைப்புத் திருத்தம் ஜனாதிபதியாக ஒருவர் பதவி வகிப்பதற்கு விதிக்கப்பட்டிருந்த கால எல்லையினை இல்லாதொழித்ததுடன், அரசியலமைப்புப் பேரவையினையும் இல்லாதொழித்து அதற்குப் பதிலாகப் பாராளுமன்றப் பேரவை என்ற பெயரில் புதியதொரு பேரவையினையும் தோற்றிவித்துள்ளது.இவைகள் இலங்கையின் அரசியல் கலாசாரம்,ஜனநாயகம்,நல்லாட்சி என்பவைகளில் செலுத்தக்கூடிய செல்வாக்குத் தொடர்பாகப் பல்வேறுபட்ட அச்சம் கலந்த கருத்துக்கள் தெரிவிக்கப்பட்டு வருகின்ற இத்தருணத்தில் பதினெட்டாவது திருத்தம் கொண்டுள்ள உள்ளடக்கம் தொடர்பாக இக்கட்டுரை விவாதிக்கின்றது.

ஜனாதிபதியின் நிலை

அரசியலமைப்பின் சரத்து 31 (2) ஜனாதிபதிப் பதவிக்கு மக்களால் இருமுறை தேர்ந்தேடுக்கப்பட்டுள்ள ஆள் எவரும் அதன் பின்னர் அப்பதவிக்குத் தேர்ந்தேடுக்கப்படலாகாது எனக் கூறுகின்றது. பதினெட்டாவது அரசியலமைப்புத் திருத்தத்தின் மூலம் இச்சரத்து 31 (2) நீக்கப்பட்டுள்ளதுடன் மக்கள் வாக்களிப்பதன் மூலம் ஒருவர் எத்தனை தடவையும் ஜனாதிபதியாகத் திரும்பத் திரும்ப தேர்ந்தெடுக்கப்படலாம் என்ற புதிய விளக்கத்தினை அரசியல்யாப்பு வெளிப்படுத்தியுள்ளது.

ஒருவர் எத்தனை தடவையும் ஜனாதிபதியாக தேர்ந்தெடுக்கப்படலாம் என்ற இப்புதிய நிலைப்பாடு இலங்கையின் அரசியல் கலாசாரத்தில் அதிகாரத்துவ ஆட்சி நிலைப்படுத்தப்படுவதற்குக் காரணமாக அமையலாம். மேலும் இலங்கையின் ஜனநாயகம் இல்லாதொழிக்கப்பட்டு நல்லாட்சி சீர்கேடுவதற்கும் காரணமாகலாம்.

அரசியலமைப்பின் சரத்து 32 (3) ஜனாதிபதி அவரது பதவி காரணமாகப் பாராளுமன்றத்திற்கு வருகை தருவதற்கும்,உரையாற்றுவதற்கும்,செய்திகள் அனுப்புவதற்கும் எந்த நேரத்திலும் உரிமையுடையவராகும் எனக் கூறுகின்றது. இவ்வாறான சந்தர்ப்பத்தில் வாக்களிக்கும் உரிமையைத் தவிர எல்லா வகையான சிறப்புரிமைகளையும்,விடுபாட்டு உரிமைகளையும்,தத்துவங்களையும் ஜனாதிபதி பெற்றுக்கொள்வார். மேலும் பாராளுமன்றத்தின்,அதன் உறுப்பினர்களின் சிறப்புரிமைகளை மீறியதற்காக ஜனாதிபதி பொறுப்பேற்கலாகாது எனக் கூறுகின்றது.பதினெட்டாவது அரசியலமைப்புத் திருத்தத்தின் மூலம் சரத்து 32 (3) நீக்கப்படுவதுடன், அது பின்வருமாறு திருத்தப்பட்டுள்ளது.ஜனாதிபதி தனது பதவியின் நிமித்தம் மூன்று மாதங்களுக்கொருதடவை பாராளுமன்றத்திற்கு வருகை தருதல் வேண்டும். இவ்வாறான சந்தர்ப்பத்தில் வாக்களிக்கும் உரிமையினைத் தவிர எல்லா வகையான சிறப்புரிமைகளையும்,விடுபாட்டு உரிமைகளையும்,தத்துவங்களையும் ஜனாதிபதி பெற்றுக்கொள்வார்.மேலும் பாராளுமன்றத்தின்,அதன் உறுப்பினர்களின் சிறப்புரிமைகளை மீறியதற்காக ஜனாதிபதி பொறுப்பேற்கலாகாது.திருத்தப்பட்ட மூன்றாம் பந்தியை அடுத்து ஜனாதிபதி தனது பதவியின் நிமித்தம் பாராளுமன்றத்தில் உரையாற்றுவதற்கும்,செய்திகளை அனுப்புவதற்கும் உரிமையுடையவராகும் என்ற வாசகம் சேர்க்கப்பட்டுள்ளது.

கால அடிப்படையில் ஜனாதிபதி பாராளுமன்றத்திற்கு வருகை தருவது அவரது அதிகாரத்தினை மேலும் அதிகரிக்கலாம். ஜனாதிபதி பாராளுமன்றத்திற்கு வருகை தருவது மக்கள் தேர்தல் மூலம் தெரிவு செய்து சட்ட சபைக்கு அனுப்பும் பிரதிநிதிகளின் சுதந்திரமான செயற்பாட்டில் தேவையற்ற தலையீட்டினை நிர்வாகத்துறை ஏற்படுத்த வாய்ப்பினை ஏற்படுத்திக் கொடுப்பதாக அமையலாம். இதன் மூலம் வலு வேறாக்கல் தத்துவம் கருத்தில் கொள்ளப்படாத நிலை தோன்றியுள்ளது.நிர்வாக அதிகாரம் பொருந்திய ஜனாதிபதியின் கட்டுப்பாட்டினால் பாராளுமன்றம் தனது செயற்பாட்டு அதிகாரத்தினை இழக்கலாம். அதே நேரம் சட்ட சபையில் சரியான சிந்தனையாற்றல் உள்ள உறுப்பினர்களின் அங்கத்துவம் உள்ள நிலையில் குறிப்பிட்ட திருத்தம் கேள்விக்குள்ளாகவும் வாய்ப்புள்ளது.மறுபக்கத்தில் பாராளுமன்ற நிகழ்வுகளைத் திறமையாகக் கையாளுவதற்கு நிர்வாகத்துறைக்குச் சட்ட ரீதியான அங்கீகாரமும்,சந்தர்ப்பமும் வழங்கப்பட்டுள்ளது.

பராளுமன்றப்பேரவை

அரசியலமைப்பிற்குக் கொண்டுவரப்பட்ட பதினேழாவது திருத்தத்தில் சரத்து 41 A அரசியலமைப்பு பேரவையினை உருவாக்கியுள்ளது. இப்பேரவை உறுப்பினர்களை பின்வரும் வகையில் உள்ளடங்கியிருப் பார்கள் என பதினேழாவது திருத்தம் கூறுகின்றது.

  1. பிரதம மந்திரி
  2. சபாநாயகர்
  3. பாராளுமன்ற எதிர்க்கட்சித் தலைவர் ;
  4. ஜனாதிபதியால் நியமிக்கப்படும் ஒருவர்
  5. பிரதமமந்திரி,எதிர்கட்சித் தலைவர் ஆகியோர்கள் பெயர் குறித்து ஜனாதிபதிக்கு அனுப்பும் பெயர்களிலிருந்து ஜனாதிபதியால் நியமிக்கப்படும் ஐந்து பேர்கள்
  6. பிரதமமந்திரி ,எதிர்கட்சித் தலைவர் சாராத ஏனைய பாராளுமன்ற உறுப்பினர்களின் பெரும்பான்மையினரின் உடன்பாட்டுடனான ஒருவர் என பத்துப் பேர்கள் அடங்குகின்றனர்.

பதினெட்டாவது அரசியலமைப்புத் திருத்தத்தின் மூலம் சரத்துக்கள் 41 A யிலிருந்து 41 H வரையிலான பகுதிகள் நீக்கப்பட்டுள்ளன.இச்சரத்துக்களுக்குப் பதிலாக பதினெட்டாவது அரசியலமைப்புத் திருத்தம் அத்தியாயம் VII A யும் சரத்து 41 A யும் பாராளுமன்றப் பேரவை எனத் திருத்தியுள்ளது. இப்பேரவையில்

  1. பிரதமமந்திரி
  2. சபாநாயகர்
  3. எதிர்கட்சித்தலைவர்
  4. பிரதமமந்திரியின் கட்சியை சேர்ந்த ஒரு பாராளுமன்ற உறுப்பினர்
  5. எதிர் கட்சித் தலைவரின் கட்சியை சேர்ந்த ஒரு பாராளுமன்ற உறுப்பினர்

பந்திகள் (4),(5) இல் குறிப்பிடப்படுபவர்கள் ஜனாதிபதியால் நியமிக்கப்படுவார்கள்.மேலும் மேலே குறிப்பிட்ட (4) மற்றும் (5) ஆம் பந்திகளின் நியதிகளின்படி நியமிக்கப்படுபவர்கள் (1),(2) மற்றும் (3) ஆம் பந்திகளில் வித்தந்துரைக்கப்பட்டுள்ள ஆட்களின் இனமல்லாதவர்களின் இனத்தைச் சேர்ந்தவர்களாக இருக்கும் வகையில் பெயர் குறிப்பிட்டு ஜனாதிபதியால் நியமிக்கப்படுதல் வேண்டும் எனப் பதினெட்டாவது அரசியலமைப்புப் திருத்தம் கூறுகின்றது.

அரசியலமைப்பின் பதினேழாவது திருத்தம் அரசியலமைப்புப் பேரவைக்கு பிரதமமந்திரியும் எதிர்கட்சித் தலைவரும் (5) ஆம் பந்திகளில் குறிப்பிடப்பட்டவர்களை பெயர்குறித்து அனுப்புவதற்கு பெயர்குறித்து அனுப்புவதற்கு பாராளுமன்றத்திலுள்ள அரசியல்கட்சித் தலைவர்கள்,சுயேட்சைக் குழுக்களின் தலைவர்களுடன் ஆலோசனை நடாத்தலாம். இவர்களில் மூன்று பேர்கள் பாராளுமன்ற உறுப்பினர்களின் ஆலோசனையின் பெயரில் சிறுபான்மை இனத்தவர்களிலிருந்து தெரிவு செயப்படலாம் எனக் கூறுகின்றது.

அனால் பதினெட்டாவது அரசியலமைப்புத் திருத்தம் பாராளுமன்றப் பேரவையின் எல்லா உறுப்பினர்களும் பாராளுமன்ற உறுப்பினர்களாக இருப்பார்கள் எனக் கூறுகின்றது. இதன் மூலம் அரசியலமைப்பின் பதினேழாவது திருத்தத்தின் (4),(5) மற்றும் (6) ஆம் பந்திகளில் குறிப்பிடப்படும் ஆட்கள் சமுக வாழ்க்கையில் நேர்மையும்,உயர்நிலையும் பெற்றவர்களிலிருந்து பெயர்குறிப்பிடப்பட்டு ஜனாதிபதியால் நியமனம் செயப்படலாம் என்பதும்,இவர்கள் எந்தவொரு அரசியல் கட்சியின் அங்கத்தவர்களாக இருக்கவேண்டிய அவசியமில்லை எனக் கூறப்படுவது வலுவிழந்து விடுகின்றது.இதனால் அரசியலமைப்பின் பதினேழாவது திருத்தத்தின் மூலம் உருவாக்கப்பட்ட அரசியலமைப்பு பேரவையில் வேறுபட்ட ஆட்கள் பேரவைக்கு வருவதற்கு வழங்கப்பட்ட நெகிழ்வுத்தன்மையும், வெளிப்படைத்தன்மையும் பதினெட்டாவது அரசியலமைப்புத் திருத்தத்தின் மூலம் உருவாக்கப்பட்ட பாராளுமன்றப் பேரவையில் இல்லாதொழிக்கப்பட்டுள்ளது. எனவே பாராளுமன்றப் பேரவை தற்போது வேறுபட்ட அபிப்பிராயங்களைக் கொண்ட பிரதிநிதித்துவத்தை கொண்டிருப்பதில் குறைபாடு கொண்டுள்ளது. ஜனாதிபதி பாராளுமன்றப் பேரவைக்குத் தெரிவு செய்யும் உறுப்பினர்கள் ஐந்து பேர்களில் மூன்று பேர்கள் மீது (பிரதமமந்திரி,சபாநாயகர் ,பிரதமமந்திரியின் கட்சியை சேர்ந்த ஒரு பாராளுமன்ற உறுப்பினர்) மேலதிக செல்வாக்குச் செலுத்தக் கூடியவராகவுள்ளார்.

அரசாங்க (பிரதான) நியமனங்கள்

அரசியலமைப்பிற்குக் கொண்டுவரப்பட்ட பதினேழாவது திருத்தத்தில் சரத்து 41 B(1) பேரவையின் சிபாரிசு இல்லாமல் ஆளேவரும் ஆணைக்குழுக்கள் எதனதும் தவிசாளரா (Chairman) அல்லது அங்கத்தவராக ஜனாதிபதியால் நியமனம் செய்ய முடியாது எனக் கூறுகின்றது. இவ்வாறான ஆணைக்குளுக்களாக

  1. தேர்தல் ஆணைக்குழு
  2. பகிரங்க சேவை ஆணைக்குழு
  3. தேசிய போலீஸ் ஆணைக்குழு
  4. இலங்கை மனித உரிமை ஆணைக்குழு
  5. இலஞ்சம்,ஊழல் குற்றச்சாட்டுக்களை விசாரணை செய்வதற்கான ஆணைக்குழு
  6. நிதி ஆணைக்குழு
  7. எல்லை நிர்ணய ( Delimitation ) ஆணைக்குழு என்பவைகள் உள்ளடக்கப்பட்டுள்ளன

மேலும் சரத்து 41 B (1) பின்வரும் அட்டவணையில் குறிப்பிடப்படும் பதவிகளுக்கான நியமனங்கள் ஜனாதிபதியினால் பேரவைக்கு சிபாரிசு செய்யப்பட்டு இத்தகைய நியமனங்கள் பேரவையினால் அங்கீகரி க்கப்பட்டாலன்றி ஜனாதிபதியினால் நியமிக்கப்படலாகாது எனக் கூறுகின்றது அவைகளாவன

அட்டவணை

பாகம் i

  1. பிரதம நீதியரசரும் உயர் நீதிமன்ற நீதிபதிகளும்
  2. மேன்முறையீட்டு நீதிமன்றத் தலைவரும் நீதிபதிகளும்
  3. நீதித்துறைச் சேவை ஆணைக்குழுவின் தவிசாளர் தவிர்ந்த உறுப்பினர்கள்

பாகம் ii

  1. சட்டத்துறை தலைமையதிபதி
  2. கணக்காய்வாளர் தலைமையதிபதி
  3. போலீஸ் பரிசோதகர் தலைமையதிபதி
  4. நிர்வாகத்திற்கான பாராளுமன்றத்திற்கான ஆணையாளர் (ஒம்புட்ஸ்மன்)
  5. பாராளுமன்ற செயலாளர் நாயகம்

பதினெட்டாவது அரசியலமைப்புத் திருத்தத்தின்படி சரத்து 41 A (1) இற்கான அட்டவணை i இல் குறிப்பிடப்பட்டுள்ள ஆணைக்குழுக்களின் தவிசாளர் ( Chairman )மற்றும் உறுபினர்கள் ஜனாதிபதியினால் நியமனம் செய்யப்படுதல் வேண்டும் எனக் கூறுகின்றது.ஜனாதிபதியினால் மேற்கொள்ளப்படுகின்ற இந்நியமனங்களுக்குப் பாராளுமன்றப் பேரவையின் அவதானிப்பினை ஜனாதிபதி கோருதல் வேண்டும். சரத்து 41 A (8) ஆனது சரத்து 41 A (1) பந்தியில் குறிப்பிடப்படும் பாராளுமன்றப் பேரவையின் அவதானிப்புக்களை ஜனாதிபதி கோரும் போது இவ் அவதானிப்புக்கள் ஒருவார காலத்திற்குள் சபாநாயகரினூடாக ஜாதிபதியை சென்றடைதல் வேண்டும்.பேரவை ஒருவார காலத்திற்குள் தனது அவதானிப்புக்களைத் தெரிவிக்கத் தவறும் பட்சத்தில் ஜனாதிபதி மேற்கூறப்பட்ட நியமனங்களைச் செய்வதற்கு முற்படுதல் வேண்டும்.

அரசியலமைப்பு பேரவை சிபாரிசுகளை மேற்கொள்ளும்போது அதிகாரத்தினைக் கொண்டிருந்தது. பாராளுமன்றப் பேரவை இப்போது அவதானிக்கும் அதிகாரத்தினை மட்டுமே கொண்டுள்ளது. அரசியலமைப்பு பேரவையின் சிபார்சுகளுக்கிணங்க ஜனாதிபதி நியமனங்களை செய்துவந்தார். தற்போது ஜனாதிபதி செய்கின்ற நியமனங்களை அவதானிப்பவர்களாகப் பாராளுமன்றப் பேரவை மாறியுள்ளது. இது இரு பேரவைகளுக்குமிடையிலான வலிமையான வேறுபாட்டினை எடுத்துகாட்டுகின்றது. இதனால் பாராளுமன்றப் பேரவை அரசியலமைப்பு பேரவையினை விட மிகவும் பலவீனமான பேரவையாக மாறியுள்ளதுடன் பற்கள் இல்லாததொரு சபையாகப் பாராளுமன்றப் பேரவை செயற்படும் நிலையினைத் தோற்றிவித்துள்ளது. முதன்மையான அரசாங்க பதவிகளுக்கான நியமனங்களை செய்வதற்கு ஜனாதிபதிக்குள்ள முழுமையான அதிகாரத்தினை இச் சரத்து குறித்து நிற்கின்றது. பேரவையின் அவதானங்களை ஜனாதிபதி கேட்க வேண்டும் என்ற நிர்பந்தம் எதனையும் பதினெட்டாவது திருத்தம் கொண்டிருக்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

பகிரங்க சேவை

அரசியலமைப்பிற்குக் கொண்டுவரப்பட்ட பதினேழாவது திருத்தத்தில் சரத்து 41 A (1) அரசியலமைப்பு பேரவையின் சிபாரிசுக்கு இணங்க ஜனாதிபதியால் பகிரங்க சேவை ஆணைக்குழுவோன்று நியமிக்கப்படுதல் வேண்டும் எனக் கூறுகின்றது. மேலும் அரசியலமைப்பு பேரவையின் சிபாரிசுக்கு இணங்க ஜனாதிபதி இவ் உறுப்பினர்களில் ஒருவரை தவிசாளராக நியமிக்க வேண்டும் எனக் கூறுகின்றது.பதினெட்டாவது அரசியலமைப்புத் திருத்தத்தின்படி சரத்து 54 (1) நீக்கப்பட்டு அது பின்வருமாறு திருத்தப்பட்டுள்ளது. பகிரங்க சேவை ஆணைக்குழு ஜனாதிபதியால் நியமனம் செய்யப்படும்.இதன் உறுப்பினர்களில் ஒருவர் தவிசாளராக ஜனாதிபதியால் நியமனம் செய்யப்படுவார்.

பதினேழாவது திருத்தத்தில் பகிரங்க சேவை அரசியலமைப்பு பேரவையின் சிபாரிசுக்கு இணங்க ஜனாதிபதியால் உருவாக்கப்பட்டது.பதினெட்டாவது அரசியலமைப்புத் திருத்தத்தின்படி ஜனாதிபதி தனது அறிவிற்குட்பட்டு பகிரங்க சேவை ஆணைக்குழுவினை உருவாக்க அனுமதியளிக்கப்பட்டுள்ளது. பாராளுமன்றப் பேரவைக்கு பகிரங்க சேவை ஆணைக்குழுவின் நியமனங்கள் தொடர்பில் அவதானம் செலுத்தும் அதிகாரம் வழங்கப்படவில்லை. பகிரங்க சேவை ஆணைக்குழுவினை நியமிப்பதில் இதுவரை ஜனாதிபதிக்கு இருந்து வந்த தடை இப்போது நீக்கப்பட்டுள்ளது.இதனால் சுதந்திரமான பகிரங்க சேவை ஆணைக்குழுவின் செயற்பாடு இல்லாதொழிக்கப்பட்டுள்ளது.

பதினேழாவது திருத்தத்தில் சரத்து 55 பகிரங்க சேவையாளர்களின் நியமனம்,பதவியுயர்வு, இடமாற்றம், ஒழுக்காற்றுக் கட்டுப்பாடு, பதவி நீக்கம் என்பன பகிரங்க சேவை ஆணைக்குழுவிடம் விடப்பட்டிருந்தது. இவ் உறுப்புரையின் (1) ஆம் பந்தியின் ஏற்பாடுகள் எவ்வாறு இருப்பினும் எல்லாத் திணைக்களத் தலைவர்களினதும் நியமனம், பதவியுயர்வு ,இடமாற்றம், ஒழுக்காற்றுக் கட்டுப்பாடு, பதவிநீக்கம் என்பன அமைச்சரவைக்கு உரித்தாக்கப்படுதல் வேண்டும். அமைச்சர்கள் ஆணைக்குழுவின் கருத்தினைக் கேட்டறிந்து கொண்டபின்னர் இவ் அதிகாரத்தைப் பிரயோகிக்க வேண்டும் எனக் கூறுகின்றது.

பதினெட்டாவது அரசியலமைப்புத் திருத்தத்தில் சரத்து 55 நீக்கப்பட்டு பின்வரும் திருத்தம் கொண்டுவரப்பட்டுள்ளது. அமைச்சர்கள் பகிரங்க சேவையாளர்கள் தொடர்பான எல்லாக் கொள்கை விடயங்களுக்கும் பொறுப்பாளர்களாகும். அதாவது பகிரங்க சேவையாளர்களின் நியமனம், பதவியுயர்வு, இடமாற்றம், ஒழுக்காற்றுக்கட்டுப்பாடு, பதவி நீக்கம் உட்பட அனைத்து விடையங்களையும் செய்தலும்,தீர்மானித்தலும் அமைச்சரவையாகும். மேலும் எல்லா திணைக்களத் தலைவர்களினதும் நியமனம் பதவியுயர்வு, இடமாற்றம், ஒழுக்காற்றுக்கட்டுப்பாடு, பதவிநீக்கம் என்பன பகிரங்க சேவை ஆணைகுழுவிற்குரித்தானதாகும்.

பகிரங்க சேவை அலுவலர்கள் தொடர்புடைய கொள்கை விடயங்கள் அமைச்சரவையினால் தீர்மானிக்கப்பட அனுமதிக்கப்படுகின்றது. திணைக்களத் தலைவர்களின் விடயங்களை கையாளுவதற்கு பகிரங்க சேவை ஆணைக்குழுவின் கருத்துக்களை கேட்டுப் பெற்றுக்கொள்ள வேண்டிய தேவை அமைச்சரவைக்கு இருக்கவில்லை.இது பகிரங்க சேவை ஆணைக்குழுவின் சுதந்திரமான செயற்பாட்டை வலுவிழக்கச் செய்கிறது.

தேர்தல் ஆணைக்குழு

இலங்கையின் நடைமுறையிலுள்ள அரசியலமைப்பிற்குக் கொண்டுவரப்பட்ட பதினேழாவது திருத்தத்தின் உறுப்புரை 104 (B) யின் முதலாம் பந்தி தேர்தல் ஆணைக்குழு அல்லது தேர்தல் ஆணையாளரின் அதிகாரங்கள் தொடர்பாகக் கூறுகின்றது. பதினேழாவது அரசியலமைப்புத் திருத்தத்தின் உறுப்புரை 104 (B) (4) (A) தேர்தலொன்று நடாத்தப்படுகின்ற காலப்பகுதிக்குள் அரசிற்கு அல்லது அரச கூட்டுத்தாபனங்களுக்குரிய ஏதேனும் அசையும் அல்லது அசையச் சொத்துக்கள் ஏதேனும் அரசியல் கட்சியை அல்லது சுயேட்சைக் குழுவை தேர்ந்தெடுப்பதற்கான அல்லது ஊக்கிவிப்பதற்கான அல்லது தடுப்பதற்கான நோக்கத்திற்காகப் பயன்படுத்தப்படுவதைத் தடுக்கும் அத்திகாரம் தேர்தல் ஆணைக்குழுவிற்கு அல்லது தேர்தல் ஆணையாளருக்குரியதாகும் எனக் கூறுகின்றது. உறுப்புரை 104 (B) (4) (B) தேர்தல் ஆணைக்குழுவினால் அறிவிக்கப்படுகின்ற விதிகளைச் செயற்படுத்துவது அரசாங்கச் சொத்துக்களுக்குப் பொறுப்பாகவுள்ள அனைத்து உத்தியோகத்தர்களதும் கடமையாகும் எனக் கூறுகின்றது. உதாரணமாக உறுப்புரை 104 வழங்கிய அதிகாரத்தைப் பயன்படுத்தி 2009 ஆம் 2010 ஆம் ஆண்டுகளில் நடைபெற்ற ஜனாதிபதி மற்றும் பொதுத்தேர்தல்களில் பொதுச்சொத்துக்கள் தவறாகப் பயன்படுத்தப்படுவதைத் தடுக்கும் சுற்றுநிருபங்களைத் தேர்தல் ஆணையாளர் வெளியிட்டிருந்தார். இச் சுற்றுநிருபங்கள் வானூர்திகள் உட்பட அரசிற்குச் சொந்தமான அனைத்து வாகனங்கள்,அரசிற்குச் சொந்தமான சுற்றுலா விடுதிகள், விடுமுறை விடுதிகள்,வாடிவீடுகள்,அரசினால் பராமரிக்கப்படும் கட்டிடங்கள்,அரசிற்குச் சொந்தமான கட்டிடங்கள், அமைச்சர்களுக்கும் அரச நிறுவனங்களுக்கும் வழங்கப்படும் வசதிகள் பொதுமக்களின் தேவைகளுக்குப் பயன்படுத்தவென ஒதுக்கப்பட்ட பொதுநிதி, பொதுநிறுவனங்கள், கூட்டுத்தாபனங்கள்,அரசநிதியில் சுயமாக இயங்கும் நிறுவனங்கள் ஆகியவற்றில் பணிபுரியும் ஊழியர்கள்,அரசபடைகள்,காவல் துறையினர்,அரச வெகுசனத் தொடர்பு சாதனங்கள் ,ஏனைய பொதுச் சொத்துக்கள் ஆகியவற்றைப் பொதுச்சொத்துக்களாக அடையாளப்படுத்தியிருந்தன. மேலும் தேர்தல் காலங்களில் புதிய அரச நியமனங்கள்,பதவியுயர்வுகள் ,இடமாற்றங்கள் போன்றன வழங்கப்படக்கூடாது எனவும் தேர்தல் ஆணையாளர் அரசாங்கத்தினை நெறிப்படுத்தியிருந்தார்.

தேர்தல் காலங்களில் ஏற்படக்கூடிய விளைவுகள்

பதினேழாவது அரசியல் யாப்புத் திருத்தத்தின் உறுப்புரை 104 B (4) (A) பந்தியை உடனடுத்து வருகின்ற பந்தியில் பின்வருமாறு உட்புகுத்துவதன் மூலம் திருத்தப்பட்டுள்ளது. சந்தேகத்தினை நீக்கும் வகையில் தேர்தலொன்றை நடாத்துவதற்கான உத்தரவினை அல்லது மக்கள் தீர்ப்பு ஒன்றினை நாடாத்துவதற்கான உத்தரவினை விடுக்கும் திகதியிலிருந்து ஆணைக்குழுவினால் வழங்கப்படும் நெறிப்படுத்தல்களானது பின்வருமாறு அமையலாம்.

  1. எந்தத் தேர்தலோ அந்தத் தேர்தலுக்கு ஏற்பத் தேர்தலை நடாத்துவதுடன் அல்லது மக்கள் தீர்ப்பை நடாத்துவதுடன் நேரடியாகத் தொடர்புபட்ட கடமைகளுக்கு வரையறுக்கப்படுதல் வேண்டும்.
  2. ஏதேனும் வகையில் நேரடியாகப் பகிரங்க சேவை பணிகளுடன் அல்லது அரசியலமைப்பின்படி நியமிக்கப்பட்ட,என்ன நோக்கத்திற்காக ஆணைக்குழு நியமிக்கப்பட்டதோ அந்த நோக்கத்திற்கு ஏற்ப,பகிரங்க சேவை ஆணைக்குழு அல்லது நீதித்துறைச் சேவை ஆணைக்குழுவின் நிர்வாக வீச்சு எல்லக்குட்படும் ஏதேனும் பணிகளுடன் நேரடியாகத் தொடர்புபட்டு நெறிப்படுத்தல்களை வழங்குதலாகாது.

பதினேழாவது அரசியலமைப்புத் திருத்தம் அரச அதிகாரிகள் உட்பட அரசியல் கட்சிகளினால் அரச சொத்துக்கள் தேர்தல் காலங்களில் தவறாகப் பயன்படுத்தப்படுவதை தடுக்கும் அதுகாரத்தினை தேர்தல் ஆணைக்குழுவிற்கு வழங்கியிருந்தது.பதினெட்டாவது அரசியல் யாப்புத் திருத்தத்தின் உறுப்புரை 104 (B) (4) (A) தேர்தல் ஆணைக்குழுவிற்கு இதுவரை இருந்துவந்த அதிகார வரம்பெல்லையினை பாரியளவில் குறைத்ததினால் தேர்தல் ஆணைகுழு அதிகாரம் குறைக்கப்பட்ட திணைக்களமாக்கப்பட்டுள்ளது.

குறிப்பாக அரசியல் கட்சிகள் அரச சொத்துக்களை தேர்தல்காலப் பிரச்சாரங்களுக்குப் பயன்படுத்துவதைத் தடுப்பதற்கிருந்த அதிகாரம் குறைக்கப்பட்டுள்ளது. எந்தத் தேர்தலோ அந்தத் தேர்தலுக்குரித்தான எல்லைக்குள்ளிருக்கும் அசையும் அசையாச் சொத்துக்களை அரசியல் கட்சிகள் பயன்படுத்த முடியாதெனக் கருத்துக் கொள்ள முடியும். அவ்வாறாயின் ஏனைய அசையும் அசையாச் சொத்துக்களை அரசியல் கட்சிகள் பயன்படுத்தக்கூடிய ஆபாயம் உள்ளது எனலாம்.

நேரடியாகத் தேர்தலுடன் தொடர்புபடாத வகையில் அரசாங்கத்தின் செயற்பாடுகளைத் தடுப்பதற்கான தேர்தல் ஆணையாளரின் அதிகாரம் மட்டுப்படுத்தப்பட்டுள்ளதுடன் தேர்தல் காலங்களில் காவல்துறை உட்பட பகிரங்க சேவையினை நெறிப்படுத்த தேர்தல் ஆணையாளருக்கு இருந்த அதிகாரம் இல்லாதொழிக்கப்பட்டுள்ளது.இதன் மூலம் தேர்தல் காலங்களில் பகிரங்க சேவை தொடர்பாக அரசிற்கு இருந்த யாப்பு ரீதியான கட்டுப்பாடுகள் அகற்றப்பட்டுள்ளன.இதனால் அரச சொத்துக்களைத் தவறாகப் பயன்படுத்தவும் அரச நியமனங்கள்,பதவியுயர்வுகள்,மாற்றங்களைத் தேர்தல்காலங்களில் நடுநிலையற்றுச் செயற்படுத்த சந்தர்பங்கள் உள்ளது.

பதினேழாவது அரசியலமைப்புத் திருத்தத்தின் (5) ஆம் பந்தியில் அதன் (B) (C) (D) ஆகிய உப பந்திகள் வெகுஜனத் தொடர்பு சாதனங்களுக்குத் தேர்தல் ஆணையாளர் வழங்கும் நெறிப்படுத்தல்கள் தொடர்பாகக் கூறுகின்றது. பதினெட்டாவது அரசியலமைப்புத் திருத்தமானது பதினேழாவது அரசியலமைப்புத் திருத்தத்தின் (5) ஆம் பந்தியில் அதன் (B) (C) (D) பகுதிகளை நீக்கிவிட்டு அதற்குப் பதிலாக பின்வரும் புதிய பந்தி (B) யினை அரசியல் யாப்பில் சேர்த்துள்ளது. புதிய பந்தி (B) யின்படி எந்தத் தேர்தலோ அந்தத் தேர்தலுக்கேற்ப வெகுஜனத் தொடர்பு சாதனங்களுக்கு பந்தி (A) யின் கீழ் வழங்கப்பட்ட எவையேனும் நெறிப்படுத்தல் ஒழுங்குமுறைக்கு ஏற்ப இணங்கி நடப்பதை உறுதிப்படுத்துவதற்குத் தேவையான எல்லா நடவடிக்கைகளையும் ஒலிபரப்பு,ஒளிபரப்பு செயற்படுத்துனர்கள் அல்லது செய்திப்பத்திரிகைகளின் உரிமையாளர்கள் அல்லது வெளியீட்டாளர்கள் எடுத்தல் அவர்களின் கடமையாகும்.

ஆரம்ப காலத்தில் அரச வெகுஜனத் தொடர்பு சாதனங்கள் தேர்தல் ஆணைக்குழுவின் கட்டளைகளுக்கும் நெறிப்படுத்தல்களுக்கும் கட்டுப்பட்டு செயற்பட்டு வந்தன.அரச ஊடகங்கள் நடுநிலையில்லாது தேர்தல் தொடர்பாகச் செயற்பட்டால் அந்நிறுவனங்களுக்கு தகுதி வாய்ந்த அதிகாரியை நியமிக்கும் அதிகாரம் தேர்தல் ஆணையாளருக்கு இருந்தது. இப்போது இவ்வதிகாரம் இல்லாதொழிக்கப்பட்டுள்ளது.அதாவது தேர்தல் காலங்களில் அரச கட்டுப்பாட்டிலான தொடர்பு சாதனங்களுக்கு தேர்தல் ஆணையாளர் செய்திகளை வழங்கலாம்.ஆனால் அவற்றை அவை வெளியிடாது விட்டால் தேர்தல் ஆணைக்குழுவினால் எதுவும் செய்யமுடியாது.இது தேர்தல் காலங்களிற்கு முன்னரும் பின்னரும் தேர்தல் தொடர்பாக தேர்தல் ஆணைக்குழுவிடமிருந்து பெறக்கூடிய சுதந்திரமான தகவல் பரிமாற்றங்களைத் தடைசெய்வதுடன் நல்லாட்சிப்பண்புகளையும் அழித்து விடுகின்றது.

முடிவுரை

இலங்கை ஜனநாயக சோஷலிசக் குடியரசு அரசியல் யாப்பிற்குக் கொண்டுவரப்பட்ட பதினெட்டாவது அரசியலமைப்புத் திருத்தத்தினால் தேர்தல் ஆணைக்குழுவினதும் தேர்தல் ஆணையாளரினதும் அதிகாரம் கட்டுப்படுத்தப்பட்டுள்ளதாகவும், இதன்மூலம் எதிர்காலத்தில் சுதந்திரமானதும், நேர்மையானதுமான தேர்தலை நடாத்தமுடியாது போகலாம் எனவும் பலரால் அச்சம் தெரிவிக்கப்படுகிறது.

எந்தத் தேர்தலோ அந்தத் தேர்தலோடு நேரடியாகத் தொடர்புபடாத அரச நியமனங்கள் ,பதவியுயர்வுகள் ,மாற்றங்கள் வழங்கப்படுவதை பதினெட்டாவது அரசியலமைப்புத் திருத்தத்தின் கீழ் தடுப்பது கடினமானதாகும்.இதேபோன்று எந்தத் தேர்தலோ அந்தத் தேர்தலோடு நேரடியாகத் தொடர்புபடாத அசையும் அசையாப் பொதுச்சொத்துக்கள் தேர்தலுக்காகப் பயன்படுத்தப்படுவதையும் தடுக்க முடியாது. இவைகளைத் தடுப்பதற்கான அதிகாரங்கள் பதினேழாவது அரசியலமைப்புத் திருத்தத்தில் தேர்தல் ஆணைக்குழுவிற்கு இருந்தது.ஆனால் பதினெட்டாவது அரசியலமைப்புத் திருத்தத்தின் கீழ் இவ்வதிகாரம் கடுப்படுத்தப்பட்டுவிட்டன.இதன் மூலம் சுதந்திரமானதும்,நீதியானதுமான தேர்தல்கள் எதிர்காலத்தில் நடாத்தப்படுவதற்கான சந்தர்பங்கள் குறைவடைந்துவிட்டன என்றே கூறலாம்.

பதினெட்டாவது அரசியலமைப்புத் திருத்தத்தின் அடிப்படை நோக்கம் முக்கியமான உயர்பதவிகள் மீது ஜனாதிபதிக்கு முழுமையான கடுப்பாட்டினையும் ,அதிகாரத்தினையும் வழங்குவதேயாகும்.இதன்மூலம் ஜனாதிபதி சர்வவல்லமை போருந்திய நிர்வாகத் தலைவராக்கப் பட்டுள்ளார் .ஜனநாயகம்,நல்லாட்சிப் பண்புகளைத் தோற்கடித்து சர்வாதிகார ஆட்சியை தோற்றிவிக்க விருப்பமுடைய ஒருவருக்கு பதினெட்டாவது அரசியலமைப்புத் திருத்தம் மிகவும் பக்கபலமாகவுள்ளது

பயங்கரவாதத்தினை நாட்டிலிருந்து பூரணமாக இல்லாதொழிப்பதற்கும், யுத்தத்திற்குப் பின்னரான சமூகப் பொருளாதார அபிவிருத்தியை மேற்கொள்வதற்கும் பலமான நிர்வாகத்துறை அவசியமானதுடன் அரசியல் உறுதித்தன்மையினையும், பலத்தினையும் நிர்வாகத்துறையினாலேயே வழங்க முடியும் என அரசாங்கம் நம்புகின்றது.

ஜனாதிபதியைத் தெரிவு செய்யும் அதிகாரம் மக்களிடமேயுள்ளது.யார் ஜனாதிபதியாக வரவேண்டும் என்பதைத் தீர்மானிக்கும் மக்களின் இறைமை அதிகாரம் இதன்மூலம் மேலும் வலுப்பெற்று பெருக்கமடையலாம். ஒருவரை எத்தனை தடவையும் ஜனாதிபதியாகத் தெரிவு செய்ய அனுமதிப்பது சிறந்த ஜனநாயகமாகவே கருதமுடியும் எனவும் அரசாங்கம் நம்புகின்றது.

உண்மையில் சிறந்த அறிவும்,சிந்திக்கும் ஆற்றலும் நல்லாட்சிப் பண்புகளும் நிறைந்த அரசியல் கலாசாரம் நிலவும் நாடுகளிலேயே இக்கருத்து சாத்தியமானதாகும். எதிர்காலத்தில் இலங்கையின் அரசியல் கலாசாரத்தில் அதிகாரத்துவ ஆட்சி நிலைப்படுத்தப்படுவதற்கும் ஜனநாயகம் இல்லாதொழிக்கப்பட்டு நல்லாட்சி சீர்கேடுவதற்கும் இது காரணமாகலாம் என வாதிடுபவர்களின் கருத்தினை நிராகரிக்க முடியாது.

 

Share

Who's Online

We have 61 guests and no members online

+1 Me

Subscribe

Enter your email address:

Delivered by FeedBurner

 About Prof. Thanabalasingam Krishnamohan

Prof. Thanabalsingam Krishnamohan is a Professor in Political Science in Eastern University of Sri Lanka .