Education is the Most Powerful Weapon Which You Can Use to Change the World. – Nelson Mandela-

1 1 1 1 1 1 1 1 1 1 Rating 0.00 (0 Votes)

( தினக்குரல் , புதிய பண்பாடு இதழில் 2013.07.20, 2013.07.21 ஆகிய திகதிகளில் பிரசுரிக்கப்பட்டது )

clip_image002

காலத்திற்கு காலம் பதவிக்கு வரும் அரசாங்கம் தமிழ் மக்களின் மனக்குறைகளை நிவர்த்தி செய்வதற்காக வாக்குறுதிகளை வழங்குவதும் பின்னர் அதனை நிறைவேற்றாமல் விடுவதும் வரலாறாகிவிட்டது. இலங்கை இந்திய ஒப்பந்தத்தின் மூலம் மாகாணசபைகளை உருவாக்கியிருந்த பதின்மூன்றாவது அரசியல் யாப்பு திருத்தத்திற்கு மீண்டும் கொண்டு வரப்படவுள்ள புதிய திருத்தம் (13 A ) இதற்கு மேலும் உதாரணமாகியுள்ளது. இலங்கை அரசாங்கம் தமிழ் மக்களின் அரசியல் தீர்வு விடயத்தில் வழங்கியிருந்த பல வாக்குறுதிகளை நிறைவேற்றாமல் தவறிவிட்டது. உள்நாட்டு யுத்தம் முடிவடைந்த பின்னர் அதிகாரப் பகிர்வின் மூலம் இலங்கை மக்கள் அனைவரையும் சமத்துவமாக நடாத்தவுள்ளதாக சர்வதேச சமூகத்திற்கு பல தடவைகள் இலங்கை அரசாங்கம் வாக்குறுதி வழங்கி வந்துள்ளது.

அண்மைக்கால வாக்குறுதிகள்

 

2009 ஆம் ஆண்டு வைகாசி மாதம் உள்நாட்டு யுத்தம் முடிவடைந்த பின்னர் இலங்கை வந்த பான் கீ மூனுடன் இணைந்து இலங்கை ஜனாதிபதி வெளியிட்டிருந்த கூட்டறிக்கையில் அரசியல் தீர்வு தொடர்பான பல உத்தரவாதங்களை வழங்கியிருந்தார். அதில் பதின்மூன்றாவது அரசியல் யாப்புத் திருத்தம் முழுமையாக அமுல்படுத்தப்படும் எனத் தெரிவித்திருந்தார்.

சர்வகட்சி பிரதிநிதிகள் குழுவிற்கு ( APRC ) உதவி செய்வதற்காக 2009ஆம் ஆண்டு ஆடி மாதம் 11ஆம் திகதி பல்லின நிபுணர்கள் குழு ஒன்றை ஜனாதிபதி நியமித்தார். இக்குழு மத்தியில் உரையாற்றிய ஜனாதிபதி “மோதல்களுக்கான மூலகாரணங்களை பின்னணியாகக் கொண்டும் இலங்கையின் இறைமையினை விட்டுக் கொடுக்காமலும் ஆகக் கூடிய அதிகாரப் பகிர்விற்கான செயற்திட்டங்களைக் கொண்ட அரசியல் தீர்வினை வரைய வேண்டும்” எனக் கூறியிருந்தார்.

இதேபோன்று 2009 ஆம் ஆண்டு பங்குனி மாதம் ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையின் பத்தாவது அமர்வில் கலந்து கொண்டு அமைச்சர் மகிந்த சமரசிங்க ஆற்றிய உரை ஒன்றில் “பல தசாப்தங்களாக எங்களுடைய தேசியமட்ட விவாதங்கள் இன விடயங்களால் ஆதிக்கம் செலுத்தப்பட்டது. இன விவகாரங்கள் அரசியல் தீர்வினால் தீர்க்கப்பட வேண்டிய பிரச்சினையாகும். 1987ஆம்; ஆண்டு செய்யப்பட்ட பதின்மூன்றாவது அரசியல் யாப்புத் திருத்தத்தினை சர்வகட்சி பிரதிநிதிகள் குழுவின் சிபார்சின் படி முறையாக எங்களால் அமுல்படுத்த முடியும்.” எனத் தெரிவித்தார்.

மேலும் 2011ஆம் ஆண்டு இலங்கையின் வெளிவிவகார அமைச்சர் ஜீ எல் பீரிஸ் புது டெல்லிக்கு விஜயம் செய்து பேச்சுவார்த்தை நடாத்திய பின்னர் இந்திய வெளிவிவகார அமைச்சருடன் இணைந்து வெளியிட்ட கூட்டறிக்கையில் அதிகாரப் பகிர்வு மற்றும் பொது நல்லிணக்கத்தினை இலங்கையில் ஏற்படுத்துவதற்குத் தேவையான அடிப்படை சூழலை பதின்மூன்றாவது அரசியல் யாப்பு திருத்தம் உருவாக்கும்” எனத் தெரிவித்திருந்தார்.

2012ஆம் ஆண்டு தை மாதம் இந்திய வெளிவிவகார அமைச்சர் எஸ். எம் கிருஸ்ணா ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஸாவினை சந்தித்த பின்னர் இலங்கை வெளிவிவகார அமைச்சர் ஜீ.எல் பீரிஸ்சுடன் இணைந்து கலந்து கொண்ட பத்திரிகையாளர் மகாநாட்டில் “இலங்கை அரசியல் யாப்பிற்குக் கொண்டு வரப்பட்ட பதின்மூன்றாவது அரசியல் யாப்பு திருத்தத்தினை முழுமையாக அமுல்படுத்துவதன் மூலம் அரசியல் தீர்வு நோக்கி நகர்வதற்கு இலங்கை அரசாங்கம் பொறுப்புடன் செயற்படும் என பல சந்தர்ப்பங்களில் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஸா எங்களுக்கு கூறியுள்ளார். ஆகவே அர்த்தமுள்ள அதிகாரப் பகிர்வு இலங்கையில் உருவாக்கப்படும். இது தொடர்பாக நடைபெறும் பேச்சுவார்த்தைகளை அனுகூலமான மற்றும் விரைவான அணுகுமுறைகள் மூலம் அவதானித்து வருகின்றோம்.” எனத் தெரிவித்திருந்தார்.

ஆனால் தற்போது இலங்கையின் அரசியல் யாப்பிற்குச் செய்யப்பட்ட பதின்மூன்றாவது திருத்தத்தினை மீண்டும் திருத்துவதற்கான முயற்சியில் அரசாங்கம் ஈடுபட்டுள்ளது. இதன்மூலம் பதின்மூன்றாவது யாப்பு திருத்தம் மாகாண சபைகளுக்கு வழங்கிய அதிகாரங்களின் செறிவினைநீக்க (Dilute) அரசாங்கம் முயற்சிக்கின்றது. இந்நிலையில் இந்தியா மீண்டும் இவ்விடயத்தில் அக்கறை செலுத்த வேண்டும் எனத் தமிழ்தேசிய கூட்டமைப்பு கோரிக்கை விடுத்துள்ளது.

உள்நாட்டு யுத்தம் முடிவடைந்தவுடன் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஸ பதின்மூன்றாவது யாப்புத் திருத்தத்தினை முழுமையாக நடைமுறைப்படுத்துவது மாத்திரமன்றி அதற்கு மேலாகவும் மாகாணசபைகளுக்கு அதிகாரங்கள் வழங்கத் தான் தயாராகவுள்ளதாக இந்தியாவிற்கு உத்தரவாதம் வழங்கியிருந்தார். இதற்காக பதின்மூன்றாவது அரசியல் யாப்பு திருத்தம் “பிளஸ்” (13 +) என்ற சொற்றொடரை இலங்கை ஜனாதிபதி பயன்படுத்தியிருந்தார். இப்போது ஆட்சியில் பங்கெடுத்துள்ள இனவாதக் கட்சிகளின் செல்வாக்கிற்குட்பட்டு அவரே பதின்மூன்றாவது யாப்புத் திருத்தத்தினை எதிர்க்கின்ற காட்சிநிலை தோன்றியுள்ளது.

இந்தியாவின் முயற்சி

 

2013 ஆம் ஆண்டு ஆடி மாதம் 9ஆம் திகதி இந்தியாவின் தேசியப் பாதுகாப்பு ஆலோசகர் சிவசங்கர் மேனனுக்கு காலை உணவு வழங்கி இலங்கை ஜனாதிபதி கௌரவித்த போது பதின்மூன்றாவது அரசியல் யாப்பு திருத்தம் தொடர்பான இந்தியாவின் கருத்துகளை இலங்கை ஜனாதிபதியிடம் பகிர்ந்து கொண்டார். “அண்மைக்காலத்தில் பல சந்தர்ப்பத்தில் இலங்கை எதிர்நோக்கிய பல சர்வதேச அழுத்தங்களில் இருந்து இலங்கையினை மீட்பதற்கு இந்தியா உதவி செய்துள்ளது. ஐக்கிய நாடுகள் சபை மனித உரிமைகள் பேரவையில் இலங்கை புரிந்த யுத்தக் குற்றங்களுக்கு எதிராக ஐக்கிய அமெரிக்கா சமர்ப்பித்த பிரேரனையிலிருந்த கடுமையான விடயங்களை செறிவு நீக்கம் செய்வதற்கு இந்தியா உதவியது. அதேபோன்று பொதுநலவாய அரச தலைவர்களின் மகாநாடு கார்த்திகை மாதம் இலங்கையில் நடைபெறுவதற்கு தேவையான உதவிகளை இந்தியா செய்துள்ளது” எனத் தெரிவித்தார்.

இதன் மூலம் இராஜதந்திர ரீதியில் இலங்கைக்கு சர்வதேசளவில் உதவி செய்வதற்கு இந்தியா எப்போதும் தயாராக இருப்பதை சிவசங்கர் மேனன் தெளிவுபடுத்தினார். மேலும் சிவசங்கர் மேனன் கொழும்பில் தங்கியிருந்த இரு நாட்களும் இலங்கையின் அரசியல் தலைவர்கள் பலரை சந்தித்து உரையாற்றியிருந்தார். இவ் உரையாடலின் போது “இலங்கையின் அரசியல் யாப்பிற்குச் செய்யப்பட்டுள்ள பதின்மூன்றாவது அரசியல் யாப்பு திருத்தத்திற்கு அப்பால் சென்று இலங்கையின் இனமோதலுக்கு அரசியல் தீர்வினை காண்பதற்கு இலங்கை தனது அர்ப்பணிப்பினை வெளிப்படுத்த வேண்டும் என்பதே இந்தியாவினதும் சர்வதேச சமுதாயத்தினதும் எதிர்பார்ப்பாகும்” என்பதை வலியுறுத்தியிருந்தார்.

ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஸா வழங்கிய காலை நேர விருந்துபசாரத்தின் பின்னர் பத்திரிகையாளர்களுக்கு கருத்து வெளியிட்ட சிவசங்கர் மேனன் “கடந்த காலங்களில் இலங்கையினை சிதைவடைய வைத்த இனமோதலுடன் தொடர்புடைய பல்வேறு விடயங்களுக்குமான அரசியல் தீர்வு மற்றும் நல்லிணக்கம் நோக்கிய முன்நகர்வு தொடர்பாக இந்தியாவின் கருத்தினையும் எவ்வாறு இதனை இந்தியா நோக்குகிறது என்பதனையும் தெளிவுபடுத்தியுள்ளோம்” எனக் கூறியிருந்தார்.

“இலங்கை போன்ற சிறிய நாடு ஒன்றிற்கு காவல்துறை மற்றும் காணி அதிகாரங்களை மாகாணசபைகளுக்கு ஊடாக பகிர்வதன் மூலம் நடைமுறையில் பல பிரச்சினைகள் ஏற்படும்” என இலங்கை ஜனாதிபதி சிவசங்கர் மேனனிடன் தெரிவித்திருந்தார். இதேகருத்தினை இலங்கையின் பாதுகாப்பு செயலாளர் கோட்டாபேய ராஜபக்ஸா “மாகாணசபைகளுக்கு காவல் துறை அதிகாரங்கள் வழங்குவதை ஒருபோதும் ஏற்றுக்கொள்ளமுடியாது. இது தேசியபாதுகாப்பிற்கு மிகவும் ஆபத்தானதும் சவால்மிக்கதுமாகும். மாகாணசபைகளுக்கு காவல்துறை அதிகாரங்கள் வழங்கப்பட்டிருந்தால் நாட்டில் சட்டத்தினையும் ஒழுங்கினையும் பேணுவதில் மிகவும் சிக்கலான நிலை தோன்றி பாதுகாப்பு முறை செயலிழந்து போயிருக்கும்” எனத் தெரிவித்திருந்தார்.

மேலும் இந்தியா தமிழ் தேசியக் கூட்டமைப்பினரை பாராளுமன்ற தெரிவுக் குழுவில் பங்கெடுப்பதற்கு தூண்ட வேண்டும் என்பதே இலங்கை ஜனாதிபதியின் கோரிக்கையாக இருந்தது. இதன் பெறு பேறாகவே அண்மையில் தமிழ் தேசியக் கூட்டமைப்பின் தலைவருக்கும் ஜனாதிபதிக்கும் இடையிலான சந்திப்பு அமைந்திருந்தது.

ஒப்பந்தமீறல்

 

1987 ஆம் ஆண்டு ஆடி மாதம் 29 ஆம் திகதி இலங்கைக்கும் இந்தியாவிற்கும் இடையில் கொழும்பில் வைத்து கைச்சாத்திடப்பட்ட இருதரப்பு ஒப்பந்தத்தின் அடிப்படையில் உருவாக்கப்பட்டதே மாகாணசபைகளாகும். 1986 ஆம் ஆண்டு வைகாசி மாதம் 4ஆம் திகதிக்கும் 1986 ஆம் ஆண்டு மார்கழி மாதம் 19 ஆம் திகதிக்கும் இடையில் இருநாடுகளுக்கும் இடையில் நடைபெற்ற பல பேச்சுவார்த்தைகளின் அடிப்படையில் தமிழ் மக்களுக்கு அதிகாரப்பகிர்வு வழங்குவதை இலங்கை ஏற்றுக்கொண்டது.

இலங்கை இந்திய ஒப்பந்தத்தின் பிரிவு 2.15 இணங்க அதிகாரப்பகிர்விற்கான முன்மொழிவினை இலங்கை அரசாங்கம் ஏற்றுக்கொண்டது. இக்காலப்பகுதியில் ஜனாதிபதியாக இருந்த ஜே.ஆர். ஜெயவர்த்தனாவுடன் இந்திய அமைச்சரகள் சிதம்பரம் நட்வர்சிங் ஆகியோர்கள் நடாத்திய பேச்சுவார்த்தையின் அடிப்படையில் அதிகாரப்பகிர்விற்கான முன்மொழிவு தயாரிக்கப்பட்டது. குறிப்பாக 1986 ஆம் ஆண்டு ஆடி மாதம் 9 ஆம் திகதி சிதம்பரம் அறிக்கையினை அடிப்படையாகக் கொண்டு மாகாணசபைகளுக்கு காவல்துறை மற்றும் காணி அதிகாரங்கள் வழங்குவதற்கு இணக்கம் காணப்பட்டிருந்தது.

எனவே இலங்கைக்கும் இந்தியாவிற்கும் இடையில் செய்து கொள்ளப்பட்ட ஒப்பந்தத்தின் ஒருபகுதியாகவே மாகாண சபைகளுக்கு காவல்துறை மற்றும் காணி அதிகாரங்கள் வழங்கப்பட்டன. மாகாண சபைகளுக்கு வழங்கப்பட்ட காணி மற்றும் காவல் துறை அதிகாரங்கள் நீக்கப்பட்டால் அல்லது குறைக்கப்பட்டால் அது இலங்கை இந்திய சமாதான ஒப்பந்தத்தை ஒருதலைப்பட்சமாக மீறியதாகவே கருதப்படும்.

கச்சதீவு ஒப்பந்தம்

 

இலங்கைக்கும் இந்தியாவிற்கும் இடையில் 1974 ஆம் ஆண்டு செய்யப்பட்ட ஒப்பந்தப்படியும், 1976 ஆம் ஆண்டு இரண்டு நாடுகளுக்குமிடையிலான இராஜதந்திரத் தூதுத் தொடர்புகளின் மூலமும் இலங்கையின் ஆள்புலப் பிரதேசமாக கச்சதீவு ஏற்றுக்கொள்ளப்பட்டது. தமிழகத்தின் பிராந்தியக் கட்சிகள் எதுவும் 1974, 1976 ஆண்டுகளில் இலங்கைக்கும் , இந்தியாவிற்கும் இடையில் செய்து கொள்ளப்பட்ட கடல் எல்லை தொடர்பான இவ் உடன்படிக்கையினால் மகிழ்ச்சியடைந்திருக்கவில்லை.

ஒப்பந்தத்தின்படி இந்திய மீனவர்கள் கச்சதீவில் ஓய்வெடுப்பதற்கும், தமது மீன்பிடி வலைகளை உலர விடுவதற்கும், சென்.அந்தனீஸ் தேவாலயத்தின் வருடாந்த விழாவில் பங்கேற்பதற்கும் அனுமதி வழங்கப்பட்டிருந்தது. ஆனால் கச்சதீவினை சூழவுள்ள பிரதேசத்தில் மீன்பிடிப்பதற்கு ஒப்பந்தப்படி அனுமதி வழங்கப்பட்டிருக்கவில்லை.

தமிழ் நாட்டு மீனவர்கள் தொடர்ந்தும் இலங்கையின் கடற்படையினரால் பிரச்சினைகளை எதிர்கொள்வதால்; இலங்கை-இந்திய உறவு எரிச்சலடைகின்ற நிலையினையடைந்து வருகிறது. தமிழக மீனவர்களுக்காக அரசியல் கட்சிகள் ஆதரவு தெரிவித்து வருவதுடன் இதற்காக மத்திய அரசாங்கம் மீது அதிக அழுத்தத்தினை கொடுப்பதும் இலங்கை-இந்திய உறவிற்கு பாரிய தொல்லையாகவுள்ளது. மீனவர் பிரச்சினையினைத் தீர்ப்பதற்கு கச்சதீவினை மீண்டும் பெற்றுக் கொள்ளுதல் என்பது யதார்த்தமற்ற முடிவாக இருந்தாலும் இந்திய அரசியல் கட்சிகள், குறிப்பாக தமிழ் நாட்டின் அரசியல் கட்சிகள் மீனவர் பிரச்சினைக்கு இதன் மூலம் தீர்வு காண்பதில் அதிக கவனம் செலுத்துகின்றன.

இந்நிலையில் இந்தியாவின் ஒப்புதல் இல்லாமல் இலங்கை இந்திய ஒப்பந்தத்தை ஒருதலைப்பட்சமாக இலங்கை மீறுமாக இருந்தால் இருநாடுகளும் செய்து கொண்டுள்ள கச்சதீவு உட்பட்ட ஏனைய பல ஒப்பந்தங்களின் புனிதத்தன்மையினை இது கேள்விக்குள்ளாக்கிவிடலாம். ஆகவே பதின் மூன்றாவது அரசிலமைப்புத் திருத்தத்தின் மூலம் மகாணசபைகளுக்கு வழங்கப்பட்ட காவல்துறை மற்றும் காணி அதிகாரங்கள் உட்பட ஏனைய அதிகாரங்கள் ஏதாவது ஒரு வகையில் செறிவு நீக்கம் செய்யப்பட்டால் கச்சதீவு ஒப்பந்தத்தினை இந்தியா ஒருதலைப்பட்சமாக மீறலாம். அதன்பின்னர் இந்தியாவின் ஆள்புலப்பிரதேசத்திற்குட்பட்ட தீவகமாக கச்சதீவு மாறலாம். இதன்மூலம் தமிழக மீனவர்களின் பிரச்சினைக்கு தீர்வுகாண இந்தியா முயற்சிக்கலாம்.

 

 
Share

Who's Online

We have 106 guests and no members online

+1 Me

Subscribe

Enter your email address:

Delivered by FeedBurner

 About Prof. Thanabalasingam Krishnamohan

Prof. Thanabalsingam Krishnamohan is a Professor in Political Science in Eastern University of Sri Lanka .