Education is the Most Powerful Weapon Which You Can Use to Change the World. – Nelson Mandela-

1 1 1 1 1 1 1 1 1 1 Rating 0.00 (0 Votes)

(தினக்குரல், புதிய பண்பாடு இதழில் 2013.02.02 , 2013.02.03 ஆகிய திகதிகளில் பிரசுரிக்கப்பட்டது)

clip_image002 இலங்கைக்கும் இந்தியாவிற்கும் இடையில் 1974ஆம் ஆண்டு செய்யப்பட்ட ஒப்பந்தப்படியும், 1976ஆம் ஆண்டு இரண்டு நாடுகளுக்குமிடையில் நிகழ்ந்த இராஜதந்திரத் தொடர்புகளின் மூலமும் இலங்கையின் ஆள்புலப் பிரதேசமாக கச்சதீவு ஏற்றுக்கொள்ளப்பட்டது. தமிழக அரசியல் கட்சிகள் இலங்கைக்கும், இந்தியாவிற்கும் இடையில் செய்து கொள்ளப்பட்ட கச்சதீவு தொடர்பான இவ் உடன்படிக்கையினால் கவலை கொண்டிருந்தன. ஒப்பந்தத்தின்படி இந்திய மீனவர்கள் கச்சதீவில் ஓய்வெடுப்பதற்கும், தமது மீன்பிடி வலைகளை உலர விடுவதற்கும், சென்.அந்தனீஸ் தேவாலயத்தின் வருடாந்த விழாவில் பங்கேற்பதற்கும் அனுமதி வழங்கப்பட்டிருந்தது. ஆனால் கச்சதீவினை சூழவுள்ள பிரதேசத்தில் மீன்பிடிப்பதற்கு ஒப்பந்தப்படி இந்திய மீனவர்களுக்கு அனுமதி வழங்கப்பட்டிருக்கவில்லை. அன்றிலிருந்து பாக்குநீரிணைக் கடல் பிரதேசத்தில் இருநாட்டு மீனவர்களுக்கும் இடையில் நிகழும் தகராறுகள் இதுவரை தீர்க்கப்படவில்லை.

பூகோள அமைவிட முறைமை

நீண்ட காலமாக இந்திய மீனவர்கள் இலங்கை கடற்பரப்பில் மீன்பிடிப்பது பாரிய பிரச்சினையாக இருந்து வந்தது. ஆயினும் இதனை தீர்ப்பதற்கு எவ்வித யோசனைகளும் முன்வைக்கப்படவில்லை மீனவர்கள் தரப்பில் சர்வதேச கடற்பரப்பின் எல்லையினைக் கண்டு பிடிப்பது தமக்கு மிகவும் சிரமமாகவுள்ளது எனக் கூறுகின்றனர். இதனைத் தீர்ப்பதற்கு “பூகோள அமைவிட முறைமையை” (Global Positioning System – GPS) ஒவ்வொரு மீன்பிடி படகிலும் பொருத்தும் செயல்முறை அமுல்படுத்தப்பட வேண்டும் என இந்தியக் கடற்படை ஆலோசனை வழங்கியிருந்தது. இதற்கிணங்க மீனவர்களுக்கு விரைவாகவும், தெளிவாகவும் படகுகளை கடலில் செலுத்துவதற்கும், வேகத்தினை அளவிடுவதற்கும் படகுகள் செல்லும் கடல் அமைவிடத்தினை தீர்மானிப்பதற்கும் பூகோள அமைவிட முறைமையினை வழங்குவது என தீர்மானிக்கப்பட்டது. இதற்கான செலவீனத்தினை இந்திய அரசாங்கமும் தமிழக அரசாங்கமும் பங்கீடு செய்ததுடன், சிறியதொரு பணத்தொகை மீனவர்களிடமிருந்து பெற்று கொள்ளப்பட்டது. இதற்காக தமிழக அரசு 7.7 கோடி ரூபாவினை செலவு செய்வதற்கு அனுமதியளித்திருந்தது.

கூட்டு செயலணிக்குழு

இலங்கைக் கடற்பரப்பில் தமிழக மீனவர்கள் அத்துமீறி மீன்பிடித்தல் தொடர்பான விடயங்களை கையாள்வதற்கு கூட்டு செயலணிக்குழு உருவாக்கப்பட்டது. மீனவர்கள் கடல் எல்லை மீறிச் சென்றால் அவர்கள் மீது பலப் பிரயோகம் செய்வதைத் தடுத்தல், மீனவர்களின் மீன்பிடி வள்ளங்கள் பறிமுதல் செய்யப்பட்டால் அவைகளை மிக விரைவாக மீட்டெடுத்து வழங்குவதற்கு ஏற்ற உடன்படிக்கைகளை செயற்படுத்துவதற்கான திட்டத்தினை இக்குழு வடிவமைக்கும எனக் கூறப்பட்டது. 2006ஆம் ஆண்டு தைமாதம் கூட்டுச் செயலணிக்குழு கொழும்பில் சந்திப்பு ஒன்றை ஏற்படுத்திக் கொண்டதுடன் பின்வரும் விடயங்களில் உடன்பாடும் எட்டப்பட்டது.

1. இருதரப்பு கடல் எல்லையிலிருந்து 5 மைல் தூரத்திற்குள் மீனவர்கள் அத்துமீறிச் சென்றால் அவர்களைக் கைது செய்யாமல் தடுப்பதற்கான சாத்தியப்பாடுகளைப் பரீட்சித்துப் பார்த்தல்.

2. மனிதாபிமான அடிப்படையில் சிறிய மீன்பிடி வள்ளங்களையும் மீனவர்களையும் விடுவித்தல் பற்றி கருத்திலெடுத்தல்.

3. சட்டவிரோதச் செயற்பாடுகளைத் தடுப்பதற்கு இரண்டு நாடுகளினதும் கடற்படைகளுக்குமிடையிலான கூட்டுறவினை விரிவுபடுத்துதல்

இரு நாடுகளுக்குமிடையில் நம்பகத் தன்மையான உறவினை வளர்ப்பதற்கு இவ் உடன்பாடுகள் உதவும் என எதிர்பார்க்கப்பட்டது.

தமிழக அரசியல்வாதிகள்

இலங்கையின் கடற்படையினரால் தமிழக மீனவர்கள் துப்பாக்கியால் சுட்டு கொலை செய்யப்படுவதாகக் குற்றம் சாட்டி, கலைஞர் மு.கருணாநிதி, மற்றும் செல்வி ஜெயலலிதா ஆகிய இருவரும் இக்கொலைகளைத் தடுத்து நிறுத்தும்படி இந்திய அரசாங்கத்தினைக் கேட்டுக் கொண்டாலும், இந்திய மத்திய அரசு இதற்கு ஆக்கபூர்வமான நடவடிக்கைகள் எதனையும் எடுத்திருக்கவில்லை.

2007ஆம் ஆண்டு தமிழக மீனவர்கள் மீதான படுகொலைகளின் எண்ணிக்கை வேகமாக அதிகரித்தது. இது ஏதோ ஒருவகையில் மீனவர் படுகொலைகளை நிறுத்துவதற்கு இந்திய அரசாங்கம் ஆக்கபூர்வமாகச் செயற்பட வேண்டியதன் அவசியத்தை வலியுறுத்தியிருந்தது. தமிழக முன்னாள் முதலமைச்சர் மு.கருணாநிதி வழமை போல் தொடர்ந்தும் இது தொடர்பாக இந்திய மத்திய அரசாங்கத்திற்கு கடிதம் எழுதியிருந்தார். பிரதான அரசியல் கட்சிகளாகிய திராவிட முன்னேற்றக் கழகம், அண்ணா திராவிட முன்னேற்றக் கழகம், பாட்டாளிகள் மக்கள் கட்சி, மக்கள் திராவிட முன்னேற்றக்கழகம், காங்கிரஸ் கட்சி, பாரதிய ஜனதாக் கட்சி போன்றன இந்திய அரசாங்கம் ஆக்கபூர்வமாக இவ்விடயத்தில் செயற்பட வேண்டும் என வலியுறுத்தியிருந்தன.

திராவிட முன்னேற்றக்கழகமும், பாரதிய ஜனதாக் கட்சியும் இது தொடர்பாக இந்திய அரசாங்கத்தின் செயற்பாட்டினை வலியுறுத்தி எதிர்ப்பு ஆர்ப்பாட்டங்களை நடாத்தியது. மீனவர்கள் தமது தரப்பிற்கு ஒரு நாள் வேலை நிறுத்தத்திலும், உண்ணா விரதத்ததிலும் ஈடுபட்டனர்.

இந்நிலையில் இந்திய மத்திய அரசாங்கம் விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டியிருந்ததினால், இந்திய கடற்படைத் தளபதி, மற்றும் தமிழகக் கடற்பிராந்திய தளபதி ஆகிய இருவரையும் பயன்படுத்தி அறிக்கை ஒன்றினை வெளியிட்டிருந்தது. இவ்வறிக்கையில் தமிழக மீனவர்கள் மீதான படுகொலை இலங்கை கடற்படையினால் மேற்கொள்ளப்படுவதில்லை பதிலாக, தமிழீழ விடுதலைப் புலிகளால் அல்லது மீனவர்கள் தமக்கிடையில் சண்டையிட்டு ஒருவரை ஒருவர் கொலை செய்யலாம் எனக் தெரிவிக்கப்பட்டிருந்தது. தமிழ் நாட்டின் அரசியல் கட்சித் தலைவர்கள் எவரும் இவ் அறிக்கையினை ஏற்றுக் கொள்ளத் தயாராக இருக்கவில்லை.

வெளிவிவகாரச் செயலாளரின் விஜயம்

தமிழக மீனவர்கள் இலங்கையின் கடற்பரப்பில் பிரவேசித்து இலங்கையின் மீன் வளங்களைச் சுரண்டுகின்றார்கள் என்பது இதுவரை தீரக்கப்படாத பிரச்சினையாகும். இதனால் தமிழ்நாட்டு மீனவர்கள் இலங்கைக் கடற்பரப்பில் பிரவேசித்து மீன்பிடிப்பதை இலங்கைக் கடற்படையினர் தடுத்து வந்ததுடன் அவ்வப்போது தமிழக மீனவர்கள் மீது துப்பாக்கிப்பிரயோகத்தினையும் மேற்கொண்டிருந்தனர். இதனால் தமிழக மீனவர்கள் சிலர் இறந்ததுடன் பலர் கைது செய்யப்பட்டும் இருந்தனர். இதற்கு எதிராக தமிழக அரசியல் தலைவர்கள் குரல்கொடுத்து வந்தாலும், 2011ஆம் ஆண்டு சித்திரை மாதம் நடைபெற்ற தமிழக சட்டசபைத் தேர்தல் காலத்தில் அரசியல்தலைவர்கள் குறிப்பாக எதிர்கட்சி உறுப்பினர்கள் தமிழக மீனவர்களைப் பாதுகாக்க புதுடெல்லி அரசாங்கம் தவறிவிட்டதாகக் குற்றம் சாட்டியிருந்தனர்.

2011ஆம் ஆண்டு தை மாதம் இந்திய மீனவர்கள் காணமல் போனதுடன் பின்னர் இருவரின் உடல்கள் கண்டுபிடிக்கப்பட்ட சம்பவத்தினை மையமாகக் கொண்டு இந்திய அரசாங்கம் பலமான எதிர்ப்பினை இலங்கை அரசாங்கத்திடம் தெரிவித்திருந்தது. இதன் தொடர்ச்சியாக இந்திய வெளிவிவகாரச் செயலாளர் நிருபாமா ராவ் இலங்கைக்கு விஜயம் மேற்கொண்டு இது தொடர்பாகக் கலந்துரையாடியிருந்தார். இந்தியா இவ்விவகாரத்தினை 2008ஆம் ஆண்டு உடன்படிக்கைக்கு ஏற்பவே கையாளவிரும்பியது. இலங்கையைப் பொறுத்தவரை யுத்தத்திற்குப் பின்னரான சூழ்நிலையில் இவ்வுடன்படிக்கை காலாவதியாகிவிட்டதாகத் தாம் கருதிச் செயற்படுவதாக கூறியது. இந்நிலையில் 2010ஆம் ஆண்டு ஆனிமாதம் இருநாட்டுத்தலைவர்களும் புதுடெல்லியில் சந்தித்துக் கொண்ட பின்னர் உருவாக்கப்பட்ட மீன்பிடிக்கான இந்திய இலங்கை கூட்டுச் செயற்குழு 2011ஆம் ஆண்டு பங்குனிமாதம் புதுடில்லியல் சந்தித்துக் கொண்டது. இங்கு இருதரப்பும் எந்தவொரு சந்தர்ப்பத்திலும் பலத்தினைப்பிரயோகிக்க முடியாது என்பதில் உடன்பட்டுக்கொண்டன. மேலும் சர்வதேசக் கடல் எல்லையினை இருதரப்பும் மதிக்க வேண்டும் என்பதிலும் உடன்பாடு காணப்பட்டது. அத்துடன் மீன்பிடித்தலுக்கான புரிந்துணர்வு ஒப்பந்தம் ஒன்றை வரைவதற்கும் இருதரப்பும் உடன்பட்டுக்கொண்டது.

கடல்பாதுகாப்பு

வடபகுதியில் பல குடாக்களும், முனைகளும் காணப்படுவது கள்ளக் கடத்தல்களுக்கு வாய்ப்பாக இருந்ததாகக் கூறப்படுகின்றது. இதனைத் தடுப்பதற்காக 1960 களிலிருந்து இலங்கை கடற்படை குடாநாட்டின் பல்வேறு கடற்பிரதேசங்களில் தனது படை முகாம்களை நிறுவியிருந்ததாகக் கூறப்படுகின்றது. அத்துடன் 1960 களின் பின்னர் இனமோதல் கூர்மையடையத் தொடங்கியதனைக் காரணமாகக் கொண்டு குடாநாட்டின் பல பகுதிகளிலும் முன்னெச்சரிக்கையாகக் கடற்படை முகாம்களை நிறுவுவது என்ற கொள்கையினை இலங்கை அரசாங்கம் வகுத்ததாகக் கூறப்படுகின்றது.

காங்கேசன்துறை கடற்படைதளத்திற்குப் புறம்பாக காரைநகர், வேலணை, மண்டைதீவு ஆகிய பிரதேசங்களில் கடற்படை முகாம்களை நிறுவி பாக்கு நிரிணையில் நடக்கும் கடல் போக்குவரத்தினைக் குறிப்பாகத் தமிழகத்திற்கும் வடபகுதிக்குமான போக்குவரத்தினை இலங்கை அரசாங்கம் கண்காணித்து வந்தது. இன்று சிறிய கடற்படை முகாம்கள் பல புதிதாக வடபகுதிக் கடற்கரையோரங்களில் உருவாக்கப்படுகின்றன.

தமிழீழவிடுதலைப்புலிகள் தோற்கடிக்கப்பட்ட பின்னர் வன்னி பெரு நிலப்பரப்பிற்கு தெற்கே கிளிநொச்சி மாவட்டத்தில் நாகபடுவன் (Naakappaduvan) பிரிவில் உள்ள நாச்சிக்குடாவில் பாக்கு நீரிணையினை கண்காணிப்பதற்கும், காவல் காப்பதற்கும் ஏற்றவகையில் கடற்படை முகாம் உருவாக்கப்பட்டுள்ளது. இம்முகாமிற்கு புவனேக (Bhuvaneka) என்ற பெயர் சூட்டப்பட்டுள்ளதாகவும் கூறப்படுகின்றது. இம்முகாம் தமிழக கடற்பரப்பினை அவதானிப்பதற்கு மிகவும் இலவானதொரு இடமாக கூறப்படுகின்றது. சீனாவின் உதவியுடன் உருவாக்கப்பட்ட இக்கடற்படை முகாம் அண்மையில் கடற்படைத் தளபதியினால் திறந்துவைக்கப்பட்டது.

மக்கள் குடியிருப்பு எதுவும் இல்லாத கச்சதீவில் கடற்படைக்கான நிரந்தரத்தளம் அமைக்கப்பட்டுள்ளதையும், புதிய இறங்குதுறை (Jetty) அமைக்கப்பட்டுள்ளதையும் வருடாந்த கச்சதீவு தேவாலய ஆராதனைக்குச் சென்றபோது தாம் அவதானித்ததாகக் பத்திரிகையாளர்கள் கூறுகின்றனர். மேலும் இதற்கான கட்டமானப்பணிகளுக்குப் பயன்படுத்தப்பட்ட பொருட்களில் சீனாவின் வியாபாரச் சின்னம் பொறிக்கப்பட்டுள்ளதை அவதானித்துள்ளனர். மேலும் இவர்கள் இரண்டு கடற்படைக் கப்பல்கள் கச்சதீவில் எப்போதும் நங்கூரமிட்டுள்ளதாகவும் கூறியுள்ளனர்.

இலங்கை அரசாங்கத்தின் யுத்த முன்னெச்சரிக்கை நடவடிக்கை வெற்றியளித்த பின்னர் ஏன் மீண்டும் கடற்படை முகாம்களை குடாநாட்டிற்;குள் திறப்பதற்கு இலங்கை அரசாங்கம் ஆர்வம் காட்டுகின்றது என்ற கேள்வி எழுகின்றது. இந்தியாவினை குறிப்பாகத் தமிழக மீனவர்களை குறிவைத்து இக்கடற்படை முகாம்களை இலங்கை நிறுவுகின்றதா? என்றதொரு கேள்வியும் கூடவே எழுகின்றது. மீனவர் பிரச்சினையினைத் தீர்ப்பதற்குக் கச்சதீவினை மீண்டும் பெற்றுக் கொள்ளுதல் என்பது யதார்த்தமற்ற முடிவாக இருந்தாலும் இந்திய அரசியல் கட்சிகள், குறிப்பாக தமிழக அரசியல் கட்சிகள் மீனவர் பிரச்சினைக்குத் தீர்வு காண்பதற்கு அதிக கவனம் செலுத்துகின்றன.

 

Share

Who's Online

We have 42 guests and no members online

+1 Me

Subscribe

Enter your email address:

Delivered by FeedBurner

 About Prof. Thanabalasingam Krishnamohan

Prof. Thanabalsingam Krishnamohan is a Professor in Political Science in Eastern University of Sri Lanka .