Education is the Most Powerful Weapon Which You Can Use to Change the World. – Nelson Mandela-

1 1 1 1 1 1 1 1 1 1 Rating 0.00 (0 Votes)

( தினக்குரல் , புதிய பண்பாடு இதழில் 2013.06.15, 2013.06.16 ஆகிய திகதிகளில் பிரசுரிக்கப்பட்டது )

clip_image002

இருபத்தியோராம் நூற்றாண்டு 'ஆசியாவின் நூற்றாண்டு' என அழைக்கப்படுகின்றது. சீனா,இந்தியா ஆகிய இருநாடுகளும் ஆசியாவிற்குரிய இந்நூற்றாண்டினை முன்னோக்கி நகர்த்திச் செல்லப் போகின்றன.இந்நிலையில் சர்வதேச ஒழுங்கு தந்திரோபாய மாற்றத்திற்குட்பட்டு வருவதாகக் கொள்கை வகுப்பாளர்கள் தெரிவிக்கின்றனர். பனிப்போரின் பின்னர் ஐக்கிய அமெரிக்காவின் இராணுவம் ஈராக் மற்றும் ஆப்கானிஸ்தான் ஆகிய நாடுகளில் யுத்தத்தில் ஈடுபட்டு வெற்றியடைந்தது. தற்போது ஆசிய-பசுபிக் பிராந்தியத்தில் ஐக்கிய அமெரிக்கா அதிக கவனம் செலுத்தத் தொடங்கியுள்ளது. பூகோள பாதுகாப்பினைத் தொடர்ந்து வழங்குவதற்கான தந்திரோபாயமாக ஆசிய-பசுபிக் பிராந்தியத்தில் அதிகார மீள்சமனிலையினை ஏற்படுத்த ஐக்கிய அமெரிக்கா திட்டமிட்டுள்ளது. இதற்காக ஐக்கிய அமெரிக்கா தனது வெளியுறவுக் கொள்கையை இருபத்தியோராம் நூற்றாண்டின் 'ஆசியாவின் மையம்' மற்றும் 'அமெரிக்காவின் பசுபிக் நூற்றாண்டு' என்ற இலக்கு நோக்கி பயணிக்கும் வகையில் உருவாக்கியுள்ளது.

அமெரிக்காவின் இலக்கு

சீனாவின் வளர்ந்து வரும் பொருளாதார மற்றும் மக்கள் விடுதலை இராணுவத்தின் பலம் பென்ரகனிலுள்ள ஐக்கிய அமெரிக்காவின் கொள்கை வகுப்பாளர்களை ஆழ்ந்து சிந்திக்க வைத்துள்ளது. இதனால் சீனாவின் வளர்ச்சி ஐக்கிய அமெரிக்காவின் பாதுகாப்பு தந்திரோபாய செயற்பாட்டில் அதிக முக்கியத்துவத்தினைப் பெறத் தொடங்கிவிட்டது.

ஆசிய-பசுபிக் பிராந்தியத்தினை தனது கட்டுப்பாட்டில் வைத்திருக்கும் வகையில் வியூகங்களை வகுத்து செயற்படுத்துவதன் மூலமே ஐக்கிய அமெரிக்காவின் ஏகவல்லரசு கோட்பாடு எதிர்காலத்தில் நிலைத்திருக்க முடியும். இந்நிலையில் ஆசியாவின் அதிகார மையமாக தான் வளர்வதற்கு ஏற்ற வகையில் இராணுவ கட்டமைப்புக்களை ஆசிய-பசுபிக் பிராந்தியம் முழுவதும் மிகவும் செறிவாக ஐக்கிய அமெரிக்கா உருவாக்கி வருகின்றது.

இதன் மூலம் எதிர்காலத்தில் சீனாவுடன் யுத்தம் செய்ய வேண்டி வருமாயின் அதனை எதிர் கொள்ளக் கூடிய வகையில் ஐக்கிய அமெரிக்கா தனது இராணுவ வியூகத்தினை கட்டமைத்து வருகின்றது. 'ஐக்கிய அமெரிக்காவிற்கு எதிர்காலத்தில் சீனாவினால் ஏற்படவுள்ள சவால்களை எதிர்கொள்வற்காக ஆசியாவில் ஐக்கிய அமெரிக்காவின் இராணுவம் விரிவுபடுத்தப்படுகின்றது' என்ற கருத்தை ஐக்கிய அமெரிக்காவின் பாதுகாப்பு செயலாளர் மறுத்துள்ளார். ஆயினும் பெனரகனின் ஆண்டறிக்கையில் ஐக்கிய அமெரிக்காவின் முதல் இலக்கு சீனாவின் மக்கள் விடுதலை இராணுவம்தான் என்பதை கோடிட்டுக் காட்டியுள்ளது.

படைக்கல அபிவிருத்தி

ஐக்கிய அமெரிக்கப் பாதுகாப்புச் செயலாளர் லியோன் பனேரா (Leon Panetta) அண்மையில் சிங்கப்பூரில் நடைபெற்ற மகாநாடு ஒன்றில் ஐக்கிய அமெரிக்காவின் எதிர்கால இராணுவக்கட்டமைப்புத் தொடர்பாக பின்வருமாறு விபரித்துள்ளார். '2020 ஆம் ஆண்டில் ஆறு விமானம் தாங்கிக் கப்பல்களைக் கொண்ட பலமான ஐக்கிய அமெரிக்கக் கடற்படை ஆசிய-பசுபிக் பிராந்தியத்தில் நிலைகொள்ளும். இதில் விரைந்து சென்று தாக்கும் போர்கப்பல்கள்,வெடிகுண்டுகளை மற்றும் பீரங்கிகளை காவிச் சென்று விரைவாகத் தாக்கும் போர்கப்பல்கள், கடற்கரையோரங்களில் யுத்தம் செய்யும் திறன்வாய்ந்த கப்பல்கள், நீர்மூழ்கிக் கப்பல்கள் என்பன உள்ளடங்கியிருக்கும்' என லியோன் பனேற்றா விபரித்துள்ளார்.

மேலும் தொழில்நுட்ப வலுவினை மிகவும் கூர்மைப்படுத்துவதுடன், இராணுவ வலுவின் திறனை விரைவாக அதிகரிப்பதற்கும் ஐக்கிய அமெரிக்கா திட்டமிட்டுள்ளது. இதற்காக ஐந்தாம் தலைமுறைக்கான உயர்தர யுத்த விமானங்களையும், தாக்கும் திறன் கொண்ட புதிய வேர்ஜினியா தரத்திலான (Virginia-class submarine) நீர்மூழ்கிக் கப்பல்களையும், புதிய மின்னியல் யுத்தத் தளபாடங்களையும் மின்னியல் திறன்கொண்ட தொடர்பாடல் சாதனங்களையும், துல்லியமான தாக்கும் திறன் கொண்ட இயந்திரத் துப்பாக்கிகளையும் ஐக்கிய அமெரிக்கா உற்பத்தி செய்யத் திட்டமிட்டுள்ளது.

இதனைவிடஇராணுவம் புத்தூக்கமடைவதற்காக நீர்மூழ்கிக் கப்பல்களை அழிக்கக்கூடிய யுத்த விமானங்கள்,உயர்தர கரையோரப் பாதுகாப்பிற்கான கப்பல்கள், யுத்தவிமானங்கள், தொலைவிலுள்ள இடங்களுக்கு எரிபொருட்களை காவிச் சென்று மீள்நிரப்பும் திறன் பொருந்திய கொள்கலங்கள் போன்ற புதிய இராணுவ தளபாடங்களை உற்பத்தி செய்வதற்கும் ஐக்கிய அமெரிக்க முதலீடு செய்து வருகின்றது.

நிழல் யுத்த ஆபாயம்

சீனாவும் ஐக்கிய அமெரிக்காவும் உருவாக்கும் தந்திரோபாய இராணுவத்தளங்கள் நிழல் யுத்தம் ஒன்றிற்கான வித்தாகவேயுள்ளது. ஏனெனில் உலகத்தின் பாரிய வர்த்தகப் பங்காளர்களாகவும் பொருளாதார வசதிபடைத்த நாடுகளுமாகிய ஐக்கிய அமெரிக்காவும் ,சீனாவும் மிகவும் பயங்கரமான நிழல் இராணுவ மோதலை உலகளாவியளவில் உருவாக்க முயற்சிக்கின்றார்களா? என்றதொரு அச்சம் தோன்றியுள்ளது. நிழல் யுத்தத்தினை நோக்கி இருநாடுகளையும் முன் நகர்த்துவது இருநாட்டுத் தலைவர்களது நோக்கமாக இல்லாவிட்டாலும், முதலாளித்துவத்திற்குள் தோன்றக்கூடிய முரண்பாடுகள் இருநாடுகளையும் நிழல் யுத்தம் நோக்கி நகர்த்துவதற்கான வாய்ப்பு அதிகமாகவுள்ளது.

ஐக்கிய அமெரிக்கா பின்பற்றும் முதலாளித்தவ உற்பத்தி முறைமை, சீனா பின்பற்றும் 'சோசலிச சந்தைப் பொருளாதாரம்' அல்லது 'சீனா மாதிரியிலான முதலாளித்துவ' உற்பத்தி முறைமை, ஏனைய நாடுகள் பின்பற்றும் 'வழக்கற்றுப்போன பொருளாதார உற்பத்தி முறைமை' என உலகில் காணப்படும் பொருளாதார உற்பத்தி முறைமைகளுக்குள்; தோன்றக் கூடிய முரண்பாடுகள் இறுதியில் பிராந்திய நிழல் யுத்தத்தினை உலகில் தோற்றிவித்துவிடக்கூடிய ஆபாயம் அதிகரித்துவருகின்றது.

எனவே உலகிலுள்ள கடற்பிராந்தியங்கள் முழுவதிலும்; இருநாடுகளுக்குமிடையில் கடுமையான போட்டி மிக வேகமாக அதிகரித்துள்ளது. இப் போட்டி அதிகாரச் சமனிலைக்கான போட்டியாக மாற்றமடையுமாயின் அதன்மூலம் பதட்டம் உருவாகி உலகில் மீண்டும் பனிப்போர் உருவாகக் கூடிய வாய்ப்பு அதிகரித்துள்ளது.

பிரதான சவால்

சீனாவிடமிருந்து கிடைக்கும் மிகவும் மலிவான தொழிலாளர் படையில் ஐக்கிய அமெரிக்காவின் பொருளாதாரமும் தங்கியுள்ளது. அதேநேரம், இரண்டாம் உலகப் போருக்கப் பின்னர் தோன்றிய புதிய உலக ஒழுங்கு ஐக்கிய அமெரிக்காவினை முதலாளித்துவ பொருளாதார நாடுகளுக்குத் தலைமைதாங்க வைத்தது. சோவியத்ரஸ்சியாவின் வீழ்ச்சியின் பின்னர் ஐக்கிய அமெரிக்கா பூகோள ஏக வல்லரசாக எழுச்சியடைந்தது. இதன்பின்னர் ஐக்கிய அமெரிக்கா பல ஆக்கிரமிப்பு போர்களை பல பிராந்தியங்களில் தலைமை தாங்கி நடாத்தியது அல்லது இவ்வாறான போர்களுக்கு பக்கபலமாக இருந்தது. இதனால் ஐக்கிய அமெரிக்காவின் பொருளாதாரம் பெரும் வீழ்ச்சியடைந்தது.

ஐக்கிய அமெரிக்காவிற்கு இப்போதுள்ள பிரதான சவால் வீழ்சியடைந்துள்ள தனது பொருளாதாரத்தினை மீண்டும் நிலை நிறுத்த வேண்டும். மறுபுறம் வளர்சியடைந்து வரும் சீனாவின் பொருளாதாரம், மற்றும் இராணுவ, கடல் வலைப்பின்னல் என்பற்றினால் ஐக்கிய அமெரிக்காவின் பூகோள ஏக வல்லரசு நிலைக்கு ஏற்படப்போகும் ஆபத்திலிருந்து ஐக்கிய அமெரிக்காவினைப் பாதுகாக்க வேண்டும். இவை இரண்டையும் ஒரே நேரத்தில் எதிர்கொள்ளக்கூடிய திறனை ஐக்கிய அமெரிக்கா உருவாக்க முயற்சிக்கின்றது.

தந்திரோபாயப் பங்காளர்

ஐக்கிய அமெரிக்கா உலகம் முழுவதும் மிகவும் திறன் வாய்ந்த இராணுவ வலைப்பின்லை ஏற்கனவே உருவாக்கியுள்ளது. இவ்வகையில் சீனா தவிர்ந்த ஏனைய ஆசிய நாடுகளுடன் கடந்த பல வருடங்களாக இராணுவத் தொடர்புகளை ஐக்கிய அமெரிக்கா பலப்படுத்தி வருகின்றது. குறிப்பாகத் தெற்காசியாவில் இந்தியாவுடன் பலமான தந்திரோபாயப் பங்காளர் கூட்டுறவினை ஐக்கிய அமெரிக்கா உருவாக்கியுள்ளது.

இதன்மூலம் தெற்காசியாவில் இலங்கை, பாக்கிஸ்தான், பர்மா, நேபாளம் ஆகிய நாடுகளுடன் சீனா உருவாக்கியுள்ள தந்திரோபாயப் பங்காளர் உறவினை ஐக்கிய அமெரிக்கா வலுவிழக்கச் செய்துள்ளதுடன், சீனாவின் எல்லைப்புற நாடாகிய ஆப்கானிஸ்தானில் தனக்கான படைத்தளத்தினை ஐக்கிய அமெரிக்கா உருவாக்கி அதன்மூலம் மத்திய ஆசியாவினைக் கட்டுப்படுத்தி வருகின்றது.

வடகிழக்கு ஆசியாவில் தென்கொரியா மற்றும் யப்பானுடன் இணைந்து தனது இராணுவத்தினை ஐக்கிய அமெரிக்கா புத்தூக்கப்படுத்தி வருவதுடன், யப்பானுடனான உறவினை மேற்கு பசுபிக் பிராந்தியத்திற்கான தந்திரோபாய மையமாக ஐக்கிய அமெரிக்கா மாற்றியுள்ளது.

தென்கிழக்கு ஆசியாவில் ஐக்கிய அமெரிக்கா தனது இராணுவப் பாதுகாப்புக் கூட்டுறவினை விஸ்தரிக்கவும்,பரிமாறவும் திட்மிட்டுள்ளது. எதிர்காலத்தில் பிலிப்பைன்ஸ், தாய்லாந்து, வியட்நாம், மலேசியா, பாக்கிஸ்தான், இந்தோனேசியா, சிங்கப்பூர், அவுஸ்ரேலியா மற்றும் ஏனைய ஒசேனியா நாடுகளுடன் இராணுவப் பயிற்சியில் ஈடுபடுவும் ஐக்கிய அமெரிக்கா திட்டமிட்டுள்ளது.

இராணுவப் பயிற்சிக்கான சந்தர்ப்பத்தினை அதிகரிப்பதனூடாக நட்பு நாடுகளின் இராணுவத்தின் செயல்திறனை பலப்படுத்துவதற்கு சுழற்சிமுறையில் நடைபெறும் இராணுவ ஒத்திகை உதவும் என பென்ரகன் நம்புகின்றது..இவ்வகையில் பாரம்பரியமான ஐக்கிய அமெரிக்காவின் பாதுகாப்புக் கூட்டு நாடுகள் தமது பிராந்தியத்தின் பாதுகாப்பினைச் சுயமாகப் பொறுப்பெடுத்து பொருத்தமான வகையில் தமது சொந்த இராணுவத்தின் வலுவினை படிப்படியாக அதிகரிக்க வேண்டும் என ஐக்கிய அமெரிக்கா எதிர்பார்க்கின்றது.

இதன்மூலம் ஐக்கிய அமெரிக்கா மூன்று பிரதான இலக்குகளை அடைய முயற்சிக்கின்றது. ஒன்று உடனடியாக தனது படைகளின் எண்ணிக்கையினை ஆசியப்பிராந்தியத்தில் அதிகரிப்பதை ஐக்கிய அமெரிக்கா தவிர்த்துக் கொள்ளுதல் இரண்டாவதாக இதன்மூலம் தனக்கு ஏற்படும் மேலதிகப் பாதுகாப்பு செலவீனங்களிலிருந்தும் தன்னைப் பாதுகாத்துக் கொள்ளுதல் மூன்றாவதாக வீழ்சியடைந்துள்ள தனது பொருளாதாரத்தினை மீண்டும் நிலை நிறுத்த இக்காலப்பகுதியினைப் பயன்படுத்துதல் என்பனவாகும்.

நட்பு நாடுகளின் இராணுவத்தின் செயல்திறனை பலப்படுத்துவதன் மூலம் தென்கிழக்கு ஆசியக் கடற்பரப்பிற்கு ஊடாக மூலப்பொருட்களையும், எரிபொருட்களையும் பாரியளவில் காவிவரும் சீனாவின் கொள்கலன் கப்பல்களை தடுக்கக் கூடிய பலமுடைய இராணுவத்தினை உருவாக்க முடியும் என ஐக்கிய அமெரிக்கா நம்புகின்றது. இது தவிர்க்க முடியாத வகையில் சீனா தனக்கான இராணுவக் கூட்டுக்களையும், வலைப்பின்னலையும் உருவாக்குவதற்கான நிர்பந்தத்தினை உருவாக்கியுள்ளது.

ஆசியாவின் அதிகார மையம்

சீனாவின் இலக்கும் உலக வல்லரசாக சீனாவினை வளர்ப்பதேயாகும் என 2011 ஆம் ஆண்டு லீ குவான் யீ ( Lee Kuan Yew ) தெரிவித்துள்ளார். 2011 ஆம் ஆண்டு தை மாதம் சீனாவின் ஜனாதிபதி ஹூ ஜின்ரோ (Hu Jintao) ஐக்கிய அமெரிக்காவிற்கு மேற்கொண்ட விஜயத்தின் பின்னர் இருநாடுகளும் விடுத்த கூட்டு அறிக்கையில் 'சீனா பலமுடனும், செல்வச் செழிப்புடனும், வெற்றியடைந்த அரசுகளின் அங்கத்தவராகவும் வளர்ச்சியடைந்து வருகின்றது. இதன்மூலம் உலக விவகாரங்களில் பாரிய வகிபாகத்தினை சீனா வகிக்கப் போகின்றது. ஆசிய-பசுபிக் பிராந்தியத்தின் சமாதானம், உறுதித்தன்மை, செழிப்பு என்பவற்றிற்கு சீனாவழங்கும் பங்களிப்பினை ஐக்கிய அமெரிக்காவரவேற்கின்றது' என தெரிவிக்கப்பட்டுள்ளது.

சீனாவின் மக்கள் விடுதலை இராணுவம் நவீனமயப்படுத்தப்பட்டு வருவதுடன்,மஞ்சல் கடல், கிழக்குச் சீனக் கடல், தென்சீனக் கடல் ஆகியவற்றில் சீனா தனது கடல்வலிமையினை அதிகரித்து வருவதுடன், அதன் மனவலிமையும் அதிகரித்து வருகின்றது. இது சீனாவிற்கும் ஐக்கிய அமெரிக்காவிற்கும் இடையில் இராணுவ சமனிலையில் பாரியமாற்றத்தினை ஏற்படுத்தலாம். மேலும் விண்வெளி மற்றும் இணையத்தளங்களின் செயற்பாட்டில் சீனா செலுத்தி வரும் செல்வாக்கு மற்றும் கட்டுப்பாடு என்பவற்றால் சீனாவின் மனவலிமை மேலும் அதிகரித்து வருகின்றது.

ஆசியப்பிராந்தியத்தில் இந்தியா, சீனா ஆகிய இரண்டு நாடுகளும் மிக வேகமாக வளர்ந்து வருகின்றமை பூகோள புவிசார் அரசியலின் அதிகார மையமாக ஆசியா படிப்படியாக வளர்ந்து வருகின்றது என்பதை எடுத்துக் காட்டுகின்றது. ஆசியாவின் ஏனைய நாடுகளாகிய வடகொரியா மற்றும் ஈரான் ஆகிய நாடுகள் மிகவும் பயங்கரமான ஆயுதங்களைக் கொண்ட அரசுகளாக வளர்ந்து வருகின்றன.

ஐக்கிய அமெரிக்கா தனது நட்பு நாடுகளாகிய யப்பான், தென்கொரியா, தாய்வான் மற்றும் ஏனைய நாடுகளை அணுவாயுத உற்பத்தியிலிருந்து விடுபட தூண்டுகின்றது. பதிலாக நட்பு நாடுகளுக்கு அணுவாயுதப் பாதுகாப்பிற்கான உத்தரவாதத்தினை ஐக்கிய அமெரிக்கா தொடர்ந்து வழங்கி வருகின்றது. இதன்மூலம் பூகோளத்தில் ஐக்கிய அமெரிக்கா தவிர்ந்த ஏனைய நாடுகளை அணுவாயுதமற்ற இடமாக மாற்றுவதே ஐக்கிய அமெரிக்காவின் இலக்காகும்.

எனவே ஆசியாவின் அதிகார மையமாக ஐக்கிய அமெரிக்காவினை வளர்ப்பதற்கும், இதன்மூலம் பூகோள ஏக வல்லரசு நிலையினை தொடர்ந்து தனதாக்கிக் கொள்வதற்கும் ஐக்கிய அமெரிக்கா திட்டமிடுகிறது. இவ் இலக்கினை அடைவதற்கு உலகில் அணுவல்லமையுள்ள ஒரேயோரு முதல்தர நாடாக ஐக்கிய அமெரிக்காவினை மாற்றுவதே சிறந்த தந்திரோபாயமாக இருக்கமுடியும் என ஐக்கிய அமெரிக்கக் கொள்கை வகுப்பாளர்கள் நம்புகின்றார்கள்.

Share

Who's Online

We have 43 guests and no members online

+1 Me

Subscribe

Enter your email address:

Delivered by FeedBurner

 About Prof. Thanabalasingam Krishnamohan

Prof. Thanabalsingam Krishnamohan is a Professor in Political Science in Eastern University of Sri Lanka .