Education is the Most Powerful Weapon Which You Can Use to Change the World. – Nelson Mandela-

1 1 1 1 1 1 1 1 1 1 Rating 0.00 (0 Votes)

(தினக்குரல், புதிய பண்பாடு இதழில் 2012.12.08 , 2012.12.09 ஆகிய திகதிகளில் பிரசுரிக்கப்பட்டது)

clip_image002 வரலாற்றில் சிறிய அரசுகளும், ஒப்பீட்டு ரீதியல் பலமில்லாத அரசுகளும் தந்திரோபாய நலன்களை வல்லரசுகள் எடுக்கின்றபோது இதனால் எதிர்காலத்தில் தமக்கு நிகழப் போவதை முன்னுணர முடியதவைகளாகவே இருந்துள்ளன. இவ்வகையில் இந்து சமுத்திர புவிசார் அரசியலில் இலங்கை தொடர்பாக ஐக்கிய அமெரிக்கா தனது நலன்களுக்காக வகுத்த புதிய தந்திரோபாய கொள்கைகள் இலங்கைக்கு நன்மையானதோ அல்லது தீமையானதோ என்பதற்கு அப்பால் இலங்கையுடன் ஐக்கிய அமெரிக்காவிற்கு புதியதோர் உறவிற்கான அத்தியாயத்தினை ஆரம்பித்து வைத்துள்ளது. இயங்கியல் விதிக்குட்பட்டு புவிசார் அரசியலில் ஏற்பட்டுள்ள புதிய அதிகாரப் போராட்டத்தில் ஐக்கிய அமெரிக்காவிற்குப் போட்டியாக சீனாவும், இந்தியாவும் பங்கெடுத்துள்ளதால் இப்போது ஐக்கிய அமெரிக்காவிற்கு இலங்கை தந்திரோபாய முக்கியத்துவம் மிக்க நாடாக மாறியுள்ளது. இதனால் இலங்கையின் ஆதரவினைப் பெற்றுக்கொள்ள தமிழீழ விடுதலைப் புலிகளுக்கு எதிரான உள்நாட்டு யுத்தத்தில் இலங்கைக்கு உதவிசெய்ய ஐக்கிய அமெரிக்கா முடிவுசெய்திருந்தது. இதனை ஐக்கிய அமெரிக்க இராஜாங்கச் செயலாளராக இருந்த கொண்டோலீசா றைஸ் (Condoleezza Rice) “பயங்கரவாதத்தினைத் தோற்கடிப்பதற்கு இலங்கையுடன் இணைந்து ஐக்கிய அமெரிக்கா பணியாற்றும்” எனத் தெரிவித்தமை மூலம் ஊகிக்க முடிந்தது.

இரட்டைக்கோபுரங்கள்

2001ஆம் ஆண்டு புரட்டாதி மாதம் 11ஆம் திகதி ஐக்கிய அமெரிக்காவின் இரட்டைக்கோபுரங்கள் மீது அல்கொய்தா இயக்கம் நடாத்திய தாக்குதலுக்குப் பின்னர், உலகிலுள்ள எல்லாப் பயங்கரவாத இயக்கங்களுக்கும் எதிரான கடுமையான நிலைப்பாட்டினை ஐக்கிய அமெரிக்கா எடுத்துக் கொண்டதுடன் தெற்காசியாவில் குறிப்பாக இலங்கையில் தனக்கிருக்கக்கூடிய நலன்களையும் தெளிவுபடுத்திக் கொண்டது. இதற்காக 1997ஆம் ஆண்டிலிருந்து தமிழீழ விடுதலைப் புலிகளை சர்வதேசப் பயங்கரவாத அமைப்புக்களில் ஒன்றாக ஐக்கிய அமெரிக்கா அறிவித்துக் கொண்டதுடன், அவர்கள் தமது ஆயுதங்களைக் கைவிட வேண்டும் எனவும் வலியுறுத்தத் தொடங்கியது.

2002ஆம் ஆண்டு இலங்கை அரசாங்கத்திற்கும் தமிழீழ விடுதலைப்புலிகளுக்கும் இடையில் சமாதானப் பேச்சுவார்த்தை தொடங்கிய போது இலங்கையின் பிரதம மந்திரியாக இருந்த ரணில் விக்கிரமசிங்கா ஐக்கிய அமெரிக்க ஜனாதிபதி ஜோர்ஜ் டபிள்யூ புஸ்சை இரு தடவை சந்தித்தார். சர்வதேச பாதுகாப்பு வலைப்பின்னலில் ஐக்கிய அமெரிக்கா முக்கிய நாடு என்பதால் ரணில் விக்கிரமசிங்கா அரசாங்கம் ஐக்கிய அமெரிக்காவுடன் மிகவும் நெருக்கமான உறவினைப் பேணி வந்தது. இதனால் 2002ஆம் ஆண்டு ஐக்கிய அமெரிக்கா யுத்த நிறுத்த உடன்பாட்டிற்கு தமிழீழ விடுதலைப் புலிகள் முன்வர வேண்டும் எனக் கேட்டுக் கொண்டதுடன், இலங்கை அரசாங்கத்திற்கும் தமிழீழ விடுதலைப் புலிகளுக்கும் இடையிலான யுத்த நிறுத்த உடன்படிக்கையினை வரவேற்றும் கொண்டது.

பொருளாதார உதவி

ஐக்கிய அமெரிக்கா இலங்கையின் இனமோதல் முடிவுக்கு கொண்டு வரப்படல் வேண்டும் என்பதில் மிகவும் ஆர்வத்துடன் இருந்தது. 2003ஆம் ஆண்டு சித்திரை மாதம் 14ஆம் திகதி தொடக்கம் 15ஆம் திகதி வரை வொசிங்டனில் 21 நாடுகள் மற்றும் 16 அமைப்புக்களை ஒன்றாகக் கூடி சமாதான செயற்பாட்டிற்காகவும் இலங்கையினை மீளப்பெறுதல் (Regain Sri Lanka) திட்டத்திற்காகவும் வருடாந்தம் 1.1 மில்லியன் அமெரிக்க டொலரை தொடர்ந்து மூன்று வருடங்களுக்கு இலங்கைக்கு வழங்க இணக்கம் தெரிவிக்க வைத்தது. இக்கூட்டத்திற்கு தமிழீழ விடுதலைப் புலிகள் தமக்கு அழைப்பிதல் கிடைக்கும் என எதிர்பார்த்த போதும் தன்னால் தடைசெய்யப்பட்ட இயக்கம் என்ற வகையில் ஐக்கிய அமெரிக்கா அழைப்பிதழை வழங்காமல் அவர்களை நிராகரித்திருந்தது.

2003ஆம் ஆண்டு டோக்கியோவில் நடைபெற்ற இலங்கைக்கு நிதி உதவி வழங்கும் நாடுகளின் கூட்டத்தில் 2002ஆம் ஆண்டு ஏற்படுத்தப்பட்ட யுத்த நிறுத்த உடன்படிக்கையினைப் பாதுகாப்பதற்கும், பேச்சுவார்த்தைக்குத் திரும்பியதற்கும், வன்முறைக்கு முடிவு கண்டு இனமோதலுக்குச் சமாதானத் தீர்வு காண்பதற்காக உழைப்பதற்கும், ஐக்கிய அமெரிக்கா இலங்கையினை ஊக்கப்படுத்தியது. மேலும், யூ.எஸ்எயிட் (USAID) ஊடாக வழங்கிய 40.4 மில்லியன் அமெரிக்க டொலர் உட்பட, 54 மில்லியன் அமெரிக்க டொலரை உதவியாக இலங்கைக்கு வழங்கியது. 2006ஆம் ஆண்டு மேலும் 20 மில்லியன் அமெரிக்க டொலரை ஐக்கிய அமெரிக்கா வழங்கியது. இதில் அரைப்பங்கு ஜனநாயகம் மற்றும் நல்லாட்சித் திட்டங்களுடாகச் சமாதான செயற்பாட்டினை முன்னெடுப்பதற்கு வழங்கப்பட்டதாக ஐக்கிய அமெரிக்கா தெரிவித்திருந்தது.

இராணுவ உதவி

1994ஆம் ஆண்டிலிருந்து ஐக்கிய அமெரிக்கா மட்டுப்படுத்தப்பட்டளவிலான இராணுவ உதவிகளை இலங்கைக்கு வழங்கியது. மேலும் ஐக்கிய அமெரிக்காவின் விசேட படைகள் இலங்கை இராணுவத்திற்கு பயிற்சிகளையும் வழங்கியது. ஆயினும் 2002ஆம் ஆண்டு ஐக்கிய அமெரிக்க வெளிநாட்டு இராணுவ நிதித் திட்டத்தின் கீழ் (United States Foreign Military Financing – USFMF) இலங்கைக்கும் ஐக்கிய அமெரிக்காவிற்கும் இடையில் உடன்படிக்கை கைச்சாத்திடப்பட்டது. இவ் உடன்படிக்கையின் அடிப்படையில் இலங்கை இராணுவத்திற்கு ஐக்கிய அமெரிக்கா பயற்சிகளை வழங்கியது. இப்பயிற்சித் திட்டத்திற்கு 2.2 மில்லின் அமெரிக்க டொலர் செலவு செய்யப்பட்டது. இப்பயிற்சித் திட்டம் 2003ஆம் ஆண்டு ஆவணி மாதம் தொடக்கம் 2004ஆம் ஆண்டு மாசி மாதம் வரை நடைபெற்றது.

கடந்த இரண்டு தசாப்தகாலமாக இலங்கை இராணுவத்திற்கு பயிற்சி வழங்குவதில் ஈடுபட்டு வந்த ஐக்கிய அமெரிக்க இராணுவம் 2004ஆம் ஆண்டு தொடக்கம் இருதரப்பிற்குமான உறவினைப் பலப்படுத்தும் நோக்குடன், சமாதான ஆதரவு செயற்பாடு பயிற்சி நிறுவனம், இலங்கை என்ற நிலையத்தினை நிறுவி இலங்கை உட்பட ஏனைய பிராந்திய நாடுகளின் படைகளுக்கு அமைதிப்படைகளுக்கான பயிற்சியை வழங்கி வந்தது.

இதனைவிட 2004ஆம் ஆண்டு ஐக்கிய அமெரிக்க வெளிநாட்டு இராணுவ நிதித் திட்டத்தின் கீழ் இலங்கைக்கு 2.5 மில்லியன் அமெரிக்க டொலர்கள் வழங்கப்பட்டதுடன், இது 2005ஆம் ஆண்டு 5 மில்லியன் அமெரிக்க டொலரினால் அதிகரிக்கப்பட்டது. 2006ஆம் , 2007ஆம் ஆண்டுகளில் 9.9 மில்லியன் அமெரிக்க டொலரும், 2008ஆம் ஆண்டு 4.22 மில்லியன் அமெரிக்க டொலரும் , 2009ஆம் ஆண்டு 9 மில்லியன் அமெரிக்க டொலரும் வழங்கப்பட்டது. இதற்கு மேலாக 2005ஆம் ஆண்டு ஐக்கிய அமெரிக்க வெளிநாட்டு இராணுவ நிதித் திட்டத்தின் கீழ் ஐக்கிய அமெரிக்கா கடன் உதவிகளையும் வழங்கியிருந்தது. ஐக்கிய அமெரிக்கா இலங்கை இராணுவத்தினைப் பலப்படுத்துவதன் மூலம் தமிழீழ விடுதலைப்புலிகளின் இராணுவ வலிமையினை சிதறடித்து பலவீனப்படுத்த விரும்பியது. இதற்காகச் சர்வதேச இராணுவக் கல்வியும், பயிற்சியும் என்ற திட்டத்தின் கீழ் இலங்கைக்கு 2006, 2007ஆம் ஆண்டுகளில் நிதியுதவி வழங்கப்பட்டது.

2007ஆம் ஆண்டு, பங்குனி மாதம் இலங்கை அராங்கத்திற்கும், ஐக்கிய அமெரிக்காவிற்கும் இடையில் பத்து வருடங்கள் நிலைத்திருக்கக் கூடிய “கொள்வனவுகளும் சேவைகளும்” என்னும் (Acquisition and Cross Servicing Agreement – ACSA) உடன்படிக்கை கைச்சாத்திடப்பட்டது. ஐக்கிய அமெரிக்காவுடன் ACSA ஒப்பந்தத்தில் கைச்சாத்திட்ட 90 அரசு இலங்கையாகும். இவ் ஒப்பந்தம் மூலம் மனிதாபிமான உதவிகள், சமாதான செயற்பாடுகளுடன் இணைந்த இராணுவப் பயிற்சிகள் போன்றவற்றை ஐக்கிய அமெரிக்கா இலங்கைக்கு வழங்கியது. 2007ஆம் ஆண்டு ஐக்கிய அமெரிக்கா இலங்கைக்கு ராடர் மூலம் இயங்கும் கடல் கண்காணிப்பு முறையினை (Radar – Based Maritime Surveillance System) வழங்கியது. 2008ஆம் ஆண்டு தை மாதம் ஐக்கிய அமெரிக்கப் பசுபிக் பிராந்தியக் கடற்படைக் கட்டளைத் தளபதி இலங்கைக்கு விஜயம் செய்து கடல் பாதுகாப்புத் தொடர்பாக நடைமுறையிலுள்ள விடயங்கள் தொடர்பாகக் கலந்துரையாடியிருந்தார். இது தொடர்பாக இந்திய தரப்பு விமர்சகர் பி.முரளிதரரெட்டி பின்வருமாறு கூறுகின்றார். “இது ஒரு இராணுவ நோக்கம் கொண்டது. இது அமெரிக்காவின் நலன்களுக்குச் சாதகமானது. அமெரிக்காவிற்கு இது இந்து சமுத்திரத்தில் ஒரு தளத்தினை ஒரு செலவுமின்றி அல்லது மிகக் குறைந்த செலவில் பெற்றுக் கொடுத்துள்ளது. இது உலக வல்லரசுடன் தனக்குள்ள செல்வாக்கினைப் பொதுவாக விளம்பரம் செய்யவும், குறிப்பாக தமிழீழ விடுதலைப் புலிகளுடனான சண்டைக்குப் பயன்படுத்தவும் இராஜபக்ஸ அரசாங்கத்திற்கு உதவுகின்றது” எனக் கூறியிருந்தமை இறுதியில் யதார்த்தமாகி விட்டது.

இதைவிட இலங்கையிலிருந்த பயங்கரவாதத்திற்கு எதிரான இராஜத்திர, சட்டரீதியான, புலனாய்வு விடயங்களுடன் இணைந்து ஐக்கிய அமெரிக்கா செயலாற்றியிருந்தது. மேலும் தமிழீழ விடுதலைப் புலிகளாலும், ஐரோப்பிய நாடுகளில் இடம்பெயர்ந்து வாழும் இலங்கைத் தமிழர்களாலும் (Diaspora) மேற்கொள்ளப்பட்டு வந்த நிதி சேகரிப்பு மற்றும், ஏனைய செயற்பாடுகளைக் கட்டுப்படுத்துவதற்கும் ஐக்கிய அமெரிக்கா நடவடிக்கை எடுத்தது. 2006ஆம் ஆண்டு சமஸ்டி புலனாய்வுப் பணியகம் (Federal Bureau of Investigation – FBI) ஐக்கிய அமெரிக்காவில் வைத்து எட்டுப் பேர்களைக் கைது செய்ததுடன் விமான எதிர்ப்பு ஏவுகணைகள், மற்றும் ஏனைய ஆயுதங்கள் கொள்வனவு செய்ய முயற்சிக்கப்பட்டதாக இவர்கள் மீது குற்றம் சாட்டப்பட்டிருந்தது.

இராஜதந்திரச் செயற்பாடுகள்

ஐக்கிய அமெரிக்காவின் பாதுகாப்புத் துறையுடன் தொடர்புடைய ஜேம்ஸ் எவ் ஒக்ஸ்லி (James F. Oxley) மற்றும் அரசியல் விவகாரச் செயலாளர் எவன்ஸ் வில்லியம்ஸ் (Evans Williams) ஆகியோர் யாழ்ப்பாணம் சென்று இலங்கை இராணுவத்தின் தேவைகளையும் இராணுவத்திற்குள்ள சூழ்நிலைகளையும் வடபகுதி இராணுவத் தளபதியுடன் கலந்தாலோசித்து அறிந்து சென்றனர். இதன் நோக்கத்தினை 2006ஆம் ஆண்டு சமாதானப் பேச்சுவார்த்தை நடைபெற்றுக் கொண்டிருந்த போது இலங்கைக்கான அமெரிக்கத் தூதுவர் ஜெவ்றி லன்ஸ்ரெட் (Jeffrey Lunstead) கூறிய பின்வரும் கருத்துக்கள் மேலும் நிரூபித்திருந்தது. “எங்களின் இராணுவப் பயிற்சிகளாலும், பயங்கரவாதத்திற்கு எதிரான செயற்பாடுகள் உள்ளிட்ட செயற்திட்டங்களாலும், சட்டத்திற்கு முரணான புலிகளின் நிதி சேகரிப்புக்களைத் தடை செய்வதன் மூலமாகவும், இலங்கை அரசு தன் மக்களைப் பாதுகாக்கவும், தன் நலன்களைத் தக்கவைத்துக் கொள்வதற்கும் அவர்களின் பலத்தினை நாம் வலுப்படுத்தியுள்ளோம். புலிகள் சமாதான நடவடிக்கைகளை கைவிட முடிவெடுப்பின், அவர்கள் வலிமையான, மிகவும் ஆற்றல் வாய்ந்த, அத்தோடு மிகவும் உறுதி மிக்க இலங்கை இராணுவத்தை எதிர் கொள்வர் என நாம் தெளிவாக அவர்களுக்குத் தெரிவிக்கின்றோம். புலிகள் யுத்தத்திற்குத் திரும்பின் அதன் விளைவுகள் பயங்கரமாக இருக்க நாம் விரும்புகின்றோம்”. ஆகவே யுத்த முனையொன்று தமிழீழ விடுதலைப் புலிகளால் திறக்கப்படுமாயின் அதன் விளைவு எதுவாக இருப்பினும் அதனைப் பற்றிக் கருத்தில் கொள்ளாது தமிழீழ விடுதலைப் புலிகளைப் பூரணமாக அழித்துவிட ஐக்கிய அமெரிக்கா முடிவெடுத்திருந்தமை இதன் மூலம் தெளிவாகின்றது எனலாம்.

உலகிலுள்ள தீவிரவாத அமைப்புக்களில் முப்படைக்கட்டமைப்புக்களை கொண்டிருந்த ஒரேயோரு தீவிரவாத அமைப்பு தமிழீழ விடுதலைப்புலிகள் மாத்திரமேயாகும். இது தொடர்பாக 2008ஆம் ஆண்டு தை மாதம் 10ஆம் திகதி ஐக்கிய அமெரிக்காவின் சமஸ்டிப் புலனாய்வுப் பணியகம் வெளியிட்ட அறிக்கையில் “உலகில் காணப்படும் தீவிரவாத அமைப்புக்களில் மிகவும் ஆபத்தானதும், விஷமானதுமான அமைப்பு தமிழீழ விடுதலைப்புலிகள் அமைப்பாகும். இவ் அமைப்பு கொடுமையான தந்திரங்களை உருவாக்கி அல்ஹெய்தா (Al Qaeda) அமைப்பு போன்று உலகம் முழுவதும் பயங்கரவாத வலைப்பின்னலை உருவாக்கியுள்ளது. ஐக்கிய அமெரிக்கா அரசாங்கம் இவ்அமைப்பினைச் சர்வதேசப் பயங்கரவாத அமைப்பு என அடையாளப்படுத்துவதுடன், இங்கு அதன் செயற்பாடுகளை தடுத்து நிறுத்துவதற்கு தனது முழுமையான புலனாய்வு, மதிநுட்பம்,திறமைகளைப் பயன்படுத்த வேண்டும்”. எனக் குறிப்பிட்டிருந்தது. இதற்கு ஏற்ப தமிழீழ விடுதலைப்புலிகளுக்கு எதிரான செயற்பாடுகள் ஐக்கிய அமெரிக்காவினால் வடிவமைக்கப்பட்டிருந்தன.

பொதுமக்கள் படுகொலை

2005ஆம் ஆண்டில் தர்மரட்ணம் சிவராம் “இலங்கையில் ஐக்கிய அமெரிக்காவின் தந்திரோபாய நலன்கள்” என்னும் தலைப்பில் (US Strategic Interests in Sri Lanka) எழுதிய கட்டுரையில் சி.ஐ.ஏ பிராந்திய புலனாய்வாளர் கூறியதாகக் கூறும் கருத்தினை மேற்கோள்காட்டியிருந்தார். “தமிழீழ விடுதலைப் புலிகளின் கட்டுப்பாட்டு பிரதேசத்திலுள்ள பொது மக்களின் மீது அச்சுறுத்தக்கூடிய குண்டு வீச்சுக்களை மேற்கொள்வதன் மூலம் பொது மக்கள் மீது அழுத்தத்தினைப் பிரயோகித்து பிரபாகரனை வெளியேற்றுவதற்கான சூழலை உருவாக்கலாம்” என்பதே அதுவாகும். ஆனால் பொதுமக்கள் மீது அச்சுறுத்தக் கூடிய குண்டுகளை மாத்திரம் வீசாமல், அதற்கு மேலே ஒருபடி சென்று 40,000 மேற்பட்ட தமிழ் பொதுமக்களைப் படுகொலை செய்து அதன் பின்னரே தமிழீழ விடுதலைப் புலிகளை அழித்தொழிக்கும் பொறிமுறையொன்று உருவாக்கப்படுவதற்கு ஐக்கிய அமெரிக்கா உதவியாக இருந்துள்ளது. இறுதி யுத்தத்தில் இதுவரையில் சரியான கணக்கெடுப்பின்றி மரணித்துப்போன அப்பாவி மனிதஉயிர்களின் பெறுமதி தொடர்பாக இப்போது சர்வதேசளவில் விவாதிக்கும் மனிதஉரிமைப் பாதுகாவலர்கள் அனைவரும் இதற்கான பொறுப்பினைக் கூறும்படி ஐக்கிய அமெரிக்காவிடமும் கோரவேண்டும். ஏனெனில் இலங்கை இராணுவத்திற்கு தான் வழங்கிய ஆயுத விநியோகம் உட்பட்ட சகல உதவிகளினாலும் இறுதி யுத்தம் எங்கு போய் முடியும் என்பது ஐக்கிய அமெரிக்காவிற்கு நன்கு தெரியும். எனவே இறுதிக்கட்ட யுத்த காலத்தில் இலங்கை இராணுவத்திற்கு ஆயுத விநியோகம் உட்பட்ட சகல உதவிகளையும் வழங்கிய ஐக்கிய அமெரிக்காவும் விசாரணைக்குட்படுத்தப்படல் வேண்டும். ஆனால் இவர்களையெல்லாம் விசாரணைக்குட்படுத்தும் அதிகாரம் பூகோள அரசியலில் இப்போது யாரிடமும் இல்லை என்பதே யதார்த்தமாகும்.

Share

Who's Online

We have 35 guests and no members online

+1 Me

Subscribe

Enter your email address:

Delivered by FeedBurner

 About Prof. Thanabalasingam Krishnamohan

Prof. Thanabalsingam Krishnamohan is a Professor in Political Science in Eastern University of Sri Lanka .