Education is the Most Powerful Weapon Which You Can Use to Change the World. – Nelson Mandela-

பணிக்குழு - 2.5 out of 5 based on 2 votes
1 1 1 1 1 1 1 1 1 1 Rating 2.75 (2 Votes)

 

வளர்ச்சியடைந்து வரும் பொதுநிர்வாகவியல் கற்கை நெறியில், அதன் முக்கிய அங்கமாக விளங்கும் பணிக்குழுவினர் பற்றிய ஆய்வுகளும் வளர்ச்சியடைந்து வருகின்றன. தேர்தல் மூலம்; தெரிவு செய்யப்பட்ட பிரதிநிதிகளல்லாத நிரந்தர நிர்வாகப் பதவிகளுக்கு தலைமை தாங்குகின்றவர்களின் அரசாங்க முறையே பணிக்குழுமுறையாகும். பணிக்குழு என்ற பதமானது நிரந்தரமான சக்தி கொண்டது என்பதை நடைமுறையில் நிரூபித்துள்ளது. பணிக்குழு ஆட்சியை விமர்சிக்கும் அனேக விமர்சகர்கள் பணிக்குழுவினர் மூலம் அதிக பயனைப் பெற முடியும் எனவும் கூறியுள்ளனர்.

நிர்வாகவியல் அறிஞர்கள் பணிக்குழு ஆட்சியை ஒரு சபையிலான அரசாங்கம் அல்லது மேசை அரசாங்கம் எனக் கூறுகின்றார்கள். அதாவது டீரசநயர என்ற ஆங்கில பதமானது ஆட்சியியலில் குழு அல்லது சபை என்பதையே குறித்து நிற்கின்றது. இவ்வகையில் பணிக்குழு என்பது தனித்தனி அமைச்சுக்களைக் கொண்ட பல குழுக்கள் அல்லது சபைகள் அல்லது திணைக்கழங்களை உள்ளடக்கிய அரசியல் முறைமையினையே குறித்து நி;ற்கின்றது எனலாம்.

1. இயல்பும் வரைவிலக்கணமும் :-

மொஸ்ரின் மாக்ஸ் (Mostein Marx) என்பவர், பணிக்குழு ஆட்சி பற்றி கூறும் போது 'அது நீண்ட காலத்திற்கு முன் Bureaucratie என தோற்றம் பெற்ற ஒரு பிரஞ்சுப் பதம் என்றும், இந்த யுகத்திலேயே தோன்றி மிகவும் கூடாத பெயரெடுத்த பதம்' என்றும், மக்ஸ்வெபர் (Max Weber )பணிக்குழுவானது 'எல்லா அரசியல் முறைமைகளிலும் மென்மேலும் நிபுணத்துவம் வாய்ந்த உத்தியோகத்தர்களிலான ஓர் நிர்வாக முறைமையாகும். மேலும், பணிக்குழுவானது பாரிய சிக்கலான அமைப்புக்கள், வியாபாரத் நிலையங்கள், தொழிற்சங்கங்கள், அரசியல் கட்சிகள் போன்ற அமைப்புக்கள் அனைத்திலும் காணப்படுகின்றது' என்றும் கூறுகின்றனர்.

பணிக்குழு ஆட்சி என்ற பதத்தின் முக்கியமான பண்பு யாதனில், ஒரு அமைப்பினது அடிப்படை குணாம்ச வடிவங்களை தொடர்புபடுத்தி விளங்க முற்படுவதேயாகும். இன்னோர்வகையில் கூறின், பணிக்குழுவினர் படிநிலை அமைப்பில் தொழிற்சிறப்பு தேர்ச்சியின் அடிப்படையில் தமக்கேயுரிய தனித்துவமான பண்புகளுடன் இயங்குகின்றனர். இதனையே விக்ரர் தொம்சன் (Victer Thompson)என்பவர் மிக உயர்ந்த அதிகாரத்தைக் கொண்ட படிநிலை அமைப்பானது, மிக உயர்ந்த அளவிலான தொழிற்பிரிவினையை தனக்குள் உள்ளடக்கிய தொன்றாகக் காணப்படும்' எனக் கூறுகின்றார்.

மக்ஸ் வெபருக்குப் பின்னர், பணிக்குழு தொடர்பாக ஆய்வு செய்தவர்கள் அதனுடைய வடிவ அமைப்புப் பற்றியே கருத்;தில் எடுத்தனர். றிச்சாட் எச். ஹோல் (Richart H. Hall) என்பவர், (Weber) லிற்வக் (Litwak) பிரட்றிச் (Friedrich), மெர்ரன் (Merton), யுடி (Udy) > பர்சன் (Parsons), பர்கெர் (Berger)போன்ற ஆட்சியியல் அறிஞர்கள் பணிக்குழுவின் குணாம்சம் பற்றி வெளியிட்ட கருத்துக்களை அடிப்படையாகக் கொண்டு; பணிக்குழு தொடர்பான பின்வரும் குணாம்சங்களை முன்வைக்கமுடியும்.

  1. படிநிலை அமைப்பு முறைக்கு ஏற்ப சிறப்பான முறையில் அதிகாரத்தை வரைவிலக்கணப்படுத்துதல் வேண்டும்.
  2. செயல்பாட்டுத் திறன் கொண்ட, சிறப்புத் தேர்ச்சி பெற்ற தொழில் பிரிவினையை உருவாக்குதல் வேண்டும்.
  3. அமைப்பின் பதவிகளில் இருப்பவர்களுக்கான உரிமைகளும், கடமைகளும் எவையென இனம் கண்டு அதற்கேற்ற அதிகாரங்களை வழங்குதல் வேண்டும்.
  4. கடமைகளை ஆற்றும் போது பேண வேண்டிய முறையான ஒழுங்குகளை கவனத்தில் எடுக்க வேண்டும்.
  5. ஊழியர்களுக்கிடையிலான உறவு நிலைகளில் சுயநலன்களுக்கு இடம்கொடாது கவனித்துக் கொள்ளுதல் வேண்டும்.
  6. எவ்வாறு தொழில்நுட்ப திறனின் அடிப்படையில், ஊழியர்களைத் தெரிவு செய்வது, வேலை வழங்குவது, பதவி உயர்வு வழங்குவது என்பதை வரையறை செய்து கொள்ள வேண்டும்.

2. மக்ஸ் வெபர்

மக்ஸ் வெபர் 1864-1920வரை ஜேர்மனியில் வாழ்ந்த ஓர் சமூக விஞ்ஞானியாகும். இவர், பொருளாதாரம், சட்டம், வரலாறு, அரசியல் விஞ்ஞானம் ஆகிய துறைகளுக்குத் தனது பங்களிப்பினை வழங்கியிருந்தார். நவீன கைத்தொழில் நாடுகள் குறிப்பாக மேற்கு ஐரோப்பா பணிக்குழுவினூடாக சமூக, பொருளாதார வளர்ச்சிகளைப் பெற்றுக் கொண்டதை இவர் அவதானித்தார். இவ் அவதானங்களை அடிப்படையாகக் கொண்டு மக்ஸ் வெபர் பணிக்குழுவின்; அடிப்படை இயல்புகள் தொடர்பாகப் பின்வரும் கருத்துக்களை முன்வைக்கின்றார்.

  1. அலுவலகங்கள் படிநிலை அமைப்பாக ஒழுங்குபடுத்தப்படல் வேண்டும்.
  2. ஒவ்வொரு அலுவலகச் செயற்பாடும் தொழிற்பிரிப்பை அடிப்படையாகக் கொண்டு காணப்படும்.
  3. எல்லா நிர்வாகக் கடமைகளும் சட்டங்களால் தீர்மானிக்கப்பட வேண்டும்.
  4. நிர்வாகச் செயற்பாடுகள், விதிகள், தீர்மானங்கள் யாவும் எழுத்துருவில் அமைந்திருத்தல் வேண்டும்.
  5. சட்டத்தின் படி எல்லா மக்களும் நிர்வகிக்கப்படல் வேண்டுமேயொழிய, சமூக அந்தஸ்த்து, குடும்ப செல்வாக்கு, அரசியல் தொடர்பு என்பவற்றின் அடிப்படையில் நிர்வகிக்கப்படல் கூடாது.
  6. உத்தியோகத்தர்கள் பயிற்சியில் காட்டு;ம் நிபுணத்துவம் தொழில்சார் தகைமைகள் என்பவைகளின் அடிப்படையில் தெரிவு செய்யப்படல் வேண்டும்;.
  7. உத்தியோகத்தர்கள் முழு நேர ஊழியர்களாகக் கடமையாற்ற வேண்டும்.
  8. ஊழியர்களுக்கான பதவி உயர்வானது திறமை, மூப்பு என்பவற்றின் அடிப்படையில் அல்லது இரண்டின் அடிப்படையில் வழங்கப்படல் வேண்டும்.

மக்ஸ் வெபரின் முடிவின் படி, இவ்வியல்புகள் பொது நிர்வாகவியலில் மிகக் கூடிய சாமர்த்தியங்களாகும்.

3. பணிக்குழுவும் நடத்தைவாதிளும்

பணிக்குழு தொடர்பாக நடத்தைவாதக் கோட்பாட்டாளர்கள் தமது தளத்தில் இருந்து கருத்துக்களை முன்வைத்துள்ளார்கள். ஆயினும், இவர்களிடையே ஒருமித்த கருத்தொற்றுமை காணப்படவில்லை. படிநிலை அமைப்பை, நிர்வாக ஒழுங்கமைப்பிற்காக ஒரு நிறுவனம் பயன்படுத்துகின்ற போது, தமது கொள்கையினை எவ்வாறு அடையலாம் என்பதற்கான ஏற்றுக்கொள்ளப்பட்ட நடைமுறை உத்திகளாக, இலக்கு, நுட்பம், உறுதி என்பவற்றை நடத்தைவாதம் முன்வைக்கின்றது.

பிறட்றிச் என்னும் நடத்தைவாத கோட்பாட்டாளர் இது தொடர்பாக கருத்துக் கூறும் போது 'இந்த நுணுக்கங்கள் நிர்வாக உத்தியோகத்தர்களின் கடமைகளை அளவீடு செய்வதற்கு மிகவும் பயன் மிக்கது' என்கின்றார். ஐஸ்ரற் (Eisentadt) என்பவர், 'ஒரு பணிக்குழு ஆட்சியானது தன்னுடைய சூழலுக்கு ஏற்ப மாறக்கூடிய சமநிலை நடத்தை ஒன்றை உருவாக்கக் கூடியதாக இருக்க வேண்டும்' என்கின்றார். பீற்ரர் ப்ளா (Peter Blau)என்பவர், 'படிநிலை அமைப்பின் ஒழுங்குகள், விசேடத்துவம், நிபுணத்துவம், குறிப்பிட்ட நடவடிக்கை விதிகள், முடிவினை அடைவதற்கான நியாயபூர்வமான கொள்கைகள் ஆகிய அடிப்படையான அமைப்புக் குணாம்சங்கள் நவீன சமுதாயத்தின் பரந்தளவிலான நடத்தைகளைத் தீர்மானிக்கின்றன' என்கின்றார்.

பணிக்குழு தொடர்பாக நடத்தைவாதிகள் வேறு வேறு கோணங்களில் கருத்துக்களை முன்வைத்துள்ளார்கள். ஆயினும், இக்கருத்துக்களில் இருந்து பொதுவான கருத்துக்களை தொகுத்து எடுப்பது முதன்மையான பணியாகும். பொதுவாக, நடத்தைகள் எப்போதும் முடிவுகளை மையமாக வைத்தே தீர்மானிக்கப்பட வேண்டும் எனக் கூறப்படுகின்றது. சில நூலாசிரியர்கள் கூறுவது போல, பணிக்குழுவானது என்ன நோக்கத்திற்காக இயங்குகின்றதோ, அந்த நோக்கத்தினை சிதைப்பனவாகவும் காணப்படுகின்றது. அதாவது பணிக்குழுவிடம் காணப்படும் சில பொருத்தமற்ற இயல்புகள் பணிக்குழுவின்; நோக்கத்தினை சிதைத்து விடுகின்றன. முடிவாக ஒழுங்கமைப்பைப் பொறுத்தவரை எல்லா அதிகார வர்க்க குணாம்சங்களும் ஒத்த தன்மை கொண்டதாக இருப்பதில்லை. அமைப்பு ஒழுங்குப் பரிமாணம் தொடர்பாகச் சில ஆக்கபூர்வமான முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. இது அமைப்பு நடத்தை தொடர்பான எல்லா விடயங்களையும் ஆராய்ந்து பார்ப்பதற்கும், பணிக்குழுவின் நடத்தை எப்படியிருக்கும் என்பதை நிச்சயப்படுத்திக் கொள்வதற்கும், ஒழுங்கமைப்பின் மீது அதிக கவனம் செலுத்திக் கொள்வதற்கும் உதவியாக இருக்கும்.

Share

Who's Online

We have 90 guests and no members online

+1 Me

Subscribe

Enter your email address:

Delivered by FeedBurner

 About Prof. Thanabalasingam Krishnamohan

Prof. Thanabalsingam Krishnamohan is a Professor in Political Science in Eastern University of Sri Lanka .