Education is the Most Powerful Weapon Which You Can Use to Change the World. – Nelson Mandela-

ஒப்பீட்டு அரசியல் கற்கைக்கான அணுகுமுறைகள் - 2.8 out of 5 based on 12 votes
1 1 1 1 1 1 1 1 1 1 Rating 2.75 (12 Votes)

ஒப்பீட்டு அரசியலில் கற்கை நெறிக்குள் அணுகுமுறையானது வளர்ச்சியடைந்து வரும் பகுதியாகவுள்ளது.உலக நாடுகளின் அரசியல் முறைமைகளையும் , வளர்ச்சியடைந்து வரும் நாடுகளின் அரசியல் முறைமைகளையும் அறிந்து கொள்வதற்கு ஒப்பீட்டு அணுகுமுறையானது மிகவும் பயனுள்ளதாகும். அணுகுமுறை என்பது 'ஒரு குறித்த காட்சிநிலையினை நோக்குவதற்கும் அதனை விளக்குவதற்குமான வழிமுறையாகும் என விளக்கமளிக்கப்படுகின்றது. அணுகுமுறையினை வழிமுறை கோட்பாடு என்பதுடன் ஒப்பிடுதவன் மூலமும் மிகவும் நுட்பமாகவும் விளக்கிக் கொள்ளலாம். எனவே அணுகுமுறை என்பது ஒரு வழிமுறை எனக் கூறலாம். வான்டைக் எனும் அறிஞர் 'அணுகுமுறை என்பது ஓர் பிரச்சினையை தெரிவு செய்கின்ற அலகாகவும் அது தொடர்பான தரவுகளைக் கொண்டதாகவும் இருக்கும். ஆனால் வழிமுறை என்பது பயனுள்ள தகவல்களைப் பெறுதல் மட்டுமே' எனக் கூறுகின்றார். டேவிட் ஈஸ்ரன் 'உருவமாதிரிகளே அணுகுமுறை' எனக் குறிப்பிடுகின்றார். சாதாரண மொழியில் கூறுவதாயின் ஓர் குறிப்பிட்ட விடயத்தைப் பார்க்கின்ற முறை, விளக்குகின்ற முறை என வரைவிலக்கணப்படுத்தலாம். மறுபக்கத்தில் அறிஞர்கள் தமது கோட்பாடுகளே சிறந்தவை என்பதை முன்வைப்பதற்கான வாதங்களே அணுகுமுறைமைகள் எனலாம். இவ் அணுகுமுறைமைகளை மரபுசார் அணுகுமுறைமை, நவீன அணுகுமுறைமை என இரண்டாக வகைப்படுத்தலாம்;.

1. மரபுசார் அணுகுமுறைமைகள்

மரபுரீதியான அணுகுமுறைமையானது கூடுதலாக விபரணத் தன்மை வாய்ந்ததாகவுள்ளது. மரபுரீதியான அணுகுமுறைமையானது பிரச்சினைகளுக்குத் தீர்வு காண்பதாகவோ அன்றி விளக்கம் தருவதாகவோ இருக்கவில்லை. பத்தொன்பதாம் நூற்றாண்டில் வாழ்ந்த அறிஞர்களின் கருத்துக்களால் இவ் அணுகுமுறைமை வளம்பெற்றிருந்தாலும் இருபதாம் நூற்றாண்டில் இது பல சவால்களைச் சந்தித்துள்ளது. மரபுரீதியான அணுகுமுறைகளாக பின்வருவன அடையாளப்படுத்தப்படுகின்றன.அவைகளாவன மெய்யியல் அணுகுமுறைமை, வரலாற்று அணுகுமுறைமை, நிறுவன அணுகுமுறைமை, சட்ட அணுகுமுறைமை என்பவைகளாகும்.

மெய்யியல் அணுகுமுறைமை

மெய்யியல் அணுகுமுறைமை மிகவும் பழைமையானதாகும். ஆரம்ப காலத்தில் இது ஒழுக்கவியல் அணுகுமுறை எனவும் அழைக்கப்பட்டது. மெய்யியல் அணுகுமுறையாளர்களின் கருத்தின் படி 'மனிதன், அரசு, அரசாங்கம் யாவும் சில இலக்குகள், ஒழுங்குகள், உண்மைகள், உயர் தத்துவங்கள் என்பவைகளோடு மிக நெருங்கிய தொடர்புடையவைகளாகும். அரிஸ்ரோட்டில், மாக்கியவல்லி, போடின், ஹொப்ஸ், லொக், மொண்டஸ்கியூ, பிளேட்டோ, மோர், ஹரிங்ரன், ரூசோ, கான்ட், ஹெகல், கிறீன் போன்றவர்கள் தமது கருத்துக்களை மெய்யியல் அணுகுமுறைமையின் அடிப்படையிலேயே முன்வைத்துள்ளனர்.

வரலாற்று அணுகுமுறை :

குறிப்பிட்ட காலத்தில் அல்லது கடந்த காலத்தில் ஒரு குறிப்பிட்ட நிகழ்ச்சி அல்லது சம்பவம் தொடர்பான காட்சிநிலை எவ்வாறு இருந்தது என்பதைக் குறிப்பிடுவதே வரலாறாகும். மனிதனின் சிறந்த நடத்தையானது சமூக அபிவிருத்தியில் எத்தகைய தாக்கத்தை ஏற்படுத்தியிருந்தது என்பதைக் கற்க வரலாறு பயன்படுத்தப்பட்டது. அரசியல் கோட்பாட்டுக் கல்வியின் பெறுமானத்தினை 'வரலாற்றுப் பரிமாணத்தின் அடிப்படையில் பலர் ஆய்வு செய்துள்ளனர். ஜீ. எச்;.சபயின், மாக்கியவல்லி, கெட்ரல் போன்றவர்கள் இவ் அணுகுமுறையை ஆதரிக்கின்றனர்.

நிறுவன அணுகுமுறை

நிறுவனங்கள் பொதுவாக அரசியல் நிறுவனங்கள், அரசாங்க நிறுவனங்கள் என இரண்டாக வகைப்படுத்தப்படுகின்றன. அரசியல் நிறுவனங்கள் அரசியல் கட்சிகள், அமுக்கக் குழுக்கள், மாணவர் அமைப்புக்கள் போன்றவகைகள் அரசியல் நிறுவனங்களாக கருத்தப்படுகின்றன. சட்ட, நிர்வாக, நீதி;த்துறைகள் அரசாங்க நிறுவனங்களாக கருதப்படுகின்றன. ஆகவே இவ்வாறான நிறுவனங்களை ஆராய்வதன் மூலம் அரசறிவியலைக் கற்க முடியும் என்பதால் இவ் அணுகுமுறைகள் முக்கியம் பெறுகின்றன. புராதன காலத்தில் அரிஸ்ரோட்டில், பொலிபியஸ் போன்றோரும் நவீனகாலத்தில் பிறைஸ், பைனர் போன்றோரும்; இவ் அணுகுமுறையைப் பயன்படுத்தியுள்ளனர். சமகால எழுத்தாளர்களாகிய பென்லி, ரூமன், லதம், வி.ஓ.கீ போன்றவர்கள் இவ் அணுகுமுறைமைக்குள் அமுக்கக் குழுக்களையும் சேர்த்துக் கொள்ள வேண்டும் என்கின்றனர். எப்.ஏ.ஒக், ஹேர்மன் பைனர், எச்.ஜே.லஸ்கி, எஸ்.எப்.ஸ்ரோங், ஜேம்ஸ் பிரைஸ் போன்றவர்கள் நிறுவன அணுகுமுறைகளை அமைப்பு அணுகுமுறை என அழைக்கலாம் எனவும் குறிப்பிடுகின்றார்கள்.

சட்ட அணுகுமுறை :

அரசு பின்பற்றும் சட்டம், அச்சட்டங்களை அடிப்படையாகக் கொண்டு செயற்படும் நீதி, நிர்வாகம் போன்றவற்றை விளக்குவதன் மூலம் குறிப்பிட்ட அரசியல் முறையினை விளக்க இவ் அணுகுமுறை உதவுகின்றது. இவ் அணுகுமுறையினை சிசரோ, டைசி, குறோரியஸ், ஜோன் ஒஸ்ரின் போன்றவர்கள் பயன்படுத்தியிருந்தார்கள்.

2. நவீன அணுகுமுறை :

நவீன அணுகுமுறை மரபு சார் அணுகுமுறையிலிருந்து முற்றிலும் வேறுபட்டதாகும். மரபு சார் அணுகுமுறையில் பெருமளவு விபரணப் பண்பே காணப்பட்டது. நவீன அணுகுமுறைக்கு நம்பகத் தன்மையான தரவுகள் அவசியமாகும். நம்பகத் தன்மையான தரவுகளைப் பயன்படுத்தியே ஆராட்சி செய்யப்பட வேண்டும். ஆராட்சியானது அனுபவப் பகுப்பாய்வாக இருத்தல் வேண்டும். அப்போதுதான் ஆராட்சியின் மூலம் உண்மைகள் வெளிவரும்.நவீன அணுகு முறைக்குள் பல்வேறு அணுகுமுறைமைகள் காணப்படுகின்றன. அவைகளுள்: சமூகவியல் அணுகுமுறை, உளவியல் அணுகுமுறை, பொருளியல் அணுகுமுறை, புள்ளிவிபர அணுகுமுறை, முறைமைசார் அணுகுமுறை ஒழுங்கமைவு அணுகுமுறை, நடத்தைவாத அணுகுமுறை, மாக்சிச அணுகுமுறை போன்றவற்றை சிறப்பாகக் குறிப்பிடலாம்.

சமூகவியல் அணுகுமுறை :

சமூகவியல் அடிப்படையில் ஒப்பீட்டு அரசியலை விளங்கிக் கொள்ளல் என்பதுதான் இவ்வணுகுமுறையின் பிரதான நோக்கமாகும். வெபர், கொம்ட், ஸ்பென்சர் போன்ற சமூகவியலாளர்கள்; 'அரசு' என்ற நிறுவனம் ஒரு அரசியல் நிறுவனம் என்பதை விட ஒரு சமூக நிறுவனம் என்பதுதான் பொருத்தமானது எனக் கூறுகின்றனர்.சமூகவியல் அணுகுமுறை அரசியல் சமூகமயவாக்கம், அரசியல் கலாசாரம், அரசியல் அபிவிருத்தி போன்றவற்றை பிரதானமாக ஆய்வு செய்கின்றது. சமூகவியல் அணுகுமுறையினை மக்கைவர், டேவிட் ஈஸ்ரன், அல்மன்ட் போன்ற முன்னோடி ஆய்வாளர்கள் தமது அரசியல் நடத்தை பற்றிய ஆய்விற்காகப் பயன்படுத்தியுள்ளனர்.

உளவியல் அணுகுமுறை :

அரசறிவியலில் கற்கை நெறியுடன் உளவியல் மிகவும் நெருக்கமானதாக காணப்படுகின்றது. சமூகத்திலுள்ள தனிமனிதர்கள் ஒவ்வொருவருக்கும் உணர்ச்சிகள், பழக்கவழக்கங்கள், மனவெழுச்சிகள் இருக்கின்றன. இவை யாவும் உளம் சார்ந்தவைகளாகும். எனவே அரசு சார்ந்த விடயங்களில் தனிமனிதர்கள் ஈடுபடுகின்ற போது அரசு சார்ந்த மன எழுச்சிகள் வெளிப்படுத்தப்படும். அரசு சார்ந்த மனவெழுச்சிய அரசியற் செயற்பாட்டைத் தீர்மானிக்கின்றது. இங்கு அதிகாரம் என்பது ஒரு உளவியல் விடயமும், சமூக மனப்பாங்குமாகும். அதிகாரத்தை அனுபவிப்பது, அதிகாரத்தை தொடர்ந்து தம் வசம் வைத்திருக்க வேண்டும் என விரும்புவது போன்ற உளவியல் பண்புகள் அரசியலில் ஈடுபடுகின்றவர்களிடம் காணப்படு;கின்றன. இதனாலேயே அதிகாரத்திற்கான போராட்டங்கள் நிகழ்கின்றன. இதனால் அரசியலில் உளவியல் பிரதானமாகின்றது. மெரியம், லாஸ்வெல், கிரகம் வொலஸ், ஆர்.ஏ.டால் போன்ற சமூகவியலாளர்கள் அரசை விளங்கிக் கொள்ள உளவியலைப் பயன்படுத்தும் சிந்தனையாளர்களாகக் காணப்படுகின்றார்கள்.

பொருளியல் அணுகுமுறை :

பொருட்களின் உற்பத்தி, விநியோகம், அதன் பங்கீடு என்பன பொருளாதாரத்துடன் தொடர்புடையவைகளாகும். இதற்கான நியமங்களும், விதிகளும் அரசினாலேயே இயற்றப்படுகின்றன. எனவே பொருளாதாரம் என்பது அரசு என்ற ஒன்று இல்லாமல் இயங்க முடியாது. அரசியல் நிகழ்வினை பொருளாதாரமும் இணைந்தே தீர்மானிக்கின்றது. சமூகத்தில் பொருளாதாரம் பெறும் முக்கியத்துவத்தைப் பொறுத்து, தாராண்மைவாதம், சோஸலிசம், கம்யூனிசம் போன்ற சித்தாந்தங்கள்; தோற்றம் பெற்றன. அடம் ஸ்மித் காலத்திலிருந்து இச்சிந்தனைகள் காணப்படுகின்றன. ஜே.எஸ்.மில், மார்க்ஸ், மிட்ச்சேல் போன்றோர் மேற்கொண்ட ஆய்வானது புதியதொரு விஞ்ஞான விளக்கத்தை அரசுக்கும் பொருளாதாரத்திற்கும் தருவதாக உள்ளது.

புள்ளிவிபர அணுகுமுறை :

புள்ளிவிபர ரீதியாக ஆய்வுகள் மேற்கொள்ளப்பட்டு, விஞ்ஞான ரீதியாக அரசியல் பிரச்சினைகளை ஆய்வு செய்வற்கு இவ் அணுகுமுறை பயன்படுகின்றது. ஒரு நிகழ்வு தொடர்பான தகவல்கள் புள்ளிவிபரரீதியாக கணிப்பிடப்பட்டு, அதன் அடிப்படையில் அந்நிகழ்வு தொடர்பான எதிர்வு கூறல்களும், முடிவுகளும் முன்வைக்கப்படுகின்றன. பெருமளவிற்கு அரசறிவியலைப் பொறுத்தவரை புள்ளிவிபர அணுகுமுறை தேர்தல் நடத்தை பற்றிய பகுப்பாய்வுக்கும், பொதுசன அபிப்பிராய கணிப்பீடுகளுக்கும் சிறப்பாக பயன்படுத்தப்படுகின்றது. இத்தகைய ஆய்வு முறைகளை கல்லூப், சார்ல்ஸ் மெரியம், ஹரோல்ற் ஹொஸ்னல் போன்றவர்கள் பயன்படுத்தியுள்ளனர்.

முறைமை அணுகுமுறை

அரசறிவியலுக்குள் மிக அண்மையில் அறிமுகப்படுத்தப்பட்டதோர் அணுகுமுறைமையாகும். இவ் அணுகு முறைமை உயிரியல் விஞ்ஞானத்திலிருந்து பெறப்பட்டதால் , அரசறிவியலை மேலும் விஞ்ஞானப்பண்பு கொண்ட கற்கையாக மாற்றியுள்ளது. டேவிட் ஈஸ்ரன் எழுதிய அரசியல் முறைமை என்ற நூலில் முறைமைப் பகுப்பாய்வைப் பற்றி எடுத்துக் கூறியிருந்தார். சமூக விஞ்ஞான முறைமைக்குள் உள்ள ஒவ்வொரு கற்கை நெறியும் சமூக விஞ்ஞான முறைமையின் உப முறைமைகளாக அழைக்கப்படுகின்றன. சமூக விஞ்ஞான கற்கை நெறிகளுக்குள் உள்ள இவ் ஒவ்வொரு உப முறைமையும் தனியானதொரு முறைமையாக அழைக்கப்படுகின்றது. எனவே அரசறிவியலில் முறைமைசார் அணுகுமுறைமை என்பது சமகாலத்திற்குரியதும் விஞ்ஞான ரீதியானதுமான முடிவுகளைத் தரும் ஒரு அணுகுமுறைமையாகும்.

ஒழுங்கமைவு அணுகுமுறை

இயற்கை விஞ்ஞானத்திலிருந்து சமூக விஞ்ஞானக் கற்கை நெறிகளுக்குள் கொண்டுவரப்பட்ட ஒரு அணுகுமுறையாகும். குறிப்பாக கணிதத்துறையில் இவ் அணுகுமுறை அதிகமாகப் பயன்படுத்தப்படுகின்றது. அரசறிவியலில் பயன்படுத்தப்படும் தொடர்பாடல் தீர்மானம் எடுத்தல், விளையாட்டுக் கோட்பாடு போன்ற கோட்பாடுகளை விளங்கிக்கொள்வதற்கு இவ் அணுகுமுறைமை பயன்படுத்தப்படுகின்றது. விதிக்குட்பட்ட (Models) கட்டமைப்புக்களை எடுகோள்களாக கொண்டு ஆய்வுகள் மேற்கொள்ளப்படுகின்றன. இவ்வாறான அணுகுமுறைகள் தற்காலத்தில் அரசியல் விஞ்ஞானத்திலும் பயன்படுத்தப்படுகின்றன.

நடத்தைவாத அணுகுமுறை :

அரசறிவியலில் பயன்படுத்தப்படும் பிரபல்யம் வாய்ந்த அணுகுமுறைமைகளில் நடத்தைவாத அணுகுமுறைமையும் ஒன்றாகும்.இவ் அணுகுமுறைமையானது சமூக உளவியல், சமூகவியல், மானுடவியல் கோட்பாடுகளையும், அதன் செயற்பாடுகளையும் முதன்மைப்படுத்துகின்றது. ஆரம்ப காலத்திலிருந்த அரசாங்க மற்றும் அரசியல் நிறுவனங்கள் பற்றிய ஆய்வானது கைவிடப்பட்டு பதிலாக அரசியலில் பங்கு கொள்ளும் தனிநபர்களின் நடத்தை பற்றிய ஆய்வாக அரசறிவியல் மாற்றப்பட்டது. எனவே நடத்தைவாதத்தின் இயல்புகள் என்பது சித்தாந்தங்கள், நிறுவனங்கள், வரலாறுகள், நிகழ்வுகள் என்பவற்றைவிட சமூகக் குழுக்கள் மற்றும் தனிநபர் நடத்தைகளைத் தீர்மானிப்பதில் சுற்றுச்சூழல் முக்கிய இடம் வகிக்கின்றது. எனவே மனித நடத்தைகளை அனுபவ ரீதியாகவும் கோட்பாட்டு ரீதியாகவும் பயன்படுத்தி ஆய்வு செய்வதற்கு நடத்தைவாத அணுகுமுறை பயன்படுத்தப்படுகின்றது. இவ் அணுகுமுறையினை கிரகம் வொலஸ், ஆதர்.எப்.பென்லி, பொஸ்வெல் போன்றோர் பயன்படுத்தியிருந்தார்கள்.

மாக்ஸ்சிச அணுகுமுறை :

நவீன அணுகுமுறைமை , மரபுசார் அணுகுமுறைமை ஆகிய இரண்டினதும் பண்பை மாக்ஸ்சிச அணுகுமுறைமை கொண்டிருப்பதாகக் கூறப்படுகின்றது. அரசு என்பது சமூக வர்க்க முரண்பாடுகளினால் தோற்றம் பெறுகின்றது என மாக்ஸ்சிச அணுகுமுறைமை கூறுகின்றது. வரலாற்றுப் பொருள்முதல்வாதம், இயக்கவியல் பொருள்முதல்வாதம் ஆகிய இரு பெரும் தத்துவங்கள் மாக்ஸ்சிச அணுகுமுறைமைக்கு பயன்படுத்தப்பட்டுள்ளது. அபிவிருத்தியடைந்து வரும் நாடுகள் அபிவிருத்தியடைந்த நாடுகள் என்பவற்றிற்கிடையிலான ஏகாதிபத்தியப் பண்பு, சுரண்டல், நவகாலனித்துவம் என்பவற்றை விளங்கிக் கொள்ள மாக்ஸ்சிச அணுகுமுறைமை பயன்படுத்தப்படுகின்றது. கார்ல்மாக்ஸ், ஏங்கல்ஸ் போன்றவர்கள் இவ் அணுகுமுறையின் முன்னோடிகளாவர்.

முடிவாக மூன்றாம் மண்டல நாடுகளை மையமாகக் கொண்டு 1950 களின் பின் அமெரிக்காவினால் ஒரு கற்கைநெறியாக உருவாக்கப்பட்ட ஒப்பீட்டரசியலை மாணவர்கள் தெளிவாக விளங்கிக் கொள்ள மேற்படி மரபு, நவீன, மாக்சிச அணுகுமுறைமைகள் அவசியமாகின்றன எனலாம்.

Share

Who's Online

We have 32 guests and no members online

+1 Me

Subscribe

Enter your email address:

Delivered by FeedBurner

 About Prof. Thanabalasingam Krishnamohan

Prof. Thanabalsingam Krishnamohan is a Professor in Political Science in Eastern University of Sri Lanka .