Education is the Most Powerful Weapon Which You Can Use to Change the World. – Nelson Mandela-

அரசியல் அபிவிருத்தி - 2.4 out of 5 based on 8 votes
1 1 1 1 1 1 1 1 1 1 Rating 2.44 (8 Votes)

பத்தொன்பதாம் நூற்றாண்டில் தோற்றம் பெற்ற சமூகவியல் கோட்பாடுகளில் அரசியல் அபிவிருத்திக் கோட்பாடும் ஒன்றாகும். மக்ஸ் வெபர், கால் மாக்ஸ், எமில் டொர்கையும், கென்றி மெயின் போன்ற சமூகவியல் கோட்பாட்டாளர்கள், மேற்குத்தேச சமூகம் கைத்தொழிற் புரட்சியினால் எவ்வாறு மாற்றத்திற்குள்ளாகியது என்பதை விளக்ககுகின்றார்கள்.

1950, 1960 களில் அரசியல் அபிவிருத்திக் கோட்பாடு அரசறிவியலில் முதன்மையடையலாயிற்று. இரண்டாம் உலகப் போருக்குப் பின்னர் சுதந்திரம் அடைந்த ஆசிய, ஆபிரிக்க இலத்தீன் அமெரிக்க நாடுகளின் தேச கட்டுமானம், அரச கட்டுமானம் போன்றவற்றை விபரிக்கின்ற கோட்பாடாக இது வளர்ச்சியடைந்தது. மூன்றாம் மண்டல நாடுகளின் அரசியல் அபிவிருத்தியை ஆய்வாளர்கள் பொருளாதார, சமூக, உளவியல், மானிடவியல் தளங்களினின்று விபரிக்கின்றார்கள். முன்னணி கல்வியியலாளர்களாகிய லூசியன் டபிள்யூ பை, ஜீ.ஏ.அல்மன்ட், ஜெம்ஸ் கோல்மன், காவார்ட் கிக்கின்ஸ், டேவிட் அப்ரர், காரல் லாஸ்வெல், கால்டூச், ரோல்கொட் பேர்சன், சாமுவல், பி கன்ரிங்ரன் போன்றோர் இவ்வாறான நோக்கிலேயே அரசியல் அபிவிருத்தியை நோக்குகின்றனர்.

  1. அரசியல் அபிவிருத்தியின் பிரதான பண்புகள்

மேற்குறிப்பிட்ட கல்வியியலாளர்கள் அரசியல் அபிவிருத்தியின் பண்புகளாக பின்வருவனவற்றை குறிப்பிடுகின்றார்கள்.

பொருளாதார அபிவிருத்திக்கான முன் நிபந்தனை

முன்னணி பொருளியலாளர்களாகிய ஏ.பரன், நோர்மன், எஸ் புச்சானன், பென்ஜமின் கிக்கின்ஸ் போன்றவர்கள் பொருளாதார அபிவிருத்திக்கான முன் நிபந்தனையே அரசியல் அபிவிருத்தி எனக் கூறுகின்றார்கள். இவர்கள் அரசியல் அபிவிருத்தி பொருளாதார அபிவிருத்தியினுடாகவே பெறப்பட வேண்டும் எனக் கூறுகின்றார்கள். இதன் மூலம் இவர்கள் அரசியல் மற்றும் சமூக நிபந்தனைகள் பொருளாதார வளர்ச்சிக்கான வழி காட்டியாக தொழிற்படுகின்றன என வாதிடுகின்றார்கள்.

கைத்தொழில் சமூகங்களின் அடையாளம் .

டபிள்யூ.டபிள்யூ ரோஸ்ரோ போன்ற முன்னணி சமூகவியல்; கோட்பாட்டாளர்கள் அரசியல் அபிவிருத்தி என்ற எண்ணக்கருவினை கைத்தொழில் சமூகங்களின் அடையாளங்களூடாக இனங் காணுகின்றார்கள். இவர்களுடைய வாதத்தின்படி 'அரசியல் அபிவிருத்தியென்பது ஒருநாட்டின் கைத்தொழில்மயவாக்க நிகழ்வுடனேயே இனங்காணப்பட வேண்டும்' எனக்கூறுகின்றார்கள்.

அரசியல் நவீனத்துவம்

ஜேம்ஸ் எஸ் கொல்மன், கால் டூச் போன்ற சமூகவியலாளர்கள் அரசியல் அபிவிருத்தி என்பது நவீன மேலைத்தேய நாடுகளையும், அவர்களுடைய வழிமுறைகளையும் பின்பற்றும் கற்கை நெறியாகும் எனக் கூறுகின்றார்கள். அதாவது அபிவிருத்தியடைந்து வரும் நாடுகள் அபிவிருத்தி அடைந்த நாடுகளைப் பின்பற்றி தமது அபிவிருத்தியினை அடைய வேண்டும் எனக் கூறுகின்றார்கள்.

தேசிய அரசுகளின் நடவடிக்கை

கே.எச்.சில்வேர்ட், எட்வேட்.ஏ.சில்ஸ், வில்லியம்ஸ் மக்கோட் போன்றவர்கள் அரசியல் அபிவிருத்தியை நவீன தேசிய அரசுக்கான ஒழுங்கமைக்கப்பட்ட அரசியல் வாழ்க்கை என்றும், அரசியல் செயற்பாட்டு மற்றும் நடவடிக்கை என்றும் கூறுகின்றார்கள். மேலும் இவர்கள் அரசியல் அபிவிருத்தியை தேசியவாத அரசியலுடன் தொடர்புபடுத்தி இனங்காணுகின்றார்கள். அதாவது அரசியல் அபிவிருத்தி நவீன அரசுகளுடன் நெருங்கிய தொடர்பினைக் கொண்டதாகும். இந் நவீன அரசுகள் சமூக, அரசியல் நிறுவனங்களுடன் நெருங்கிய உறவினைக் கொண்டதாகும்.

நிர்வாக மற்றும் சட்ட அபிவிருத்தி

மக்ஸ் வெபர், ரொல்கோட் பேர்சன், ஏ.எம் கென்டர்சன் போன்ற சமூகவியலாளர்கள் அரசியல் அபிவிருத்தியானது சமூகத்தின் நிர்வாக ஒழுங்குடனும், சட்ட ஒழுங்குடனும் நெருங்கிய தொடர்பினைக் கொண்டதாகும் என்கிறார்கள். மேலும் நிறுவனமயப்படுத்தப்பட்ட, சிறப்பாக இயங்கக்கூடிய பணிக் குழுவானது அபிவிருத்திக்கு மிகவும் அவசியமானதாகும். நிர்வாக அபிவிருத்தியானது, மானிட விவகாரங்களுடன் நெருங்கிய தொடர்புடைய விசேட அறிவினை கொண்டிருப்பதுடன், சட்டத்துடனும் நடு நிலையுடனும் நெருங்கிய தொடர்புடையதுமாகும்.

வெகுஜன கூட்டுணர்வு மற்றும் பங்குபற்றதல்

கிளிப்போர்ட், ரொபர்ட் எமர்சன் போன்ற சமூகவியலாளர்கள்; அரசியல் அபிவிருத்தியானது என்பது மக்களுக்கு ஏற்படும் விழிப்புணர்வு, மக்களுடைய நடத்தைகள் என்பவற்றுடன் தொடர்புடையது எனக் கூறுகின்றார்கள். சிறப்பான அரசியல் பங்குபற்றலானது வாக்குரிமையினூடாகவே வெளிப்படுகின்றது. வாக்குரிமை என்பது மக்கள் அரசியலில் பங்குபற்றதலூடாக தீர்மானம் எடுக்கும் செய்முறைக்கான அடையாளமாகக் கருதப்படுகின்றது.

ஜனநாயகக் கட்டுமானம்

ஜே.ரொனால்ட் பேநொக் போன்ற கல்வியலாளர்கள் அரசியல் அபிவிருத்தியானது ஜனநாயகக் கட்டுமானத்துடன் தொடர்புடையதாகும் எனக் கூறுகின்றார். மேலும் ஜனநாயக விழுமியங்களுடனும் மக்களின் மனநிலையுடனும் தொடர்புடையதாகும் எனவும் கூறுகின்றார்கள்.

உறுதியானதும் , ஒழுங்குபடுத்தப்பட்டதுமான மாற்றம்

கால்டூச், எப்.டபில்யூ.ரிக்ஸ் போன்ற கல்வியியலாளர்கள் அரசியல் அபிவிருத்தியை உறுதியானதும், ஒழுங்குபடுத்தப்பட்ட மாற்றத்துடனும் தொடர்புபடுத்தி கூறுகின்றார்கள். உறுதியும், மாற்றமும் பொருளாதார, சமூக அபிவிருத்தியினாலேயே தீர்மானிக்கப்படுகின்றன என்பதே இவர்களின் முடிவாகும்.

வெகுஜன கூட்டுணர்வும் , அதிகாரமும்

ஜீ.ஏ.அல்மன்ட், ரொல்கொட் பேர்சன் போன்ற சில சமூகவியலாளர்கள் அரசியல் அபிவிருத்தியை முழுநிறை அதிகாரத்தின் படிமுறையிலான வளர்ச்சி எனக் கூறுகின்றார்கள். முழு நிறை அதிகாரத்தின் படிமுறை வளர்ச்சியானது கூட்டுணர்வுத் தன்மை கொண்டதாகும் எனக் கூறுகின்றார்கள்

சமூக மாற்றத்தின் பல் பரிமாணத் தோற்றம்

மக்ஸ் எப்.மிலிகன், டானியல் லேர்னர் போன்ற சில சமூகவியலாளர்கள் அரசியல் அபிவிருத்தியானது சமூக பொருளாதார மாற்றங்களுடன் இணைந்ததொன்று எனக் கூறுகின்றார்கள். சமூக, பொருளாதார, அரசியல் ஒழுங்கில் ஏற்படும் மாற்றங்கள் சமூக நிகழ்வில் மாற்றத்தினை ஏற்படுத்துகின்றது. எனவே இவை ஒன்றுடன் ஒன்று தொடர்புடையதாகும் என்கின்றனர்..

  1. லூசியன் டபில்யூ . பை

சமூகவியல் மற்றும் பொருளியல் கல்வியாளர்களின் அரசியல் அபிவிருத்தி பற்றி சிந்தனையும், லூசியன் டபில்யூ. பை இன் வரைவியலக்கணமும் பார்வையும் வேறுபட்டவையாகும். லூசியன் டபில்யூ. பை அரசியல் அபிவிருத்தி தொடர்பாக மூன்று இயல்புகளை வெளிப்படுத்துகின்றார்.

சமத்துவம்

அரசியல் அபிவிருத்தி என்பது மக்களின் அரசியற் செயற்பாட்டின் சிறப்பான பங்கேற்றலும், தொடர்புமாகும். பங்கேற்றல் என்பது ஜனநாயக வழிமுறையிலானதாக இருக்கலாம் அல்லது சர்வாதிகாரமானதாக இருக்கலாம். எவ்வாறு இருப்பினும் இங்கு முக்கியமாக மக்களுடைய செயற்பாட்டினையே இவர் கருத்தில் எடுக்கின்றார். இதன் கருத்து யாதெனில் ஆட்சியாளர்களின் தெரிவில் தரம், சிறப்பு என்பன கருத்தில் எடுக்கப்பட வேண்டும். சமுதாயத்தின் மரபு ரீதியான அம்சங்களாகிய இனம், சமயம் , கலாசாரம் போன்ற விடயங்களுக்கு முக்கியத்துவம் வழங்கக் கூடாது.

திறன்

திறன் என்பது அரசியல் முறையில் காணப்படும் சமூக, பொருளாதார வெளிப்பாடுகளைக் குறித்து நிற்கின்றது. அரசாங்கத்தின் செயற்பாட்டுத் திறன் என்பது நவீன அரசுகள் நலன்புரி அரசுகளாக செயற்படும் திறனைக் குறித்து நிற்கின்றது. இதன் கருத்து யாதனில் எதிர்பார்க்கப்படும் பொதுக் கொள்கையில் திறனையும், செயற்பாட்டுத் தன்மையினையும் குறித்து நிற்கின்றது.

வேறுபாடுகண்டறிதல்

நிர்வாக அமைப்பின் விரிவாக்கத்தை இது குறித்து நிற்கின்றது. கிளைகளும், அலுவலகங்களும் மட்டுப்படுத்தப்பட்ட செயற்பாடுகளைக் கொண்டதாகக் காணப்படும். சிக்கலான அமைப்பில் ஒருங்கிணைப்பினை ஏற்படுத்துவது அவசியமானதாகும். ஒழுங்கமைப்பில் பகுதிகள் சிதைவடைந்து தனிமைப்படுத்தப்பட முடியாது. பதிலாக விசேடதுறைகள் அதற்குரிய சிறப்பியல்புகளுடன் ஒருங்கிணைந்து செயற்படுவதே சிறப்பானதாகும்.

  1. அரசியல் குறைவிருத்தி

அரசியல் குறைவிருத்தி கோட்பாடு கால் மாக்ஸ் காலத்திலிருந்து தோற்றம் பெற்றதாகும். நீண்ட காலத்தில் குறைவிருத்தி மையம் எது என்பதை வளர்ச்சியடைந்த கைத்தொழில் நாடுகளே தீர்மானிக்கும் என்பதும், முதலாளித்துவத்தின் இறுதிக்கட்ட வளர்ச்சியும் இதுவேயாகும் என்பதும் கால்மாக்ஸின் கருத்தாகும். லெனின் கூட தனது ஏகாதிபத்தியம் பற்றிய கருத்தினூடாக அரசியல் குறைவிருத்தி தொடர்பாக விளக்குகின்றார்.

அரசியல் குறைவிருத்தி பற்றிய சிந்தனை அன்ரூ - கான்டர் பிரான்ங், எப். எச். கார்டசோ போன்றவர்களால் முன்வைக்கப்பட்டதாகும். இவர்களின் சிந்தனையினை மூன்றாம் மண்டல நாடுகளின் அரசியல் அபிவிருத்தி பற்றிய ஆய்வின் தோற்றமாகவும் கருதலாம். இவர்கள் தேசிய பூஷ்வாக்களால் தேசிய பாட்டாளி மக்கள் எவ்வாறு சுரண்டப்படுகின்றார்கள் என்பதையும், பல்தேசிய கம்பனிகளூடாக சர்வதேச முதலாளிகள் தேசியப் பாட்டாளி மக்களை எவ்வாறு சுரண்டுகின்றார்கள்; என்பதையும் ஆய்வுக்குட்படுத்துகின்றார்கள். இன்னோர் வகையில் கூறின் இவர்களின் ஆய்வினை நவகாலனித்துவம் தொடர்பான ஆய்வுகள் எனவும் கூறலாம். இவர்களின் ஆய்வுகள் வறிய, பின்தங்கிய மூன்றாம் மண்டல நாடுகளை மட்டுமன்றி வளர்ந்து வருகின்ற முதலாளித்துவ நாடுகளை உலக முதலாளித்துவ நாடுகள் எவ்வாறு சுரண்டுகின்றன என்பதையும் ஆய்வு செய்வதாக உள்ளது. மூன்றாம் மண்டல நாடுகளின் இரட்டைத் தன்மையான சுரண்டல் காணப்படுகின்றன என்பதே யதார்த்தம் ஆகும். அவைகளாவன,

  • தேசியத் தொழிலாளர் வர்க்கம், தேசிய முதலாளிகளால்; நேரடியாக சுரண்டப்படுகின்றனர்.
  • தேசியத் தொழிலாளர்கள் பல்தேசிய கம்பனிகளுடாக சர்வதேச முதலாளிகளால் சுரண்டப்படுகின்றனர் .

சுதேசிய பூஷ்வாக்கள் தேசிய அரசியல் பொருளாதாரத்தில் தந்திரோபாய பங்கினையே எடுத்துக் கொள்கின்றார்கள். பல்தேசிய கம்பனிகளின் பங்குதாரர்களாக சுதேசிய பூஷ்வாக்கள் இணைந்து சுதேசிய பாட்டாளி மக்களை சுரண்டுகின்றார்கள் இவைகள் எல்லாம் நிகழ்வதற்கு வாய்ப்பாக குறைவிருத்தி நாடுகளின் பூஷ்வாக்களை பிரதிநிதித்துவப்படுத்தும் அல்லது ஆதரிக்கும் பூஷ்வா அரசு உருவாக்கப்படுகின்றது. இதன் பெறுபேறாக ஏற்றத் தாழ்வான சமூக அமைப்பு, வேலையில்லாப் பிரச்சினை, விவசாய உற்பத்தி முடக்கம், நகர்புறக் குடிப்பெயர்வு, உணவுத்தட்டுப்பாடு, பணவீக்கம், வரவுசெலவுத்திட்ட பற்றக்குறை என்பன ஏற்பட வெளிநாட்டு மூலதனங்களில் தங்கியிருக்க வேண்டிய தேவை ஏற்படுகின்றது.

மேலும் நிலப்பிரபுக்களுக்கும் பூஷ்வாக்களும்; இணைந்து தமது பொருளாதார, சமூக இலக்குகளை அடைவதற்காக அரசியல் அதிகாரத்தினை தமது கட்டுப்பாடில் வைத்துக் கொள்கின்றார்கள். ஆனால் காலப்போக்கில் இவர்களுக்கிடையில் மோதல்கள் அபிவிருத்தியடைந்து ஒருவரை ஒருவர் அழிக்க முற்படுகின்றார்கள். இதனால் சமூகத்தில் வன்முறை என்பது கட்டவிழ்த்து விடப்படுவதுடன் இதுவே பயங்கரவாத செயற்பாடுகளுக்கும் அடிப்படையாக அமைந்து விடுகின்றது. இவ்வாறான நிகழ்வுகள் ஒரு நாட்டின் சமூக பொருளாதார அமைப்புக்களில்; மாற்றத்தினை ஏற்படுத்தி விடுகின்றது.

அன்ரூ கான்ரர் பிரான்ங் தங்கியிருத்தல் கோட்பாட்டின் தந்தை எனக் கருதப்படுபவர். இவர் குறைவிருத்தியின் நோக்கம் மூலதன இழப்பாகவே கருதப்படவேண்டும் என்கின்றார். இவ்வாறு மூலதன இழப்பினால் தமது அபிவிருத்தியை இழக்கின்ற போது இம் மூலதனத்தை பயன்படுத்தி வளர்ச்சியடைந்த நாடுகள் தமது பொருளாதார அபிவிருத்தியை வளப்படுத்துகின்றன. இவ்வாறான நிகழ்வுகளை கானா, நைஜீரியா போன்ற மூன்றாம் மண்டல நாடுகளின் பொருளாதாரத்தின் மீது வளர்ச்சியடைந்த நாடுகள் என அழைக்கப்படும். ஸ்பெயின், போர்த்துக்கல் போன்ற ஐரோப்பிய நாடுகள் செலுத்தும் செல்வாக்கின் மூலம் இனங்காண முடியும்.

'குறைவிருத்தி' என்பதை பல்தேசியக் கம்பனிகளுடனும் தேசிய பூஷ்வாக்களுடனும் தொடர்புபடுத்தி ஆய்வுக்குட்படுத்தப்படுகின்றது. இங்கு இரட்டைத் தன்மையான சுரண்டல் நிலைகாணப்படுகின்றதுடன், இறுதியில் முழுநிலையிலான பொருளாதார தங்கியிருத்தலாக மாறுகின்றது. இதனை எப்.எச். கார்டசோ என்பவர் 'இணைந்த அபிவிருத்தி' என்கின்றார். பல்தேசியக் கம்பனிகளின் செயற்பாட்டினால் மூன்றாம் மண்டல நாடுகள் வளர்ச்சியடைகின்றன எனக்கூறப்பட்டாலும், இது புதிய தொழிற் பிரிவினையை தோற்றுவிக்கின்றது. அத்துடன் ஏகாதிபத்திய வளர்ச்சியானது மூன்றாம் மண்டல நாடுகளை ஒருங்கிணைத்து சர்வதேச சந்தையினையும் உருவாக்கிக் கொள்கின்றது. இந்நாடுகளுக்கிடையில் சமமற்ற சமூகப் பொருளாதார நிலைகளை உருவாக்கி விடுகின்றது. ஏகாதிபத்தியத்திற்கும் மூன்றாம் மண்டல நாடுகளுக்கும் இடையிலான உறவு இதன் அடிப்படையிலேயே கட்டி எழுப்பப்படுகின்றன.

Share

Who's Online

We have 75 guests and no members online

+1 Me

Subscribe

Enter your email address:

Delivered by FeedBurner

 About Prof. Thanabalasingam Krishnamohan

Prof. Thanabalsingam Krishnamohan is a Professor in Political Science in Eastern University of Sri Lanka .