மனிதன் சமூக வாழ்க்கையினை விரும்புகின்றவன். ஆனால் சமூக வாழ்க்கையில் தனக்குத் தேவையான அனைத்தையும் பெற்று வசதியாக வாழ்வது எல்லாத் தனிமனிதனுக்கும் சாத்தியமற்றதாகும். எனவே மனிதன் கூட்டு வாழ்க்கை வாழ்வதன் மூலம் தனக்குத் தேவையான வசதிகளைப் பெற்றுக் கொள்ள முற்படுகிறான். வரையறுக்கப்பட்ட நிலப்பரப்பில் மக்கள் தமது வாழ்க்கையினை ஒழுங்கமைக்கத் தொடங்கினார்கள். தமக்கிடையில் சமாதானத்தினையும் ஒழுங்கையும் பேணுவதற்கான ஒழுங்கமைப்பு தேவை என்பதை இயல்பாகவே உணரத் தொடங்கினார்கள். இந்த ஒழுங்கமைப்பே அரசாங்கம் என பின்னர் அழைக்கப்பட்டது. மக்கள் மீது இவ் ஒழுங்கமைப்பு தொடர்ந்து அதிகாரத்தினை செலுத்தி வந்ததால் சமுதாயப் பற்றுதல் ஏற்பட்டு அரசு உருப்பெற்றுக் கொண்டது. இன்னோர் வகையில் கூறின் அரசு குறிப்பிட்ட மக்களை உள்வாங்கிக் காணப்படும். இம்மக்கள் வரையறுக்கப்பட்ட நிலப்பரப்பிற்குள் வாழ்கின்றவர்களாக காணப்படுவார்கள். தம்மிடையில் ஒழுங்கையும், ஒழுக்கத்தையும் பேணுவதற்காக சுதந்திரமான ஒழுங்கமைப்பு ஒன்றைக் கொண்டிருப்பார்கள். சாதாரண மனிதன் ஒருவனால் ஒழுங்கமைப்பு இல்லாமல் வாழ முடியாது. அரிஸ்ரோட்டில் மனிதன் அரசில்லாமல் வாழ முடியுமாயின் நிச்சயமாக அவன் கடவுள் அல்லது தேவதையாகவே இருக்க வேண்டும் என்கிறார்.
வளர்ச்சி
புராதன காலத்தில் அரசுகளின் அளவு மிகவும் சிறியதாகவே இருந்தது. கிரேக்கர்கள் இதற்கு பொலிஸ் (Polis) என பெயரிட்டிருந்தனர். உரோமர்கள் சிவிரஸ் (Civitas) எனப் பெயரிட்டிருந்தனர். ரியுரொனிக் பழங்குடியினர் (Teutonic Tribes) ஸ்ரேரஸ் (Status) எனப் பெயரிட்டிருந்தனர். அனேகமாக ஸ்ரேரஸ் என்ற சொல்லிலிருந்தே நவீன ஆங்கிலப் பதமாகிய அரசு (State) என்ற சொல் உருவாகியிருக்கலாம் எனக் கருதப்படுகிறது. மெகெர் (Mager) என்பவர் ஸ்ரேரஸ் என்ற சொல் அரசனின் நிபந்தனை, அதிகாரம், கௌரவம் என்பவற்றையும், ஆட்சியமைப்பின் கருத்து வடிவத்தையும் குறிக்கிறது என்கிறார். நவீன காலத்தின் ஆரம்பத்தில் லாண்ட்டேக் (Landtag), லாண்ட்சிசிற்ஸ் (Landesgesetz), லாண்டீஸ்ரோற்ட்ஸ்றிட் (Landesstaatsrecht) போன்ற சொற்பதங்களைப் பயன்படுத்தியிருந்தார்கள். இங்கு அரசு புதிய வடிவத்தினை பெற்றுக் கொண்டது. நகர பொது நலவாயம் வலுவிழந்து பிரதேசம் முக்கியப்படுத்தப்பட்டது. இதன் தாக்கம் மத்திய காலத்தில் அரசு என்ற எண்ணக்கரு சனத்தொகை, பிரதேசம், அரசாங்கம் ஆகிய மூலக்கூறுகளை கொண்டிருந்தது.
திருச்சபை ஆட்சியுரிமையினையும், அதிகாரத்தினையும் பெற்றுக் கொண்ட போது கிறிஸ்தவ மதம் புனிதத் தன்மையினை பெற்றுக் கொண்டது. திருச்சபைக் காலத்தில் அரசு என்பதை விழிப்பதற்கு ஆய்வாளர்கள் ரிப்பப்ளிக்கா கிறிஸ்ரினா (Respublica Christiana) என்ற பதத்தையே பயன்படுத்தியிருந்தார்கள். போடின் (Bodin) என்ற பிரான்சிய தத்துவஞானி குடியரசு (Republique- Republic) என்ற பதத்தினையே பயன்படுத்தியிருந்தார். ஹொப்ஸ் சமூகம், அரசு, அரசாங்கம் ஆகிய மூன்றையும் இணைத்து பொது நலவாயம் என்ற பெயரைப் பயன்படுத்தியிருந்தார். ஆனாலும் இவரில் காணப்பட்ட சிறப்பியல்பு யாதெனில் மக்களின் உடமை, உரிமை, வாழ்க்கை என்பவற்றை உத்தரவாதப்படுத்தும் இறைமை அதிகாரம் அரசிடமேயுள்ளது என்ற கருத்தை உருவாக்கியிருந்தமையேயாகும். லொக் அரசை சமுதாயத்தினூடாக அடையாளப்படுத்தியிருந்தார். ரூசோவும் சமுதாயம் (Community) என்ற பதத்தினையே முதன்மைப்படுத்தியிருந்தார்.
அரசியல் விஞ்ஞானக் கற்கை நெறியில் முக்கியம் பெறும் அரசு என்ற பதம் வரலாற்று வளர்ச்சியில் இடத்திற்கு இடம் காலத்திற்கு காலம், மொழிக்கு மொழி வௌ;வேறு பரிமாணத்தில் பயன்படுத்தப்பட்டு வந்துள்ளது. பதினாறாம் நூற்றாண்டில் (1513) இத்தாலியில் வாழ்ந்த மாக்கியவல்லி இத்தாலிய மொழியில் எழுதிய இளவரசன் (Prince) என்ற நூலில் ஸ்ரரோ (Stato) என்ற பதத்தினை பயன்படுத்தியிருந்தார். மாக்கியவல்லி ஸ்ரரோ என்ற பதத்தை அரசைக் குறிக்கப்பயன்படுத்தினார். இவரின் பின்னரே அரசியல் விஞ்ஞானிகள் அரசு என்ற பதத்தை பயன்படுத்தத் தொடங்கினர். இதன் பின்னர் ஆங்கில மொழியில் ஸ்ரேற் (State)எனவும், பிரான்சிய மொழியில் ஈரற் (Etat)எனவும் ஜேர்மன் மொழியில் ஸ்ராற் (Staat) எனவும் அழைக்கப்படலாயிற்று. பதினெட்டாம் நூற்றாண்டின் முடிவில் அரசு - State என்ற பதம் மனிதனின் கூட்டு வாழ்கையுடன் நெருங்கிய தொடர்பினைக் கொண்டதாக மாறியது. அரசு என்ற பதம் ஹாப்ஸ், போடின் ஆகியோர்களின் பங்களிப்புடன் பிரதேசம், மக்கள், அரசாங்கம் என்ற மூன்று மூலக்கூறுகளுடன் இறைமை என்ற எண்ணக்கருவினை நான்காவது மூலக் கூறாகப் பெற்று எழுச்சியடைந்தது.
வரைவிலக்கணம்
அரசியல் விஞ்ஞானிகள் தாம் வாழ்ந்த காலம், சூழ்நிலை என்பவற்றை அடிப்படையாகக் கொண்டே அரசு என்ற பதத்திற்கு விளக்கமளித்துள்ளனர். அரிஸ்டோட்;டில் நேர்மை, மகிழ்ச்சி கொண்ட முழுமையான வாழ்க்கைக்காக குடும்பம், சமூகம், கிராமம் என மக்கள் ஐக்கியப்பட்டதன் வழி அரசு உருவாகி அவர்களின் நல்வாழ்விற்காக அது தொடர்ந்திருந்தது என்கிறார். வூட்ரோ வில்சன் (Woodraw Wilson) வரையறுக்கப்பட்ட பிரதேசத்தில் சட்டத்திற்காக மக்களால் ஒழுங்கமைக்கப்பட்டதே அரசு என்கிறார். பிளன்ற்சிலி (Bluntchili) வரையறுக்கப்பட்ட பிரதேசத்தில் அரசியல் ரீதியாக ஒழுங்கமைக்கப்பட்டதே அரசு என்கிறார். கார்னர் (Garner) அரசு அரசியல் விஞ்ஞானத்தின் ஒரு முக்கிய எண்ணக்கருவாகும். வரையறுக்கப்பட்ட பிரதேசத்தில் அரசியல் ரீதியாக ஒழுங்கமைக்கப்பட்டதே அரசு ஆகும். வரையறுக்கப்பட்ட பிரதேசத்தின் அதிகளவில் அல்லது குறைந்தளவில் வாழ்கின்ற சமுதாய மக்களுக்கான பொதுச் சட்டமும், ஒழுங்கமைக்கப்பட்ட சுதந்திரமான அல்லது ஓரளவு வெளித்தலையீடு உள்ள அரசாங்கம் காணப்படும். இது குடியிருப்பாளர்களின் உயர்ந்த அமைப்பாகும். இதற்கு மக்கள் கீழ்படிந்து நடப்பார்கள் எனக் கூறுகின்றார். பிலிமோர் (Philimore) என்பவர் 'நிரந்தரமான ஒரு பிரதேசத்தினை தமது குடியிருப்பாக கொண்டிருக்கும் மக்கள் பொதுச்சட்டம், பழக்கவழக்கங்கள், சம்பிரதாயங்களினால் ஒன்றாக கட்டுண்டு இறைமையுடைய சுதந்திர அரசாங்கத்தினை ஒழுங்கமைத்து அதனூடாக தமது எல்லைக்குள் வாழ்கின்ற பொருட்கள், மக்கள் மீது கட்டுப்பாட்டினை விதித்து யுத்தம், சமாதானம் என்பவற்றினூடாக உலக சமுதாயத்துடன் சர்வதேச உறவுகளை மேற்கொள்வதே அரசு' என்கிறார்.
அரசின் மூலக்கூறுகள்
அரசிற்கு கொடுக்கப்பட்டுள்ள வரைவிலக்கணங்களை பகுப்பாய்வு செய்கின்ற போது அரசிற்குள் பல்வேறு மூலக்கூறுகளை அவதானிக்க முடியும். மக்கள், பிரதேசம், அரசாங்கம், இறைமை என்னும் நான்கு மூலக்கூறுகளே அவைகளாகும். இவற்றில் முதல் இரண்டு மூலக்கூறுகளும் பௌதீக மூலக்கூறுகளாகும். அடுத்த இரண்டு மூலக் கூறுகளும் அகநிலை சார்ந்த (Spiritual) மூலக்கூறுகளாகும். இம்மூலக் கூறுகளில் ஏதாவது ஒன்று இல்லாவிட்டாலும் அரசு உருவாக முடியாது. இந்நான்கு மூலக் கூறுகளும் முக்கியமானதாகும்.
மக்கள்
மனிதர்களின் கூட்டுவாழ்க்கையின் உடாக அரசு இனங்காணப்படத் தொடங்கிய காலத்திலிருந்து அரசின் மூலக் கூறுகளில் ஒன்றாக மக்கள் இனம் காணப்பட்டார்கள். மக்கள் இல்லாத பாலைவனத்தை அல்லது மக்கள் நடமாட்டம் இல்லாத பிரதேசத்தினை அரசு என அழைக்க முடியாது. மக்கள் வரையறுக்கப்பட்ட நிலப்பரப்பினை நிரந்தரமாக தமதாக்கிக் கொள்ள வேண்டும்.
ஒரு அரசு எவ்வளவு தொகை மக்களை கொண்டிருக்க வேண்டும் என்பதில் எவ்வித வரையறைகளும் கிடையாது. ஆனால் பிளேட்டோ (Plato) உண்மையான ஜனநாயகம் இருக்க வேண்டுமானால் ஒரு அரசு 5040 மக்களைக் கொண்டிருக்க வேண்டும் எனவும், ரூசோ 10,000 மக்களைக் கொண்டிருக்க வேண்டும் எனவும் கூறுகின்றார். ஆனால் அரிஸ்டோட்டில் அரசு எவ்வளவு தொகை மக்களை கொண்டிருக்க வேண்டும் என்பதற்கு எவ்வித ஆலோசனைகளையும் முன்வைக்கவில்லை. அரிஸ்ரோட்டலின்படி அரசின் சனத்தொகை பெரியதாக இருப்பின் தன்னிறைவானதாகவும், சிறிய சனத்தொகையினை கொண்டிருக்குமாயின் உறுதியான, பாதுகாப்பான, சமாதானமாக அரசு இருக்கும் என்றும் கூறுகின்றார். உலகில் இன்று 100 இலட்சத்திற்கு மேற்பட்ட சனத்தொகையினைக் கொண்ட சீனாவும் ஆயிரக்கணக்கிலான சனத்தொகையினைக் கொண்ட ஷன் மாறினோ (San Marino) மொனாகா (Monaca) போன்ற அரசுகளும் காணப்படுகின்றன.
ஒரு அரசு கொண்டிருக்கும் சனத்தொகை ஒரே வகையானதாக இருக்க வேண்டுமா என்ற பிறிதொரு வினா இங்கு எழுப்பப்படலாம். ஓரினத் தன்மை (Homogeneity) என்பது பொதுவான மதம், இரத்தம், மொழி, கலாச்சாரம் போன்ற பண்புகளால் தீர்மானிக்கப்படுவதாகும். அரசிற்குள் மக்கள் ஓரினத்தன்மை கொண்டவர்களாக இருப்பின் மிகவும் சிறப்பானதாக இருக்கும். ஏனெனில் தேசிய ஒருமைப்பாட்டினை இலகுவாக ஏற்படுத்துவதற்கு இது வாய்ப்பானதாகும். ஆனால் அரசு ஒன்றிற்குள் வாழும் மக்கள் ஓரினத் தன்மை கொண்டவர்களாகத்தான் இருக்க வேண்டும் என்ற நிர்ப்பந்தம் கிடையாது. அனேகமான அரசுகளில் வாழும் மக்கள் இனம், மதம், மொழி, கலாசாரம் என்ற பண்புகளால் வேறுபட்டுக் காணப்படுகிறார்கள். தேசக்கட்டுமானத்தினை (Nation-Building) உருவாக்குவதற்கு மக்கள் தமக்கிடையிலுள்ள வேறுபாட்டினை முதன்மைப்படுத்தி முரண்பட்டுக் கொள்கின்றமை தடையாக உள்ளது. தேசக் கட்டுமானத்தினை உருவாக்குவதற்கு வேற்றுமையில் ஒற்றுமை (Unity in Diversity) காணுகின்ற மக்கள் கூட்டம் அவசியமாகும்.
பிரதேசம்
அரசினைத் தீர்மானிப்பதில் பிரதேசம் முக்கிய மூலக் கூறாகும். நிரந்தரமான வரையறுக்கப்பட்ட பிரதேசத்தினை மக்கள் கொண்டிராவிட்டால் அங்கு அரசு இருக்க முடியாது. நோமட்டிக் பழங்குடியினரும் (Nomadic Tribes) ஜிப்சீஸ் (Gypsies) இனத்தவரும் நிரந்தரமாக ஓரிடத்தில் குடியேறாத காரணத்தினால் தமக்கான வாழ்விடப் பிரதேசத்தினை இழந்திருந்தார்கள். இதனால் அவர்களால் தமக்கான அரசினை உருவாக்க முடியவில்லை. அதேபோல் யூதர்களும் இஸ்ரவேலில் நிரந்தரமாக குடியேறும் வரை தமக்கான அரசை இழந்தே வாழ்ந்தனர். சில தவிர்க்க முடியாத சந்தர்ப்பங்களில் பிரதேசம் இல்லாத அரசு கற்பனையாக உருவாக்கப்படுவதுண்டு. உதாரணமாக பாலஸ்தீன நிலப்பிரதேசம் இஸ்ரவேலினால் ஆக்கிரமிக்கப்பட்டு பாலஸ்தீனம் தனது பிரதேசத்தினை மீட்க போராடுகின்ற அதே வேளை பாலஸ்தீனத்தை எல்லை வரையறுக்கப்படாத அரசாகவே ஏற்றுக் கொள்ளப்பட்டது.
அரசின் நிலப்பரப்பின் அளவு எத்தகையதாக இருக்க வேண்டும் என்பது தொடர்பாக இறுக்கமான கோட்பாடுகள் எதுவும் முன்வைக்கப்படவில்லை. புராதன காலத்தின் நகர அரசுகள் மிகவும் சிறியதாகவே இருந்தன. பெரிய அரசிலுள்ள பாதுகாப்பு, நிர்வாகம் செய்தல், தொடர்பு கொள்ளல் போன்ற பிரச்சினைகள் சிறிய அரசுகளில் காணப்படுவதில்லை. நவீன காலத்தில் இதிலுள்ள வசதியீனங்கள் யாவும் விஞ்ஞான தொழில்நுட்ப வளர்ச்சியினால் இல்லாதொழிக்கப்பட்டு உலகம் மிகவும் சிறியதாகிவிட்டது. இதனால் பெரிய பிரதேசத்தினை பாதுகாப்பதோ, நிர்வாகம் செய்வதோ பிரச்சினையாக இருப்பதில்லை. இன்று சிறிய நிலப்பரப்புள்ள அரசினை விட பெரிய நிலப்பரப்புள்ள அரசே விரும்பப்படுகிறது. பெரிய நிலப்பரப்புள்ள அரசு பெரிய எண்ணிக்கையில் மக்களையும் அதிகமான இயற்கைவளங்களையும் கொண்;;டிருப்பதோடு சர்வதேச விவகாரங்களில் செல்வாக்குச் செலுத்துவதனூடாக கௌரவமான ஒரு நிலையில் இருக்கவும் முடியும். உதாரணமாக மறைந்த சோவியத் யூனியன், தற்போதுள்ள ரஸ்சியா, சீனா, அவுஸ்திரேலியா, ஐக்கிய அமெரிக்கா, கனடா, பிறேசில், இந்தியா போன்ற நாடுகளை குறிப்பிடலாம். அதே நேரம் மிகவும் சிறிய நிலப்பரப்பினைக் கொண்ட வத்திக்கான் அரசும் உலகில் இன்று காணப்படுகிறது. ஒரு அரசின் நிலப்பரப்பு நிச்சயமாக ஒருங்கிணைந்ததாக காணப்படல் வேண்டும். உதாரணமாக 1947 இல் தோற்றம் பெற்ற பாகிஸ்தானின் பிரதேசம் இந்தியாவிற்கு கிழக்கிலும், மேற்கிலுமாக எல்லையிடப்பட்டது. இது 1971 இல் பாகிஸ்தான் இரண்டாக உடைந்து புதிய அரசாக வங்காள தேசம் தோன்றுவதற்கு காரணமாயிருந்தது. எனவே பிரதேசத்தின் எல்லைகள் சிறப்பாக எல்லையிடப்பட்டிருக்க வேண்டும். ஆறுகள், மலைத் தொடர்கள், வாவிகள் அல்லது கடல்கள் என்பவற்றினால் எல்லையிடப்பட்டிருப்பின் மிகவும் சிறப்பானதாகும். சில தவிர்க்க முடியாத சந்தர்ப்பங்களில் செயற்கையான எல்லையிடுதல் ஏற்றுக் கொள்ளப்படுகிறது. மனிதனால் உருவாக்கப்படும் செயற்கையான எல்லையிடுதல் என்பதை விட இயற்கையான எல்லையிடுதல் சிறப்பானதாகும். கடலினால் எல்லையிடுதல் மிகவும் சிறப்பானதாகும்.
அரசாங்கம்
அரசு ஒன்றின் ஆத்மா அரசாங்கமாகும். அரசாங்கம் ஒன்றின் செயற்பாடு சமுதாயத்தின் விருப்பத்தினால் தீர்மானிக்கப்படுவதாகும். இது மக்களை பாதுகாக்க வேண்டிய பொறுப்புக் கொண்டதாகும். அரசின் முகவராக இருந்து மக்களுடைய விருப்பத்தினை நிறைவேற்றுகின்ற ஒரு கருவியே அரசாங்கமாகும்.சமூகத்தின் கீழ் நிலையிலிருந்து மேல் நிலை வரை அனைத்து விவகாரங்களையும் அரசாங்கம் முகாமை செய்கிறது. அரசின் ஒருமைப்பாடு, சட்டத்தினையும் ஓழுங்கையும் பேணுதல் பயமுறுத்தல்களிலிருந்து மக்களைப் பாதுகாத்தல், மக்களிற்கு இடையிலான தகராறுகளை தீர்த்து நீதி வழங்குதல், மக்களுடைய எல்லா வகையான அபிவிருத்திகளையும் பாதுகாத்தல் என்பன அரசாங்கத்தின் முக்கிய கடமையாகும். மக்களின் நலன்களுக்காக அரசின் சார்பில் ஒவ்வொன்றையும் ஆரம்பித்து வைப்பது அரசாங்கமாகும். இதற்காக சர்வதேச அரசுகளுக்கிடையிலும் தனிமனிதர்களுக்கிடையிலும் உறவினை பேணுவது அரசாங்கத்தின் கடமையாகும். அரசாங்கத்தின் வடிவம் எவ்வகையிலும் அமையலாம். மன்னராட்சியாக, சிறு குழுவாட்சியாக, சர்வாதிகாரமானதாக, ஜனாதிபதி அரசாங்கமாக, பாராளுமன்ற அரசாங்கமாக, ஜனாதிபதியும் பாராளுமன்றமும் இணைந்த அரசாங்கமாக, சோசலிச அரசாங்கமாக என எவ்வகையிலும் அரசாங்கம் அமைக்கப்படலாம். அரசிற்குத் தேவை அரசாங்கம் என்ற கருவி மாத்திரமேதான். அரசாங்கம் இல்லையாயின் அரசு அழிந்து விடும். ஒவ்வொரு அரசினதும் அரசாங்கம் அதன் சமூக பொருளாதார அரசியல் வரலாற்றுப் பரிமாணங்களால் தீர்மானிக்கப்படுகிறது.
இறைமை
இறைமை அரசின் முதன்மையான மூலக்கூறாகும். இறைமை என்பதன் பொருள் மிக உயர்ந்த அதிகாரம் அல்லது மேலான அதிகாரம் என்பதாகும். இது மனிதனால் ஒழுங்கமைக்கப்படுகின்ற ஏனைய நிறுவனங்களிலிருந்து அரசை வேறுபடுத்திக் காட்டுகின்ற பிரதான மூலக்கூறாகும். இறைமை இரண்டு பண்புகளைக் கொண்டது. ஒன்று உள் இறைமை, இரண்டாவது வெளி இறைமை என்பதாகும்.
உள் இறைமை என்பது உள்நாட்டில் அரசிற்கு சமமாக வேறு அதிகார பீடம் எதுவும் இருக்க முடியாது என்பதைக் குறிக்கின்றது. அதாவது உள்நாட்டு சக்திகளின் கட்டுப்பாடு எதுவுமின்றி சுதந்திரமாகவும் தன்னாதிக்கத்துடனும் சுயாதிபத்தியத்துடனும் வரையறுக்கப்பட்ட பிரதேசத்தில் அரசு மேலான அதிகாரத்துடன் செயற்படுவதாகும்.
வெளி இறைமை என்பது ஒரு அரசு வெளிநாட்டு சக்திகளின் கட்டுப்பாடின்றி சுதந்திரமாகவும் தன்னாதிக்கத்துடனும் சுயாதிபத்தியத்துடனும் சர்வதேச சமூகத்தில் மேலான அதிகாரத்துடன் செயற்படுவதாகும். ஆயினும் அரசுகள் சர்வதேச உறவில் ஈடுபடுகின்ற போது சர்வதேச சமுகத்தின் நலன்களுக்காக விருப்புடன் சில விடயங்களை விட்டுக் கொடுக்கின்றன.
இறைமையதிகாரம் சட்டம் என்ற வடிவில் பிரயோகிக்கப்படும். அரசின் சட்டம் எல்லோரையும் ஒன்றாகப் பிணைத்து வைத்திருப்பதுடன் சட்டத்தை மீறுபவர்களை உரிய முறையில் அரசு தண்டிக்கவும் செய்கிறது. இறைமை அரசிற்கு வலிமையளிக்கும் எண்ணக்கருவாகும். ஒரு தேசம் இறைமையினை பெற்றுக் கொள்ளாதவரை அரச பண்பினை (State Hood) பெற்றுக் கொள்ள முடியாது. அரசாங்க மாற்றத்தின் போது அரசு தன் இறைமையினை இழந்து விடுவதில்லை. ஆனால் ஒரு அரசு வெளிநாட்டு ஆக்கிரமிப்புச் சக்தியினால் கைப்பற்றப்படும் போது தனது இறைமையினை இழந்து விடுகின்றது.
இதுவரை அவதானித்த நான்கு மூலக்கூறுகளும் அரசிற்கு அவசியமானது எனக் கூறப்பட்டாலும் சிலர் ஆய்வாளர்கள் அங்கீகாரம் (Recognition) என்பதையும் ஒரு மூலக் கூறாக அரசு கொண்டிருக்க வேண்டும் என வாதிடுகிறார்கள்.
மேற்கூறப்பட்ட நான்கு மூலக்கூறுகளையும் கொண்டுள்ள அரசு ஒன்றை சர்வேதேச உறவிற்காக சர்வதேச அரசுகளால் ஏற்றுக்கொள்ளப்படுதலே அங்கீகாரமாகும் . அரசு ஒன்று அங்கீகரிக்கப்படுவதற்கு அனேக வழிகள் உள்ளன. உதாரணமாக புதிய அரசும் ஏனைய சர்வதேச அரசுகளும் ஒன்றுடன் ஒன்று இராஜதந்திர உறவுகளை ஏற்படுத்துதல் ஐக்கிய நாடுகள் சபையில் அங்கத்துவம் பெற்றுக் கொள்ளல் என்பன இவற்றுள் சிலவாகும்.
புதிய அரசு ஒன்றிற்கு அங்கீகாரம் தேவையா?, இல்லையா? என்பதில் வாதப்பிரதிவாதங்கள் காணப்படுகின்றன. சர்வதேச அரசுகளால் அரசை அங்கீகரிப்பது அல்லது நிராகரிப்பது என்பதற்கு உறுதியான கோட்பாடுகள் எதுவும் முன்வைக்கப்படவில்லை. பொதுவாக அங்கீகரிக்கின்ற சர்வதேச அரசு தான் பின்பற்றும் சித்தாந்தம், வெளியுறவுக் கொள்கை, சர்வதேச சூழ்நிலை என்பவற்றை பொறுத்து புதிய அரசு ஒன்றிற்கு அங்கீகாரத்தை வழங்குகின்றது. புதிய அரசு சில சர்வதேச அரசுகளால் உடனடியாக அங்கீகரிக்கப்படலாம். சில புதிய அரசுகள் சர்வதேச அரசுகளால் காலம் தாழ்த்தி அங்கீகரிக்கப்படலாம்.
முடிவாகக் கூறின் சர்வதேச செயற்பாட்டில் அரசு அங்கீகரிக்கப்படுவது ஒரு நடைமுறையே தவிர அரசிற்கு அவசியம் தேவையானதொரு மூலக்கூறல்ல. சர்வதேச சமுதாயத்துடன் உறவினைப் பேணுவது புதிய அரசின் கௌரவத்துடன் தொடர்புடைய விடயமாகும். ஆகவே அரசின் பிரதான மூலக் கூறுகள் மக்கள், பிரதேசம், அரசாங்கம், இறைமை என்ற நான்கு மூலக்கூறுகள் மட்டுமேயாகும்.