மாக்கியவல்லியின் இளவரசன் திறனாய்வு by Thanabalasingham Krishnamohan
Civil Society by Thanabalasingham Krishnamohan
இருபத்தியோராம் நூற்றாண்டில் எழுச்சியடையும் சீனாவின் கடல் வலிமை by Thanabalasingham Krishnamohan
தேர்தலும் பிரதிநிதித்துவ முறைமையும் – கோட்பாடு நோக்கு by Thanabalasingham Krishnamohan
Who is this International Community: Interest and Stratergy by Thanabalasingham...
பிரதிநிதித்துவம் என்பது மனோபாவம், நோக்கு, முன்னுரிமை, விருப்பம் என்பவற்றின் வழி முழுப் பிரஜைகளினாலும் தீர்மானிக்கப்படுவதாகும். அல்லது ஒரு பகுதி பிரஜைகளால் தீர்மானிக்கப்படுவதாகும். பிரஜைகள் அரசாங்கம் செயற்படுவதற்கான அனுமதியை தங்களில் இருந்து தெரிவாகும் அங்கத்தவர்களுக்கூடாக வெளிப்படுத்துகின்றனர். சுருக்கமான ஒரு விளக்கத்தினை கொடுப்பதாயின் குடியரசு மரபின் வழி அரசாங்கம் உருவாவதற்கு பயன்படுத்தப்படும் ஒரு கருவி பிரதிநிதித்துவம் எனலாம். ஜேர்மனிய சமூக கோட்பாட்டாளர் ரொபர்ட் வொன் மோல் (Robert Von Mohl ) என்பவர் பிரதிநிதித்துவம் என்பது “முழுப்பிரஜைகளினதும் செல்வாக்கின் மூலமான தெரிவு அல்லது பிரஜைகளில் ஒரு பகுதியினர் தங்களிலிருந்து அங்கத்தவர்களை தெரிவு செய்து கொள்வதன் மூலம் அரசாங்க செயற்பாட்டிற்கான அனுமதியை வெளிப்படுத்துதல்” என்கின்றார்.
பிரதிநிதித்துவத்தின் வகைப்பாடுகள்
பிரதிநிதித்துவம் என்பது மிகவும் காலத்தால் முற்பட்டதாகும். புராதன மத்திய காலங்களில் நிலவிய சமுதாயங்களில் இயங்கிய அரசியல் நிறுவனங்களுக்கு மக்கள் தமது பிரதிநிதிகளைத் தெரிவு செய்து அனுப்பியிருந்தார்கள்.
நவீன காலத்தில் இப்பிரதிநிதித்துவ முறைமையானது மெருகூட்டப்பட்டு புதிய வடிவத்தினை பெற்றுக் கொண்டது. அதாவது நவீன காலத்தின் ஜனநாயக வளர்ச்சிக்கு ஏற்ப அதன் இயல்பான முக்கியத்துவம் வளர்ச்சியடைந்து வருகின்றது. அத்துடன் சமூக கோட்பாடுகளும் பிரதிநிதித்துவத்தில் உள்ள பிரச்சினைகள் தொடர்பாக விமர்சன ஆய்வுகளை மேற்கொண்டே வருகின்றன. எல்லா விமர்சன ஆய்வுகளும் நாட்டின் பிரதேசத்தினை அல்லது புவிசார் நிலையினை மையமாகக் கொண்டே பிரதிநிதித்துவம் உருவாக்கப்பட வேண்டும் என்று கூறுகின்றன. அத்துடன் இவ் ஆய்வுகள் பெரும்பான்மை, சிறுபான்மை சமூகங்களின் நலன் தொடர்பாக பிரதிநிதித்துவ முறைமைகளில் சில மாற்றங்களை உருவாக்க வேண்டும் எனவும் கூறுகின்றன. இவ்வகையில் பிரதிநிதித்துவம் தொடர்பாக பல கோட்பாடுகள் காணப்படுகின்றன. ஆயினும் அவற்றுள் பின்வருவன முதன்மையானவைகளாகும்.
பிரதேசவாரி பிரதிநிதித்துவம்
குறிப்பிட்ட நாட்டின் சட்டசபை உறுப்பினர்கள் ஒவ்வொருவரும் பிரதேச ரீதியான பிரதிநிதிகளாக பிரதிநிதித்துவப்படுத்தப்படுவதை பிரதேசவாரி பிரதிநிதித்துவம் குறித்து நிற்கின்றது. ஒவ்வொரு பிரதேசமும் வரையறுக்கப்பட்டு வாக்காளர் தொகுதியாக வகுக்கப்படும். இவ்வாறு தொகுதி வகுக்கப்படும் போது சனத்தொகையின் அளவும் கருத்தில் எடுக்கப்படும். அதாவது தொகுதியின் பிரதேச அளவு கருத்தில் எடுக்கப்படும். அதே நேரத்தில் வாக்களிக்கத் தகுதி உடையவர்களின் எண்ணிக்கையும் கருத்தில் எடுக்கப்படும். பிரதேசவாரி பிரதிநிதித்துவ முறைமையின் கீழ் வாக்காளர் தொகுதி ஒன்றினை பிரதிநிதித்துவப்படுத்தும் ஒருவர் குறிப்பிட்ட பிரதேசத்தின் பிரதிநிதியாகவே கருதப்படுவார். ஆனால் இங்கு வாக்களிக்கத் தகுதியுடையோர்களின் எண்ணிக்கையும் பிரதேசத்தின் அளவும் கருத்தில் எடுக்கப்படல் வேண்டும்.
தொழில் வகைப் பிரதிநிதித்துவம்
பிரஜைகளால் சமுதாயத்தில் காணப்படும் தொழில் சார் பிரிவினருக்காக உருவாக்கப்படும் பிரதிநிதித்துவ முறைமையே தொழில் வகைப் பிரதிநிதித்துவ முறைமையாகும். இலகுவாக வரையறுப்பதாயின் பிரதேச ரீதியான தொகுதிகள் தொழில் வகைத் தன்மைகளின் அடிப்படையில் உருவாக்கப்படும். எவ்வகை தொழில் சார்ந்தோர் ஒரு பிரதேசத்தில் கூடுதலாக வாழ்கின்றார்களோ அவர்களுடைய தொகுதியாக இது கருதப்படும். அதாவது இவர்கள் ஒரு நாட்டின் குறிப்பிட்ட தொகுதியின் தொழில் வகைப் பிரிவினராக கருதப்படுவார்கள். இவ்வகையில் சட்டசபை பிரதிநிதித்துவமானது வியாபார வர்க்கம் வியாபாரியையும் தொழிலாளர் வர்க்கம் தொழிலாளியையும் விவசாய வர்க்கம் விவசாயியையும் ஆசிரியர் வர்க்கம் ஆசிரியரையும் கொண்டு காணப்படும். தொழில் வகைப் பிரதிநிதித்துவமானது மறைந்த சோவியத் யூனியனிலும் முசோலினியின் இத்தாலியிலும் நடைமுறைப்படுத்தப்பட்டிருந்தது. இப்பிரநிதித்துவ முறைமையினை Laski, Dunning, G.D.H.Cole போன்றவர்கள் கடுமையாக விமர்சிப்பது இங்கு குறிப்பிடத்தக்கது.
சிறுபான்மையோர் பிரதிநிதித்துவம்
ஜனநாயகத்தின் இலக்கு அரசாங்கத்தில் பங்குபற்றும் நாட்டு மக்கள் அனைவரதும் பிரதிநிதித்துவத்தை பாதுகாப்பதாகும். ஒருமித்த தன்மை, இயல்பு கொண்ட மக்கள் தொகையுள்ள அரசுகளில் தான் இவ் இலக்கு வெற்றியடையும். அதாவது ஒரே வகையான இனக்குழு மக்கள், ஒரே மொழி பேசுகின்ற மக்கள், ஒரே சமயம் பொருளாதார அந்தஸ்து போன்றவை காணப்படுகின்ற அரசுகளில் தான் வெற்றியடைய முடியும். ஆனால் இவ்வாறான சமூக அமைப்பு காணப்படுவது மிக மிக அருமையாகவே உள்ளது.
உலகில் உள்ள அனேக அரசுகள் வௌ;வேறான சிறுபான்மையின மக்களை கொண்டதாக காணப்படுகின்றது. இது அரசுகளில் பிரதிநிதித்துவப் பிரச்சினைகளை உருவாக்குகின்றது. எனவே சிறுபான்மையின மக்களுக்கு பிரதிநிதித்துவத்தினை வழங்குவதற்காக உருவாக்கப்பட்டதே இப்பிரதிநிதித்துவ முறையாகும். அதாவது சமயம், மொழி, இனம், கலாசாரம் போன்ற அடிப்படையில் மக்களிற்கு பிரதிநிதித்துவத்தினை வழங்குவதாகும். சிறுபான்மையினரின் பிரதிநிதித்துவப் பிரச்சினைகளை தீர்ப்பதற்காக சில நடைமுறைகள் பின்பற்றப்படுகின்றன.அவைகளை பின்வருமாறு வகைப்படுத்தலாம்.
கட்டுப்படுத்தப்பட்ட வாக்கு முறைமை
இம்முறையின் கீழ் குறைந்தது மூன்று அங்கத்தவர்களை கொண்ட பல அங்கத்தவர்கள் தொகுதிகள் உருவாக்கப்படும். ஒவ்வொரு வாக்காளருக்கும் மூன்றிற்கு குறையாத வாக்குகள் வழங்கப்படும். ஒவ்வொரு வாக்கினையும் தாம் விரும்பும் மூன்று பேருக்கு வாக்காளன் வழங்க முடியும். இதனால் சிறுபான்மையினர் தமது பிரதிநிதியை பெற்றுக் கொள்ள வாய்ப்பாக அமைந்து விடுகின்றது.
தனிவாக்கு முறைமை
தனிவாக்கு முறைமையானது பல அங்கத்தவர் தேர்தல் தொகுதியில் பயன்படுத்தப்படுகின்றது. இங்கு வாக்காளனுக்கு ஒரு வாக்கு மட்டுமே வழங்கப்படும். வேட்பாளர்கள் அதிகப் பெரும்பான்மை வாக்குகளால் தெரிவு செய்யப்படுவார்கள். சிறுபான்மையினர் இம்முறைமையினால் தமது பிரதிநிதிக்கு வாக்களிக்க முடியும். இங்கு பெரும்பான்மை என்பது தெரிவு செய்யப்படும் வேட்பாளருக்கு வேட்பாளர் வேறுபட்டு காணப்படும்.
குவிக்கப்பட்ட வாக்கு முறைமை
குவிக்கப்பட்ட வாக்கு முறையின் கீழ் தேர்தல் தொகுதி பல அங்கத்தவர் தொகுதியாக காணப்படும் வாக்காளர் ஒவ்வொருவருக்கும் தெரிவு செய்யப்பட வேண்டிய வேட்பாளர்களின் எண்ணிக்கைக்கு ஏற்ப வாக்குகள் வழங்கப்படும். வாக்காளர் தமது முழு வாக்குகளையும் ஒருவருக்கு அல்லது வெவ் வேறானவர்களுக்கு வழங்கலாம். இதன் மூலம் சிறுபான்மையினர் தமது வாக்குகள் அனைத்தையும் தமது பிரதிநிதிக்கு வழங்கி அவரை வெற்றியடையச் செய்யலாம். இதனை திரண்ட வாக்கு முறைமை (Plumping Vote System) எனவும் அழைக்கின்றார்கள்.
ஆசன ஒதுக்கீடு நியமன முறைமை
அரச தலைவரால் சிறுபான்மை இனத்தவர்களுக்காக பிரதிநிதி நியமனம் செய்யப்படுகின்றார். பொதுவாக இவ்வாறான நியமனங்கள் செய்யப்படுகின்ற போது ஒவ்வொரு சிறுபான்மை இனங்களினதும் மக்கள் தொகை கணக்கில் எடுக்கப்படும். அதே நேரத்தில் சாதாரணமாக இவர்கள் சில தேர்தல் தொகுதிகளில் இருந்து தெரிவு செய்யப்படுகின்றார்களா? என்பதும் கவனத்தில் கொள்ளப்படும். உதாரணமாக இந்தியாவில் பழங்குடியினர் ஒதுக்கப்பட்ட வகுப்பினர் போன்றவர்களுக்கு நியமன முறைமை பயன்படுத்தப்படுகின்றது.
விகிதாசாரப் பிரதிநிதித்துவம்
1793 ஆம் ஆண்டு பிரான்சின் தேசிய மகாநாட்டில் முதன் முதலாக விகிதாசார பிரதிநிதித்துவ முறைபற்றி ஆலோசிக்கப்பட்டது. பின்னர் 1820ஆம் ஆண்டு விகிதாசார பிரதிநிதித்துவ முறையானது பிரித்தானிய கல்விமானாகிய தோமஸ் ரைட் வில் (Thomas Wright Will ) என்பவரால் அவுஸ்திரேலியாவில் அறிமுகப்படுத்தப்பட்டது. பின்னர் 1842 ஆம் ஆண்டு சுவிற்சர்லாந்திலும் 1854ஆம் ஆண்டு கால் அன்ரே (Carl Andrae ) என்பவரால் டென்மார்க்கிலும் அறிமுகப்படுத்தப்பட்டது. இதற்கு பிற்பட்ட காலங்களில் பிரித்தானிய சட்டத்தரணியாகிய தோமஸ் ஹர் (Thomas Hare ) என்பவர் எழுதிய பிரதிநிதித்துவ பொறிமுறை (The machinery of Representation ) என்ற நூலில் இம்முறை பற்றி எழுதியிருந்தார். இந்நூல் 1859 ஆம் ஆண்டு விரிவாக்கப்பட்டு எழுதப்பட்ட பிரதிநிதித்துவ தேர்தல் ஒப்பந்தம் (Treatise on the Elections of Representation ) என்ற நூலில் இம்முறைமை பற்றி தோமஸ் ஹர் எழுதியிருந்தார். தோமஸ் ஹர்றின் விகிதாசார பிரதிநிதித்துவ முறைமை பின்னர் ஜே.எஸ் மில் (J . S . Mill ) என்பவரால் 1860 ஆம் ஆண்டு முதன்மைப்படுத்தப்பட்டது.
விகிதாசாரப் பிரதிநிதித்துவ முறையில் இரண்டு வகையான இயல்புகள் காணப்படுகின்றன. ஒன்று ஒற்றை மாற்று வாக்கு முறை அல்லது ஹர் முறை மற்றையது பட்டியல் முறை ஆகும்.
ஒற்றை மாற்று வாக்கு முறை அல்லது ஹர்முறை
ஒற்றை மாற்று வாக்கு முறை தோமஸ் ஹர் என்பவரால் அறிமுகப்படுத்தப்பட்டதாகும். இதனால் இவரின் பெயரால் இது அழைக்கப்படுகின்றது. ஹர் முறையில் நான்கு முக்கிய இயல்புகள் காணப்படுகின்றன.
ஒவ்வொரு தேர்தல் மாவட்டத்திற்கும் சனத்தொகையினை அடிப்படையாகக் கொண்டு சட்ட சபைக்கான ஆசனங்கள் வேறுபட்ட அளவுகளில் ஒதுக்கப்படும். இதன் பின்னர், மொத்த வாக்குகள் கணக்கிடப்பட்டு ஆகக்குறைந்த தேர்தல் வீதம் வாக்கு பங்கு கணக்கிடப்படும். பொதுவாக தேர்தல் வீதப் பங்கானது மொத்தப் பெறுமதியான வாக்குகளை தெரிவு செய்யப்பட வேண்டிய மொத்த ஆசனங்களுடன் ஒன்றைக் கூட்ட வரும் தொகையினால் பிரிக்கப்பட வேண்டும். பின்னர் பிரிக்க வரும் தொகையுடன் மீண்டும் ஒன்றைக் கூட்ட வேண்டும். இதனையே தேர்தல் வீதப் பங்கு என அழைக்கின்றார்கள். இதன் வாய்ப்பாடு பின்வருமாறு அமைந்திருக்கும்.
தேர்தல் வீதப்பங்கு
வாக்காளர்கள் ஒரு தேர்தல் மாவட்டத்தில் மொத்தமாக எத்தனை வேட்பாளர்களை தெரிவு செய்ய வேண்டுமோ அத்தனை வாக்குகளை பெற்றுக் கொள்வார்கள். வாக்காளர்கள் வாக்களிக்கின்ற போது தமது விருப்பு வாக்குகளை முன்னுரிமையின்படி 1, 2, 3 என வழங்கும்படி கேட்கப்படுவார்கள்.
வாக்குகள் எண்ணப்படுகின்ற போது வேட்பாளர்களின் முதல் விருப்ப வாக்குகள் முதலில் எண்ணப்படும். வேண்டப்படும் தேர்தல் வீத பங்கு வாக்குகளை பெற்றவுடன் அவர் அங்கத்தவராக அறிவிக்கப்படுவார். முதல் சுற்று வாக்கில் வேண்டப்படும் தேர்தல் வீதப் பங்கு கிடைக்காவிட்டால் இரண்டாம் விருப்ப வாக்குகள் எண்ணப்படும். மொத்த அங்கத்தவர்களும் தெரிவு செய்யப்படும் வரை இவ்வாறான நடைமுறை பின்பற்றப்படும்.
பட்டியல் முறை
விகிதாசாரப் பிரதிநிதித்துவத்தில் காணப்படும் அடுத்த முறைமை பட்டியல் முறைமையாகும். பட்டியல் நாட்டிற்கு நாடு வேறுபட்ட வழிமுறைகளில் பின்பற்றப்படுகின்றன. பட்டியல் முறைமையில் இரண்டு முக்கிய இயல்புகள் காணப்படுகின்றன.
வேட்பாளர்கள் தமது கட்சி சின்னத்தின் கீழ் பட்டியல்படுத்தப்பட்டிருப்பார்கள். ஒவ்வொரு கட்சியும் தெரிவு செய்யப்பட வேண்டிய அங்கத்தவர்களின் எண்ணிக்கைக்கு சமமாக தமது வேட்பாளர்கள் பட்டியலை தயாரித்துக் கொள்ளுகின்றன. வாக்காளர் குறிப்பிட்ட ஏதாவது ஒரு கட்சிக்கு வாக்களிக்கும்படி வேண்டப்படுவதுடன் தாம் விரும்பும் வேட்பாளர்;களை தமது சுய விருப்பிற்கு ஏற்ப பட்டியல்படுத்தும்படியும் கேட்கப்படுவார்.
பட்டியல் முறைமையில் வேட்பாளர்களின் எண்ணிக்கைக்கு சமமாக வாக்காளனுக்கு வாக்குகள் வழங்கப்படும். ஆனால் ஒரு வேட்பாளருக்கு ஒரு வாக்கினை மட்டுமே வழங்க முடியும். பதிலாக எல்லா வாக்குகளையும் ஒருவருக்கு வழங்க முடியாது. பட்டியல் முறைமையிலும் ஹர் முறை போன்று தேர்தல் வீதப் பங்கின்அடிப்படையிலேயே வேட்பாளர் தெரிவு செய்யப்படுகின்றார். அதாவது ஒவ்வொரு கட்சியும்பெற்றுக் கொண்ட வாக்கு விகிதாசாரத்திற்கு ஏற்ப பிரதிநிதிகள் தெரிவு செய்யப்படுவார்கள்.
இரண்டாவது வாக்கு முறைமை
தேர்தலில் இரண்டிற்கு மேற்பட்ட அங்கத்தவர்கள் போட்டியிடுகின்ற போது தெரிவு செய்யப்படுகின்ற அங்கத்தவர்கள் அறுதிப் பெரும்பான்;மை வாக்குகளை பெற்றுவிடுவதில்லை. பதிலாக ஆகக் குறைந்த வாக்குகளையே பெறுகின்றார்கள் எனச் சிலர் வாதிடுகின்றார்கள்.
இக்குறைபாட்டினை நீக்குவதற்காக ஒரு வாக்காளனுக்கு இரண்டு வாக்குகள் வழங்கப்படும். வாக்காளன் தனது முதல் விருப்பையும் இரண்டாம் விருப்பையும் தெரிவிக்கும்படி வேண்டப்படுவான். இதன் மூலம் அறுதிப் பெரும்பான்மை பெற்ற பிரதிநிதியை தெரிவு செய்ய முடியும் எனக் கூறப்படுகின்றது. இதனையே இரண்டாவது வாக்கு முறைமை எனக் கூறப்படுகின்றது.
உதாரணமாக 30,000 வாக்காளர் கொண்ட தேர்தல் மாவட்டத்தில் நான்கு பேர் போட்டியிடுகின்றார்கள் என எடுத்துக் கொண்டால்,
A |
12,000 |
B |
7,000 |
C |
6,000 |
D |
5,000 |
மொத்தம் |
30,000 |
என்ற அடிப்படையில் வாக்குகள் பெற்றுக் கொள்ளப்படுகின்றது. இங்கு A அறுதிப் பெரும்பான்மையினை பெற்றுக் கொண்டதாக கூற முடியாது. ஏனெனில் A விட B + C + D பெற்றுக் கொண்ட வாக்குகள் 18,000 ஆகும் . இன்னோர் வகையில் கூறின் A முதற் சுற்றில் 12,000 வாக்காளர்கள் ஆதரித்திருந்த அதே நேரத்தில் 18,000 வாக்காளர்கள் A யினை எதிர்த்து வாக்களித்துள்ளார்கள். எனவே A பிரதிநிதியாக தெரிவு செய்யப்பட்டார் எனக் கூறுவது தவறானதாகும். எனவே இரண்டாம் விருப்ப தெரிவு வாக்குகள் A, B, C ஆகியோர்களுக்கு எண்ணப்பட்டு அறுதிப் பெரும்பான்மையினை யார் பெறுகின்றார்களோ அவரே பிரதிநிதியாக தெரிவு செய்யப்பட்டுள்ளதாக அறிவிக்கப்படல் வேண்டும். இங்கு ஆகக் குறைந்த வாக்கினைப் பெற்ற D பட்டியலில் இருந்து நீக்கப்படுவார் என்பது கருத்தில் எடுக்கப்படல் வேண்டும்.
மக்கள் தமது பிரதிநிதிகளை தெரிவு செய்வதற்கு நடாத்தப்படும் தேர்தலில் பங்கு பற்றுவதற்கு உரித்துடையவர்கள். அதாவது தமது விருப்பு, முன்னுரிமை என்பவற்றின் அடிப்படையில் பிரதிநிதிகளை தெரிவு செய்து கொள்ள உரிமையுடைவர்கள். தேர்தலானது குறிப்பிட்ட நாட்டின் சூழ்நிலைக்கு ஏற்ப மறைமுகமாகவோ நேரடியாகவோ நடைபெற்றாலும் உண்மையில் ஜனநாயகத்தின் பாரம்பரியத்தின் வழி பிரதிநித்துவமுறைமையினை வலுப்படுத்துகின்ற ஒன்றாகவே உள்ளது.
ஆயினும் பிரதிநிதித்துவ முறைமைக்காக உருவாக்கப்பட்டுள்ள கோட்பாடுகள் அனைத்திலும் குறை நிறைகள் காணப்படுகின்றன. குறிப்பிட்ட நாட்டின் சூழ்நிலைக்கு எவ்வகை பிரதிநிதித்துவ முறை பொருத்தமானதாகக் காணப்படுகின்றதோ அதுவே நடைமுறையில் பின்பற்றப்படுகின்றது. விகிதாசாரப் பிரதிநிதித்துவ முறைமை ஒப்பீட்டு ரீதியில் ஏனைய பிரதிநிதித்துவ முறைகளை விட சிக்கலான நடைமுறை விதிகளை கொண்டதாகும். இதனால் இம்முறையினை கண்டிக்கின்ற ஆய்வாளர்களும் காணப்படுகின்றார்கள். எவ்வாறாயினும் பிரதிநிதித்துவம் என்பது பிரஜைகளின் விருப்பு, மனோபாவம், முன்னுரிமை என்பவற்றினால் தீர்மானிக்கப்படுகின்றதொன்றேயாகும்.