Conflict Management and Resolution of Conflict : Objective and Characteristics of Third Party...
இலங்கை பொது நிர்வாக முறைமை , by Thanabalasingham Krishnamohan
இருபத்தியோராம் நூற்றாண்டில் எழுச்சியடையும் சீனாவின் கடல் வலிமை by Thanabalasingham Krishnamohan
Civil Society by Thanabalasingham Krishnamohan
State Institution- A View of Executive Branch by Thanabalasingham Krishnamohan
1. கருத்து
பொதுநிர்வாகவியல் இன்று ஆராட்சிக்குரிய ஒரு துறையாக வளர்ந்துள்ளது. பொதுநிர்வாகம் என்பது மக்களைக் கவனித்துக் கொள்கின்ற அல்லது மக்களுடன் தொடர்புள்ள அனைத்து விவகாரங்களையும், செயற்பாடுகளையும் குறித்து நிற்கின்றது.'பொது நிர்வாகம்' என்ற பதம் ‘Public Administration’ என்ற ஆங்கிலப் பதத்திலிருந்து பெறப்பட்டதாகும். ‘Public’ என்ற பதமானது அரசு ஒன்றின் வரையறுக்கப்பட்ட பிரதேசத்தில் வாழும் மக்களை அல்லது ஒரு அரசில் வாழும் மக்களின் நிரந்தர வாழ்விடங்களைக் குறித்து நிற்கின்றது. ஆங்கிலப் பதமாகிய Administer’ என்பது இலத்தீன் பதங்களாகிய AD+MINISTIARE என்ற பதங்களிலிருந்து உருவாக்கப்பட்டதாகும். இதன் கருத்து சேவை செய்தல் என்பதாகும். ஆங்கிலப் பதமாகிய ‘Administration’என்பதன் கருத்து எல்லா விவகாரங்களையும் முகாமை செய்வது, அல்லது மக்களைக் கவனித்துக் கொள்வது என்பதாகும். உண்மையில் நிர்வாகத்தின் இயல்பு அரசினை முகாமை செய்வதாகும்.
பொதுநிர்வாகம் ஆரம்ப காலத்தில் சட்டம், பொருளாதாரம், வரலாறு போன்ற துறைகளுடன் இணைத்தே ஆராயப்பட்டது. பின்னர் அரசியல் விஞ்ஞானத்துடன் இணைத்து நிறுவன அணுகுமுறையின் அடிப்படையில் பொது நிர்வாகம் 'அரசாங்க நிர்வாகத்துடன் மட்டும் தொடர்புடைய செயற்பாட்டைக் கொண்டது' எனவும், அரசாங்கத்துறையுடன் மட்டும் தொடர்புபடாமல் அரசாங்கத்தின் மூன்று துறைகளாகிய சட்டத்துறை, நிர்வாகத்துறை, நீதித்துறை ஆகியவற்றுடன் தொடர்புடைய செயற்பாட்டைக் கொண்டது எனவும் இரு கருத்துக்களில் உபயோகிக்கப்படுகின்றது.
2. வரைவிலக்கணம்
பொதுநிர்வாகத்திற்கு வேறுபட்ட பல வரைவிலக்கணங்கள் வழங்கப்பட்டுள்ளன. பொதுநிர்வாகம் என்பது திட்டமிட்ட இலக்கினை அடைவதற்காக அரசாங்கத்தினால் மேற்கொள்ளப்படும் அனைத்துச் செயற்பாடுகளையும் குறித்து நிற்கின்றது. சில சிந்தனையாளர்கள் 'எல்லா அரசாங்கங்களும் தமது பொதுக் கொள்கை என்ற நோக்கத்தினை அடைவதற்காக கையாளும் செயற்பாடுகளே பொதுநிர்வாகம்' எனவும் வேறு சிலர் 'அரசாங்க நிறுவனங்களில் ஒன்றாகிய நிர்வாகத் துறையின் ஒழுங்கமைப்பு, முகாமைத்துவ நுட்பங்களுடன் கூடிய செயற்பாடுகளே பொதுநிர்வாகம்' எனக் கூறுகின்றனர். இவ் வரைவிலக்கணங்களை அவதானிக்கும் போது மூன்று கோணங்களிலிருந்து இவர்கள் தமது வரைவிலக்கணங்களை கொடுத்திருப்பது புலனாகின்றது.
இவ்வகையில், எல்.டி.வைட் (L.D.White) என்பவர் 'பொதுக் கொள்கையின் நோக்கங்களுக்கான எல்லாச் செயற்பாடுகளையும் தன்னுள் கொண்டுள்ளதே பொதுநிர்வாகம்' எனவும், எச்.சைமன் (H.Simon) என்பவர் 'பொது இலக்கினை நிறைவேற்றுவதற்கான குழுக்களின் கூட்டுச் செயற்பாடுகளே பொதுநிர்வாகம்' எனவும், எச்.வோல்ஹர் (H.Walker) என்பவர் 'அரசாங்கத்தின் தொழிற்பாடு சட்டத்திற்குப் பெறுமானத்தினைக் கொடுப்பதால் அது பொதுநிர்வாகம் என அழைக்கப்படுகிறது எனவும் பொது நிர்வாகத்திற்கு விளக்கமளிக்கின்றனர். இவ்விளக்கங்களிலிருந்து பொதுநிர்வாகம் தொடர்பான பொதுவானதும், உடன்பாடுடையதுமான கருத்துக்கள், வரைவிலக்கணங்களைப் பெற்றுக் கொள்வது கடினமாகவுள்ளது. ஆயினும் எவ்.ஏ.நைக்றோ (F.A.Nigro)என்பவர் பொதுநிர்வாகம் தொடர்பாகக் கொடுக்கப்பட்டுள்ள கருத்துக்களை ஒன்றாக்கி வரைவிலக்கணம் ஒன்றை உருவாக்கியுள்ளார். இதில் பின்வரும் விடயங்கள் உள்ளடங்கியுள்ளன.
இவ்வரைவிலக்கணங்கள் யாவும் மக்களுடைய நலன்களுக்காக இயங்குகின்ற நிறுவனமாகப் பொது நிர்வாகத்தினை அடையாளப்படுத்துகின்றன. அரசியல் மாற்றங்கள், பதட்டங்களுக்கு மத்தியிலும் பொது இலட்சியத்தினை அடைவதற்காக மக்களையும், வளங்களையும் ஒன்று திரட்;டி அரசியல் செல்வாக்கிற்குட்படாது மேற்கொள்ளப்படும் செயற்பாடுகளே பொதுநிர்வாகமாகும்.
3. வியாபகம்
பொதுநிர்வாகத்தின் வியாபகம் நாட்டின் தேவை, மாற்றங்கள், அரசாங்க மாற்றங்கள், கொள்கைகள் என்பவற்றிற்கு ஏற்ப விரிவடைந்து செல்கின்றது. அமெரிக்க பொது நிர்வாகவியலாளர் லூதர் குல்லிக் (Luther Gullick) அரசாங்க நிர்வாகத்தின் வியாபகத்தினை POSDCoRB(போஸ்ட்கோப்) என்னும் பதத்தின் மூலம் விளக்குகின்றார். இதிலுள்ள ஒவ்வொரு எழுத்தும் நிர்வாகத்தின் ஒவ்வொரு செயற்பாட்டினைக் குறிக்கி;ன்றது.அவைகளாவன
P: Planning- திட்டமிடல்
கிடைக்கக் கூடிய வளங்களைப் பயன்படுத்தித் தேவைகளைப் பூர்த்தி செய்வதற்கான வேலைத்திட்டமாகும். இது பொதுக் கொள்கையினை மையப்படுத்துவதாக இருக்கும்
O: Organization- ஒழுங்கமைப்பு
பொதுக் கொள்கையினை நடைமுறைப்படுத்துவதற்கான வேலைகளைச் செய்வதற்கான நிர்வாக அமைப்பினை உருவாக்கி, பகுதிகளாகவும், பிரிவுகளாகவும் அதனைப் பிரித்து வேறுபட்ட திணைக்களங்களுடாக வேலைகளைச் செய்வதாகும்
S: Staffing-ஊழியரிடல்
ஒழுங்கமைப்பின் ஒவ்வொரு திணைக்களத்திற்குமான ஆளனியினரை நியமனம் செய்து, அவர்களுக்கான பயிற்சியை வழங்கிச் சிறப்பான வேலை செய்யும் சூழலைத் தோற்றுவிப்பதாகும்.
D: Directing- நெறிப்படுத்தல்
பொருத்தமான அறிவுறுத்தல்களையும், கட்டளைகளையும், வழங்கி பொதுக் கொள்கைகளுக்கான திட்டமிடல்களையும், ஒழுங்கமைப்பினையும் நெறிப்படுத்துவதாகும்.
Co: Co- ordinating- ஒருங்கிணைத்தல்
நிர்வாக ஒழுங்கமைப்பின் வேறுபட்ட திணைக்களங்கள், பகுதிகள், பிரிவுகளுக்கிடையில் ஏற்படும் முரண்பாடுகள், அத்துமீறல்களைக் கட்டுப்படுத்திக் கடமைகள் சீராக நடைபெறுவதை உறுதிப்படுத்துதல்
R: Reporting-அறிக்கை தயாரித்தல்
நிர்வாகத்தின் ஒவ்வொரு திணைக்களமும், பகுதியும் தமது செயற்பாடுகள் தெடர்பாக நேர்மையான அறிக்கையினைச் சீராக நிர்வாக தலைமைத்துவத்திற்கு அனுப்புதல் வேண்டும். அத்துடன் கீழ்நிலை உத்தியோகத்தர்களிலிருந்து மேல்நிலை அதிகாரிகள் வரையிலான தொடர்பாடலும், வழிப்படுத்தலும் அறிக்கை தயாரித்தலுக்கு உதவுகின்றன.
B: Budgeting-வரவு செலவு அறிக்கை
இது நிதித் திட்டமிடலைக் குறித்து நிற்கின்றது. நிர்வாகத்தின் எல்லாச் செயற்பாடுகளும் நிதி முகாமைத்துவத்துடன் தொடர்புபடுவதால் நிதியினைக் கணக்கிடுவதும், கட்டுப்படுத்துவதும் முதன்மையான செயற்பாடாகின்றது.
பொதுநிர்வாகத்தின் சீரான செயற்பாட்டிற்கு அமைப்பின் கீழ் நிலை ஊழியர்களினதும்; மக்களினதும் பங்குபற்றுதல் அவசியமாகும். அதேநேரம் பொதுமக்களுக்குச் சேவை செய்கின்ற உணர்வு நிர்வாக உத்தியோகத்தர்களுக்கு இருக்க வேண்டும். இவ்வகையில் பொது நிர்வாகவியலின் வியாபகத்தினைப் பின்வருமாறு ஒழுங்குபடுத்தலாம்.
பொதுநிர்வாகத்தின் நோக்கம் மக்களுக்குச் சேவை செய்வதாகும். ஒவ்வொரு நிர்வாக அலகும் பொது மக்களுடன் தொடர்பு கொள்ளக்கூடிய வகையில் செயற்பட வேண்டும். கருத்துக்கள், தீர்மானங்கள் எடுக்கப்படுகின்ற போது மக்களுடைய தேவைகள் கவனத்தில் கொள்ளப்படல் வேண்டும். அப்போதுதான் சமூகநலன்புரிச் சேவைகளை நிர்வாகத்தினால் மேற்கொள்ள முடியும்.