State Institution- A View of Executive Branch by Thanabalasingham Krishnamohan
இலங்கையின் அரசியல் நிர்வாக முறைமையில் பரவலாக்கம் by Thanabalasingham Krishnamohan
நிர்வாகத்தில் தொழிலாளர் பங்கு வகித்தல் by Thanabalasingham Krishnamohan
Civil Society by Thanabalasingham Krishnamohan
The role played by India in Sri Lankas’ Ethnic Conflict and Resolution:India’s stand in...
அரசியல் நவீனத்துவம் என்ற பதமானது அரசியல் கலாசாரத்தில் ஏற்படும் மாற்றத்தினை குறித்து நிற்கின்றது. அரசியல் கலாசாரத்தில் ஏற்படும் மாற்றமானது சமூக, பௌதீக, சூழலால் தீர்மானிக்கப்படுகின்றது. எஸ்.பி.ஹன்ரிங்ரன் அரசியல் நவீனத்துவத்தை வரைவிலக்கணப்படுத்தும் போது மனிதனின் சிந்தனை, செயற்பாடு, அனைத்திலும் ஏற்படும் மாற்றத்துடன் தொடர்புடைய பன்முக நிகழ்வாகும்' எனக் கூறுகின்றார்.
அரசியல் நவீனத்துவம் ஓர் பரந்த விடயங்களைக் கொண்ட எண்ணக்கருவாகும். பொருளியல், சமூகவியல், உளவியல் பண்புகளுடன் தொடர்புபடுத்தி இவ் எண்ணக்கரு விளக்கப்படுகின்றது. பொருளாதார வளர்ச்சி, மொத்தத் தேசிய உற்பத்தி அதிகரிப்பு, தலாவீத வருமான அதிகரிப்பு, பொருளாதாரத் திட்டமிடல், பாரிய கைத்தொழிலாக்கம், மூலதனத் திரட்சி, நகரமயவாக்க அதிகரிப்பு, விவசாயத்துறை விகிதாசார ரீதியாகக் குறைந்து செல்லுதல், விஞ்ஞான வளர்ச்சி, போக்குவரத்து வளர்ச்சி, கல்வி வளர்ச்சி அதிகரிப்புப் போன்றன நவீனத்துவத்தினை தீர்மானிக்கின்றன.
நவீனத்துவம் பன்முகத் காட்சிநிலையினை காட்டுகின்ற எண்ணக்கரு என்றவகையில் பின்வரும் விடயங்கள் கருத்தில் கொள்ளப்படகின்றன.
மக்களின் மனப்பாங்கு, விழுமியங்கள்; என்பவற்றினால் ஏற்படும் உளவியல் மாற்றத்துடன் நவீனத்துவம் தொடர்புடையது.
தான் வாழும் சூழல் பற்றிய அறிவினை விசாலமாக விரிவாக்கம் செய்வதும், கல்வியறிவூட்டல், மக்கள் தொடர்பாடல் என்பவற்றின் ஊடாக தான்பெற்ற அறிவினை ஏனையவர்களுக்கு பரப்புதலுடன் தொடர்புடையதாகும்.
வாழ்க்கைத்தர சிறப்பு நவீனமயவாக்கம், நகர்புறம் நோக்கிய மக்கள் குடிபெயர்வு என்பவற்றுடன் தொடர்புடையதாகும்.
தனிமனிதர்கள் குடும்பத்திற்குச் செலுத்தும் விசுவாசத்துடன் தொடர்புடையதாகும்.
சந்தை வளர்ச்சி, விவசாயம், வர்த்தக முன்னேற்றம், கைத்தொழில் அபிவிருத்தி என்பவற்றுடன் தொடர்புடையதாகும்.
1. அரசியல் நவீனத்துவமும் , சமூக மாற்றமும்
அரசியல் நவீனத்துவம் பற்றிய கல்வியானது, சமூக வளர்ச்சியுடன் தொடர்புடையதாகும். அல்லது புராதன சமூக, பொருளாதார, உளவியல் பண்புகளை கைவிட்டு புதிய முறையிலான சமூகமயவாக்கத்தினையும், நடத்தையினையும் வெளிப்படுத்துவதுடன் தொடர்புடையதாகும். இவ்வகையில் உலகத்தின் சமூக அரசியல் முறைமையினை மூன்று வகையாகப் பிரிக்கலாம்.
புராதன , பின்தங்கிய முறைமை
இவ்வகைப்பாட்டிற்குள் உலகத்தின் மிகவும் பின்தங்கிய சமூக முறைமையானது உள்ளடக்கப்படுகின்றது. இச் சமூக முறைமையில் மரபுகள், வழக்காறுகள், சமயச் சடங்குகள் போன்றன முக்கியம் பெறுகின்றன. இவைகள் அதிகாரத்தினைத் தீர்மானிப்பதில் காத்திரமான வகிபாகத்தினைக் கொண்டிருக்கின்றன. இச் சமூக முறைமையில் அரசியல் சமூகமயமாக்கம், கூட்டுணர்வு, ஆட்சேர்ப்பு என்பவற்றில் அதிக அக்கறை காடப்படுவதில்லை. சாதி, சமயம் , மரபுவழிக் குழுக்கள், குடும்ப உறவுகள் போன்றனவே தீர்மானம் எடுப்பதிலும், பங்குபற்றலிலும் முக்கிய வகிபங்கு வகிக்கின்றன. சமூகப் படிநிலை அமைப்பின் அதிகார மையத்தினை தீர்மானிப்பவைகளாக இவைகளே காணப்படுகின்றன. மூன்றாம் மண்டல நாடுகள் பலவற்றில் உதாரணமாக நேபாளம், பூட்டான் போன்ற நாடுகளில் இவ்வாறான சமூகமைப்பு காணப்படுகின்றதாக கூறப்படுகின்றது.
வளர்ச்சியடைந்து வரும் சமூக முறைமை
வளர்ச்சியடைந்து வரும் சமூக முறைமையினைக் கொண்ட நாடுகளில் மரபுகள், நவீனத்துவம் என்ற இரண்டு பண்புகளும் காணப்படும். ஐரோப்பிய காலனித்துவத்தில் இருந்து விடுபட்ட அனேக நாடுகளில் இப்பண்புகள் காணப்படுகின்றது. இங்கு கலப்புக் கலாசார பண்புகள் அபிவிருத்தியடைந்து காணப்படும். இந்நாடுகளின் சமூக, அரசியல் அமைப்புக்களில் காலனித்துவ நாட்டின் அரசியல் கலாசாரத்தின் தாக்கம், மேலாதிக்கம் என்பன காணப்படும். கலப்புக் கலாசாரத்தின் வெளிப்பாடுகள் இந்நாடுகள் நடாத்திய சுதந்திரப் போராட்டங்களில் காணப்பட்டிருந்தது. சுதந்திரம் அடையப்பட்டதன் பின்னர் மரபு வாதிகளின் அழுத்தம் என்பது அமுக்கக் குழுக்கள், அரசியற் கட்சிகள் என்ற வடிவில் மேலோங்கத் தொடங்கியது. இதன் விளைவு நவீனத்துவவாதம் , மரபு வாதம் என்ற இரட்டைப் பரிமாணங்கள் சமூக அரசியல் நிறுவனங்களை தோற்றுவிக்கின்;றன.
வளர்ச்சியடைந்த மேலைத்தேய சமூகமைப்பு
இது மிகவும் உயர்ந்த கல்வியறிவும், செல்வமும் நிறைந்ததாகவும், சிறப்பான நகரமயவாக்கம், கைத்தொழில்மயவாக்கம் கொண்டவர்களாகவும், தீர்மானம் எடுப்பவர்கள் மக்களால் தெரிவு செய்யப்பட்டவர்களாகவும், மக்களுடைய உண்மையான பிரதிநிதியாகவும் காணப்படுவார்கள். இவ்வகையில் இந்நாடுகளில் உத்தியோகபூர்வ தீர்மானங்கள் யாவும் மிகவும் உயர்ந்த ஜனநாயக பண்புகளை அடிப்படையாகக் கொண்டு; காணப்படும். பிரித்தானியா, பிரான்ஸ், ஐக்கிய அமெரிக்கா போன்ற நாடுகளை இவ்வகைப்பாட்டிற்குள் அடக்கலாம்.
அரசியல் நவீனத்துவமும் அரசியல் முறைமைகளும்
அரசியல் நவீனமயமாக்கம் என்ற பதம், வேறுபட்ட சமூக முறைமைகளுக்கு ஏற்ப வேறுபட்ட வகைப்பாடுகளைக் கொண்டிருப்பது போன்று உலக அரசியல் முறைமைகளுக்கு ஏற்பவும் அரசியல் நவீனத்துவம் வேறுபட்டு காணப்படுகின்றது. எட்வார்ட் ஏ. சில்ஸ் ஐந்து வகையான அரசியல் முறைமைகளை இனங்காணுகின்றார். அவையாவன,
அரசியல் ஜனநாயகம்
ஜனநாயக அரசியல் முறையானது மிகவும் சிறப்பானதாகும். பிரித்தானியா, ஐக்கிய அமெரிக்கா போன்ற நாடுகளில் ஜனநாயக அரசியல் முறையானது சிறப்பாக இயங்குகின்றது. ஜனநாயக அரசியல் முறைமையில் சர்வஜன வாக்குரிமையின் அடிப்படையில் தெரிவு செய்யப்பட்ட சட்ட சபையின் செயற்பாடு காணப்படும் சட்ட சபையிலிருந்து தெரிவு செய்யப்பட்ட அமைச்சர்களினால் அரசாங்கம் நெறிப்படுத்தப்படும்.
அரசியல் கட்சிகள் ஜனநாயக அரசியல் முறைமைகளில் முக்கிய பங்கு வகிக்கின்றன. எதிர்க் கட்சிக்கும், எதிர்க் கருத்துக்குமான சுதந்திரம் முழுமையாக வழங்கப்பட்டிருக்கும். எப்போதும் சுதந்திரமானதும், தனித்துவமானதுமான நீதித்துறையின் செயற்பாடு பேணப்படும். அரசாங்கத்தினை மாற்றுவதற்கு அல்லது வழிப்படுத்துவதற்கு அரசியல் திட்டத்தினை மாத்திரமே பயன்படுத்துவார்கள். வன்முறையினை விரும்பமாட்டார்கள். தங்களுடைய அரசாங்கத்தில் நம்பிக்கையினை வளர்ப்பவர்களாகவே காணப்படுவார்கள். ஜனநாயக வழிமுறைகளிலுள்ள விழுமியங்கள், நடத்தைகளை விமர்சனம் செய்யும் ஆற்றல் கொண்டவர்களாக காணப்படுகின்றார்கள்.
பாதுகாவலர் ஜனநாயகம்
எட்வார்ட் ஏ. சில்ஸ் என்பவர் இனம் காணும் இரண்டாவது அரசியல் முறைமை பாதுகாவலர் ஜனநாயகம். ஜனநாயகத்தின் விழுமியங்கள், பண்புகளை பாதுகாவலர் ஜனநாயகம் அரசியல் முறைமையில் அவதானிக்க முடியும். அரசியலில் ஜனநாயகப் பாதையினை அறிந்து கொள்வதற்கு இந்நாடுகள் முயற்சி செய்து கொண்டிருக்கும். பாதுகாவலர் ஜனநாயகம் அரசியல் முறைமையில் நிர்வாகத்துறைக் கட்டுப்பாடு முக்கியமானதோர் நிலையில் இருக்கும். சட்ட சபையினை விட மிகவும் உயர்ந்த அதிகார மையத்தினைக் கொண்டதாக நிர்வாகத்துறை காணப்படும். எதிர்க்கட்சி செயற்பாடு, எதிர்வாதம் என்பவற்றிற்கு முக்கிய இடம் வழங்கப்படும். ஆனாலும் நிர்வாகத்துறை அரசியல் தொடர்பாடலில் மிகவும் பலமான நிலையினை வைத்துக் கொள்ளும். சட்டவாட்சியும், பொதுச் சமத்துவமும் பேணப்படுவதாக இருக்கும்.
நவீனத்துவ சிறுகுழுவாட்சி
நவீனத்துவ சிறுகுழுவாட்சி அரசியல் முறைமையானது மரபுரீதியான சிறுகுழுவாட்சி முறைமைக்கும் அரசியல் ஜனநாயகத்திற்கும் இடையிலான ஓர் அரசியல் முறைமையாகும். நவீனத்துவ சிறுகுழுவாட்சி அரசாங்க முறையில் ஆட்சியாளர்கள் தங்களை ஒழுங்குபடுத்திக் கொள்வதற்கு ஆயுதப் படைகளை பயன்படுத்துவார்கள். அல்லது உயர் இராணுவத் தலைமைப் பீடத்தினர் எல்லா அதிகாரங்களையும் தங்களுடன் எடுத்துக் கொள்வார்கள். இதனை 'அதிகார வர்க்க ஆட்சிக்கான சட்ட ரீதியான முத்திரை' எனக் கூறலாம். நவீனத்துவ சிறுகுழுவாட்சி அரசியல் முறைமையில் பாராளுமன்றம் வெறும் ஆரவாரம் செய்யும் சபையாக மாத்திரமே காணப்படும். எதிர்க் கட்சி வலுவிழந்து காணப்படும். இங்கு ஜனநாயக வழிமுறைகள் குறைவடைந்து காணப்படும். சுதந்திரமான நீதித்துறை செயற்பாடுகளும் குறைவடைந்து காணப்படும்.
சர்வாதிகார சிறு குழுவாட்சி
சர்வாதிகார சிறுகுழுவாட்சி அரசியல் முறையானது வலதுசாரி மனோபாவம் கொண்ட சர்வாதிகார சிறுகுழுவாட்சியாகவோ அல்லது இடதுசாரி மனோபாவம் கொண்ட சர்வாதிகார சிறுகுழுவாட்சியாகவோ காணப்படும். வலதுசாரி சர்வாதிகார சிறுகுழுவாட்சிக்கு இத்தாலியின் பாசிசத்தையும் , ஜேர்மனியின் நாசிசத்தையும் உதாரணமாக கூறலாம். இடதுசாரி சர்வாதிகார சிறுகுழுவாட்சிக்கு சோவியத் ரஸ்சியாவின் கம்யூனிச ஆட்சியையும் , சீனாவின் கம்யூனிச ஆட்சியையும் உதாரணமாக் கூறலாம். பொதுவாக சர்வாதிகார சிறுகுழுவாட்சி அரசியல் முறைமையில் அதிகாரம் ஆளும் குழுவிடம் குவிக்கப்பட்டிருக்கும். இங்கு சட்டவாட்சியை எங்குமே காணமுடியாது. சுதந்திரமான நீதித்துறை செயற்பாட்டினையோ, எதிர்கட்சியின் சட்ட ரீதியான செயற்பாட்டினையோ காணமுடியாது. ஜனநாயகப் பண்புகளாகிய சர்வஜன வாக்குரிமை, தேர்தல், சட்டத்துறைச் சுதந்திரம் போன்றன வெறும் பிரச்சார உத்தியாக மட்டுமே பயன்படுத்தப்படும்.
மரபு ரீதியான சிறுகுழுவாட்சி
மரபு ரீதியான சிறுகுழுவாட்சிஅரசியல் முறையானது மரபு ரீதியான ஆட்சியாக காணப்படும். மரபு ரீதியான சிறுகுழுவாட்சியில் ஆட்சியாளர்கள் குடும்ப அடிப்படையில் தோற்றம் பெறுகின்றார்கள். இவ் அரசியல் முறைமையில்; ஆட்சியாளன் அரசியல் ஆலோசகர்களின் உதவியுடன் ஆட்சியை மேற்கொள்கின்றான். சட்;டசபை குறைந்தபட்சம் பிரச்சார நோக்கத்திற்காகவாவது பயன்படுத்தப்படுவதில்லை. அரசின் தொழிற்பாடு மிகவும் உயர்ந்த நிலையில் மட்டுப்படுத்தப்பட்டிருக்கும். பணிக்குழுவினரின் செயற்பாடு அவசியம் என்ற நிலை உணரப்படாது காணப்படும். ஆட்சியாளர் சிறிதளவு ஆயுதப்படைகளையும், பொலிஸ் படையினையும் தமது பாதுகாப்பிற்காக வைத்திருப்பார்கள். ஆட்சியாளர் தமது ஆட்சியுரிமையினை பரம்பரை, மரபுரிமை, கலாசாரம் என்பவற்றின் வழி கோருபவர்களாகக் காணப்படுவார்கள்.