மாக்கியவல்லியின் இளவரசன் திறனாய்வு by Thanabalasingham Krishnamohan
Civil Society by Thanabalasingham Krishnamohan
இருபத்தியோராம் நூற்றாண்டில் எழுச்சியடையும் சீனாவின் கடல் வலிமை by Thanabalasingham Krishnamohan
தேர்தலும் பிரதிநிதித்துவ முறைமையும் – கோட்பாடு நோக்கு by Thanabalasingham Krishnamohan
Who is this International Community: Interest and Stratergy by Thanabalasingham...
மனிதன் ஒரு சமூகப் பிராணி என்று கூறிய அரிஸ்ரோட்டில் மனித இயல்பில் முக்கியமானது சோ்ந்து வாழ்தல் எனக் கூறுகின்றார். மனிதன் பிறந்ததிலிருந்து ஏனைய மனிதர்களின் அன்பிலும் அரவனைப்பிலும் வாழவே விரும்புகின்றான். அதேபோன்று குடும்பம், கிராமம் என்று சோ்ந்து வாழ்வதையும் விரும்புகின்றான். எனவே சமூகமயமாதல் என்னும் பதம் புதிதாக இருப்பினும் அதன் செயற்பாடுகள் பழையதாகும்.
ஒருவர் தான் வாழும் அரசியல் தொகுதியில் தமது அரசியல் நெறிமுறைகளையும் அரசியல் நடவடிக்கைகளையும் உணர்வு புர்வமாக அறிந்து கொள்ள உதவுவது சமூகமயமாதல் ஆகும். முதலில் ஏற்படும் சமூகமயமாதல் மூலமாகத்தான் ஏனைய அரசியல் பங்களிப்பு மற்றும் அரசியல் தொடர்பாடல் போன்றவை நிகழ்கின்றன. எனவே சமூகமயமாதல் என்பதை மிக முக்கியமானதாகவும் முதன்மையானதாகவும் அரசறிவியலாளர்களும், சமூகவியலாளா்களும் கருதுகின்றனர்.
சமூகமயமாதல் என்பது எதனையும் முதலில் கற்றுக் கொள்ளுதல் எனப் பொருள் கொள்ளலாம்.எனவே அதனை ஓரு வாழ்க்கைக் கல்வி எனக் கூறலாம். இது ஒவ்வொருவரும் தமது சமூக நிலைமைக்கும் தகுதிக்கும் ஏற்ப கற்றுக் கொள்ளும் வாழ்க்கை எனக் கூறலாம். சமூகமயமாதல் இயல்பாகவும் சுயமாகவும் ஒவ்வொருவர் வாழ்விலும் நடைபெறுகிறது. குழந்தைப் பருவம் முதல் முதியோராகும் வரை இது தொடர்கிறது. சமூகமயமாதலின் பிரதான அம்சம் சமூகத்தோடு இணைந்து வாழப்பழகிக் கொள்ளுதலாகும். இது அரசியல் மற்றும் சமூகக் கலாசாரத்தோடு தொடர்புபட்டதாகும்.
கிறின்ஸ் என்பவர் அரசியல் சமூகமயமாதல் என்பது “சிறுவார்கள் பெரியவர்களாக வளரும் போது கற்றுக் கொள்ளும் அரசியற் சமூகக் கோட்பாடுகளும், பெரியவர்களாக வளர்ந்த பின்னர் பெற்றுக் கொள்ளும் பதவிகளுக்குத் தம்மை தயார்ப்படுத்திக் கொள்வதுமாகும்” என்று கூறுகின்றார். இது வாழ்க்கை முழுவதும் நடைபெறும் பொதுக் கல்வியாகும். அல்மன்ட் அவர்கள் அரசியல் சமூகக்கருத்துகள், சிந்தனைகள் நடவடிக்கைகளை சிறுவயதில் இருந்து அறிமுகம் செய்தலாகும். இவை பெரியவர்களாக வளர்ந்த பின்னர் சமூக மற்றும் அரசியல் பணிகளை செய்ய உதவுகிறது என்றும் கூறுகின்றார்.
அரசியல் சமூகமயமாதல் மூலம் மக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுகிறது. சமூகமயமாதல் எல்லா வித கல்வி முறைகளையும் உள்ளடக்கியுள்ளது. பாடசாலைகளில் கற்கும் கல்வி, அனுபவ ரீதியாக பெறும் அறிவு, சமூகச் செயற்பாடுகள் மூலம் பெறும் அனுபவம், அரசியல் பங்களிப்பு எனப் பல வழிகளூடாக சமூகமயமாதல் நிகழ்கின்றது. இதனால் அரசியல் நிகழ்வுகள் பற்றிய விழிப்புணர்வு, அரசியலில் பங்கு கொள்ள வேண்டும் என்ற அவா என்பன மேலோங்குகின்றது இதனால் ஜனநாயக வழிமுறைகளில் ஆர்வம் ஏற்பட்டு அரசியல் நடத்தைகளை சீராக்கிறது.
இதனை ஒரு வகையில் அரசியல் பரிவர்த்தனை என்றும் கூறலாம். சமூகத்தின் கல்வி கலாசார விழுமியங்களை ஒரு சந்ததியினர் எதிர்கால சந்ததியினருக்கு அன்பளிப்புச் செய்கின்றனர். ஒவ்வொரு சமூகத்திற்கும் தனித்துவமான அரசியற் பின்னனிகள், நடவடிக்கைகள், சடங்குகள் என்பன இருக்கலாம். இவற்றை பாதுகாத்து வளர்த்தெடுப்பதில் அச் சமூகத்தின் அங்கத்தவர்கள் அனைவரும் பங்கு கொள்கின்றார்கள். இதனையே அரசியற் பரிவத்த்தனை எனக் கூறுகின்றார்கள். இதில் சமூக அங்கத்தவர்கள் ஒவ்வொருவருக்கும் பங்குள்ளது.அரசியற் சமூகமயமாதல் குழந்தைப்பருவம் முதல் முதியோராகும் வரையான காலங்களில் ஏற்படும் தொடர் வாழ்க்கை நிகழ்வு எனக் கூறலாம்.
டுர்கைம் (Durkheim ) என்பவர் பொதுவாக அனைத்து சமூகங்களிலும் பல்வேறுபட்ட நம்பிக்கைகள், எண்ணங்கள், உணர்வுகள், பொதுக் கொள்கைகள் என்பன உள்ளன. இவைகள் சமூகத்தின் அனைத்து உறுப்பினர்களாலும் பகிர்ந்து கொள்ளப்படுகின்றன. இவ்விடயங்கள் சமூகத்தில் குறிப்பிட்ட தனிமனிதர்களுக்கு மட்டுமேயுரிய ஒரு சொத்தல்ல. பதிலாக பொதுவான வாழ்க்கைக்கு உரியதாகும். இதனை டுர்கைம் பொதுவான கருத்துருவாக்கம் எனக் கூறுகின்றார்.
மீட் என்பவர் ஒரு மனிதன் தன்னைப் பற்றிய உணர்வு நிலையுடன் இல்லாவிடின் மற்றவர்களுடைய எண்ணங்கள், நம்பிக்கைகள், உணர்ச்சிகள் பிறருடைய பழக்க வழக்கங்கள் போன்றவைகள் பற்றிய உணர்வு நிலையை விளங்கிக் கொள்ளமாட்டார்கள். குழந்தை தனக்கும் பிறருக்குமிடையிலுள்ள வேறுபாட்டைக் காண்பதில்லை. வயது அனுபவங்கள் என்பவற்றின் அடிப்படையில் தனக்கும் பிறருக்குமிடையிலுள்ள வேறுபாட்டை கற்றுக் கொள்வதோடு தனது நடத்தையையும். வேறுபடுத்தி பகுத்து உணர்ந்து கொள்கின்றது எனக் கூறுகின்றார்
என் .எச்.கைமன் என்பவர் அரசியல் சமூகமயவாக்கம் என்பது 'பரம்பரை பரம்பரையாக அரசியல் பெறுமானங்கள் நிலை நிறுத்தப்படுவதாகும் எனக் கூறுகின்றார். லாஸ் வெல் என்பவர் ' 'சந்தேகத்திற்கு இடமின்றி இறந்த கால, நிகழ்கால, எதிர்கால அரசியலின் ஒவ்வொரு முக்கிய இயல்புகளையும் சமூகமயவாக்கம் முதன்மைப்படுத்துகின்றது' என குறிப்பிடுகின்றனர்.
அரசியல் சமூகமயவாக்கம் என்பது அரசியல் பெறுமானத்திலான பெறுபேறேயாகும். இது ஒரு சந்ததியிலிருந்து மறு சந்ததிக்கு மாற்றப்படுகின்றது. அரசியல் முறையின் உறுதிப்பாடென்பது அரசியல் சமூகமயவாக்கத்திலேயே தங்கியுள்ளது.
அரசியல் சமூகமயவாக்கம் தனிமனிதனிலிருந்து உருவாக்கப்பட்டு அரசியல் விடயத்திற்கு முன்னெடுக்கப்படுகின்றது.இவ்வகையில் சமூகமயவாக்கத்தினை பின்வரும் நிறுவனங்கள் உருவாக்குகின்றன எனக் கூறுகின்றார்கள்.
குடும்பம்
இது முதலாவது நிறுவனமாகக் காணப்படுகின்றது. பிறந்த ஒரு குழந்தை உலகத்தைப் பார்ப்பதற்கு உதவும் முதல் ஊடகம் குடும்பம் என்ற நிறுவனமேயாகும். இந்நிறுவனம் அதிகாரத்துடன் குழந்தையினை தொடர்புபடுத்துகின்றது. தனது எண்ணங்களை வளர்க்கவும், அரசியல் முறைமைகளையும் அதன் நிறுவனங்களையும் அறிந்து கொள்வதற்கும் பெற்றோர்களே முதல் நிலையில் உதவுகின்றார்கள் தனிப்பட்டவர்களின் அரசியல் ஆளுமை, சிந்தனை மனோபாவம், செயற்பாடுகள் யாவும் வீட்டிலேயே தீர்மானிக்கப்படுகின்றன.
பாடசாலை
பாடசாலையும், பாடசாலைக் கல்வியும் அரசியல் சமூகமயவாக்கத்தின் தனது சொந்த பங்களிப்பினைச் செலுத்துகின்றது. பல வகையான கல்வி பாடசாலையில் கற்பிக்கப்படுகின்றன. இக்கல்வியானது மாணவர்களின் நடத்தை, பாடவிதானம் என்பவற்றிற்கேற்ப போதிக்கப்படுகின்றது. பாடசாலையின் சூழலுக்கேற்ப ஆசிரியர்களும், மாணவர்களும் தமக்கான குறிப்பிட்ட பாதையினை தெரிவு செய்து கொள்கின்றனர்.
சமய நிறுவனங்கள்
மத நிறுவனங்களும் அரசியல் சமூகமயவாக்கதில் பங்கு வகிக்கின்றன. அனேக ஐரோப்பிய நாடுகளில் ரோமன் கத்தோலிக்க மதத்தின் செல்வாக்கு என்பது தாராண்மை ஜனநாயகத்தையும், சர்வாதிகாரத்தினையும் பெருமளவிற்கு பாதிப்பிற்குள்ளாக்கியிருந்தது. மத ரீதியான செல்வாக்கு அரசு, கல்வி என்பதைப் பாதிக்கும் போது முரண்பாடுகள் தோற்றம் பெறுவதும் தவிர்க்க முடியாததாகிறது. உதாரணமாக கத்தோலிக்க மதத்திற்கும் புரட்டஸ்தாந்து மதத்திற்கும் இடையிலான முரண்பாட்டினைக் குறிப்பிடலாம். இதே போல ரோமன் இஸ்லாமிய மத நிறுவனங்களின் செல்வாக்கு அரேபிய நாடுகளில் காணப்படுவதுடன், சமூகமயவாக்கலில் இதன் பங்கு காத்திரமானதாகவும் காணப்படுகின்றது.
வேலைத்தளங்கள்
வேலைத்தளங்கள், அலுவலகங்கள் என்பனவும் அரசியல் சமூகமயவாக்கலில் பங்கு வகிக்கின்றன. தொழில் நிறுவனங்கள் முறைசார்ந்த முறைசாரா நிறுவனங்களை தோற்றுவிக்கின்றன. உதாரணமாக, ஒன்றியங்கள், கழகங்கள் போன்றன. இந் நிறுவனங்கள் அரசியல் தொடர்பாடல்களுக்கான ஊடகங்களாக மாறுகின்றன. கூட்டுப் பேரம் பேசுதல் அல்லது வேலை நிறுத்தத்தில் ஈடுபடுதல் போன்றன மிகவும் சக்தி வாய்ந்த சமூகமயவாக்க அனுபவங்களை தொழிலாளர்கள் ஊழியர்களுக்கு வழங்குகின்றன.
வெகுஜனத் தொடர்பு சாதனங்கள்
தனிமனிதர்களின் ஆளுமையினை வளர்ப்பதில் இவற்றின்; பங்கு காத்திரமானதாகும். செய்தித்தாள்களில் வரும் அறிக்கைகள், வானொலியில் போகும் உரையாடல்கள், தொலைக்காட்சி நிகழ்ச்சிகள் என்பவற்றின் செல்வாக்கு முக்கிய பங்கு வகிக்கின்றன. ஆனால் மக்களுடய விருப்பு, வெறுப்புக்களுக்கேற்ப மக்களின் தெரிவு என்பது வேறுபட்டுச் செல்லலாம். மேலும் அச்சகம், வானொலி, தொலைக்காட்சி என்பவற்றின் வேறுபட்ட பெறுமானங்களுக்கேற்ப இவற்றின் மூலம் தனிமனிதனுக்குக் கிடைக்கும் அறிவு வேறுபட்டுச் செல்லும்.
குறியீடுகள்
வளர்ச்சியடைந்து வருகின்ற ஒரு அரசியல் சமூதாயத்தில் குறியீடுகள் சமூகமயவாக்கத்தினை ஏற்படுத்துகின்றது. உதாரணமாக பொது தேர்தல் ஊர்வலங்கள், கர்த்தால்கள், கதவடைப்புக்கள், மாக்ஸ், லெனின், காந்தி போன்றோரின் பிறந்தநாள் விழாக்கள் போன்றவைகள் அரசியல் சமூகமயவாக்கத்தினை ஏற்படுத்துகின்றன.
ஒவ்வொரு நாடும் அரசியல் சமூகமயவாக்கத்திற்குட்பட்டிருக்கின்றன. இருப்பினும் இதன் இயங்கு முறை வௌ;வேறுபட்டதாக காணப்படுகின்றது. ஜனநாயக நாட்டில் மக்கள் ஜனநாயகத்தின் அர்த்தத்தினை நோக்கியதாகவும் சட்டவாட்சியின் தாற்பரியத்தையும், நீதித்துறைச் சுதந்திரத்தின் முக்கியத்துவத்தினையும், பத்திரிகைச் சுதந்திரத்தையும் அறிந்து கொள்ளக் கூடிய வகையில் சமூகமயவாக்கப்படுகின்றனர்.
மேலும் ஜனநாயக நாட்டின் குடிமகன் இதனை பாடசாலைகளிலும், கல்லூரிகளிலும், பல்கலைக்கழகங்களிலும் பெற்று சுதந்திர அரசியல் வாழ்க்கையின் முக்கியத்துவம் பற்றி சுருக்கமானதும், வளர்ச்சியடைந்ததுமான உறுதியான எண்ணத்தை வெளிப்படுத்துகின்றான். இது சர்வாதிகாரத்தில் முற்றிலும் எதிராகக் காணப்பட்டது. அரசியல் அதிகாரம் குவிந்த ஆட்சியாளர்களால் ஒரு புதிய சுருங்கிய அரசியல் கலாசாரத்தைப் புகுத்த பாடசாலைப் புத்தகங்களிலும், எல்லாக் கற்கைத் தொகுதிகளிலும் அரசியல் நிறுவனங்களின் செயற்பாடும், வடிவங்களும் புகுத்தப்பட்டு முன்னெடுக்கப்படும்.
அரசியல் சமூகமயமாதல் ஒரு மனிதனை அரசில் உள்வாங்கிக் கொள்வதற்கும், அதை விமர்சிப்பதற்கும், அதனுடைய செயற்பாடுகளை இனம் காண்பதற்கும், அரசியல் நிகழ்வுகளை விளங்குவதற்கும் உதவுகின்றது. சமூகத்திற்கும், அரசியலிற்கும் இடையே நடைபெறும் செயற்பாட்டிற்கு ஒரு பிணைப்பாக அரசியல் சமூகமயமாதல் காணப்படுகின்றது. அரசியல் சமூகமயமாதல் ஒரு ஸ்திரத் தன்மையைக் குறிக்கோளாகக் கொண்டிருக்கும். அரசியல் சிந்தனைகளை, கொள்கைகளை அகவயமாக்கி உள்வாங்குவதற்கு அரசியல் சமூகமயமாதல் உதவுகின்றது. இவ்வாறு செய்வதால் அரசில் முழுநம்பிக்கையை உருவாக்கி விடும் எனலாம்.