தேர்தலும் பிரதிநிதித்துவ முறைமையும் – கோட்பாடு நோக்கு by Thanabalasingham Krishnamohan
இலங்கை பொது நிர்வாக முறைமை , by Thanabalasingham Krishnamohan
Civil Society by Thanabalasingham Krishnamohan
State Institution- A View of Executive Branch by Thanabalasingham Krishnamohan
நிர்வாகத்தில் தொழிலாளர் பங்கு வகித்தல் by Thanabalasingham Krishnamohan
1. தோற்றம்
ஒப்பீட்டு அரசியல் என்னும் பதத்தை தேசங்களையும் , அரசியல் முறைமைகளையும், ஒப்பீட்டுக் கற்கும் கற்கை நெறியென வரைவிலக்கணப்படுத்தலாம். ஒப்பீட்டு அரசியல் 1950 களின் பிற்பகுதியில் தனியானதொரு கற்கை நெறியாக ஐக்கிய அமெரிக்க அரசறிவியலாளர்களால் வடிவமைக்கப்பட்டது. 1960 களில் ஒப்பீட்டு அரசியல் கற்கை நெறியின் வளர்ச்சி சிறப்பானதாக இருந்தது. ஆயினும் 1970 களில் ஒப்பீட்டு அரசியல் கற்கை நெறியின் மதிப்பு குறைவடைந்திருந்தது. இருப்பினும் 1980 களில் இக் கற்கை நெறி புனரமைப்புச் செய்யப்பட்டு மிகவும் ஆரோக்கியமாக வளர்ச்சியடைந்து வருகின்றது.
ஒப்பீட்டு அரசியல் கற்கை நெறிக்குரிய உள்ளடக்கங்கள் கிரேக்க காலத்திலிருந்து பெறப்பட்டு வந்தாலும், 1950கள் வரை இவைகள் எவ்வித முக்கியத்துவத்தினையும் பெறவில்லை. ஆயினும் இரண்டாம் உலக மகாயுத்தம் முடிவடைந்த பின்னர் ஒப்பீட்டு அரசியல் கற்கை நெறியானது முக்கியத்துவம் பெறத்தொடங்கியது. இரண்டாம் உலக மகாயுத்தத்தைத் தொடர்ந்து உலக ஒழுங்கில் ஏற்பட்ட மாற்றங்கள் சர்வதேச அளவில் அரசறிவியலாளர்களின் கவனத்தை ஈர்த்தது. அதாவது ஒப்பீட்டு அரசியல் கற்கை நெறியானது சர்வதேச நாடுகளின் அரசாங்க முறைமைகளை கற்கின்ற ஓர் நெறியாக மாற்றமடைந்தது.
2. வளர்ச்சி
உண்மையில் ஒப்பீட்டு அரசியல் கற்கை நெறியின் வளர்ச்சிக்கு ஐக்கிய அமெரிக்க அரசியலறிஞர்கள் அதிகளவில் பங்களிப்பினைச் செய்திருந்தனர். இக்கல்வியியளாளர்களின் பங்களிப்பினை மூன்று காலகட்டங்களாக பிரித்து நோக்கலாம்.
முதலாம் காலகட்டம்
முதலாம் காலகட்டத்தில் ஒப்பீட்டு அரசியல் கற்கை நெறியின் வளர்ச்சிக்கு அரிஸ்ரோட்டில், மாக்கியவல்லி, டிரக்குவில், பிரைஸ், வெபர், போன்றவர்கள் பங்களிப்புச் செய்துள்ளனர். இவர்கள் அரசியல் ஒழுங்கமைப்புக்களின் தொழிற்பாட்டினை சிறப்பாக விளங்கிக் கொள்வதற்கு ஒப்பீட்டு முறையினைப் பயன்படுத்தியிருந்தனர்.
இரண்டாம் காலகட்டம்
இரண்டாம் காலகட்டத்தில் 1950களில் ஒப்பீட்டரசியல் தனியொரு கற்கையாக வடிவமைக்கப்பட்டது. குறிப்பாக இரண்டாம் உலக மகா யுத்தத்தைத் தொடர்ந்து அமெரிக்க அரசியல் அறிஞர்களான சாமுல், எச்.பீர், எம்.ஹாஸ், பேர்னாட் உலாம் பேன்றவர்கள் ஒப்பீட்டு அரசியலின் வளர்ச்சிக்கு பங்களிப்புச் செய்துள்ளனர். எனவே முதலாம் காலகட்டத்தை விட 'இரண்டாம் காலகட்டத்தில் ஒப்பீட்டு அரசியல் கற்கை நெறியானது மிகவும் துல்லியமாக வளர்ச்சியடைந்தது எனக் கூறலாம்.
மூன்றாம் காலகட்டம்
மூன்றாம் காலகட்டத்தில் டேவிட் ஈஸ்;ரன், கப்ரியல், ஏ.அல்மண்ட், ஜேம்ஸ்.சி.கோல்மன், கால்டூச், ஐ. பி. பவல், ஹரோல்ட் லாஸ்வெல், ரோபேட் ஏ. டால், டேவிட் அப்ரர் போன்றவர்கள் ஒப்பீட்டு அரசியல் கற்கை நெறியின் வளர்ச்சிக்குப் பங்களிப்புச் செய்திருந்தனர். இவ் ஆய்வாளர்கள் ஒன்றுடன் ஒன்று தொடர்புடைய எண்ணக்கருக்களை உருவாக்கி ஒப்பீட்டு பகுப்பாய்வுக்கு தமது பங்களிப்பினை வழங்கியிருந்தனர்.
3. ஒப்பீட்டு அரசியலின் பிரதான இயல்புகள்
ஒப்பீட்டு அரசியலின் இயல்புகளை பின்வருமாறு வகைப்படுத்தலாம்
பகுப்பாய்வு மற்றும் அனுபவத்திலான ஆய்வு
ஒப்பீட்டு அரசியலுக்குள் பகுப்பாய்வு மற்றும் அனுபவத்திலான ஆய்வுபயன்படுத்தப்பட்டமை மூலம் அரசியல் விஞ்ஞான கற்கை நெறி புதிய வடிவத்தைப் பெற்றுக் கொண்டது. ஆரம்ப காலங்களில் அரசியல் விஞ்ஞானக் கற்கை நெறியைக் கற்றுக்கொள்ளப் பயன்படுத்தப்பட்டிருந்த விபரண முறைமை கைவிடப்பட்டு அதற்குப் பதிலாக பகுப்பாய்வும் மற்றும் அனுபவ விசாரணை முறைமை அறிமுகப்படுத்தப்பட்டது. இதன்மூலம் தர்க்க ரீதியான முடிவுகளை பெற்றுக் கொள்ள முடிந்தது.
உட்கட்டமைப்புக் கற்கைநெறி
ஒப்பீட்டு அரசியல்; கற்கை நெறி மாணவர்கள் பொது விவகாரங்களுடன் தொடர்புபடுவதுடன், அது பற்றிய ஆராட்சிகளையும் கருத்தில் எடுக்கின்றார்கள. ஒப்பீட்டு அரசியல் விஞ்ஞானிகள் அரசாங்கம் என்பதற்குப் பதிலாக அரசியல் முறைமை என்ற பதத்தினை பயன்படுத்துவதே பொருத்தமானது எனக் கூறுகின்றனர். அரசியல் முறைமைக்குள் சட்டத்துறை, நிர்வாகத்துறை, நீதித்துறை, அரசியல் கட்சிகள், அமுக்கக்குழுக்கள் போன்றன முக்கிய பங்குவகிக்கின்றன.இவைகள் ஒவ்வொன்றும் ஒன்றுடன் ஒன்று தொடர்புபட்டவைகளாகும்.
அபிவிருத்தியடைந்து வரும் சமூகங்கள் பற்றிய கல்வி
வளர்முக நாடுகளின் அரசியலை விளங்கிக் கொள்வதற்கு பெரும்பாலான விஞ்ஞானிகள் ஒப்பீட்டு அரசியல் கற்கை நெறியைப் பயன்படுத்துகின்றார்கள். ஆரம்பகாலத்தில் ஒப்பீட்டு அரசியலானது தெரிவு செய்யப்பட்ட ஐரோப்பிய நாடுகள் பற்றியும், ஐக்கிய அமெரிக்கா பற்றியதுமான கற்கை நெறியாகவே இருந்தது. இரண்டாம் உலக மகா யுத்தத்தின் பின்னர் இந்நிலை மாற்றமடைந்து, வளர்ச்சியடைந்து வருகின்ற ஆசிய, ஆபிரிக்க, இலத்தீன் அமெரிக்க நாடுகள் பற்றிய கற்கை நெறியாக மாற்றமடைந்துள்ளது.
உள் தொடர்புக் கற்தை நெறி
ஒப்பீட்டு அரசியல் தனிக்கற்கை நெறியாக வளர்ச்சியடைந்தாலும், சமூகவிஞ்ஞான மற்றும் இயற்கை விஞ்ஞானக் கற்கை நெறிகளுடன் நெருங்கிய தொடர்பினைக் கொண்டுள்ளது. ஒப்பீட்டு அரசியல் கோட்பாட்டாளர்கள் சமூகவியல், உளவியல், பொருளியல், மானிடவியல், உயிரியல் போன்ற கற்கை நெறியிலிருக்கும் பல விடயங்களை ஒப்பீட்டு அரசியல் கற்கை நெறிக்குள் உள்வாங்கி பயன்படுத்துகின்றார்கள். இவற்றை விட அரசியல் அபிவிருத்தி, அரசியல் நவீனத்துவம், அரசியல் சமூகமயவாக்கம், அரசியல் மாற்றம், அரசியல் தலைமைத்துவம் போன்ற பல விடயங்களையும் ஒப்பீட்டு அரசியல் கற்கை நெறி உள்ளடக்கியுள்ளது.
4. வியாபகம்
ஒப்பீட்டு அரசியல் கற்கை நெறியில் அரசியல் என்ற பதம் அரசியற் செயற்பாடு ,அரசியல் நிகழ்வு, அரசியல் அதிகாரம் ஆகிய மூன்று வேவ்வேறு தொழிற்பாடுகளுடன் தொடர்புடையதாகும். எனவே இத்தொழிற்பாடுகளை விளங்கிக் கொள்வதன் மூலமே ஒப்பீட்டு அரசியலை விளங்கிக் கொள்வது இலகுவானதாகும்.
அரசியற் செயற்பாடு
அரசியற் செயற்பாடுகள் தொடர்பாக ஒகஸ்கொட் என்பவர் “செயற்பாடு என்பது மனித இயல்பாகும். இவ்வியல்பானது சமூகமைப்பில் மனிதர்கள் ஒருவருடன் ஒருவர் கொள்ளும் உறவுடனும் சமூக ஒழுங்கமைப்புத் தொடர்பாக சிந்தித்து கருத்து தெரிவிப்பதுடன் இது தொடர்புடையதாகும். எனக் கூறுகிறார். இவரை விட ஹரோல்ட் லாஸ் வெல், ரொபர்ட் டால், போன்றவர்கள் அதிகாரத்தை அனுபவிப்பதுடன் தொடர்புடையதே அரசியற் செயற்பாடு எனக் கூறுகின்றார்கள். இவர்களின் கருத்துப்படி, அரசியற் செயற்பாடு அதிகாரம் பற்றியதாக இருப்பதனால் அது சமூக மோதலைத் தோற்றுவிக்கின்றது. இம் மோதலைத் தீற்பதற்கான கோரிக்கைகள் எழும் போது அமைப்பு ரீதியான அரசியற் செயற்பாடு தேவைப்படுகின்றது.
அரசியல் நிகழ்வு
அரசியல் நிகழ்வு என்பது அரசியற் செயற்பாட்டின் தொடர்ச்சியாகும். அரசியல் சமுதாயத்தில் காணப்படும் எல்லா நிறுவனங்களும் தீர்மானம் எடுக்கும் செய்முறையில் பங்கு கொள்கின்றன. ஒரு அரசியல் சமுதாயத்தில் செயற்படும் அரசு சார்பற்ற நிறுவனங்களும் 'அதிகாரத்திற்கான போராட்டத்தில்' ஈடுபடுகின்றன. இதன்மூலம் அரச சார்பற்ற நிறுவனங்கள் அசாங்கத்திற்குள் தமது செல்வாக்கைப் பிரயோகித்து அரசாங்கத்தின் கொள்கை உருவாக்கத்தில் பங்கெடுக்கின்றன. இதுவே சமகாலத்தில் அரசாங்கங்களின் அரசியல் நிகழ்வாக உள்ளது.
அரசியல் அதிகாரம்
அதிகாரம் என்ற பதத்திற்கு கார்ல் ஜே. பிரட்றிச் என்பவர் 'சில வகையான மனித உறவுகளே அதிகாரம் என விளக்கமளித்துள்ளார். ரவ்னி என்பவர் 'தனி மனிதன் அல்லது தனிமனிதக் குழுக்கள் ஏனைய தனிமனிதன் மீது அல்லது தனிமனிதக் குழுக்கள் மீது தமது விருப்பங்களை திணித்து முடிவுகளை மாற்றியமைக்கும் வல்லமையே அதிகாரம் எனக் கூறுகிறனர். அதிகாரம் பற்றியதும், அதன் பிரயோகம் பற்றியதுமான ஒழுங்கமைக்கப்பட்ட செயற்பாடே அரசியல் எனப் பொதுவாகக் கூறலாம். அரசியலில் தீர்மானம் எடுக்கும் செய்முறை நிகழ வேண்டுமாயின் எடுக்கப்படும் தீர்மானம் என்ன வகையானது என்பதை வரையறை செய்ய வேண்டும். பின் அதற்கு எவ்வகையான அதிகாரம் தேவை என்பது தீர்மானிக்கப்பட வேண்டும். மக்களின் அடிப்படை நலன் பாதிக்கப்படாத வகையில் அதிகாரம் பிரயோகிக்கப்படவேண்டும்.
ஒப்பீட்டு அரசியலை விளங்கிக் கொள்வதற்கு அரசியற் செயற்பாடு, அரசியல் நிகழ்வு, அரசியல் அதிகாரம் என்ற மூன்று அடிப்படை விடையங்களையும் கற்றுக் கொள்ள வேண்டும். இம்மூன்றிலும் அதிகாரம் என்பது பிரதானமானது. ஏனெனில் எல்லா உறவுகளையும் தீர்மானிக்கும் வல்லமை அதிகாரத்திற்கேயுண்டு.