மாக்கியவல்லியின் இளவரசன் திறனாய்வு by Thanabalasingham Krishnamohan
Civil Society by Thanabalasingham Krishnamohan
இருபத்தியோராம் நூற்றாண்டில் எழுச்சியடையும் சீனாவின் கடல் வலிமை by Thanabalasingham Krishnamohan
தேர்தலும் பிரதிநிதித்துவ முறைமையும் – கோட்பாடு நோக்கு by Thanabalasingham Krishnamohan
Who is this International Community: Interest and Stratergy by Thanabalasingham...
பொது நிர்வாகத் துறை என்ற பதத்தினை ஆழமாக விளங்கிக் கொள்வதற்கு பொது நிர்வாகம் சார்ந்த பல்வேறு அணுகுமுறைகளை விளங்கிக் கொள்வது அவசியமாகும். இதன் மூலம் பொது நிர்வாகம் தொடர்பான செயற்பாட்டையும் முக்கியத்துவத்தினையும் விளங்கிக் கொள்ள முடியும். இவ்வகையில் பொது நிர்வாகம் சார்ந்த அணுகுமுறைகளாகப் பின்வருவனவற்றைக் கூறலாம்.
1. விஞ்ஞான அணுகுமுறை:-
விஞ்ஞான அணுகு முறைகள் சமூக விஞ்ஞானங்களில் பயன்படுத்தப்படுகின்றன. விஞ்ஞான நோக்கில் பொது நிர்வாகமானது இரு வழிகளில் அணுகப்படுகின்றது. ஒன்று நுட்பமானதும், ஆழமானதுமான அவதானித்தலாகும். மற்றையது பரிசோதனை அல்லது செய்முறையாகும். இவ் வழிகள்; மூலம் வேறுபட்ட உளப்பாங்கைக் கொண்ட மனிதர்களுக்குரிய பொது நிர்வாகவியலை ஒழுங்கமைக்க முடியும். எனவே விஞ்ஞான ரீதியான அணுகுமுறைகள் மூலம் ஒவ்வொரு நாட்டின் சூழலிற்கும் தேவைக்கும் ஏற்ற பொது நிர்வாகத்தினை உருவாக்கிக் கொள்ள முடியும்.
2. சட்ட அணுகுமுறை:-
பொது நிர்வாகத்தினை விளங்கிக் கொள்வதற்கு பெரும்பாலான ஐரோப்பிய நாடுகள் சட்ட அணுகுமுறையினைப் பயன்படுத்துகின்றன. பொதுவாக ஒரு நாட்டின் சட்டத்தினை அரசியலமைப்புச் சட்டம், நிர்வாகச் சட்டம் என இரு பிரிவுகளாகப் பிரிக்க முடியும். டைசி என்பவர் நிர்வாகச்சட்டம் என்பது 'ஆட்சியாளருக்கு கொடுக்கப்பட்டுள்ள கடமைகள், உரிமைகள், பொறுப்புக்கள், ஆகியவற்றைத் தீர்மானிக்கின்றது. ஊழியர்களுக்கும் மக்களுக்குமிடையே உறவினை ஏற்படுத்துவதாக உள்ளது' எனக்கூறுகின்றார். பொது நிர்வாகமானது நாட்டின் இறைமைக்கு முதன்மையளிப்பதாக இருந்தாலும் பொது நிர்வாகவியலில் சட்ட அணுகுமுறையினை பயன்படுத்துவது தீங்கினையும் எற்படுத்தலாம்.
3. நுட்ப அல்லது அரசியல் சாரா அணுகுமுறை:-
ஐக்கிய அமெரிக்காவின் வளர்ச்சியினூடாகச் சர்வதேச நாடுகள் பல நிர்வாக அனுபவங்களைப் பெற்றுக் கொண்டுள்ளன. இதில் முதன்மையானது பொது நிர்வாகவியலை நுட்ப அல்லது அரசியல் சாரா முறையில் அணுகுவதாகும். அமெரிக்காவில் கட்சி அரசியலும், பொது நிர்வாகமும் ஒன்றுடன் ஒன்று தொடர்புபட்டவையாக இருந்;துள்ளன. அரசாங்கத்தின் செயற்பாடுகள், ஜனாதிபதி சார்ந்துள்ள கட்சி அரசியல் கொள்கைகளுடன் இசைந்ததாக உள்ளன. கட்சியே அரசாங்கம் குறிப்பாக கட்சியே நிர்வாகத்துறை என்ற நிலையும் உள்ளது. பொது நிர்வாகம் திறமை, தனித்துவம், நேர்மை, சிக்கனம், பயனுறுதி என்பவற்றடன் இயங்குவதற்கும், நிர்வாகத்துறைக்கும் காங்கிரசிற்கும் இடையில் தோன்றும் பிணக்குகளை அகற்றுவதற்கும் பொது நிர்வாகம் அரசியல் சார்பற்று நடுநிலையாக செயற்படுதல் வேண்டும் என நிர்வாகவியல் அறிஞர்கள் வலியுறுத்துகின்றனர். இதனால் பொது நிர்வாகவியல் பற்றிய சீர்திருத்தக் கருத்துக்கள் பல நுட்பத் தன்மைகளுடன் உள்வாங்கப்பட்டன. இது அரசியல்வாதிகள், சிவில் சேவையாளர்கள், நிதி நிர்வாகம் போன்றவற்றில் தலையிடும் போக்கைத் தவிர்த்திருந்தது. இவற்றின் மூலமாக பொது நிர்வாகவியலிற்கான கருத்துக்கள், வழிமுறைகள், திட்டங்கள், நியதிகள். ஏற்படுத்திக் கொடுக்கப்பட்டன.
4. விடயத் தொடர்பு அணுகுமுறை:-
இவ்வணுகுமுறை நுட்ப அணுகுமுறையிலிருந்து வேறுபட்டதொன்றாகும். பொது நிர்வாகத்தினை அதன் விடயங்களோடு தொடர்புபடுத்தி ஆராய முற்படுகின்றபோது நிர்வாகத்தின் சில குறிப்பான திட்டங்கள், சேவைகள், ஊழியர்கள், போன்றவைகளைக் கவனத்தில் கொண்டு ஆராய்தல் வேண்டும். இவ்வாறு ஆராய்வதற்கு ஆட்சித்துறை செய்திகள் பற்றிய கையேடுகள், சட்டத் தொகுப்புக்கள், ஆய்வுக்குழுக்களின் அறிக்கைகள் என்பன பயன்படுத்தப்படுகின்றன.
5. உளவியல் அணுகுமுறை:-
உளவியல் மக்களின் எண்ணங்கள், விருப்பங்கள், நடத்தைகள் போன்றவற்றை வெளிப்படுத்துவதாகும். நிர்வாக செயல்களும், நிர்வாகிகளின் விருப்பு, வெறுப்பு அவர்கள் பிறரோடு உறவுகொள்ளும் விதம் என்பவற்றோடு தொடர்புடையதாகும். சிறந்த முறையில் நிர்வாகம் நடைபெற ஊழியர்களிற்குச் சம்பள உயர்வு, பதவி உயர்வு, சலுகைகள், கடமையுணர்வினை வளர்த்தல் போன்ற நிர்வாக உத்திகள் வழங்கப்படுகின்றன. இவைகள் உளவியல் சார்ந்த செயற்பாடுகளாகும்.
6. கள அணுகுமுறை:-
நிர்வாகப் பணிகளில் ஈடுபடுகின்ற போது எளிதில் தீர்வு காண முடியாத சிக்கலுடன் கூடிய பல பிரச்சினைகள் தோன்றுகின்றன. இச்சந்தர்ப்பத்தில் இப்பிரச்சினைகள் எழுந்த சூழ்நிலையையும், காரணங்களையும் விளங்கி, அறிவியல் ரீதியாக பரிசோதித்து சரியான முடிவுகளை எடுக்க வேண்டும். பின்னர் எடுக்கப்பட்ட முடிவுகளின் இறுதி விளைவுகள் யாவும் விளக்கப்படல் வேண்டும். இவ்வாறான நடவடிக்கைகள் மூலம் நிர்வாகத்தில் தோன்றும் சிக்கல்களை தீர்த்துக் கொள்ள முடியும்.